தடம் இணைய இதழுக்கு மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய இந்த நேர்காணலானது, 5 காணொலி பாகங்களாக யூட்யூப் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் காணொலிகளின் இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
இலங்கையில் சிங்களர், இலங்கை பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து 1948ல் விடுதலை அடைவதற்கு முன்பும் கூட தமிழரை தங்கள் இனத்தின் எதிரிகளாகவே கருதிவந்தார்கள் என்பதற்கு வரலாற்று சம்பவங்கள் நிறையவே உண்டு.
1948ல் பெரும்பான்மையான பலத்துடன் இலங்கையின் அரசை கைப்பற்றியதிலிருந்து திட்டமிட்ட வகையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை திட்டத்தை தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளனர் சிங்களர்.
1980களில் ஆயுதப் போராட்டம் தமிழரால் சிங்களர் சித்திரவதைக் கொடுமைகளை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டது. 1983 ல் யாழ் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு ராணுவ வேனை விடுதலைப் புலிகள் கண்ணி வெடி வைத்து தகர்த்ததில் அதில் பயணம் செய்த 13 சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்களை கொழும்பில் வைத்து தகனம் செய்ய சிங்கள அரசு முயல, ஆனால் சிங்கள இனவெறியாளர்கள் அந்த வீரர்களின் உடல்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி அங்கே அவ்வுடல்களை வைத்து பெரும் ஊர்வலங்கள் நடத்தி தமிழர் மீதான வெறுப்புணர்வில் நெய் ஊற்றினர்.
இதைச் சாக்காகக் கொண்டு தமிழரைக் கொல்ல சிங்கள அரசு அதிகாரத்திலிருந்தவர்கள் திட்டமிட்டனர். அதைத் தொடர்ந்து தமிழ்ப் பகுதிகளில், ஜூலை 23 முதல் ஜூலை 30 வரை சிங்களரால் சிங்கள அரசின் ஆதரவோடு, சாதாரண பொதுமக்களான ஈழத்தமிழரை கும்பல் கும்பலாக சேர்ந்து சிங்கள இனவெறியர்கள் அடித்து, எரித்து, பாலியல் வன்புணர்வு செய்து, தீயில் தூக்கிப் போட்டு , இப்படி பலவாறாக கொலை செய்தார்கள்.
தமி்ழ் மக்களின் வீடுகளில் ராணுவம் மற்றும் போலீஸ் உதவியுடன் புகுந்த
சிங்களர்கள் தமிழரை சித்திரவதை செய்து கொன்றதுடன் அவர்கள் வீட்டிலிருந்த அனைத்து உடைமைகளையும் கொள்ளையடித்து அல்லது அழித்துச் சென்றார்கள்.
இலங்கை வெலிக்கடை சிறையிலும் இந்தப் படுகொலையை ஒட்டி ஏற்கனவே சிறைத் தண்டனையில் வைக்கப்பட்டிருந்த புளோட் ஆயுதப் போராட்டக் குழுவின் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை மூன்று பேரையும், அவர்களையும் சேர்த்து மொத்தம் 35 தமிழர்களை , சிறைக்குள்ளேயே சிங்கள இனவெறியர்கள் சிறைத்துறையின் அனுமதியோடு, சித்திரவதை செய்து கொன்றனர்.
1983 யூலைக் கலவரத்தினால் 3000 பேர்வரை, தமிழர்கள் குழந்தைகள் முதல் பெண்கள், பெரியவர்கள் வரை என அனைத்து வயதுகளிலும் கொல்லப்பட்டனர், பத்துலட்சம் பேர் இடம் பெயர்ந்து சென்று முகாம்களில் அடைக்கப்பட்டனர். 13 சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்வினை என்பதாக சிங்கள அரசு இதைத் திட்டமிட்டு செய்து முடித்தது. இது திட்டமிட்ட செயல்தான் என்பதற்கு எண்ணற்றோர் சாட்சிகளாக உள்ளனர், திரு மு.திருநாவுக்கரசு அவர்களும் அப்படி ஒரு சாட்சியாக நடந்த படுகொலைகள் பற்றிய உண்மைகளை உரைக்கிறார்.
நடத்தப்பட்ட யூலைக் கலவரம், படுகொலைகள் சம்பந்தமாக, தனது அனுபவங்களையும், அப்போதைய சிங்களரின் இன அழிப்பு அரசியலையும் பற்றி இந்தக் காணொலியில் விவரிக்கிறார் வரலாற்று ஆய்வாளரும் , வரலாற்று ஆசானுமாகிய திரு மு.திருநாவுக்கரசு அவர்கள்.




