நாம் பேசுவது தத்துவங்கள் பற்றியா, சம்பவங்கள் பற்றியா அல்லது மனிதர்கள் பற்றியா.
"Strong minds discuss ideas
Average minds discuss events
Weak minds discuss people."
-- Socrates.
"வலிமையான மனங்கள் கருத்துக்களைப் பற்றி விவாதிக்கின்றன.
சராசரி மனங்கள் நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்கின்றன.
பலவீனமான மனங்கள் ஆட்களைப் பற்றி விவாதிக்கின்றன"
[தமிழாக்கம் கூகுள் -- google translation]
"பெரியோர்கள் தத்துவங்களைப் பற்றிப் பேசுவர்.
சாதாரணமானோர் சம்பவங்களைப் பற்றிப் பேசுவர்.
சிறியோர் அடுத்தவனைப் பற்றிப் பேசுவர்."
--தத்துவஞானி சோக்கிரடிஸ்.
தன் கண்கள் இரண்டையும் தானே குத்தி காட்சிக்கு வைத்தாற் போல் தமிழீழ அரசியல் பாழுற்று இருக்கின்றது.
காணாமற் போனவற்றைத் தேடமுற்பட்ட போதுதான் தெரியவந்தது ஏற்கனவே இரண்டு கண்களும் கூடவே காணாமற் போய்விட்டன என்பது. தமிழ் மக்களது அரசியலின் குருட்டுத் தனம் இப்படியே காலங்களைக் கடந்து நீடிக்கின்றது.
தொடர்ந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாய் தமிழ் அரசியல் தோல்வி கண்டு வருகிறது சிங்கள அரசியல் வெற்றி பெற்று வருகிறது . சிங்கள் அரசியல் காலத்திற்கு ஏற்ப சூழலுக்கு ஏற்ப தனது வியூகங்களை மாற்றி வெற்றியை இலக்காகக் கொண்டு புதிய புதிய மாற்றங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வருடகிறது.
சிங்கக் கூட்டம் இரண்டு தடவைகள் தோல்வி அடையும் தமது வியூகத்தை மூன்றாம் தடவை மாற்றிக் கொள்ளும். இந்நியில் வரலாற்றில் இருந்து பாடங்களையும் படிப்பினைகளையும் பெற்று தமிழினம் தன்னை புதிய பாதையில் வழி நடத்த வேண்டிய அத்தியாவசியம் எழுந்துள்ளது. ஆதலால் புதிய யுகத்துக்கு பொருத்தமாக ஈழத்தமிழினம் ஒரு புதிய அரசியல் சிந்தனைக்கு உட்பட வேண்டியது அவசியம்.
இனி அடுத்தது என்ன? தோல்விகளே வரலாறாய் நீடிப்பதுதான் தமிழரின் தலைவிதியா?
பெரும் தியாகம் விளைந்த போராட்டத்திலிருந்து உதிப்பவர்கள் என்ற உணர்வோடு வெற்றிக் கனிகளை கையில் ஏந்தவல்ல புதிய சிந்தனைகளோடும் புதிய வியூகங்களோடும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதற்கான இறுதிக் காலகட்டம் இது.
பேசும் எல்லாவித பெருமைகளை விடவும் எதிரிகளின் காலடியில் அடிமைகளாக வீழ்ந்து கிடக்கும் யதார்த்தம் ஒரு நரக லோகமாய் நிஜவாழ்வில் உள்ளது. தனயனின் வாய் பேச்சு பல்லக்கில் ஏறுகிது, தாயின் கை பிச்சை ஏந்துகிறது. இதுவே ஈழத் தமிழரின் அரசியல் யதார்த்தம்.
"உன்னையே நீ அறிவாயாக" என்பது கிரேக்க அப்பல்லோ தேவதையின் ஆலயத்தில் இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மகுட வாக்கியம்.
"உன்னையே நீ அறிவாயாக" என்பது ஒரு புறம் உண்மையானாலும் உன்னை நீ இடையறாது புதுப்பிக்க வேண்டும் என்பதும் மறுபுறம் உண்மையாகும்.
உன்னை நீ அறி; உன் பலத்தையும் பலவீனத்தையும் நீ அறி; அப்போதுதான் இந்தப் பூமியில் உனக்குரிய இடத்தை நீ கண்டறிவாய்.
ஈழத் தமிழர் விடுதலை அடைய வேண்டும் என்றால் அவர்கள் முதலில் தமது காப்பிய கற்பனைகளில் இருந்தும், முற் கற்பிதங்களில் இருந்தும், வசை பாடல்களில் இருந்தும், புகழ்ச்சிகளில் இருந்தும், அம்புலி மாமாவை குழந்தைக்கு கண்ணாடியில் பிடித்து
கொடுப்பது போன்ற ஏமாற்று அரசியல் வித்தைகளில் இருந்தும் விடுபட்டு தன்னைத் தானே சுத்திகரித்து ஒரு புதிய யுக சிந்தனைக்கும் புதிய மனப்பான்மைக்கும் உள்ளாகினால் மட்டுமே விடுதலை அடைய முடியும்.
கழுகு தரும் வாழ்வியல் பாடம்
கழுகு பற்றி அறிவார்ந்த நிஜமான வாழ்வியலும் உண்டு.
கழுகைப் பற்றி மிகைப் படுத்தப்பட்ட கதைகளும் உண்டு .
கழுகினுடைய திறமை பற்றியும் அது தன்னை மீண்டும் மீண்டும் மீளாக்கம் செய்வல்லது என்பது தொடர்பாகவும் மிகைப்படுத்தப்பட்ட பல கதைகள் உண்டாயினும் கழுகு பற்றிய விஞ்ஞான பூர்வமான விளக்கம் பின்வருமாறு உண்டு.
கழுகில் பிரதானமாக இரண்டு வகை கழுகுகள் உண்டு. ஒன்று காட்டு கழுகு ,மற்றையது வழுக்கை கழுகு அல்லது வெள்ளைத் தலைக் கழுகு.
கழுகு இனம் 70 ஆண்டுகள் வரை வாழ்வதாக மிகைப்படுத்தி
கூறப்பட்டாலும் அப்படி 70 ஆண்டுகள் வரை எந்த வகைக் கழுகும் வாழ்வதில்லை.
காட்டுக் கழுகு 20 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
வெள்ளைத்தலை கழுகு 40 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழும். இந்த கழுகினம் பெரிதும் வட அமெரிக்காவில் வாழ்கிறது. ஐக்கிய அமெரிக்காவின் சின்னமான கழுகு இந்த வெள்ளைத் தலை இனத்தை சேர்ந்தது.
பறவை இனத்தின் ராஜாவான இந்த கழுகானது பறவை இனங்களில் அதிக ஆயுளைக் கொண்டது. கழுகு தன்னை இடையறாது புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டது. அது தனது அலகு அல்லது சொண்டு செயல் திறனை இழக்கும் தருணங்களில் தனது அலகை எப்போதும் பாறையில் தேய்த்து கூர்மைப்படுத்தும். அப்படியே அதன் கூரிய நகங்கள் வளைந்து மழுங்கும் போது அவற்றையும் பாறையில் தேய்த்து புதுமைப்படுத்திக் கொள்ளும். தன்னைத் தானே புதுப்பிக்கும் இந்த கடினமான காரியத்தை அது தனக்குத் தானே செய்து கொள்ளும். இது நிச்சயம் கடினமானதே ஆனாலும் அதனை அது இடைவிடாது செய்யும்.
தன்னைத் தானே புதுப்பிக்கும், மாற்றிக் கொள்ளும் இதன் விஞ்ஞானபூர்வமான கடுமையான இயல்பு ஒரு தேசிய இனத்துக்கு முன்னுதாரணமாய் விளங்கக் கூடியது.
தன்னைத் தானே மீளாக்கம் செய்வதான , புதுப்பிப்பதான சிறிதும் விஞ்ஞானபூர்வமற்ற பீனிக்ஸ் ( Phoenix) எனப்படும் ஒரு புராணப் பறவையின் கதையும் உண்டு. இது எகிப்திய -- கிரேக்க புராணப் பறவையின் கதை.
அதாவது பீனிக்ஸ் பறவை தன் இளமையை இழந்து முதுமை அடையும் போது அது தீயில் தானே விழுந்து எரிந்து போகும். பின்பு அந்தச் சாம்பலில் இருந்து புது பொலிவுடன் மீண்டும் இளம் பறவையாய் உயிர்த்தெழும் என்பது அதன் சாராம்சம்.
அதாவது கடினமானதே ஆனாலும் தன் இளமையை அல்லது வல்லமையை ஒன்று இழக்கும் போது, எத்தகைய இழப்புக்களை
அல்லது கடினமான பாதையை மேற்கொண்டே ஆயினும் தன்னை அது மீண்டும் புதுப்பிக்க அல்லது மீளாக்கம் செய்துகொள்ள வேண்டும் என்கின்ற இலட்சிய பாடத்தை இது உள்ளடக்கமாக கொண்டுள்ளது.
இங்கு மேலே கூறப்பட்ட கழுகின் கதை கற்பனை இல்லை ; அது விஞ்ஞானபூர்வமான, யதார்த்தமான ஒன்று. பீனிக்ஸின் கதை பெரிதும் இலட்சிய வாதமேயானாலும் அதன் உட்கருத்து கவனத்திற்குரியது என்பதுடன் கழுகின் விஞ்ஞானபூர்வமான வாழ்வியல் ஒரு தேசிய இனத்துக்கும், ஏன் மனிதனுக்கும் பெரிதும் முன்னுதாரணமான ஒரு கருத்தியலாகும்.
சுய பரிசோதனை செய்து கொள்வதன் முக்கியத்துவம்
நாம் எங்கு நிற்கின்றோம் என்பதை முதலில் எடை போட வேண்டும். ஈழத் தமிழர்களின் கடந்த கால அனுபவங்கள் சொல்லும் படிப்பினைகள் என்ன ,
உலக வரலாறு எமக்கு போதிக்கும் உண்மைகள் என்ன,
நாம் எங்கிருந்து எங்கு பயணிக்க போகிறோம்,
இலக்கும் பயணமும் பாதையும் என்ன போன்ற வினாக்களுக்கு நாம் முதலில் தகுதியான பதில்களை நமக்கு நாமே அளித்துக் கொள்ள வேண்டும்.
நாம் எமது வெற்றி தோல்விகளுக்கான பதில்களை நாமே ஆராய்ந்து கண்டுபிடிக்காமல் விட்டு விட்டால், எதிரியின் பதில்களே எமது தலைவிதி என்று ஆகிவிடும். எதிரியின் பதில் என்னவெனில், தோற்க வேண்டிய தமிழன் தோற்று விட்டான் என்பதும் தோல்விதான் தமிழனின் தலைவிதி என்பதும் ஆகும்.
எமது சொந்த அனுபவங்களான வெற்றிகள் தோல்விகள், நல்லவை கெட்டவை, எழுச்சிகள் வீழ்ச்சிகள் என்பனவற்றில் இருந்தும், அயலவர்களின் வெற்றிகள் தோல்விகள் நல்லவை கெட்டவை என்பவற்றில் இருந்தும், மனித குலம் கண்ட வரலாற்று அனுபவங்களில் இருந்தும் பாடங்களையும் படிப்பினைகளையும் பெற்றுக் கொண்டு எமது விடிவுக்கான புதிய பாதையையும் அதற்கான புதிய சிந்தனையையும் நாம் தேடியாக வேண்டும்.
இயற்கை - சமூகம் - அரசுகள், அனைத்தின் இயக்கமும் நியதிகளுக்கு உட்பட்டதே
இப்போது 21 ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி. சுமாராக 2000 தேசிய , தேசிய சிறுபான்மை இனங்களையும் ஐநா அங்கத்துவத்தின் படி 196 நாடுகளையும் மொத்தம் 200க்கு குறையாத அரசுகளையும் கொண்டு இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இயற்கைக்கு என்று நியதிகள் இருப்பது போல, பூமிக்கு என்று குறித்த நியதிகள் இருப்பது போல உயிரினங்களுக்கு என்றும் நியதிகள் இருப்பது போல, மனித குலத்துக்கு என்றும் நியதிகள் உண்டு; அதே போல ஆளும் அரகளுக்கு என்றும் நியதிகள் உண்டு. இயற்கையின் செயற்பாடுகளும் உயிர்வுகளும், சமூகத்தின் செயல்பாடுகளும் நியதிகளுக்கு உட்பட்டவை. யாரும் தான் நினைத்தபடி காட்டாறாய் செயல்பட முடியாது.
மேலோட்டமாக பார்க்கும் போது அப்படி தன்னிச்சையாக செயல்படுவது போலத் தோன்றினாலும் அச்செயல்பாட்டின் பின்னே அதனைத் தூண்டிய சமூக, வரலாற்று, அரசியல் காரணிகள் நிச்சயம் இருக்கும்.
பருவம், அமாவாசை என்பனவற்றை மனிதனால் உருவாக்க முடியாது. ஆனால் நிகழக்கூடிய பருவம், அமாவாசையை கணக்கிட்டு அதற்கு பொருத்தமாக மனிதன் தனது செயற்பாட்டை மேற்கொள்ள முடியும்.
இன்றைய யுகமான 21 ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் காணப்படும் பூகோளமயப்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் தாக்கங்கள் செலுத்தும் இந்த உலக வாழ்வில், ஈழத் தமிழர்கள் தமக்குரிய பாத்திரம் எது , பணி எது என்பதை தேர்ந்தெடுத்து நடைமுறை சாத்தியமான வகையில் தங்கள் விடுதலை அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
புதிய யுகத்துக்கான புதிய அரசியல் வேண்டி, பீனிக்ஸ் பறவை போல, தமிழர்கள் நாமே நம்மை புதுப்பித்துக் கொள்வோம்.
------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக