Genocide லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Genocide லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 மே, 2023

பாக்-நீரிணை அரசியலில் ஈழத் தமிழரும், தமிழகமும், இலங்கை-இந்திய அரசுகளும், வல்லரச வேட்கைகளும். - மு.திருநாவுக்கரசு.


23/9/2024

பாக்-நீரிணை அரசியலில் ஈழத் தமிழரும், தமிழகமும், இலங்கை-இந்திய அரசுகளும், வல்லரச வேட்கைகளும்.

---------------------------------------------------------------------

'ஈழத்தமிழரின் பாதுகாப்பும் தமிழ்நாட்டின் வகிபாகமும்' என்ற தலைப்பில் 2023, மே 06 ஆம் திகதி அன்று, சென்னை ரமடா பிளாசா(Ramada Plaza) விடுதியில், கனடாவாழ் ஈழத்தமிழரான திரு. நிமால் விநாயகமூர்த்தி தலைமையில் நிகழ்ந்த உரையாடலின் போது திரு.மு.திருநாவுக்கரசு ஆற்றிய தொடக்க உரையின் எழுத்துருவே இக்கட்டுரை.

---------------------------------------------------------------------

அரசியலை ஒருபோதும் தனிநபர்களுக்கு  ஊடாகவோ,  தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு  ஊடாகவோ பார்க்கக் கூடாது. அரசியலை விஞ்ஞானபூர்வமான கட்டமைப்பு ஆய்வு (Structural Analysis) மற்றும் கட்டமைப்புச் செயற்பாட்டுமுறைமை (Structural Functionalism)  சார்ந்த அறிவியல் முறைமைகளுக்கு ஊடாக  நோக்க வேண்டும்.. இந்த வகையில்  தமிழகத்தை  ஈழத்தமிழருடன் பின்னிப் பிணைந்த  புவியியல் பண்பாட்டு --வரலாற்றுப் பின்னணியில் வைத்து  யதார்த்த நிலமைகளுக்கு  ஊடாக  சரிவர அணுகவேண்டியது  அவசியம்.

 மனிதனது அரசியல் வாழ்வானது அவன்  சார்ந்த சூழ்நிலைகளினால் பின்னணிகளினால் நிர்ணயிக்கப்படுகின்றது என்பது தெளிவானது. அப்படிப் பார்க்கையில்  புவியியல் அமைவிடம்  சார்ந்த தர்க்கரீதியான யதார்த்தபூர்வ நிலமைகளின் படி தமிழகம்தான் ஈழத் தமிழர்களின் குருவிக்கூடு. அதேவேளை ஈழத்தமிழர்கள் வாழும் மண்தான் இந்தியாவின் மூலைக்கல் அல்லது மூலக்கல் (Cornerstone)   என்பதனையும் கருத்திற்கொள்ளத் தவறமுடியாது.

ஆனால் இந்த இரண்டின்  தர்க்கபூர்வ செயற்படு முறைமையையும் அதனது நடைமுறை சார்ந்த அர்த்தத்தையும் புரிந்துகொள்வதில் எம்மத்தியில் பாரிய சிக்கல்கள் உள்ளன.

ஈழத்தமிழர் பிரச்சினையினை பிரித்தானியர்களிலிருந்து இந்தியத் தலைவர்கள் வரை உலகப் பெருந்தலைவர்கள் பலரும்  கையாண்டுள்ளனர்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வடிவமைத்து, அதனைக் களத்தில் நின்று வழிநடத்தியவர்களில் ஒருவரும், அக்காலத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராகவும், பின் நாட்களில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அலோசகராகவும் இருந்த திரு .J.N.Dixit, தான் எழுதியAssignment Colomboஎன்ற நூலில் ஒரு முக்கியமான விடயத்தைக் குறிப்பிடுகின்றார். அதாவது,

பிரதமர் ராஜிவ்  காந்திக்கோ,  அவருக்கு ஆலோசனை வழங்கியவர்களுக்கோ அன்றேல் தனக்கோ இலங்கை இனப்பிரச்சினை பற்றித் தெளிவான பார்வையோ, புரிதலோ போதியளவு இருக்கவில்லை' என்று கூறிதுடன்  மேலும்    'இலங்கையின் இனப்பிரச்சினையினை வெறும் அரசியல் சீர்திருத்தங்களாலோ , பொருளாதாரச் சீர்திருத்தங்களாலோ ஒருபோதும் தீர்க்கப்பட முடியாத அளவுக்கு அது இரு இனங்களுக்கும் இடையே  அதலபாதளமான  இனப்பகையினைக் கொண்டுள்ளதுஎன்றும்  கூறியுள்ளார்.  

 இதேபோன்று   பேராசிரியர் B. H. Famer எழுதிய “Ceylon: A Divided Nation”  என்ற நூலுக்கு  சுதந்திர இலங்கையின் முதலாவது அரசியல் யாப்பினை எழுதிய சோல்பரிப்  பிரபு எழுதிய அணிந்துரையில்,  தாம் இலங்கையின் இனப்பிரச்சினையினையைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல், தவறுதலாக இலங்கையின் அரசியல் யாப்பினை எழுதிவிட்டோம்என ஓர் ஒப்புதல் வாக்கும் அளித்துள்ளார்.

 இவற்றிற்கும் அப்பால்   புரிந்துகொள்ளப்படக்கூடிய இன்னொரு  விடயம் என்னவென்றால், வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் மட்டுமன்றி, ஈழத்தமிழ்த் தலைவர்களுங்கூட இலங்கையின் இனப்பிரச்சினையினையைச் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான். இத்தகைய குழப்பகரமான பின்னணியில் இருந்துதான் ஈழத்தமிழ் மக்களது நூற்றாண்டுகளைக்  கடந்த அழிவு நீண்டு  செல்கிறது.

இந்த இடத்தில்  இயல்பாகவே ஒரு கேள்வி எழலாம். ஏன் ஈழத்தமிழ்த் தலைவர்கள் தமிழ்  மக்களின் பிரச்சினையினைச் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை?

இதற்கான அடிப்படைக் காரணங்கள் பல.

ஆயுதப் போராட்டத்துக்கு முன்னர் தமிழ்த் தலைவர்கள் அனைவருமே முழுநேர வழக்கறிஞர்களாகவும் பகுதிநேர அரசியல்வாதிகளாகவுமே இருந்தனர். சேர். பொன். இராமநாதன்,  திரு ஜி. ஜி. பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம், திரு அ. அமிர்தலிங்கம் வரை எவரும் முழுநேர அரசியல்வாதிகள் கிடையாது (இறுதிக் காலத்தில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் நிமிர்த்தம், முழுநேர அரசியல்வாதியானார்). உண்மையான அர்த்தத்தில் ஆயுதப் போராட்டம் தோன்றிய பின்னர்தான் முழுநேர அரசியல்வாதிகள் தமிழ் மக்களிடையே முகிழத்  தொடங்கினர்.

 மேலும், அறிவுசார் தமிழ்  நடுத்தர  வர்க்கமானது அரச உத்தியோகத்தர்களாய் இருந்ததன் காரணமாகவும், அரசைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்ற வாழ்க்கைச் சூழலைக் கொண்டிருந்ததாலும், அரசியலை அவர்களால் அறிவியல் பூர்வமாக அணுகி முன்னிறுத்த இயலாதுபோனது.

பாக்-நீரிணைப்பால்(Palk Strait) இலங்கை ஒரு தீவாக இருப்பதன் புவிசார் பலம்

அறிவியல் கண்கொண்டு ஈழத்தமிழர் -- இந்தியா, ---  சர்வதேச அரசியல் மற்றும் உலகலாவிய அரசியல் என்ற நான்கு பரிமாணங்களையும் இணைத்துப்  பார்த்தால், இலங்கை இனப்பிரச்சினையின் முதுகெலும்பு பாக்கு நீரிணைதான் (Palk Strait) என்கிற புவிசார் அரசியல் (Geopolitics), புவிசார்வரலாற்று யதார்த்தம்  (Geohistorical reality) என்பது தெரியவரும். அதாவது, பாக்கு நீரிணைப் பிரச்சினைதான் ஈழத்தமிழர் பிரச்சினை. ஈழத்தமிழர் பிரச்சினை, இலங்கைப் பிரச்சினை, இந்தியப் பிரச்சினை, சீனப்  பிரச்சினை, அமெரிக்கப் பிரச்சினை மற்றும் சர்வதேசப் பிரச்சினை அனைத்துமே பாக்கு நீரிணையிற்தான் மையங்கொண்டுள்ளன.

புவிசார் அரசியல் வரலாற்று அடிப்படையில் நோக்கும் போது, உலகத்தில் தீவுஎனும் நிலப்பரப்பு அமைப்பானது அதனைச் சார்ந்து அங்கு வாழ்பவர்களுக்கு முதல்நிலைப் பெரும் பலம் என்பது தெரியவரும். உதாரணமாக கியூபா ஒரு தீவு. அங்கு 1959 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை கம்யூனிஸ்ட்  கட்சியின் ஆட்சி நிலவுகின்றது என்றால் அது, பிடல் காஸ்ரோவின் தனித் திறமையினால் சாத்தியமானது என்பதைவிட , அது ஒரு தனித் தீவாக இருப்பதனாற்தான்  அதிகம் சாத்தியமானது என்பதே சரியான  புரிதலாகும். கியூபா ஒரு தனித் தீவாக இருப்பதனால் அமெரிக்காவினால் அதனை இலகுவாக ஊடுருவவோ,   இலகுவில் விழுங்கிவிடவோ முடியாது.

 இன்னுமொரு உதாரணத்தையும்  நோக்கலாம் .  அதாவது தாய்வான் ஒரு தீவாக இருப்பதனால் சீனாவினால் அதனை இலகுவாக விழுங்கிவிட முடியாதுள்ளது.  1949 ஆண்டு சீனக் கொம்யூனிஸ்ட்  கட்சி பதவிக்கு வந்து மறு ஆண்டு, 1950 ஆம் ஆண்டே  தீபெத்தை இராணுவ நடவடிக்கை மூலம் சீனா தன்னுடன் இணைத்துக் கொண்டது போல இற்றை வரை தாய்வானைச் சீனாவால் தன்னுடன் இணைத்துக்கொள்ள முடியாதுள்ளது.

அரசியல் அர்த்தத்தில் தீவுக்கென்று ஒரு தனி அடிப்படைப் பலமுண்டு என்பது இங்கு தெளிவாகிறது. இலங்கை என்பது ஒரு தீவு. இந்தியாவிலிருந்து 14.5 கடல் மைல்  (17 மைல் ,  27 கிமீ)  தொலைவில் பாக்கு நீரிணையினால் அது பிரிக்கப்பட்டிருக்கிறது.

பாக்கு நீரிணைதான் இலங்கை அரசியலின் குவிமையம். பாக்கு நீரிணை இல்லை என்றால் இலங்கை ஒரு  தீவு  அல்ல; அது  நிலத்தொடரால்  தமிழ்நாட்டின் ஒரு பகுதி கடைசிப்  பனியுகத்தின் போதுதான் அது தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து சென்றது. அந்தப் பிரிவின் அடிப்படையிற்தான் இலங்கை ஒரு தனி நாடாகவும், ஒரு அரசாகவும் இருப்பது சாத்தியமானது.

சுமார் 500க்கும் மேற்பட்ட இராஜ்ஜியங்களைக் கொண்டிருந்த பரந்த இந்தியாவை ஒன்றிணைத்து, ஒரு இந்திய நாடாக உருவாக்கிய பிரித்தானியர்கள் ஏன் இலங்கையையும் அதனோடு இணைத்து உருவாக்கவில்லை? ஏனெனில் இலங்கை ஒரு தீவு. இந்தத் தீவுதான் சிங்களவர்களுக்கு ஒரு அரசைக் கொடுத்தது. அந்தவகையில் இலங்கைத்தீவைத் தனி அரசாக வைத்திருப்பது  இந்துமாகடல் தழுவிய கடல்சார் காலனிய ஆதிக்கத்திற்கும் அவசியமாக இருந்தது.

இந்தியாவில் தோன்றிய பௌத்தம் இந்தியாவைக் கடந்து கிழக்காசியா, தென்னாசியா மற்றும் தென்கிழக்காசியா வரை பரவியது. ஆனால்  இந்துமத எழுச்சியினால் இந்தியாவில் அது அழிந்துபோனது. அதேநேரம் இலங்கைத்தீவில் இந்துமதத்தால் புத்தமதத்தை அழிக்க முடியவில்லை. மாறாக இலங்கைத்தீவில் பௌத்தத்தைக் காப்பது புவியியல் அடிப்படையில் சிங்கள பௌத்த ஆட்சியாளர்களுக்குச் சாத்தியமாகி இருக்கிறது.

 இது எப்படிச் சாத்தியமானது? ஈழத்தமிழர்கள் தமிழகத்துக்குப் பக்கத்தில் தமது வாழ்விடத்தைக் கொண்டுள்ளனர். பாக்கு நீரிணை ஈழத்தமிழரைத் தமிழகத்துடன் தொடுக்கும் ஏணியாக இருக்கிறது. இதனால் மொழி, இனம், மத அடிப்படையில் தமிழகத்துடன் ஒத்த தன்மையைக் கொண்டுருக்கின்றனர். இதுதான் தமிழர்களுடன் சிங்களவர்களுக்கு இருக்கும் அடிப்படைப் பிரச்சினை.

சோழப் பேரரசின் கடல்கொள்கை

இந்தப் பாக்கு நீரிணையினூடாகத்தான் சோழப்  பேரரசு இலங்கையைக் கைப்பற்றியது. 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழர்கள் அநுராதபுரத்தைக் கைப்பற்றினார்கள். சிங்களவர்களின் பார்வையில் 1500 ஆண்டுகளாக  தொடர்ந்து வளர்ந்து நிலைபெற்ற ஒரு சிங்கள அரசை சோழப் பேரரசு இந்தியாவிலிருந்து வந்து அப்படியே கௌவிப்பிடித்து அழித்தது. அநுராதபுர தலைநகரை அழித்த சோழர்கள் கடல்சார்ந்து விளங்கும் திருகோணமலைக்கு அண்மையில் உள்ள பொலநறுவையில் தமது தலைநகரை நிறுவினர்.

1500 ஆண்டுகளாக நிலைத்திருந்த ஒரு இராஜதானியை அழித்து, அது இல்லாமல் ஆக்கப்பட்டதை சிங்கள பௌத்தர்கள் வரலாற்றில் ஒருபொழுதும் மறந்துவிட மாட்டார்கள். குறிப்பாக இந்தியாவுடன் இருக்கும் நெருங்கிய புவிவியற் பின்னணி காரணமாக இந்தியாவில் எழக்கூடிய எந்தவொரு எழுச்சியும் இலங்கைக்குப் பரவும் என்ற அச்சம் சிங்கள பௌத்தவர்களிடம் எப்போதும் உண்டு.

வடஇந்தியாவில் கடல் பேரரசு தோன்றாத காலத்தில், இந்தியாவில் தோன்றிய பலம் பொருந்திய முதல் கடற்  பேரரசு சோழப்  பேரரசுதான். வரலாற்றில் இந்து மகா கடலிலும் அதுதான் முதல் கடற்  பேரரசு. பரந்த உலகரங்கிலும் கடற் பேரரசுக்கு இது ஒரு முன்னோடி. இதனால் சோழப்  பேரரசுக்கு கடல் முக்கியமானது. வெளியுறவுக் கொள்கையிலும் அன்றைய சோழப்  பேரரசின் வெளியுறவுக் கொள்கைதான் இன்றைய இந்தியாவின் இருப்பை நிலைநிறுத்தக்  கூடியதும் வாழவைக்கக்  கூடியதுமாகும்.

 இன்று 21 ஆம் நூற்றாண்டில் , அதுவும் 2010 ஆம் ஆண்டைத் தொடர்ந்து  முன்வைக்கப்பட்டிருக்கும்  இந்தோ-பசுபிக் கொள்கையானது சோழப் பேரரசின் கொள்கைதான். கி. பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் தென்கிழக்காசிய நாடுகளில் மையங்கொண்டிருந்தனர். ஏனென்றால் சோழப் பேரரசுதான் கடல்கடந்து  போனது. இந்தியாவிலிருந்து வேறு எந்தப் பேரரசும் கடல்கடந்து போவில்லை. இந்தியா அடிப்படையில் தரைவழிப் பேரரசு. இராஜசூய யாகம், அஸ்வமேத யாகம் என்ற தரைவழி வகைகளினாலேயே வட இந்தியப் பேரரசுகளின் விருத்தி அமைந்திருத்தது. சோழப் பேரரசு மட்டுந்தான்  கடல்கடந்த  பேரரசை உருவாக்கியது.

 இந்தப் பேரரசுதான் சிங்கள அரசை அழித்தது. இதற்கும் அப்பால் கடல் வழியாகவே  காலத்துக்குக்  காலம் இந்தியாவிலிருந்து படை எடுப்புக்களும்,  மதஆதிக்கங்களும் அரசியல் தலையீடுகளும் இடம்பெற்றன. இதனால் சிங்கள பௌத்த அரசு பெரும் சவாலுக்குள்ளானது.

சிங்கள-பௌத்தத்தின் இந்திய-விஸ்தரிப்பு எதிர்ப்பு வாதம்

இந்தியாவில் தோன்றிய பௌத்தம், இந்தியாவிலேயே அழிந்தபோது, இந்தியாவிற்கு எதிராக இலங்கையில் தேரவாதப் பௌத்தத்தை பாதுகாப்பதற்காக பௌத்தமத சங்கம், சிங்கள அரசு எல்லாம் இணைந்து ஒரு திரட்சி பெற்றன.இவ்வாறாகவே இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படையே இந்தியாவுக்கு எதிரான சிங்கள மனோபாவமாக மாறியுள்ளது. இந்தியாவில் தோன்றிய பௌத்தம் இந்தியாவில் அழிந்தது போல, இந்தியாவினுடைய வளர்ச்சி இலங்கையை, சிங்கள அரசை, பௌத்த மதத்தை அழித்திடும்  என்ற  வரலாற்றுபூர்வ  அச்சம் சிங்களவரிடம் உண்டு.  இந்த நிலையில் சிங்களவர்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டுமானால் இந்தியா மீதான எதிர்ப்பரசியல் அவர்களுக்கு வேண்டும் என்ற மனநிலை அவர்களிடம் உண்டு. அவர்களது அந்த இந்திய எதிர்ப்புடன்  கூடவே  ஈழத்  தமிழர்களும் உள்ளடக்கப்படுகின்றனர்.

அப்படியானால் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை சிங்களவர்கள் யாரோடு புரிகிறார்கள்? உண்மையில் இந்தியாவுக்கு எதிரான யுத்தத்தைத்தான் சிங்களவர்கள் தமிழர்களோடு புரிகிறார்கள். சிங்களவர்களுக்கு  எதிரான இந்தியாவின் யுத்தத்தைத்தான் ஈழத்தமிழர் சிங்களவர்களுடன் புரிகின்றனர்.

 ஈழத் தமிழர்கள்  எவ்வளவு அப்பாவித்தனமாக  இந்திய -- இலங்கை  அரசுகளுக்கு இடையேயான ஆதிக்கம் - ஆதிக்க எதிர்ப்பு போட்டியின்  ஒரு பக்கவிளைவாய் அழிக்கின்றனர்  என்பது கவனத்திற்குரியது.

இதனை இன்னும் தெளிவாகக் கூறினால் இந்திய விஸ்தரிப்பு வாதத்தினது கைக்கூலிகளாக ஈழத் தமிழரை சிங்களவர்கள் கருதி,  இந்தியாவுக்கு எதிரான தமது யுத்தத்தை அப்பாவி ஈழத் தமிழர்கள் மீது முதலில் புரிகிறார்கள். இதனால்தான் ஈழத்தமிழர்களை சிங்களவர்கள்  இந்திய விஸ்தரிப்பு வாதத்தினது  கருவிகள், கையாட்கள், கைக்கூலிகள் என்கின்றனர்.

1971 ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக  ஜனதா விமுத்தி பெரமுன (JVP) மேற்கொண்ட கிளர்ச்சியின் போது போதித்த ஐந்து கருத்துக்களில் ஒன்று' இந்திய விஸ்தரிப்பு எதிர்ப்பு' என்ற தலைப்பிலாகும். இதில் தமிழர்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கைக்கூலிகள் என்று போதிக்கப்பட்டது.

இதன்படி பார்த்தால் இந்தியாவுக்கெதிரான சிங்கள பௌத்த யுத்தத்தில், ஈழத்தமிழர்கள் தமக்காக அன்றி இந்தியாவின் பெயரால் அநியாயமாக கொல்லப்படுகின்றனர் என்பதே அடிப்படை உண்மையாகும்.

தமிழ்நாடு - ஈழப்போராட்டத்தின் குருவிக்கூடு.

இந்த இடத்தில் இன்னொரு வினோதமான யதார்த்தையும் பார்க்கலாம்ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சுமார் 12க்கும் மேற்பட்ட ஆயுதப் போராட்ட இயங்கங்கள் இலங்கையில் இருந்தன. அத்தனை இயக்கங்களுக்கும் தமிழகம் தான் பாதுகாப்பு அளித்தது. அனைத்து இயக்கங்களது தலைவர்களும் தமிழகத்தில் பாதுகாப்பாக இருந்தனர்.

தமிழகத்தில் இல்லாத தலைவர்கள் அனைவரும் பாக்கு நீரிணைக்கு இப்பால் இலங்கையில் அழிக்கப்பட்டனர். விடுதலைப்  புலிகள், புளொட், ரெலோ, ஈரோஸ் முதலான அனைத்து இயங்கங்களினதும் பெரும்பாலான தலைவர்கள்  இவ்வாறு  அழிக்கப்பட்டனர். எவரும் இலங்கையில் மிஞ்சவில்லை. ஈழப்போராட்டத்தை ஆரம்பித்துவைத்து, இலங்கையில் தங்கியிருந்த யாரும் இலங்கையில் மிஞ்சவில்லை. இந்த வகையில் சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து தப்பி பாக்கு நீரிணைக்கு அப்பால்  தமிழகத்திற்தான் அவர்கள் பாதுகாப்புடன் இருந்தனர்.

இந்த இடத்தில் கடினமான ஒரு விடயத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழகத்தில் காலூன்றி, தமிழகத்தை ஒரு குருவிக்கூடாகக் கொண்டிருந்த காலத்திற்தான் தமிழீழ விடுதலைப்  போராட்டம் வளர்ந்து சென்றது.

தமிழகத்திலிருந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் அந்நியப்பட்டபோது விடுதலைப் போராட்டம் அழிவுமுகம் கொண்டது. 1987 ஆம் ஆண்டிலிருந்து போராளிகள் தமிழகத்திலிருந்து அந்நியப்படத் தொடங்கினர். தமிழகத்தில் இருந்த இயங்கங்களின் தலைமைப்  பீடங்கள் எல்லாம் ஈழத்திற்குத் திரும்பின. தமிழகத்தில் இருந்த காலத்தில் தமிழக  மக்களோடு சேர்ந்து அவர்களது பாதுகாப்பு  அங்கு சாத்தியமாய் இருந்தது. ஒத்த இனச்சகோதரத்துவம் (Ethnic brotherhood) சர்வதேச அரசியலில் நிர்ணயகரமான சக்திகளில் ஒன்று.  குறிப்பாக நாடுகடந்த இஸ்லாமிய சகோதரத்துவ அரசியலிலும்,   கியூபெக் பிரஞ்சு-இன சகோதரத்துவ அரசியலிலும் இதற்கான நாடுகடந்த சகோதரத்துவ அரசியல்களின் வெற்றிகளைக் காணலாம்.

இங்கு ஒரு  நடைமுறை விடயத்தை  கருத்திற்கொள்ளத் தவறக்கூடாது. மேற்கு நாடுகளின் கடவுச் சீட்டுக்களைக் கொண்டிருந்த விடுதலைப்  புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், ரெலோ இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் சத்தியேந்திரா மற்றும் விடுதலைப் புலிகளின் துணை அரசியல் பொறுப்பாளர் லோரன்ஸ் திலகர் ஆகிய மூவரையும், 1985 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசு நாடு கடத்தியது. ஆனால் தமிழகத்தில் இதைக் கண்டித்து எழுந்த எழுச்சியினால் மூன்று நாட்களுக்குள் மூவரது நாடுகடத்தல் உத்தரவும் திரும்பப் பெறப்பட்டு, மூவரும் மீண்டும் இந்தியா திரும்பினர். மூன்று நாட்கள்கூட அந்த நாடுகடத்தல் நீடிக்கவில்லை. இது எப்படிச் சாத்தியமானது?

முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகள் ஏற்படலாம். அவற்றைத் தீர்ப்பதற்குப்  பொருத்தமான மாற்று வழிகளும் உண்டு. சுதந்திர இந்திய வரலாற்றில் முழுஅளவில் மிகப்பெரிய ஹர்த்தால், கதவடைப்பு போராட்டம் நிகழ்ந்ததென்றால் அது ஈழத்தமிழர்களின் பேரால் தமிழ்நாட்டில் தான் நிகழ்ந்தது. 1983 ஆம் ஆண்டு ஈழத்தில் சிங்களர் நடத்திய கறுப்பு ஜீலை படுகொலைகளை கண்டித்து, 1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி, தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் ஹர்த்தால் அன்றைய பிரதமர் இந்திரா  காந்தியை வியப்பில் ஆழ்த்தியது. அப்போது அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் “What is happening on the island nation of Sri Lanka? It’s not other than a genocide”  எனக் கூறினார். ‘Genocide’ என்ற சொல் முதல்முறையாக , அதுவும் இந்தியப் பிரதமர் ஒருவரினால் எடுத்தாளப்பட்டது. தமிழகத்தின் எழுச்சியைக்  கண்டு, ஹர்த்தாலைக் கண்டு அசந்துபோன நிலையில் இந்திராகாந்தி அப்படிச் சொன்னார். இந்த வகையில் தமிழகத்தின் பலம்  ஈழத் தமிழருக்கு  மிகவும் முக்கியமானது என்பது தெரியவரும். இது புவிசார் வரலாற்று பண்பாட்டு  அடிப்படையைக் கொண்டது. இது ஒரு நடைமுறை யதார்த்தம்.

 

பாக்-நீரிணைப்பு ஈழ ஆயுதப் போராட்டத்தை இந்தியாவுடன் இணைத்த தொடுகயிறு.

இங்கு உங்களுக்கு மிகவும் துயரகரமான, கண்ணுக்குத் தெரியக்கூடிய கடுமையான அனுபவங்களைச் சுட்டிக்காட்ட முடியும். ஒரு காலத்தில், இலங்கையில் போராளிகளின் தாக்குதல்கள் இடம்பெறும். தாக்குதல் நடந்து சிறிது நேரத்துக்குள் குறித்த இயக்கத்தின் தலைவர், அவர் விடுதலைப்  புலிகளின் தலைவராகவோ, புளொட் இயக்கத்தின் தலைவராகவோ அன்றேல் ரெலோ இயக்கத்தின் தலைவராகவோ இருக்கலாம், சிறிது நேரத்துக்குள் தமிழகத்தில் பாதுகாப்பாக வந்து இறங்கி இருப்பார்.  

பெர்னான்டோ(S.A. N. Fernando) அதுலத் முதலிக்கு சொல்லிய ஆலோசனை

இதைவிட.  ஈழத் தமிழரது போராட்டத்திற்கான அடிப்படை பின்புல யதார்த்தத்தினை புரிந்துகொள்வதற்கு  ஏதுவான  இன்னுமொரு முக்கிய  அனுபவம் ஒன்றை குறிப்பிடலாம். எனது நண்பர் S.A. N. Fernando இவர் ஜனதா விமுர்த்தி பெரமுன (J.V.P) அமைப்பின் தலைவர் ரோகண விஜயவீரவினது மனைவியின் உடன் பிறந்த அண்ணன். முழு இலங்கைக்குமான ஆசிரியர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்தவர். நல்ல மனிதர். அவர் உயிருக்கு J.V.P. யினாலும் இலங்கை அரசாங்கத்தினாலும் ஆபத்து இருந்தது. அதனால் புகலிடம் தேடி யாழ்ப்பாணம் வந்தார். அப்போது பல்வேறு விடுதலை இயக்கங்கள் இருந்தன.  அவரை யார் சுடுவார்? யார் சுடமாட்டார் என்பது தெரியாது. சிங்களத்தில் பேசினாலே அவரை அரசின் உளவாளி என்றெண்ணி சுடப்படக்கூடிய ஆபத்து இருந்த காலம்.

 அப்போது அவர் என்னை அணுகினார். அவருக்குப் பாதுகாப்பு அளிக்கமுடியுமா எனச் சிந்திக்கப்பட்டது. இது குறித்து முக்கிய  பல  இயக்கங்களுடனும் பேசினேன். எல்லோரும் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்கள். அவர் பாதுகாக்கப்பட்டார். தெற்கில் பிரச்சினை ஏற்பட்டபோது எங்கள் போராட்டக் களத்தில் அவருக்குப் பாதுகாப்பு சாத்தியமாய் இருந்தது. அதனால் அவர் எங்களிடம் வந்தார்.

அவ்வாறு அவர் என்னுடன் நெருங்கியப் பழகிய காலத்தில் அவரது நெருங்கிய முன்னாள் நண்பர் ஒருவர், தன்னிடம் கூறியதாக என்னிடம் அவர் கூறிய தகவல் ஒன்றினை இங்கு உங்களுடன்  பகிர்ந்து கொள்கின்றேன்.

1983 கறுப்பு ஜீலை இனப்படுகொலைக் கலவரம் நிகழ்ந்தபோது, அதற்கான பழியை அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன  J.V.P மீது போட்டார். இதனால் J.V.P  தலைவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டனர்.  அதில் J.V.P. யில் இருந்த உயர் குழாத்தைச் சேர்ந்தவரும் பிரான்ஸில் இராணுவ விஞ்ஞானம் (Military. Science) படித்திருந்தவருமான ஒருவர் திருகோணமலை துறைமுகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.   அப்போது அவரும் கைதுசெய்யப்பட்டார்.

 கைதுசெய்யப்பட்ட பின் இராணுவ விஞ்ஞானம் படித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அப்போது அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலிக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது அந்த நபரை லலித் தன்னிடம் அழைத்துவரச் செய்து அவருடன் சாதாரண நிலையில் உரையாடுகையில்  லலித் பின்வருமாறு வினவினார்.  “இப்போது எங்களுக்குள்ள பிரச்சினை ' பயங்கரவாதிகள்தான்' ('Terrorists') பிரான்சில் இராணுவ விஞ்ஞானம் கற்றுக் கொண்டவர் என்ற வகையில் (Military Science) '  பயங்கரவாதிகளை'  ஒழிக்க  ஒரு வழி சொல்ல முடியுமா ''  என்று  கேட்டார். 'அதற்கான பதில் மிகவும் எளிதானது ' என்றுகூறி பின்வருமாறு அந்த நபர் பதில் சொல்கிறார்.

 அதாவது பலஸ்தின விடுதலைப் போராட்டம் முற்றிலும் அரபு நாடுகளில் தங்கியிருக்கிறது. தமிழ்ப் பயங்கரவாதிகள் தமிழகத்தில் தங்கியிருக்கிறார்கள் என்ற எதார்த்தத்தை முதலில் கருத்தில் கொள்ளவேண்டும்.  பலஸ்தினருடைய இராணுவ முகாம்கள், அகதிமுகாம்கள், வளங்கள் எல்லாம் லிபியா, லெபனான், சிரியா, ஜோர்டான், எகிப்து முதலான அரபு நாடுகளில் இருக்கின்றன.  அந்த நாடுகளில் உள்ள பலஸ்தின முகாம்கள்மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்துவதுபோல, உங்களால் தமிழகத்தில் தாக்குதல்  நடாத்த முடிந்தால், தமிழ்நாட்டுக்கும் விடுதலை இயக்கங்களுக்குமான தொடர்பை முறித்துவிட முடிந்தால், புலிகள், புளொட் மற்றும் ரெலோ பயங்கரவாதிகளை நீங்கள் எளிதில் அழிக்கலாம்.என்ற பின்புல யதார்த்தத்தை எடுத்துக் கூறினார். அதன்பின் அந்தக்கைதி விடுதலையானார்.

நேரடியான அர்த்தத்தில் நமக்கு தமிழகம் பெரும் மக்கள் பலம். அதாவது, பலம் என்பது அரசியல் அர்த்தத்தில் ஆயுதபலமோ இராணுவக் கட்டமைப்போ அல்ல.  நிலம் - மக்கள் - கூட்டிணைப்பு (Land and People, alliances)   இவைதான் அடிப்படைப் பலங்கள். அதாவது மக்களும், நிலமும், கூட்டணிகளும்தான் மிகவும் அடிப்படையான பலம். இருவரின் இனம், மொழி ஒன்றே. இவற்றோடு இந்த மக்களிடம் ஈழத்தமிழரை ஒத்த திரண்ட பண்பாடு இருக்கிறது. இவை சாதாரணமானவை அல்ல.

இற்றைக்கு 80,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மானிடவியல் வரலாறு தமிழகத்துக்கு உண்டு. இந்தியாவிலேயே அதிக நீண்ட வரலாறு கொண்ட மனிதர்கள் மதுரையில் வாழ்கிறார்கள். இவ்வாறு நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட மக்களிடம் ஒரு அரசியல் கிளர்ச்சி எழும்போது அது பற்றிப்பிடித்து எழும். தலைவர்களோ, நபர்களோ, கட்சிகளோ முக்கியமல்ல. மண்ணும் மக்களுந்தான் முக்கியம்.

ஈழத்தமிழர்கள், தமிழகத்தில் அல்லது இந்தியாவில் ஒரு கட்சிக்குச் சார்பாகவோ, ஒரு நபருக்குச் சார்பாகவோ ஒருபோதும் நிலையெடுக்கக்கூடாது. மாறாக  தமிழ்நாடு, தமிழக மக்கள் இவைதான் ஈழத் தமிழரின்  புவிசார் வரலாற்றுப் பலம்.  இதன் தொடுகயிறு  இந்திய அரசு. இந்த வகையிற்தான் அரசியலை ஈழத் தமிழர் பார்க்க வேண்டும், அப்படிப்பார்த்தால், தமிழகம் பாக்கு நீரிணையோடு இணைந்திருக்கிறது. இந்தப் பாக்கு நீரிணையை புலிகள் இந்தியாவுடன் சேர்ந்து ஆண்டார்கள். இன்னொரு வகையில் அவர்கள் இந்துமாகடலையே ஆண்டார்கள். ஒரு கட்டத்தில் அமெரிக்காகூட இதற்கு மாறாக எதனையும் செய்யமுடியவில்லை. ரஷ்யாகூட இந்தியாவுடன் இணைந்துதான் இங்கு எதையும் செய்யமுடிந்தது.

புலிகளுக்கும் ஆயுதப்  போராட்டத்திற்கும் இந்தியாவுக்கும் இடையே பாக்கு நீரிணையில் ஒருவகைக் கூட்டிணைவு இருந்தது. பின்பு இப்பாக்கு நீரிணைத் தொடுகயிறு அறுந்துபோனது. ஆனால் விடுதலைப் புலிகளிடம் சர்வதேச ரீதியில் பதிவுசெய்யப்பட்ட சுமார் 24 எண்ணிக்கையிலான சரக்குக்கப்பல்கள் இருந்தன. அந்த 24 கப்பல்களும் பெருங்கடல் வழியாக விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கக்கூடியனவாய் இருந்தன.இந்தப் பின்னணியில் புலிகளுக்குத் தமிழ்நாடு தேவைப்படவில்லை. தமிழ்நாடு ஒரு கூடாரமாக இருக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. பெருங்கடல் வழியாக ஆயுதங்களைக் கொண்டு வந்தார்கள்.

 ஆனால் 2006 ஆம் ஆண்டில் புலிகளின் மொத்தம் 13 கப்பல்கள் இந்தப் பெருங்கடலில் அழிக்கப்பட்டன. 2006 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுக்குள் 08 அல்லது 09 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இதில் 03 கப்பல்கள் வங்காளா விரிகுடாவிலும் 05 கப்பல்கள் இந்துமா கடலிலும் அழிக்கப்பட்டன. இதில் சுமார் 5 கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா. மூன்றுக்கும் குறையாத கப்பல்களை இந்தியாவோடு இணைந்து இலங்கை அரசு அழித்தது என்று கருதப்படுகிறது.

 இந்துமா கடலில் பாக்கு நீரிணையை ஒட்டி புலிகள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் ஆயுத விநியோகம், மக்கள் தொடர்பு, எரிபொருள், உணவுப்பொருள் மற்றும் மருந்துப் பொருள்களின் விநியோகம் அனைத்தும் சீரான முறையில் இருந்தன. ஆனால் பாக்கு நீரிணையில் இந்திய அரசுடன் இணைந்து தாங்கள் கொண்டிருந்த கட்டுப்பாட்டை இழந்த பின்னர், பெருங்கடல் வழியாக கப்பல்களின்மூலம் ஆயுத விநியோகம் நிகழும்போது அதனைக் கண்காணித்துத் தாக்கக்கூடிய வல்லமை வல்லரசுகளுக்கு இருந்தது.

இதனால் புலிகளின் பெருங்கடல் வழியான விநியோகத்தைக் குறிவைத்து வியூகங்களை அமைப்பது சாத்தியமானது. பெருங்கடலின் மீது எந்த விதமான தாக்குதல்களையும் செய்யக்கூடிய வல்லமை வல்லரசுகளுக்குண்டு.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டது முள்ளிவாய்க்காலில் அல்ல. அவர்கள் தோற்கடிக்கப்பட்டது பெருங்கடலில்.

வரலாற்றை  பொதுவாக பார்க்குமிடத்து  நெப்போலியன் 1815 ஆம் ஆண்டு வாட்டர் லூவில்  ( Waterloo)  தோற்கடிக்கப்பட்டார் என்பர். ஆனால் உண்மையில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டது 1805 ஆம் ஆண்டு இடம்பெற்ற ரபல்கார் போரிலேயே (Battle of Trafalgar) என்று வரலாற்று ஆசிரியர்கள் வர்ணிப்பர். ரபல்கார் போரிற்தான் அவருடைய பெருங்  கூட்டுப்படையும் அழிந்தது. அரசியல் இராணுவ அர்த்தத்தில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டது  தரையில் அல்ல ; கடலில் ,  ரபல்கார் போரிலேயேயாகும். இவ்வாறே புலிகள் தோற்கடிக்கப்பட்டதும் முள்ளிவாய்க்காலில் அல்ல, தரையிலல்ல, இந்தியப் பெருங்கடலில்.

அதுவும் , பெருங்கடலில்.2005 ஆம் ஆண்டை ஒட்டி சர்வதேச அரசியலில் இந்துமா கடல் சார்ந்து எழுந்த புதிய அரசியற் கொந்தளிப்பின் பின்னணியிற்தான் இத்தகைய அரசியற் பூகம்பம் நிகழமுடிந்தது. பாக்கு நீரிணை சார்ந்த இந்த இந்துமா கடல் சுழிக்குள் முதலில் மூழ்கியது ஈழத்தமிழர்; அதன் பின்பு  சிங்கள அரசியலும் இந்துமகா கடல் அரசியல் புயலுக்குள் அலைமோதுகிறது. அதில் முதல் கட்டமாக கோட்ட பாயா தலைமையில் ராஜபக்ஷாக்களும் மூழ்கிப் போயினர்.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டது கடலில். அந்தக் கடல் ஈழத்தமிழர்களும் இந்தியாவின் பகுதியான தமிழகமும் பங்குபோட்டிருக்கும் கடல்.

பாக்கு நீரிணையின் ஒருபகுதி ஈழத்தமிழர் கையிலும் அதன் மறுபகுதி தமிழகத்தின் கையிலும் இருக்கிறது. இந்த இரண்டு கடற்பகுதிகளும் நம் இருவரினதும் கையில் இருக்கும்  வரை இந்தக் கடலையும் மக்களையும் எந்தப் பெரு வல்லரசுகளாலும் ஆழமுடியாது. வெளி வல்லரசுகள் இந்தக் கடலை ஆக்கிரமிக்காமல் இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும் என்றால்  தமிழீழத்தை அங்கீகரிப்பதைத்  தவிர வேறுவழி எதுவும் கிடையாது.

பாதுகாப்புக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வகையில் இந்தியாவிற்கு முகம் கொடுத்தாற் போல தமிழீழ மண்ணின் அமைவிடம் அமைந்துள்ளது. அத்துடன் இலங்கை தீவில் மூன்றில் இரண்டு பகுதி கடற்பரப்பை தமிழீழப் பகுதி கொண்டுள்ளது. அது சிங்கள ஸ்ரீலங்காவையும் கவ்விப் பிடிக்கக்கூடிய கடல் சார்,  நிலம் சார் பகுதியாகும்.

தமிழீழம் ஓர்  அரசாக உருவாகும் இடத்து சிங்கள ஸ்ரீலங்கா தன் தீவுத் தன்மையை இழந்துவிடும். சிங்களச் ஸ்ரீலங்காவின்   பலம் அதன் தீவுத்தன்மைதான்.  ஆனால் தீவு இரண்டாகப் பிரியுமிடத்து சிங்கள அரசு  தன் தீவுத்தன்மையை இழந்து  இந்துமாக்கடலில் தனக்கிருக்கக்கூடிய பேரபலத்தையும் இழந்திடும்.  அப்போது  தீய வெளிச் சக்திகளுடன் இணைந்து சமாதானத்துக்கு பங்கமாய் இருக்கக்கூடிய பலத்தையும்  சிங்கள அரசு இழந்துவிடும்.

 ஈழத்தமிழர்கள் வாழவேண்டும் என்றால் அவர்களுக்கு  தமிழகப் பின்புலம்  வேண்டும். இந்தியாவின் நீட்சியான தமிழகம் இல்லை என்றால் ஈழத்தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை. அதேவேளை ஈழத்தமிழர் அழிக்கப்பட்டு, இலங்கைத்தீவு பெரிதும் சிங்கள பௌத்த  மயமாகிவிட்டால், நீண்ட  காலத்தில் தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பாதுகாப்பு அறவே இருக்காது. பாக்கு நீரிணையோடு இணைந்த ஈழத்தமிழ் அரசே, இந்தப் பிராந்தியத்தினது சமாதானத்துக்கும் பாதுகாப்புக்குமான அடிப்படை என்பது எவ்வளவு விரைவாக உணரப்படுகின்றதோ அவ்வளவுக்கு அது  இருதரப்பிற்கும் நன்மை தரக்கூடியதாகும்.

 நாம் பகைமமைகளை உற்பத்தி  செய்யும் இயந்திரங்களாக இருக்கக்கூடாது. நட்பை அறுவடை செய்யும் விளைநிலங்களாக விளங்க  வேண்டும். உயிரை உயிருண்டு வாழ்வதே உயர் வாழ்வு. உயிர்வாழ்வில் தர்மம் என்று எதுவும் கிடையாது. கீரை சாப்பிட்டாலும் உயிர்தான். கீரையிலுள்ள புழுவை அகற்றினாலும் அதுவும் உயிர்தான். ஆக, உயிரை உயிருண்டு வாழ்வது உயிர்வாழ்வு.  தூய தர்மவான் என்றும் நீதிமான் என்றும்  எந்தொரு மனிதனும் இல்லை; எந்தொரு அரசும் இல்லை;  எந்தொரு மதமும் இல்லை. அது போலவே உயிரை உயிருண்டு வாழும்  உயிரியலிலும் அரசியலிலும்   நலன்களுக்கு இடையிலான போட்டிக்களங்களே உள்நாட்டு அரசியலும்,  வெளிநாட்டு அரசியலும் , வாழ்வியலுமாகும். எனவே நாங்கள் இத்தகைய எல்லாவித நலன்களோடுந்தான் அரசியல் வித்தைகளை  உறவாட வேண்டும்.

தமிழீழம் - இந்தியாவின் பாதுகாப்பு மூலைக்கல் (Cornerstone)

இறுதியான விடயம் இதுதான். வாய்ப்புக்களை கையாளும் கலைதான் இராஜதந்திரம். வாய்ப்புக்களைச் சரியானமுறையில் கையாள  வேண்டும். எங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒரே ஒரு வாய்ப்பாக ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல தமிழகமும் ஈழத்தமிழரும் உள்ளனர். புவியியல் சார்ந்த கட்டமைப்பின் அடிப்படையில் பார்க்கும்போது, உலக வரலாற்று ஒழுங்கில் தமிழகந்தான் ஈழத்தமிழர்களுக்கான உண்மையான நண்பன். இன்னொரு வகையில் பார்த்தால் உலக அரங்கில் இந்தியாவின் ஒரு பகுதியாகிய தமிழகத்தின் உறவு ஈழத்  தமிழர்களுக்குத் தலையானது.

இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கும் குறையாத. நவீன மனிதகுல வரலாற்றின் சாராம்சமாகச் சொல்வதென்றால், இந்தியாவோடு இணைந்த தமிழகம் இல்லையென்றால் ஈழத்தமிழர்கள் இல்லை. இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்கள் இல்லையென்றால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமிழகத்திற்கு மூலக்கல் அல்லது மூலைக்கல்  இல்லை. தமிழீழம் இல்லையென்றால்  இந்துமாகடல்  தழுவிய மட்டத்தில் தமிழகம் இந்தியாவுக்குப் பாதுகாப்பான மூலைக்கல்லாக (CornerStone) அமைந்திட முடியாது. எனவே ஈழத்தமிழ் மண்தான்  தமிழகத்தின் வழியே இந்தியாவுக்கு மூலைக்கல் அல்லது மூலக்கல்.

 தமிழகத்தையும் இந்திய அரசையும் அணைத்துத்தான் தமிழீழப் போராட்டத்தை தோற்கடிக்க முடியும் என்பதில் சிங்கள இராஜதந்திரிகள் திடமாகினர். அதேவேளை ஈழத் தமிழரை தோற்கடிப்பதன் வாயிலாக இலங்கையில் இந்தியாவுக்கு ஏதுநிலை அல்லது வாய்ப்புகள் இல்லாத நிலைமையை உருவாக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் முன் அறிவுடன் செயல்படலாயினர்.

 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய --  ஒப்பந்தத்தின் வாயிலாக ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்கும் இடையே பகைமையை உருவாக்குவதில் சிங்களத் தரப்பு வெற்றி பெற்றது. இதன் வாயிலாக  இந்தியா -- ஈழத் தமிழர் என்ற இரு தரப்புகளுக்கும்

பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதில் சிங்கள தலைவர்களும் இராஜதந்திரிகளும் தமது எண்ணங்களுக்கேற்ற  வெற்றிகளை அடைந்து வருகின்றனர்.

 இந்துமாகடல் சார்ந்து உலகம் தழுவிய நலன்களோடு இலங்கைத் தீவையும் இனப்பிரச்சினையையும் உலக வல்லரசுகள் கையாள்கின்றன. அதாவது இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்பான இன்றைய நிலையில்,   ஒரு வாகனத்தை முழுமையாக விற்றுப் பெறும் இலாபத்தைவிட அதனை உதிரிப் பாகங்களாக விற்றுப் பெறும் இலாபம் அதிகமாவது  போல, (Asset stripping)  இலங்கைத் தீவை துண்டுதுண்டாக விற்று, வாங்கி  இலாபம் பெறும்  வல்லரச அரசிய்லும் பாக்கு நீரிணையைப் பின்னணியாகக்   கொண்டே கரையேறுகின்றது.

 ஈழத் தமிழருக்கான விடுதலைப் போராட்டத்தில் பாக்கு நீரிணையையும் இந்துமா கடலையும் மையமாகக் கொண்ட சிந்தனை முதன்மையானது. இத்தளத்தில் ஊற்றெடுத்துத்தான் 21 ஆம் நூற்றாண்டின் இன்றைய. அரசியல் வடிவம் பெற்றுவரும் புதிய சர்வதேச அரசியல் சூழலில்  அதற்கிணங்கத்  தமிழர் தம்மை தகவமைத்து முன்னேற வேண்டியது  அவசியம். இங்கு கற்பனைக்கும், விதண்டா வாதத்திற்கும் நான்பிடி -- நீபிடி என்ற ஏட்டிக்குப் போட்டி அரசியலுக்கும் இடமில்லை.  அப்படி  அறிவார்ந்த நடைமுறை அரசியலுக்கு மாறாக கற்பனாவாத ஏட்டிக்குப் போட்டி அரசியலில் ஈடுபடுவோரால்    தமிழினத்தை அழிப்பதில்   முதலாவது பரிசைப்  தட்டிக்கொள்ள முடியுமே தவிர தமிழ்த் தேசியத்தை வாழவைக்க முடியாது.

 தமிழகம் ஈழத்  தமிழர்களுக்கான குருவிக்கூடு. மருத்துவப் பயன்பாட்டு அர்த்தத்தின்படி எதனையும் தனியாகப் பார்க்காது, அனைத்தையும்  ஒன்றுடன் ஒன்று தொடர்புறுத்தி ஒன்றிணைந்த வடிவத்தில் அணுக (Holistic Approach) வேண்டும்.

இறுதி அர்த்தத்தில், இங்கிருந்துதான் நாம் எதையும் கட்டியெழுப்ப வேண்டும். அதாவது  நாங்கள் வீழ்ந்தது பாக்கு நீரிணை அரசியலில்.  எங்கே வீழ்ந்து கிடக்கிறோமோ அங்கிருந்துதான் நாம் எழுந்துவர வேண்டும். அதுவும் பாக்கு நீரிணையில் இருந்துதான் எழுந்துவர வேண்டும். அறிவார்ந்த வகையில் திடமான வார்த்தையில்   சொல்வதென்றால் விடுதலை முற்றிலும் சாத்தியமானது.

 தனிப்பட்ட  விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் அறிவின் மீதான பற்றோடும் நடைமுறை யதார்த்தத்தின் மீதான நம்பிக்கையோடும் அரசியலை  முன்னெடுக்க வேண்டும். களயதார்த்தத்துக்குப் பொருத்தமான, அறிவார்ந்த

நல்லதை நோக்கிய விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையே (Praxis)  தீர்மானமானகரமான பாத்திரத்தை வகிக்க  வல்லதாகும்.

 ---------------------------------------

  

அதிகம் பார்க்கப்பட்டவை: