மக்கள் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மக்கள் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

ஈழ விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது? - மு.திருநாவுக்கரசு

 

13/8/2025 

 "உன்னை நீ கைவிட்டு விட்டால், உன்னைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது"--- பிரெஞ்சுப் பழமொழி.



உன்னை  நோக்கி பிறரைத் திரும்பிப் பார்க்கச் செய்ய வேண்டுமானால் நீ உரத்து சத்தமிட வேண்டும். ஒரு பச்சைக் குழந்தைகூட தன்னருகே யாரும் துணைக்கில்லை என்றால் அழுது, கத்தி யாரையும் தன்பால் ஈர்த்துவிடும். 

இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாய் இனப்படுகொலைக்கு நீதிகேட்டுப் போராடாதிருக்கும் நிலையில் உரியவனும் பாரான்; அடுத்தவனும் பாரான்; அண்டை நாடும் பாராது ; வெளிநாடுகளும் பாராது. உனக்கு யாரும் கை கொடுக்க வேண்டுமாயின் நீ கை தூக்க வேண்டும். களத்தில் போராடுவதன்  மூலம் மட்டுமே உள்ளும், புறமும் கவனத்தை ஈர்த்து ஜனநாயகப்  போராட்டக்  கொடியைச் சர்வதேசத் தளத்தில் நிறுத்த முடியும். 


தக்கன மட்டுமே உயிர் வாழுமா ?

"Only the fittest will survive' அதாவது "தக்கன மட்டுமே பிழைத்து உயிர் வாழும்" என்பது உயிர் வாழ்க்கை பற்றிய சுயநலக் கோட்பாடு ஆகும்.

அதாவது இங்கு காணப்படும் பாதகமான சூழல் என்பது ஒன்று. எதிர்மறையாக இருக்கும் அந்தச் சூழலையும், தன்னையும் இணைத்து, அதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு, சூழலை தனக்குப் பொருத்தமாகக் கையாள தெரிந்தவை தான் பாதகமான சூழலிருந்து தப்பி உயிர் வாழும் வாயப்பைப் பெறும் என்பதே இதன் பொருள்.  

இந்த உயிரியல் டார்வினிசக் கோட்பாட்டை, சமூக அல்லது அரசியல் டார்வினிசமாகக் பார்க்கும்போது அதை தலைமைத்துவப் பண்புடன், சமூக நோக்குடன் கூடிய வகையிற் கையாள வேண்டும். உயிரியல் டார்வினிசத்தில் அந்த உயிருக்கு, சுயநல உயிரியல் மரபணு (selfish gene), இயல்பாக இயற்கைத் தேர்வின் படி(Natural selection) சுயநலமாக தன்னை காத்துக் கொள்ளும் தன்மையை வழங்குகிறது. 

மனிதனும் உயிர் என்ற வகையில் சுயநல மரபணுவைக் கொண்டவனே. ஆனாலும், அவனே பலருடன் கூட்டு சேர்ந்து ஒரு சமூகமாக வாழும் போது  அங்கு மேலதிகமாகத் தலைமைத்துவ ஆளுமையும், குழு நன்மையும் முதன்மையாகிறது. இந்த வகையில் உயிரியல் டார்வினிசத்திலிருந்து சமூகவியல்  டார்வினிசம்  குறிப்பிடக்கூடிய அளவுக்குத் தெளிவான ஆளுமைப் பரிமாண வேறுபாட்டைக் கொண்டுள்ளது. 

ஒரு சமூகப் பரிமாணத்தைக் கட்டமைப்புச் செய்து முன்னெடுக்கும் விதத்தில் தவறுகள் இழைக்கப்பட்டால், அந்தச் சமூகம் நல்ல தலைமையின்றி, தக்க தேர்வுகளின்றி, வழிகாட்டுதலின்றித் தேய்ந்து போய்விடும் அல்லது அழிந்து போய்விடும். 

இலங்கை சமூகத்தில் காணப்படும் வரையறுக்கப்பட்ட தலைமைத்துவத்திற்கு அப்பால், மதி நுண்ணறிவும், முன்னறிவும் கொண்ட, அளவால் பெரிய ஓரினம் (சிங்கள இனம்), அளவாற் சிறிய இனங்களின் மீது ஒடுக்குமுறையான தலைமைத்துவ ஆதிக்கத்தைச் செலுத்துவதன் மூலம் சிறிய இனங்களின் தெரிவு சுருங்கும், பாதிப்புக்குள்ளாகும், சீரழிவுக்கு உள்ளாகும். இத்தகைய விழுங்கும் ஆதிக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, அளவில் சிறிய இனமான ஈழத் தமிழர்கள் அதிகம் தலைமைத்துவப் பண்புடனும், முனைப்புடனும்  செயல்பட்டால் மட்டுமே, காணப்படும் சமூக சூழல் யதார்த்தத்தில் இலங்கைத் தீவில் தம்மைத் தக்க வைக்க முடியும்.

மனிதனும் ஏனைய பிராணிகள் போல ஓர் உயிர் என்பதால்  உயிரியல் டார்வினிசத்திலுள்ள பொதுத்தன்மைகள்  மனிதனுக்கும்  உண்டேயானாலும், உயிரினங்களில் அதிக நுண்ணறிவு கொண்டு மனிதன் ஒரு அறிவார்ந்த சமூகமாகத் தன்னைக் கட்டமைப்பதில் வேறுபட்ட ஆளுமை அளவுகளைப் பிரயோகிக்க முடிகிறது. தான் உயிர்வாழ வேண்டும் என்கிற சுயநலமானது, தான் சார்ந்துள்ள சமூகம் வாழவேண்டும் என்கிற சமூக சுயநலமாக உருமாறுகிறது. 

தங்களுக்கான ஒரு அரசை கொண்டுள்ள, அளவில் பெரிய, சிங்கள சமூகத்துடன், அரசற்ற, அளவில் சிறியதான  தமிழ்ச் சமூகம், தலைமைத்துவ ஆளுமையில் தக்க முனைப்பைக் காட்டத் தவறினால் அந்தச் சமூகம் தன் வாழ்நிலையை இழந்துபோக நேரும். 


ஈழத் தமிழரின் கூழ்முட்டை நிலை

இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தம்மை தமிழர் என்ற உட்சமூக ரீதியாகவும், இலங்கை என்ற உள்நாட்டு ரீதியாகவும், அண்டை நாடு,  வெளிநாடுகள், சர்வதேச சமூகம் , உலகளாவிய அரசியல் நிலை  போன்ற காணப்படும் அனைத்துப் புறநிலை யதார்த்தங்களுக்கும் பொருத்தமான செயல்பாட்டை, தமக்கான தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டும்.  

அந்தவகையில் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலான அரசியற் சூழலில், ஈழத்தமிழர் நிலையானது அழுகிச் சிதைந்து போன கூழ்முட்டை (Rotten agg) நிலையையே ஒத்துள்ளது.

மேற்படி நடப்புநிலையை, உள்ளூர், உள்நாட்டு, வெளிநாட்டு, உலகளாவிய அரசியல் யதார்த்தங்களை உள்வாங்கி, இப்போது ஒரு புதிய வகையில் தமிழ்த் தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டுமென்று இக்கட்டுரை தமிழ் மக்களை வேண்டி நிற்கின்றது.

ஏறக்குறைய 1970 களின்  பிற்பகுதியளவில் ஒற்றை உள்ளூர்த் துப்பாக்கியுடன் ஆரம்பமான ஆயுதப் போராட்டம் தரைப்படை ,கடற்படை, பீரங்கிப்படை, விமானப்படை , சர்வதேச சரக்கு கப்பல் அணியென  வளர்ந்த நிலையில் இருந்து, பின்பு கோட்டை கொத்தளங்களெல்லாம் முற்றிலும் அழிந்து போய் , போராட குண்டூசி கூட இல்லாத நிலையை ஆயுதப் போராட்டம் அடைந்துள்ளது.   

ஆனால் 1979 ஆண்டு 10 ஆயிரத்துக்குட்பட்ட படையினருடன் ஒரு பிரிகேடியரைத் தலைமைத் தளபதியாகக் கொண்டிருந்த இலங்கை அரசின் ராணுவம், இன்று அதிநவீன ஆயுதங்களுடன்  கூடிய வகையில் 3 லட்சத்து 46 ஆயிரம் படையினருடன் காணப்படுகிறது.  

நாடாளுமன்ற அரசியலில் 21 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று சிதைந்து, சுக்குநூறாகி  தமிழரசுக் கட்சி எட்டு உறுப்பினர்களையும், சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஒரு உறுப்பினரையும் , இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி  ஒரு உறுப்பினரையும் பெற்று பாதிக்கும் கீழ் சுருங்கிக் கிடக்கிறது.  மேலும் சிறு சிறு அரசியல் குழுக்களாக பிரிந்து கொண்டும், ஒற்றுமையின்றி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டும், சிங்களனின் கைக்கூலிகளகவும், சனநாயகப் பண்பற்றுச் சீரழிந்து சின்னாபின்னப்பட்டுக் கிடக்கிறது.   


இனப்படுகொலைக்கான நீதியே நம் புதிய ஆயுதம்

2001 ஆம் ஆண்டு  அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதல், உலகெங்கும் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய போராட்ட அமைப்புக்களின் முதுகெலும்பை உடைக்க வழிவகுத்த போதிலும், அதுவே உலகெங்கும் வெகுஜன மக்கள் திரண்டெழுந்த போராட்ட அலைகள் எழும்புவதற்கு ஏதுவாகவும் அமைந்தது.

எனவே மக்கள் திரளின் ஜனநாயகப் போராட்ட அலையெனும் ஓராயுதம் உலகரங்கில் முதன்மை பெறத் தொடங்கியது. பறிக்கப்பட்ட வெடிகுண்டு, துப்பாக்கி ஆயுதங்களுக்குப் பதிலாக மக்கள் திரளெனும் ஓராயுதம் மக்கள் சனநாயகக் கிளர்ச்சியாய் வடிவம் பெற்றது . 

சிங்கள இராணுவம் 2009ல் இறுதிக் கட்டப் போரில் ஒரு லட்சம் தமிழர்களை கொன்றது.  முள்ளிவாய்க்காலில் மட்டும் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்தது. சுமார் 3 லட்சம் அப்பாவித் தமிழர்களை கொன்றொழித்த அந்த இனவழிப்போடு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் முடிந்து போகவில்லை. புதிய வகையில் தொடங்கியது. அங்கு அரச இராணுவம் தனது இராணுவச் சூளையில் இனப்படுகொலைக்கான நீதியென்னும் மிகக் கூரியதோர் ஆயுதத்தை உற்பத்தி செய்து தந்தது. 

முள்ளிவாய்க்காலில் பறிபோன லட்சக்கணக்கான உயிர்கள், துப்பாக்கி -- வெடிகுண்டு ஆயுதங்களுக்குப் பதிலாக, மக்கள் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டதன் வாயிலாக, இனப்படுகொலைக்கான நீதி என்னும் மிகப் பலம் வாய்ந்த ஜனநாயக ஆயுதம் தமிழ் மக்கள் கைக்குக் கிடைத்திருக்கிறது. இன்றோ, நாளையோ, என்றோ ஒரு நாள் லட்சக்கணக்கான மக்களின் இனப்படுகொலைக்கான நியாயம் வழங்கப்பட்டே ஆகவேண்டும். இது தான் மக்கள் அரசியலில் நேரடியாக பங்குபெறும்,  ஜனநாயகம் நிறைந்திருக்கும், இந்த உலக அரசியலில் உருவாகியுள்ள நியதி. அரசுகளாலும் அதிகாரங்களாலும் அநீதிகள் எப்படித்தான் மூடி மறைத்து வைக்கப்பட்டாலும் ஈழத் தமிழருக்கும் அப்படி ஒரு நியாயம் ஒரு நாள் வழங்கப்பட்டே ஆகவேண்டும். 


இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் போராட்டக் குரலை உலகெங்கும் கொண்டு செல்வோம்
இந்த வகையில் இனப்படுகொலைக்கு நீதி என்ற ஜனநாயக ஆயுதத்தை முதலீடாகக் கொண்டு தமிழ்மக்கள் தமது அரசியற் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்று 2016 ஆம் ஆண்டு இக்கட்டுரையாசிரியரால்  எழுதப்பட்ட "  டொனமூர் முதல் சிறிசேன வரையான உத்தேச அரசியல் யாப்பு" என்ற நூலில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. அந்நூல் வெளியிட்டு விழாவில் தமிழரசு , தமிழ்க் கொங்கிரஸ் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், பல்கலைக்கழக அறிஞர்களும், ஊடகவியலாளர்களும் உரையாற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது ஈழத் தமிழர்களின் குறைந்தபட்ச உரிமைகளுக்கான போராட்டங்களைக் கூட முடிக்கப்பட்ட இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. 

இலங்கையில் நடைமுறையிலுள்ள நாடாளுமன்ற மரபின் அரசியற்பாதை, இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அதை மேலும் மேலும் வளர்க்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை, 1833 ஆண்டு நடைமுறைக்குவந்த  கோல்புறூக் யாப்பு நடைமுறையிலிருந்து இன்றைய (2025) ஆட்சியாளர்களின் யாப்பு நடைமுறை வரை வெள்ளிடை மலையெனத் தெரிந்து கொள்ளலாம்.   

தமிழ்த் தலைவர்கள், குறிப்பாக சோல்பரி அரசியல் யாப்பை ஒட்டிய காலத்தில், 14 மணி நேரம் இலங்கை நாடாளுமன்றத்தில் மூச்சுவிடாமல் பேசியும் பயனில்லை. தற்போதும், எந்தவித பெரும்பான்மையும் இல்லாத நிலையிலும் கூட, இதே நாடாளுமன்றத்தில்  திரைப்படப் பாணியில் 14 நிமிடங்கள் அங்கிங்குமாய் காலை ஆட்டி, கையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, கண்ணை  உருட்டி, தொண்டை வற்றப் பேசியும் எந்த பயனும் தமிழருக்குக் கிடைக்கவில்லை. கிடைக்கவும் கிடைக்காது.   

நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தமக்கான மக்கள் ஆதரவை உள்ளும், புறமும் நிரூபிப்பது சரி. அதை விடுத்து, நாடாளுமன்றத்தில் பேச்சுப் போட்டிகள் நடத்தி தமிழர் எதனையும் சாதிக்க முடியாது. மாறாக நாடாளுமன்றத்தை உள்ளும், புறமும் போர்க்களமாக மாற்றவல்ல திட்டங்களையும், வியூகங்களையும் வகுத்து, அதற்கு ஊடாக போராட்டத்தை நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும்,  உலக அரங்கிலும் எடுத்துச் செல்ல வேண்டும்.  இதற்கான வியூகங்கள் வகுக்கப் பல வழிகளுண்டு. இந்த ஜனநாயக வியூகங்களைப் பற்றிப் பின்பொரு தனிக் கட்டுரையில் ஆராய்வோம். இப்போது போராட்டத்துக்கான முதற் திட்டத்தை வரையறை செய்வோம். 

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளும், புறமும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இலங்கை, இந்தியா தவிர  மேலும் 31 நாடுகளில் அந்த தடை பட்டியல் நீள்கிறது. ஆயுதப் போராட்டம் என்ற பேச்சுக்கே உள்ளும், புறமும் இடமில்லை. ஆனால் இனப் படுகொலைக்கெதிரான போராட்டக் குரலை மனிதநேயத்தின் அடிப்படையில் ஜனநாயக அமைப்புகளின் மூலம் உலகெங்கும் நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும்.

அத்தகைய ஜனநாயக போராட்டக் குரலை தமிழகத்திலிருந்தும் எழுப்பி முன்னெடுக்கலாம், முழு இந்தியாவிலும் முன்னெடுக்கலாம், அமெரிக்காவிலும் முன்னெடுக்கலாம், ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும் முன்னெடுக்கலாம், உலகின் ஏனைய நாடுகளிலும் முன்னெடுக்கலாம். அது எதிரிக்கும், தமிழர் உரிமைகளை அழிக்க முயலும் வேறு வெளிச்சக்திகளுக்கும், எதிரான ஒரு பலம் வாய்ந்த ஆயுதமாக உருமாறும். சமீபத்தில் கண்டிறியப்பட்ட செம்மணிப் புதைகுழியும் இந்த போராட்டக் குரலுக்கு வலு சேர்க்கிறது. செம்மணிப் புதைகுழிகள்.


செம்மணிப் படுகொலைப் புதைகுழிகள் 

1998 ஆம் ஆண்டில், சிங்கள இராணுவ வீரர் ஒருவர், கிருசாந்தி குமாரசாமி என்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டபோது, சிங்கள ராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலைகளைப் பற்றி வெளிப்படுத்தினார். 1996ல் இலங்கை ராணுவத்தினரால் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டபோது 400க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை பிடித்து சித்திரவதை செய்து, கொல்லப்பட்டு, உடல்கள் இந்தப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக தெரிவிததார். இலங்கை அரசு அந்த வீரரை தொடர்ந்து பேசவிடாமல் செய்ததோடு தோண்டப்பட்ட இடங்களிலும் குளறுபடிகள் செய்து 2006 க்குப் பின் அவ்விடயத்தை சர்வதேச சமூகத்தின் பார்வையிலிருந்து விலக்கி நீர்த்துப் போகச் செய்துவிட்டது.

கடந்த பிப்ரவரி 2025ல், இலங்கை செம்மணி இந்து மயானத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்காக நிலம் தோண்டப்பட்டபோது மனித எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன. மீண்டும் சர்வதேச அழுத்தம் இலங்கை அரசை நோக்கி வந்த நிலையில், அகழாய்வுப் பணி ஐநா சபையின் மேற்பார்வையில் தொடங்கியபோது, இன்னும் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. 

2025, கடந்த ஜூலை மாதத்தில், 65க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் ஒரு புதைகுழியில் கிடைத்தன. இதில் குறைந்தது மூன்று குழந்தைகளின் எலும்புகள் என்பது உறுதி செய்ப்பட்டது. ஒரு குழந்தை தனது தாயை கட்டிஅணைத்தபடியும், இன்னொரு குழந்தை பள்ளிக்கூட பையுடனும் இருந்தது. புதைத்த குழந்தைகளின் உடல்களோடு அவர்களது விளையாட்டுப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டது.  சில எலும்புக்கூடுகளில் துப்பாக்கிக் குண்டுத் துளைத்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன. இந்த காட்சிகள் என்பது இலங்கையில் அப்பாவிகள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டதை தெளிவாகக் காட்டும் வகையில் உள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு தற்போது உலகை மீண்டும் அதிர வைத்துள்ளது. தமிழர்களை மீண்டும் உலுக்கி உள்ளது.

குறிப்பாக 1958 ஆம் ஆண்டிலிருந்து கறுப்பு யூலை வரையும் அதன் பின்பும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அனைத்து மனிதப் படுகொலைகளும் தொடர்பான நீதி கோரல்களும், அவற்றை மறைக்க இலங்கை அரசு செய்த நிர்வாக நடவடிக்கைகளும் தமிழரின் நீதி கோரும் போராட்டங்களும் மேலும் அணிசேர்க்கின்றன.  


இனப்படுகொலைக்கு நீதி கோரலை முன்னெடுத்தல்

முதலாவதாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, இசைப்பிரியா மீதான பாலியல் வன்முறை,  படுகொலை, சிறுவன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை  போன்ற அப்பாவி மக்களின் மீதான போர்க் குற்றங்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி அதற்கான போராட்டத்தை உள்நாட்டு அரங்கிலும், தமிழகத்திலும், இந்தியாவிலும், உலக அரங்கிலும் முன்னெடுக்க வேண்டும்.

இத்தகைய ஜனநாயக போராட்டத்திற்கு,  வெறும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் தளமாகக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தமிழ்ச் சமூகம் ஒன்று திரண்டு  நடைபெற்ற அநீதிகளுக்கு  நீதி கோரிப் போராடுவதற்கான ஒரு பொதுச் ஒரு செயற்குழுவை உருவாக்க வேண்டும்.  இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கு வகிக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் பங்கு வகிக்கலாம்.  சிவில் சமூக உறுப்பினர்கள், ,அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள்,  மூத்த குடிமக்கள்  உள்ளடக்கிய 30 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு செயல் குழுவை உருவாக்கி பிரச்சனையை கையாளுவதற்கு அதற்கு அனைத்து அதிகாரங்களையும் தமிழ் மக்கள் வழங்க வேண்டும்.   உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இத்தகைய ஒரு அமைப்பே தமிழ் மக்களால்  உள்ளும்,  புறமும் ஏற்றுக் கொள்ளப்பட்ட  அமைப்பாக இருக்க வேண்டும். அதுவே எம் மத்தியில் ஏற்பட்டுள்ள உள் உடைவுகளைச் சரி செய்வும் புதிய செயல்ப் பூர்வமான ஒரு பாதையை வடிவமைக்கவும்  வழி கோலும்.

" An idle mind is the devil's workshop", அதாவது, "சிந்திக்காத வெறும் மனம் பிசாசின் பட்டறை" என்னும் கூற்றுக்கேற்ப, போராடாது  தேங்கி வரண்டு கிடக்கும்  ஒரு சமூகத்தின் மனதில் பிசாசுகள் குடிகொண்டு அதனை தங்கள் பட்டறையாக மாற்றிவிடும். இப்போது தமிழினத்தின் அரசியலும் அப்படித்தான் உள்ளது.   

எனவே இனப்படுகொலை என்ற ஆயுதத்தைக் கையிலேந்தி, அதற்காகப் போராடவல்ல ஒரு அமைப்பைச் சனநாயக பூர்வமாக வடிவமைத்து, வெற்றிடங்களை  நிரப்பிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தவறினால், சர்வதேச நாடுகளும் தமிழரின் தலையில் கொண்டை கட்டி, கொண்டையிற் பூவும் கட்டி, அதற்கப்பால் தலையில் குருவி கூடும் கட்டி செல்லும் நிலை தான் ஏற்படும். 

உலகெங்கும்  சிதறி  வாழும் ஈழத் தமிழர்களே!  ஈழத்தமிழ் மண்,  இந்து மாகடலின் மையத்தில், இந்தியாவின் வாசற்படியாக இருக்கவல்ல அதன்  கேந்திர அமைவிடத்தின் நிமித்தம், அது உலகப் பெரும் வல்லரசுகளையெல்லாம் தன்னை நோக்கி ஈர்க்கவல்ல ஒரு புள்ளியில் உள்ளது. அவ்வாறு, சர்வதேச கவனத்தை ஈர்க்கக்கூடிய புள்ளியிலுள்ளதால்,  அதனையே ஒரு முதலீடாகக்  கொண்டு, அறிவாற்றலுடனும், ஆளுமைத் திறனுடனும் தமிழ் தலைவர்கள் செயல்பட வேண்டும்.  தமிழர்கள் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும்.

- மு.திருநாவுக்கரசு.

13-08-2025


பின்னிணைப்புகள்:

செம்மணியில் புதைக்கப்பட்ட உண்மைகள் | சிதைக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படுமா?

வெள்ளி, 18 ஜூலை, 2025

தமிழ்த் தலைவர்களுக்கு மக்கள் புகட்ட வேண்டிய சனநாயகப் போராட்டம். - மு.திருநாவுக்கரசு.

 05.06.2025



மக்கள் போராட்டங்கள் - சனநாயகத்தின் அடிப்படை உரிமை.

அரசியலதிகாரத்தில் மக்கள் பங்காளிகளாவதற்குப் பெயரே   சனநாயகம். பிரதிநிதித்துவச் சனநாயகம் என்பது சனநாயகத்தில் ஓரம்சம்  மட்டுமே. மக்கள் தங்கள் அதிகாரத்தைப் பிரதிநிதிகள் மூலம் பிரயோகிப்பதுதான் நாடாளுமன்ற சனநாயகம். மக்கள் தெரிவு செய்யும் சனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சனநாயகம் சுருங்கி விடுவதுமல்ல அது சிறைப்பட்டு விடுவதுமல்ல.  

சனநாயகம் ஒரு வாழ்க்கை முறை. அது புள்ளடி போடுவதோடு தன்னைச் சுருக்கிக்கொள்வதில்லை. மக்கள் அப்படிப் புள்ளடி போடுவதே அவர்கள் தமது அதிகாரத்தை  நிலைநாட்டவும் அதைப் பெருக்கிக் கொள்ளவுமேதான். அத்தகைய சனநாயகத்தில், மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள், சனநாயகத்திற்கான மக்களின் காலபோகக் கருவிகளே தவிர, அவர்களே மக்களின் எசமானர்களல்ல.

கருவிலிருக்கும் சிசுவின் பாதுகாப்பு, உரிமை என்பவற்றிலிருந்து கல்லறை வரையும் மட்டுமல்ல அதற்குப் பின்புங்கூட சமூக மயப்பட்டவாழ்வு, உரிமை, கெளரவம் என அனைத்தையும் தழுவிய வாழ்வியலுக்குப் பெயர்தான் சனநாயகம்.

சனநாயக யுகம்

இறைமை --அதிகாரம் என்பன ஒரு காலத்தில் மன்னர்களின், வம்சங்களின் கைகளிலிருந்தன. 

தேசிய சனநாயக யுகத்தில் மக்கள், அதிகாரத்தைத்  தங்கள் கைகளுக்குள் எடுத்துக் கொண்டார்கள். இதன்படி மக்கள் கைக்கு அதிகாரம் மாறியதற்குப் பெயர்தான் சனநாயகம். அதாவது பரந்துபட்ட மக்கள், அரசியலதிகாரத்தில் பங்காளிகளாகினர். அதாவது , மக்களை அரசியல் அதிகாரத்தில் பங்காளிகள் ஆக்கியதற்குப் பெயர்தான் சனநாயக யுகம்.

2020 ஆம் ஆண்டு மே மாதம், அமெரிக்காவில், Derek Chauvin என்ற வெள்ளையின பொலீஸ் அதிகாரியால் George Floyd என்ற கறுப்பின பொதுமகன் மிருகத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட போது அமெரிக்காவிலெங்கும் கிளர்ச்சிகள் வெடித்தன. சனாதிபதியின் மாளிகையான வெள்ளை மாளிகையில் அன்றைய அமெரிக்க சனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிளர்ச்சியாளர்களால் முற்றுகைக்குள்ளானார். அப்போது நீதிக்காக மக்கள் கிளர்ச்சி செய்வது மக்களின் சனநாயக உரிமையென்றும், அமெரிக்க அரசியல் யாப்பு கிளர்ச்சிகளினாலும், புரட்சிகளினாலும் உருப்பெற்று வளருமொன்று என்றும் கூறிய அமெரிக்க முன்னாள் சனாதிபதி பராக் ஒபாமா, அந்தக் கிளர்ச்சிகளை ஆதரித்ததோடு, அவற்றை சனநாயகத்தின் ஓர் அம்சம் என வர்ணித்தார்.

"எதிர்ப்புப் போராட்டம் பற்றி விமர்சித்துப் பேசி வருபவர்களே,  இந்த நாடு அமெரிக்கப் புரட்சி என்றழைக்கப்படும் போராட்டத்தினடிப்படையில் நிறுவப்பட்டதென்பதைச் சற்று நினைவிற் கொள்ளுங்கள்" என்று திரு. ஒபாமா வொசிங்டனிலுள்ள தனது வீட்டிலிருந்து பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

"இந்நாட்டில் முன்னேற்றத்தின் ஒவ்வொரு அடியும், சுதந்திரத்தின் ஒவ்வொரு விரிவாக்கமும், நமது ஆழ்ந்த இலட்சியங்களின் ஒவ்வொரு வெளிப்பாடும், அவ்வப்போது காணப்பட்ட பழைய நிலையை நெருக்கடிகளுக்குள்ளாக்கிய முயற்சிகள் மூலம், போராட்டங்கள் மூலம் வென்றெடுக்கப்பட்டுள்ளன,"  என்று திரு. ஒபாமா கூறினார்,   [கூகுள் உதவியுடன்]

(For those who have been talking about protest, just remember that this country was founded on protest - it is called the American Revolution,"

Mr. Obama said from his home in Washington. "Every step of progress in this country, every expansion of freedom, every expression of our deepest ideals have been won through efforts that made the status quo uncomfortable," said Mr. Obama.)

மேலும் ஒபாமா கூறியது,

" பொதுமக்களுக்கு விழிப்புணர்வையேற்படுத்துவதும், அநீதியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும், அதிகார மையங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதும் தான் போராட்டங்களின் நோக்கம்.  உண்மையில், அமெரிக்க வரலாறு முழுவதும்,  ஓரங்கட்டப்பட்டுள்ள சமூகங்களின் நலன்களுக்கான மாற்றங்கள் பெறப்பட்டதென்பது, அந்த மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் சிவில் ஒத்துழையாமை இயக்கங்கள் என்பனவற்றின் விளைவுகளாகவே பெரும்பாலும் இருந்திருக்கின்றன. அரசியல் அதிகார அமைப்பானது ஒதுக்கப்பட்ட மக்களை நோக்கி தங்கள் கவனத்தை திருப்ப இத்தகைய போராட்டங்களே காரணமாக இருந்தன."- [கூ - உ]]

(The point of protest is to raise public awareness, to put a spotlight on injustice, and to make the powers that be uncomfortable; in fact, throughout American history, it's often only been in response to protests and civil disobedience that the political system has even paid attention to marginalized communities. [https:// www.nytimes.com/2020/06/03/us/ politics/obama-speech-town-hall.html).

முன்னாள் அமெரிக்க சனாதிபதி ஒபாமாவின் மேற்படி கருத்தானது சனநாயகம் என்பது புள்ளடி போடுவதற்கும், வெறும் கோசங்களுக்கும் அப்பால், நேரடியாக மக்கள் பங்குபெறும் போராட்டங்களில் மையங்கொண்டுள்ளது என்பதைத் தெளிவுறப் பறை சாற்றுகின்றது.



பிரதிநிதித்துவ முறைகளினால் மக்களின் சனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படாது போகும்போது, மக்கள் தமக்குரிய சனநாயக உரிமைகளை நேரடி சனநாயக அரசியல் நடவடிக்கைகளின் மூலம் அல்லது நேரடி சனநாயகப் போராட்டங்களின் மூலம் கையிலெடுப்பதும் அவற்றை நிலை நாட்டுவதும் அவசியமான சனநாயக நடவடிக்கைகளாகும்.

குறிப்பாக அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான பின்லேடனின் தாக்குதலைத் தொடர்ந்து செப்டம்பர் 28, 2001 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில், சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புத் தீர்மானம் 1373 (2001) (Antiinternational terrorism resolution, Resolution 1373 (2001) என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் உலகெங்கும் ஆயுதப் போராட்டங்களுக்குபீ பாதகமாகக் காணப்பட்ட சூழலில், சனநாயக வழி நேரடி மக்கள் போராட்டங்கள் பரவலாக வெடித்தன. இதன் முக்கிய முதல் முனைப்பை 2010 - 2011 நிகழ்ந்த "துனீசிய மக்கள் புரட்சி" என்ற 28 நாள் மக்கள் எழுச்சி போராட்டத்தின் வாயிலாக எதேச்சதிகாரியான சனாதிபதி Zine El Abidine Ben Ali அதிகாரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு நாட்டை விட்டுத் தப்பி ஓடியதைக் காணலாம்.

மக்கள் எழுச்சிப் போராட்டம்

இலங்கையில் சனாதிபதி கோட்டாபய, பிரதமர் மகிந்த ராஜபக்ச போன்றோர் 2022 ஆம் ஆண்டு இத்தகைய நேரடி மக்கள் கிளர்ச்சிகளின் மூலம் பதவிகளிலிருந்து அகற்றப்பட்டமை, இந்தியாவில் 2020 -2021 விவசாயிகள் போராட்டம், 2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மக்கள் எழுச்சி ஜல்லிக்கட்டுப் போராட்டம் 2024 ஆம் ஆண்டு பங்களாதேசில் மாணவர் - மக்கள் கிளர்ச்சி மூலம் பிரதமர் ஷேக் ஹசினா ( Sheikh Hasina ) பதவியிலிலிருந்து  அகற்றப்பட்டமை போன்றன நேரடி மக்கள் எழுச்சி சனநாயகப் போராட்டங்களுக்கான வெற்றிகரமான உதாரணங்களாயமைந்தன. சனநாயக வழியிலான இத்தகைய மக்கள் எழுச்சிப் போராட்ட முறைகள் உலகெங்கும் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றன.

தேர்தல்கள் வாயிலாகப் பதவிக்கு வந்த மக்கள் பிரதிநிதிகள் அல்லது தலைவர்கள் அவ்வப்போது அரசவியந்திரங்களின் நலன்களோடு தத்தம் சுயநலங்களையும் இணைத்துத் மக்களின் நலன்களுக்குப் புறம்பான அல்லது மக்கள் விரோதமான அரசியலில் ஈடுபடுவதுண்டு. அத்தகைய வேளைகளிலெல்லாம் மக்கள் தமது நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்க,  அரசவியந்திரத்திற்கும் தாம் ஏற்கனவே தெரிவு செய்திருந்த தலைவர்களுக்கும் எதிராகக் குரல் உயர்த்தி கிளர்ச்சிகளில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதவொரு சனநாயக நடவடிக்கையாகும்.

மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதோடு சனநாயகத்தை அவர்களின் கைககளில் தாரைவார்த்து விடுவதோடு முடிந்து விடுவதல்ல சனநாயகம். இந்த வகையிற் அரச இயந்திரம் மக்களுக்குப் பாதகமாக அமையும் போதும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் விரோத அரசியலில் ஈடுபடும் போதும், மக்கள் நேரடியாக அதிகாரத்தைத் தமது கையில் எடுத்துக் கொள்வதற்காகப் போராட்டங்களில் ஈடுபடுவார்கள். அவ்வாறு ஈடுபடுவதற்குப் பெயர் சனநாயக உரிமை; இது ஒரு சனநாயக வழிமுறையாகும்.

அதாவது சனநாயகத்தின் பொருட்டு 
முடியரசிற்கு எதிராகப் போராடிய மக்கள்,
மன்னர்களுக்கெதிராகப் போராடிய மக்கள்,
அந்நிய ஆதிக்கத்திற்கெதிராகப் போராடிய மக்கள்,
தமது இழக்கப்பட முடியாத, விட்டுக் கொடுக்கப்பட முடியாத உரிமைகளுக்காகத் தாம் உருவாக்கிய அரசு, தாம் தேர்ந்தெடுத்த அரசாங்கம், தாம் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் போன்ற யார் மீறினாலும் 
அவர்களுக்கெதிராகப் போராடும் வரலாற்றுப் பொறுப்பைக் கொண்டவர்கள் மக்கள்.

எனவே மக்கள் கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புப் போராட்டங்கள் என்பன யாவும் சனநாயகத்தின் இன்றியமையாப் பக்கங்களாகும்.

ஈழ மக்களின் சனநாயகப் போராட்டங்கள்.

ஈழத் தமிழரைப் பொறுத்தவரையில் இலங்கையின் கடந்தவொரு நூற்றாண்டுக்கு மேலான அரசியல் யாப்புகள் யாவுமே தமிழின மற்றும் இந்திய விரோத இனப்பெரும்பான்மை மைய ( Ethnic majoritarian constitution) அரசியல் யாப்புக்களேயாகும்.

இனப்பெரும்பான்மை ஆதிக்கத்திற்குப் பொருத்தமான வகையிலேயே இலங்கையின் நாடாளுமன்ற முறைமையும், சனாதிபதி முறைமையும், தேர்தல் முறைமையும் ஒன்றுடனொன்று இணைத்துக் கோர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆதலால் இலங்கையின் நாடாளுமன்ற முறைமையோ, சனாதிபதி முறைமையோ, அவை சார்ந்த சிங்கள - தமிழ் பிரதிநிதிகளோ ஈழத்தமிழரின் உரிமைகளுக்கான பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டிருக்கமாட்டாது.

Appapillai Amirthalingam: From Enfant Terrible of ITAK to TULF Elder  Statesman – dbsjeyaraj.com

ஈழத் தமிழ்ப் பிரதிநிதிகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகால நாடாளுமன்ற அரசியலில், தொடரிழப்பைத் தவிர பெற்றவை என்று எதுவுமில்லை. அதாவது ஜி. ஜி. பொன்னம்பலம் மூச்சுவிடாமற் 14 மணி நேரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கண்ட பயனேதுமில்லை. அப்படியே செல்வநாயகம், அமிர்தலிங்கம், சம்பந்தன்- சுமந்திரன்- சேனாதி -, கஜேந்திரகுமார் போன்ற எவரும் காக்கா, கொக்கு, குருவி, சிங்கம், புலி, கரடி, தவளை, சில்வண்டெனக் கத்திக், குழறிக், கீச்சிட்டு, எந்தப் பயனுமில்லை. ஏனெனில் இலங்கையின் அரசியல் யாப்பானது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் வடிவமானது என்பதே அடிப்படை உண்மையாகும். " கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை" என்ற சுமாராக 75 பக்கங்களைக் கொண்ட எனது சிறு நூலில் இதற்கான விளக்கத்தை விலாவாரியாகப் பார்க்கலாம்.

ஈழத்தமிழரைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற அரசியல் பாதை இனிமேலும் பயனற்றது என்கின்ற கருத்து நடைமுறை அனுபவத்திற்கூடாக 1970 களின் நடுப்பகுதியைத் தொடர்ந்து உருப்பெற்றது.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து அதற்கான மக்கள் ஆணைபெறும் தேர்தலாக 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் பொதுத்தேர்தலைத் தமிழ் தரப்புக் கையாண்டது. அதுவே இலங்கையரசின் கீழ் தமிழர் பங்குபற்றும்  இறுதி தேர்தலென்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும்,  தமிழீழ விடுதலை அமைப்புகளினாலும் மக்கள் மத்தியில் தெளிவுறச் சொல்லப்பட்டது. 

1977 ஆம் ஆண்டு தேர்தல் வாயிலாக மக்கள் ஆணை பெற்றதும்' தமிழீழ நிழலரசை "[ தமிழீழ இடைக்கால அரசு] அமைப்பதென்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில்  பிரகடனப்படுத்தியிருந்து. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி அவ்வாறு செய்யத் தவறி தமிழீழத்திற்கு மாறாக 1980ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைகளென்று ஜே.ஆர். ஜெயவர்த்தன முன்வைத்த தீர்வை நோக்கிக் கூட்டணி நகர்ந்து சென்றது.

இதன் பின்னணியில் ஏகத் தலைமையாக விளங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணிக்கெதிராகவும், தமிழ் மக்களின் ஏகத் தலைவராக விளங்கிய எதிர்க்கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கத்திற்கெதிராகவும், அவர்களைத் தேர்ந்தெடுத்த தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பின. போராட்டங்கள், கிளர்ச்சிகள் வெடித்தன.

1980 ஆம் ஆண்டு அமிர்தலிங்கத்திற்கு யாழ். பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக உபவேந்திராலும், பல்கலைக்கழக ஆசிரியர்களாலும் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துசாரத்திற் கலந்து கொள்ள அமிர்தலிங்கம் பல்கலைக்கழகத்தினுள்ீீ பிரவேசித்த போது அமிர்தலிங்கம் பல்கலைக்கழகத்துக்குள்ளே இருந்த நிலையில் வாசற்கதவுகள் அடைக்கப்பட்டு அவருக்கெதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து அவரைக் கைத்தாங்கலாகத் தூக்கி மதிலிற்கு மேலால் வெளியே வீசினார்கள். கூடவே அவரது பரிவாரமும், ஆயுதம் தாங்கிய அவரது பாதுகாவலரும் வாயிற் கதவைத் திறந்து வெளியே துரத்தப்பட்டார்கள்.

இதேயாண்டு பல்கலைக்கழக மைதானத்தில் அமிர்தலிங்கத்தின் கொடும்பாவி, ஆர்ப்பாட்டத்தோடு மாணவர்களால் முதன் முறையாகத் தீயிட்டெரிக்கப்பட்டது. [ இவை இரண்டும் நான் கண்னால் கண்ட காட்சிகள்].

இதே போல, "நீங்கள் தேடிய தலைவர் நானே"  (‘I am the leader that you searched for') என்று 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று திமிருடன் உரையாற்றிய ராஜபக்ச, ஓடி ஒளிய இடமின்றி,  ஒடிப் பதுங்கி 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாட்டை விட்டே வெளியேறிப் பதவியும் இழந்தார்.

தமிழ் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏகத்தலைவரான அமிர்தலிங்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு வழங்கிய அதே தீர்ப்பை, "நானே தலைவன்" மார்தட்டிய கோட்டாபயவுக்கு 2022 ஆம் ஆண்டு சிங்கள மக்களின் கிளர்ச்சி அரசியல் வழங்கியது.

1980 ஆம் ஆண்டு தமிழரின் ஏகத்தலைவன் அமிர்தலிங்கத்திற்கெதிராக வெடித்த மக்கள் கிளர்ச்சிகளைத் தொடர்ந்து, 1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல் காலத்தில் ஆறுகால் மடத்தில் நிகழவிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்ற, விடுதலைக் கூட்டணித் தலைவர் மு. சிவசிதம்பரம் தனது பரிவாரங்களுடன் உதயசூரியன் கொடி பறக்க வாகனத்திற் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், யாழ்ப்பாணம் கோம்பையன் மணற் சுடலைக்கு முன்னால் அவரது வாகனம் மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, அவரது உதய சூரியன் கொடி அகற்றப்பட்டதுடன், அவரை மிகக் கடுமையான வார்த்தைகளால் வைதுபேசியதுடன் அவர் வாகனத்துடன் திருப்பியனுப்பப்பட்டார். அந்தச் சுடலையிலிருந்து சுமாராக 100 மீட்டர் தொலைவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டமும் கலைந்து போனது.

பின்பு 1985 ஆம் ஆண்டு நல்லூர் வீராலியம்மன் கோவில் மண்டபத்தில் அமிர்தலிங்கம் தலைமையில் திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் உட்பட தமிழர் விடுதலைக் கூட்டணி  நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் கட்சி பிரமுகர்கள் 60 பேருக்கும் மேல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போது குறிப்பாக இளைஞர்கள், மேலும் குறிப்பாகப்  பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள் அங்கே உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு, கோழிப் பிரியாணிச்  சோற்றுப் பார்சல்களை விநியோகித்தனர். அமிர்தலிங்கத்திற்குக் கோழிக்கால் தீத்தப்பட்டது. பெண்ணென்ற வகையில் அவரது மனைவியைச் சற்று மரியாதையாக அந்த இடத்தை விட்டு அகற்றியிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாலும், பின்னாலும் பக்கவாட்டிலும், சிதைந்து தப்பியோடினர் [ மேற்படி இரு சம்பவங்களையும் நேரில் கண்டேன்]

இவ்வாறு மக்கள் எழுச்சி, மக்கள் கிளர்ச்சி என்பனவற்றிற்கு முன்னால் நின்று பிடிக்க முடியாத நிலையைத் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அடைந்தனர். தமிழ் மக்கள் காலத்திற்குக் காலம் தங்கள் போர்க் குணத்தை, கிளர்ச்சியரசியலை வெளிக்காட்டத் தவறியதில்லை.



ஈழத்தமிழர் செய்யவேண்டிய மக்கள் திரள் போராட்டங்கள் 

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பும் மிடுக்குடன் " எழுக தமிழ்ப் போராட்டம் எழுந்தது. அதனைத் தோற்கடித்தது எதிரியல்ல, மாறாகப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களே அதனைத் தற்கொலைக்கு உள்ளாக்கினார்கள் என்பது வேறொரு சோகக் கதை.

அதேவேளை தர்க்கபூர்வ வரலாற்றுப் போக்கின்படி பார்த்தால் இந்த "எழுக தமிழ்" போராட்ட முறைதான் மகிந்த மற்றும் கோட்டாபய போன்றோருக்கெதிராக நிகழ்ந்த மக்கள் எழுச்சிக்கான முன்னுதாரணத்தை சிங்கள முன்னோடிகளுக்கு வழங்கியது.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலான நாடாளுமன்ற அரசியலால் தமிழ் மக்கள் எதனையும் பெற முடியாதென்ற உண்மை, உள்ளங்கை நெல்லிக்கனியென நிறுவப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் நாடாளுமன்றத்திற்குள்ளேயும், வெளியேயும் சனநாயக வழியிலான மக்கள் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர வரலாறு வேறொரு கதவையும் திறந்து வைத்திருக்கவில்லை.

தமிழ் மக்களுக்கான எந்தொரு அரசியற் தீர்வையும் இலங்கை நாடாளுமன்றமோ, சனாதிபதி முறைமையோ ஒருபோதும் தராது. நாடாளுமன்ற உரைகளினாலோ, வாதங்களினாலோ,  பிரசங்கங்களினாலோ எதனையும் சாதிக்க முடியாது. மாறாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் உறுப்பினர்களால் நாடாளுமன்ற மேடையை போர்க்களமாக மாற்றக்கூடிய வாய்ப்புகள் இந்த அரசியல் யாப்பின் கீழுண்டு. அல்லது நாடாளுமன்றத்தைக் குழப்பத்துக்கு உள்ளாக்கக்கூடிய வாய்ப்புகளுண்டு.

உடனடியாக நடக்கச் சாத்தியமற்ற அரசியற் தீர்வுகளைப் பற்றிக் கத்திக் குழறிக் கொண்டிருப்பதற்குப் பதிலாய் உலகத்தின் மனச்சாட்சியைத் திறக்கவல்ல அல்லது போராட்டத்தை முன்னெடுக்கவல்ல முக்கிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்ட அரசியலை முன்னெடுக்கலாம்.

கோரிக்கைகள்:

1)  இனப்படுகொலைக்கெதிரான சர்வதேச விசாரணை வேண்டும்.

2)   காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரணை வேண்டும்.

3)   இசைப்பிரியா மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலைக்கான விசாரணையும்,  உயிருடன் இராணுவத்தின் கையிலிருந்த சிறுவன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதற்கெதிரான சர்வதேச விசாரணையும் வேண்டும். 

போன்ற மூன்று கோரிக்கைகளையும் முன்னிறுத்தி போராட்டங்களை முன்னெடுக்க முடியும்.

நாடாளுமன்றத்திற்குள் போராடுவதற்கான வடிவங்கள் பலவுண்டு அவற்றை பின்பு விபரமாகப் பார்க்கலாம். ஆனால் போராடத் தயாராக வேண்டுமென்பதே முதன்மையானது.

முள்ளிவாய்க்காலின் பின்பு  இதுவரை தோல்வியடைந்த அனைத்துத் தலைவர்களும், இனியும் சரியான வழியிற் போராடத் தயாரில்லையென்றால் அமிர்தலிங்கத்திற்கெதிராக மக்கள் கிளர்ச்சியரசியலில் ஈடுபட்டது போல், ராஜபக்சங்களுக்கெதிராக ஈடுபட்டது போல், தமிழ்த் தலைவர்களுக்கெதிராக வீரியத்துடன் போராடத் தொடங்குவார்கள்.
அரசோ தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோ மக்கள் விரோத அரசியலில் ஈடுபடும் போது சனநாயக வழியிலான கிளர்ச்சியே அரசியல் சனநாயகத்திற்கான ஈட்டி முனையாகும். மேலே சுட்டிக்காட்டியவாறு இது விடயத்தில் முன்னாள் அமெரிக்க சனாதிபதி ஒபாமாவின் பேச்சு முத்தாய்ப்பானது.

விடுதலைக்காகப் புறப்பட்ட தலைவர்கள் மக்களின் எதிரிகளாக மாறிய வரலாறுகளும் உள்ளன. ஆயினும் மக்கள் அவர்களைப் புதை குழிகளுக்குள் தள்ளி அந்த புதைகுழிகளின் மேல் சனநாயகத்தைக் கட்டியெழுப்பத் தவறுவதில்லை.

தான் மீட்பராய் போற்றிய இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்த அவரது சீடன் யூதாஸ் தற்கொலை செய்து கொண்டார் என்பது ஒருபுறமிருக்க, அவ்வாறு காட்டிக் கொடுத்திருந்த அந்த யூதாஸ், தான் செய்த துரோகத்தின் பொருட்டு மறுபுறம் மனச் சாட்சி உறுத்திய நிலையில் அதற்கான பாவமன்னிப்பாய், காட்டிக் கொடுப்பதற்கு தான் யூத மதத் தலைவர் ஜோசப் பென் கயபஸ் (Joseph ben caiaphas) இடமிருந்து பெற்றிருந்த சன்மானப் பணத்தை, அவரது முகத்திலேயே வீசி எறிந்துவிட்டு தன்னுயிர் நீத்தார் என்ற கருத்தையும் சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது. அப்படி பாவமன்னிப்புப் பெறாதவர்களை மக்கள் மரச்சிலுவைகளில் அறையாது விட்டாலும் வரலாற்றுச் சிலுவைகளில் ஏற்றத் தவறுவதில்லை.

தமிழ்த் தலைவர்கள் இத்தகைய போதனைகளையும், வரலாற்றுப் படிப்பினைகளையும் கருத்திலெடுத்துத் தமிழ் மக்களின் உரிமைக்கான சனநாயக வழிக் கிளர்ச்சிப் போராட்டங்களை முன்னெடுக்க தவறினால் அவர்கள் இயல்பாகவே வரலாற்றிலிருந்து விரைவில் மக்களால் தூக்கி எறியப்படுவர்.

- மு.திருநாவுக்கரசு.
05.06.2025.

இக்கட்டுரை ஜூலை 11 , 2025 அன்று தமிழ்வின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தமிழ் தலைவர்களுக்கு மக்கள் புகட்ட வேண்டிய ஜனநாயகப் போராட்டம் - மு.திருநாவுக்கரசு - தமிழ்வின்   

சுட்டிகள்:

https://www.nytimes.com/2020/06/03/us/politics/obama-speech-town-hall.html  - ஒபாமாவின் உரை.

https://www.politico.com/story/2017/01/obama-supports-protests-american-values-are-at-stake-234375

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

புதிய சிந்தனையை உருவாக்கவும் விடுதலைக்கு வழிதேடவும், புதுவாழ்வு காணவும் எழுக தமிழா - மு .திருநாவுக்கரசு.!!







முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையானது  தமிழ் தேசியப் போராட்டத்தின் முடிவல்ல ; அது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான  புதிய மடை திறப்பு.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வதற்கு 90 ஆண்டுகளுக்கு முன்பு,  1919ஆம் ஆண்டு  10  நிமிட நேரம்  நிகழ்ந்த துப்பாகிச்சூட்டில் 1500 பொதுமக்களை  படுகொலை செய்த  ஜாலியன் வாலாபாக் படுகொலை  இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு புதிய மடை திறப்பாக அமைந்தது .

 அதைவிடப் பாரியதாக திட்டமிடப்பட்ட வகையில் சுமாராக ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையானது தமிழ்   மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு   பாரிய  மடை திறப்பாக அமைந்துள்ளது.

இவ்வாறு ஏற்பட்ட   புதிய  மடை திறப்பை அடிப்படையாகக் கொண்டு   தமிழீழப் போராட்டத்தை புதிய உத்வேகத்துடன், புதிய  சூழலுக்கேற்ப ,  ஒரு புதிய பாதையில் முன்னெடுக்கவல்ல ஆற்றலையும் செயற்திறனையும் தமிழ் தலைவர்கள் காட்ட தவறினர். அத்துடன் அவர்கள் ஓடுகாலிகளாய் தமிழ் மக்களை விட்டுவிலகி  சிங்கள  இனவாத ஆட்சியாளர்களை நோக்கி  ஓடினர்.

இவர்களின் இத்தகைய  பிறழ்விலிருந்து தமிழ் மக்களை காப்பாற்றி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுத் தேவை  எழுந்தது.

இதனால்  திசை மாறிப்போன தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அதன் கூட்டாளிகள் படிப்படியாக வெளியேறி இறுதியில் தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு பொதுமக்கள்  அமைப்பை உருவாக்கினர்.   வட மாகாணசபை முதல்வராக இருந்த திரு. விக்னேஸ்வரனை முன்னிலைப்படுத்தி  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு .கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவர் திரு. சுரேஷ்  பிரேமச்சந்திரன்  என்போர்  இணைந்து தமிழ் மக்கள் பேரவையை  உருவாக்கிக்கினர். இத்தமிழ் மக்கள் பேரவை ""எழுக தமிழ்"" பேரணிகளை நடத்தத் தொடங்கியது. தமிழ் மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது.

இவ்வாறு தமிழ் மக்களுக்கு  புதிய நம்பிக்கை ஊட்ட தொடங்கிய தமிழ் மக்கள் பேரவைக்குள்  ஏற்பட்டிருக்கும் உடைவுகள் , முறிவுறிவுகள் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் மேலும்  கவலை அளிக்கவல்ல கசப்பான பக்கங்களை தோற்றுவித்துள்ளன.

மேற்படி மூன்று தலைவர்களும் எப்பாடுபட்டேனும் தங்களுக்கு  இடையேயான  முறிவுதறிவுகளை கடந்து  ஒன்றுபட்ட வகையில் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க  வேண்டும் என்று வரலாறு இவர்களுக்கு ஆணையிடுகிறது.

தமிழ் மக்களின் விடிவுக்காக ஒன்றுபட்டு போராடுவதற்கான பரந்த மனப்பாங்கையும் ,ஆளுமையையும், ஆற்றலையும்  வெளிக்காட்டாது தங்களுக்கிடையே  அரசியல் ஆதிக்கப் போட்டிகளுக்குள்ளும்
தங்களுக்கு இடையேயான குத்து  வெட்டுக்களுக்குள்ளும் தமிழ் மக்களின் போராட்டத்தை சிக்கவைத்துச்  சீரழிப்பார்களேயானால் தமிழ் மக்களை ஏமாற்றிய பாவத்துக்கும் பழிக்கும் இவர்கள் அனைவரும்  உள்ளாக நேரும்.

"" எழுக தமிழ்"" என்பது ஒரு விபத்தல்ல; அது வரலாற்று தேவையும் வரலாற்றின் கட்டளையும் ஆகும்.

தமிழ் மக்களின் நம்பிக்கையை  பெற்று தமிழ் மக்களின் உரிமைக்காக போராட புறப்பட்ட தமிழ் தலைவர்கள்  தமிழ் மக்களை  அடக்கி ஒடுக்கி அழித்தொழிக்கும் சிங்கள ஆட்சியாளர்களை நோக்கி ஓடப் புறப்பட்ட   பின்னணியில்  எழுந்த ""எழுக தமிழ்"" என்பது ஒரு விபத்து அல்ல என்பதையும்  அதற்கு இருக்கக்கூடிய  ஆழ, அகலத்தையும் ,  வரலாற்று உள்ளடக்கத்தையும் சரிவரப் புரிந்தாக வேண்டும்.

இரத்தம் தோய்ந்த வகையிலான இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சக்கட்டத்தை அடைந்து  முடிந்த போது தமிழினம்  அதற்கு ஈடுகொடுத்துத் தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டியதற்கான ஒரு புதிய கட்டத்திற்கு தள்ளப்பட்டது.  அந்தப் புதிய கட்டத்திற்கு தன்னை பகுதியாக்கி அதிலிருந்து பெரிதும் முன்னேறுவதற்கான ஓர்  அழைப்பாய் ""எழுக தமிழ்""  என்பது எழ  வேண்டி இருந்தது.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாய் ஏற்படும் தொடர் தோல்விகளில் இருந்தும் நமது  கடந்தகால வரலாற்றில் ஏற்பட்டிருக்கக் கூடிய நல்லவை  - கெட்டவை ,எழுச்சி  - வீழ்ச்சி ,வீக்க தூக்கம் என்பனவற்றில் இருந்தெல்லாம்  படிப்பினைகளை பெற்றும், உலகை அறிந்தும்  , உன்னை உணர்ந்தும்  புதிய பொலிவுடன் எழுக தமிழா என்பதே இந்த ""எழுக தமிழின்"" வரலாற்று உள்ளடக்கமாகும்.

இதற்கு  ஆழ்ந்த கோட்பாட்டு பார்வையும்  கூரிய வரலாற்று நோக்கும் அவசியமாகும்.  அரசியலை கோட்பாட்டு ரீதியாகவும் , கோட்பாட்டை நடைமுறையுடன் இணைத்து வரலாற்று ரீதியாகவும் பார்க்கும் பார்வை  ஈழத் தமிழர்களின்  அரசியலில் மிகவும் அரிதானது. இன்றைய இந்த தலைமுறையும்  இன்றைய தலைவர்களும் இன்றைய அறிஞர்களும்  அந்த தவறை ஒருபோதும்   இழைக்கக்  கூடாது.

தமிழா ! உன்னை நீ அறிவாயாக.  நீ தொன்மையான வரலாற்று வளர்ச்சியின் வழியில் உருவாக்கிய  செழுமையான பண்பாட்டின்  சொந்தக்காரன்.   பூமியைக் கடந்து அண்ட கோளங்களை தழுவி சிந்திக்கும் ஆற்றலையும்  கூடவே செயல் திறன்களையும் கொண்ட   வரலாறு உனக்கு உண்டு. பல நூற்றாண்டு கால அடிமைத்தன வாழ்வினால்  உனது திறன் மற்றும் ஆற்றல்கள் எல்லாம்  முனை மழுங்கி மங்கிப் போய்விட்டன.    பல நூற்றாண்டு காலமாய் அரசற்ற  நிலையில்  உள்ளார்ந்த அறிவியல் விஞ்ஞான பண்பாட்டு ஆக்கத்திறன்களை வளர்க்க வழியின்றி  வெறுமனே  உடல் உழைப்பையும்  மூளை உழைப்பையும்   விற்று  ஒருவகை நடைப்பிணங்களாக வாழும் துயரம் உண்டு.

பல நூற்றாண்டுகால அந்நிய ஆதிக்கத்தன் கீழ்  அடிமைத்தனத்தை சிந்தனை  முறையாயும் , எஜமானிய விசுவாசத்தை வாழ்க்கை முறையையும்  கொண்ட அறிஞர்களும் தலைவர்களும்  தோன்றும் நிலை ஏற்பட்டது. இப்பின்னணியில்  மக்கள் மத்தியில் பல் வகையான ஆக்கத்திறன்  வளர்ச்சியும்   வளர்ப்பாரின்றி   மழுங்கடிக்கப்பட்டும் மூடுண்டும் போயின . ஒரு நூற்றாண்டு கால அரசியல் தோல்விகளுக்கும் அழிவுகளுக்குமான வேரும் விழுதுகளும் இப்பின்னணியில் உண்டு.

இவற்றையெல்லாம் அடையாளங்கண்டு  மீட்சியடைய எழுக தமிழா.

எதிரியின் அரசியல் ஆதிக்க இரும்புப் பிடிக்குள் அகப்பட்டு இனரீதியாக நசுக்கப்பட்டும் நிலை இருக்கும் வரை    எமது பிள்ளைகளின்  மேம்பட்ட அறிவியல், விஞ்ஞான மற்றும் படைப்பாற்றலகள்  வளர்ச்சியடைய முடியாது.

யூதர்கள் ஒரு சிறிய இனம். உலக சனத்தொகையில் அவர்கள் ஒரு கோடியே 50 லட்சம். அதில் இஸ்ரேலில் மட்டும் 65 இலட்சம் யூதர்கள் அரசமைத்து  வாழ்கிறார்கள். உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளையும்  சிந்தனையாளர்களையும்  அந்த இனம் படைத்திருக்கின்றது.  அவர்களது புவியியல், அரசியல் வரலாற்று  நிர்ப்பந்தங்கள் ஒருபுறம் உந்த   மறுபுறம் அவர்களது பண்பாட்டுப் பாரம்பரிய  பொக்கிஷத்தில்  இருந்து   அறிவியல் -  விஞ்ஞான  ஆக்கத்திறன் வளர்ச்சியை அவர்களால்  அடைய முடிகிறது.

சுமாராக 60 லட்சம் யூதர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட  நிலையில், புதிய சூழலுக்கேற்ப புதிய சிந்தனையுடன் யூத தேசியவாதத்தை செய்து சத்தியத்தை  கட்டமைப்பு செய்து யூதர்கள் விடுதலை அடைந்தார்கள்.  அவ்வாறு விடுதலை அடைந்த யூத அரசு உலகெங்குமுள்ள யூதர்களின் பாதுகாப்பு கவசமாகியது.

அடிமை தளையை உடைத்து எமது  சந்ததியினரை  இனப்படுகொலை களிலிருந்து  பாதுகாக்கவும்,  அவர்களுக்கு புது வாழ்வு காட்டவும் எழுத தமிழா.

எமது பிள்ளைகளினதும் பிள்ளைகளின் பிள்ளைகளினதும் பேரப்பிள்ளைகளினதும்  எதிர்காலச் சந்ததியினரதும்  அறிவியல் - விஞ்ஞான, பண்பாட்டு வளர்ச்சிக்கான கதவுகளை திறக்க எழுக தமிழா .

உலகளாவிய தரத்திலான  தலைமுறையை உருவாக்கவல்ல  தலைமுறையை உருவாக்க எழுக தமிழா.

பரந்த உலகம் தழுவிய மனிதகுல நாகரீக வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்ய  எழுக தமிழா.

முழு உலகம் தழுவிய பூகோளக் கண்ணோட்டத்துடனும் மனித குல நாகரிகம் தழுவிய பரந்த கண்ணோட்டத்துடனும் புதிய தேசியவாதத்தை கட்டமைப்பு செய்ய  எழுக  தமிழா.

தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் சமூக சாதி ஏற்றத்தாழ்வுகளை  களையவும் ஒவ்வொரு மனிதனுக்குமான கௌரவம் மிக்க தலைநிமிர்ந்த  வாழ்வையும் மற்றும் அனைவருக்குமான சம வாய்ப்பையும் சம சந்தர்ப்பத்தையும்   உருவாக்க  எழுக தமிழா.

அனைத்து வகையான மேலாதிக்கங்களை உடைக்கவும்  , புதிய சிந்தனையை  உருவாக்கவும்  எழுக தமிழா.

ஜனநாயகத்தைப் பற்றிப்பிடிக்கவும் அதனை உண்மையான மேம்பட்ட நிலைக்கு வளர்த்தெடுக்கவும் எழுக தமிழா.

தேசிய இன விடுதலையின்றி  அடிமை வாழ்வின்  கீழ்  மேற்படி எத்தகைய வளர்ச்சிக்கும் இடமில்லை என்பதால் விடுதலைக்காக எழுக தமிழா.

விடுதலை அடைவதற்கு உகந்த வகையில் நடைமுறைக்குப் பொருத்தமான வெளியுறவுக் கொள்கையினை புத்தி பூர்வமாய்  வரைந்திட  எழுக தமிழா.

கற்பனைகளை கைவிட்டு,  மனோரம்யா கனவுகளை களைந்து, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கடந்து  தமிழ்  மக்களின் விடுதலைக்காக அறிவுபூர்வமாச் சிந்திக்க எழுக தமிழா.

இழைக்கப்படும் அநீதிகளை  உலகுக்கு பறைசாற்றவும்,  இனப்படுகொலையில் இருந்து விடுதலை அடைய வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தவும்,  உனது தேவைகளை  உலகுக்கு உணர்த்தவும்  எழுக தமிழ் பேரணியில் பங்கெடுக்க எழுக தமிழா.

தமிழ் அருள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை. 16 செப் 2019.

அதிகம் பார்க்கப்பட்டவை: