இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 டிசம்பர், 2025

சென்னையில் திறவுகோல். - மு.திருநாவுக்கரசு. 18.11.2006.

ஆசிரியர் குறிப்பு. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் 18.11.2006 திகதி பதிப்பில் அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு வன்னியில் இருந்து எழுதிய சென்னையில் திறவுகோல் எனும் இக்கட்டுரை முதன் முதலாக வெளிவந்தது. இக்கட்டுரையை பின்னர்"" புதினம் "" இணையத்தளமும் மறுபிரசுரம் செய்திருந்த.

காலத்தின் தேவையை உணர்ந்து இக்கட்டுரையை நன்றியுடன் இங்கே மறு பிரசுரம் செய்கின்றோம்.



சென்னையில் திறவுகோல். 
- மு.திருநாவுக்கரசு. 18.11.2006.

திராவிட இயக்கம் தந்த ஜனநாயக எழுச்சி

"சாமானியர்களின் சகாப்தம்" என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் சக்தியாய் 1960களில் திரட்டி எடுத்தார். மக்கள் திரள் அரசியற் சக்தியான போது எதிரிகளின் கொடி, குடை, ஆலவட்டங்கள் சரிந்து விழுந்தன. இதன் வழியே தமிழகமானது மக்கள் திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட களமாகியது.

அப்படி மக்கள் திரளாக்கப்பட்ட தமிழக அரசியலின் பலம்தான் தமிழீழ மக்களின் பலமுங்கூட. இதனை உலகலாவிய அரசியல் யதார்த்தத்தில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

தமிழக மக்களை ஜனநாயக அலைக்குள் இழுத்துவிட்டதில் அண்ணாவிற்கு மிகப்பெரும் பங்கு உண்டு. அந்நியர்களிடமும், மன்னர்களிடமும், பிரபுக்களிடமும் சிக்குண்டு இருந்த அரசியல் அதிகாரத்தை மக்களின் கைகளுக்கு மாற்றுவதற்கான பெயர் தான் தேசியம்.

மன்னர்களிடமோ, வம்சங்களிடமோ, எதேச்சதிகாரிகளிடமோ, இனவாதிகளிடமோ அரசியல் அதிகாரம் சிறைப்பட்டிருக்காது. அதை மக்களின் கைகளுக்கு உரியதாக்குவதைத்தான் ஜனநாயகம் என்கின்றோம். அத்தகைய ஜனநாயகத்தை வாழ வைப்பதற்கான ஒரு வடிவமே தேசியம் என்பதாகும். ஆதலால் தேசியம் என்பது அடிப்படையில் ஜனநாயக அமைப்பு ஆகும்.

எங்கு ஜனநாயகம் இல்லையோ அங்கு தேசியம் இல்லை. அரசியல் அதிகாரம் சாமானியர்களுக்கு உரியது. மக்களே நாயகர்கள். இதுதான் தேசியத்தின் அறைகூவல். இத்தகைய அறைகூவல் 1960களில் தமிழகத்தில் துடிப்புடன் எழுந்தது.

திராவிட இயக்கத்தின் எழுச்சி என்பதும் இத்தகைய தேவையின் வெளிப்பாடுதான் "சாமானியர்களின் சகாப்தம்" என்ற இந்த ஜனநாயக உள்ளடக்கத்தைத்தான் "திராவிட இயக்கம்" என்ற இயக்கத்ின் பெயரில் மக்கள் ஆதரித்தார்கள்.

இலங்கையின் அரசும் - அரசாங்கமும், தமிழ்நாடும்

இலங்கைத்தீவின் அரசியலிலும் அரசியல் தீர்மானங்களிலும் தமிழ் பேசும் மக்களுக்கு பங்கில்லை என்ற போது,  தமது வாழ்நிலையை அவர்கள் தீர்மானிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது, சிங்கள இனவாதம் தனது இரும்புக்கரங்களை விரித்தபோது,

ஜனநாயகத்தின் தேவையாய் தமிழ்பேசும் ஈழ மக்கள் தேசிய வழியில் போராடப் புறப்பட்டமை தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று நிர்ப்பந்தமாகும். அதுவே ஜனநாயகத்திற்கான ஒரே ஒரு மூலமும் ஆகும்.

சிங்கள அரசு இனவாத ஒடுக்குமுறையை கட்டவிழ்த்த விட்ட போது, உலகிலுள்ள அரசுகள், உலகில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசு என்ற ரீதியில் ,  சிங்கள இனவாத அரசுடன் சமரசம் செய்யும் ஒரு நடைமுறையே உலக அரசியலின் இலங்கைக்கான பொதுப் போக்காய் அமைந்தது. அதன் இனவாதப் படுகொலைகளோ அநீதிகளோ உறவாடும் அரசுகளுக்கு ஒரு அநீதியாய் தோன்றுவதில்லை.

பனிப்போரின் பின் பின்னான உலக யதார்த்தங்கள் மேலும் இந்நிலையைப் பலப்படுத்தி உள்ளன. உலகலாவிய பொருளாதார நலன்களுக்காக உலகிலுள்ள அரசுகள் எல்லாம் தம்மிடையே சமரசம் செய்து இலங்கை அரசுடனும் சமரசப் போக்கை நடைமுறையில் பின்பற்றுகின்றன.

இந்நிலையில் தமிழீழ மக்களுக்கான பலம் உலக அரசுகள் என்ற கட்டமைப்புக்குள் இருக்க முடியாது. அரசுகளிடம் நீதி, நியாயம் என்பது இல்லை. மாறாக பொருளாதார, இராணுவ, அரசியல் நலன்களே உள்ளன. இத்தகைய நலன்களுக்காக எத்தகைய அநீதியுடனும் அரசுகள் கைகோர்க்கும், ஒத்துழைக்கும்.

இந்த அடிப்டையில் இலங்கையை ஆளும் அரசுடன் உலகிலுள்ள அரசுகள் ஒத்துழைக்கும் நிலையில் உள்ளன. மனித உரிமை என்ற ஒரு கவசத்தை போர்த்துக்கொண்டு உலகிலுள்ள அரசுகள் ராஜபக்ச அரசாங்கத்தை குறை கூறினாலும் பொருளாதார, இராணுவப் பரிமாணங்களில் உலகில் உள்ள அரசுகள் ராஜபக்சவுக்கு செயல்பூர்வ அர்த்தத்தில் துணை நிற்பதன் அடிப்படையும் இதுவே ஆகும்.

இதில் "அரசு"(State), "அரசாங்கம்"(Government) என்ற பதங்களை அரசியல் விஞ்ஞான அர்த்தத்தில் பொருள் பிரித்து எடைபோட வேண்டும். 
அரசு (State) என்பது நான்கு கூறுகளை உள்ளடக்கிய அரசியல் அமைப்பு.
அவை,

1. ஒரு பரந்த நிலப்பரப்பு,
2. அந்நிலப்பரப்பின் மக்கள்,
3. மக்களின் இறையாண்மை (Sovereignty) மற்றும்
4. மக்களை நிர்வகிக்கும் அரசாங்கம் ஆகியவை. 

இதில் அரசாங்கம் (Government) என்பது அரசின் ஒரு கூறு மட்டுமே. அரசாங்கம் என்பது அரசின் ஆணைகளைச் செயல்படுத்தும் கருவி அல்லது செயல்முறை அமைப்பு (Working Agency) ஆகும்.

உலகில் உள்ள அரசுகளுக்கு இலங்கையின் புவிசார் இருப்பிடத்தின் முக்கியத்துவத்தால் இலங்கை அரசுடனான உறவு அவசியமானது. ஆனால் ராஜபக்ச அரசாங்கம் பற்றி சில வசதியீனங்கள் உலகில் உள்ள சில அரசுகளுக்கு இருந்தாலும் அந்த அரசுகளுக்கு இலங்கை அரசுடனான உறவு அவசியம் என்றதன் அடிப்படையில்தான் அத்தகைய அரசுகளும் ராஜபக்ச அரசாங்கத்திற்கு உதவும் நிலையில் உள்ளன.

இத்தகைய உலகலாவிய அரசுகளின் வியூகத்தை உடைப்பதற்கான ஒரே ஒரு மூலோபாயம் தமிழகம் மட்டும்தான்.

முழு இந்தியாவிலும, அதிகமாக ஜனத்திரள் அரசியலுக்கு பெரிதும் பழக்கப்பட்டிருக்கும் மக்களாய் தமிழ்நாட்டு மக்கள் உள்ளனர். இது அரசியலில் சிறப்பானதும் முற்போக்கானதுமான அம்சமாகும்.

தமிழக மக்களிடம் தமிழீழ மக்கள் பற்றிய நீதியின் பாலான இனமான உணர்வு பெரிதும் உண்டு. சிங்கள உயர் குழாத்தின் தமிழ் இன ஒடுக்கு முறைக்கும் இனப் படுகொலைகளுக்கும் எதிரான நீதியின் பாலான ஒரே ஒரு செயல்பூர்வக் குரலாய் தமிழ்நாட்டு மக்களே இருந்துள்ளனர். இருந்து வருகின்றனர்.

அத்தகைய ஜனத்திரளின் ஒருமித்த ஆதரவுதான் சர்வதேச அரங்கில் தமிழீழ மக்கள் பிரவேசிப்பதற்கான ஒரே ஒரு பாதையாகும்.

சென்னை திரண்ட ழும்போது புதுடில்லி சென்னைக்குப் பணியும்.
புதுடில்லி பணியும் போது உலகம் புதுடில்லிக்கு தலைசாய்க்கும்.
இது தான் எளிமையான சூத்திரம்..

இதனை முற்றிலும் விஞ்ஞான பூர்வமாக விளக்க முயல்வோம்.

இலங்கை அரசு பற்றிய இந்தியாவின் தவறான புரிதல்

இராணுவ அர்த்தத்தில் இலங்கைத்தீவு பிரிக்கப்படாத "" ஓர் அரசாக ""இருப்பது இலாபம் என புதுடில்லி நினைக்கின்றது. ஆனால் அது ஒரு தவறான நினைப்பு என்பதை சிங்கள உயர் குழாத்தின் அரசியலை விளங்கிக் கொண்டோருக்குத் தெரியும். து ஒரு புறமாக இருக்கட்டும்.

(இலங்கை பிரிக்கப்படாத ஓர் அரசாக இருப்பதோ அல்லது ஈழத்தமிழரை முழுவதும் அழித்த, வெறும் சிங்கள இன மக்கள் மட்டுமே வாழும் அரசாக இருப்பதோ, எதுவாக இருந்தாலும், அது, இந்தியா தன்னை அதிகார பலம் கொண்டு என்றைக்காவது விழுங்கிவிடும் ஒரு மாபெரும் மலைப்பாம்பு என்கிற உள்ளூர இருக்கும் அச்சத்தோடும், ஜாக்கிரதை உணர்வோடுமே, 2 ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவை அனுகியுள்ளது, இந்தியாவை தந்திரமாகக் கையாண்டு தப்பித்து வந்துள்ளது என்பதை 
வரலாறெங்கும் உள்ள ஆதாரங்கள் கொண்டு வேறு கட்டுரைகளில் விரிவாக ஆசிரியர் விளக்கியுள்ளார். அந்த மலைப்பாம்பின் குட்டிகளாக ஈழத் தமிழரை சிங்கள இனவாதம் பார்க்கிறது என்பதையும் விளக்கியுள்ளார்.)

புதுடில்லி மேற்படி தவறாக புரிந்துகொண்டு இலங்கையின் "ஒருமைப்பாட்டை" ஆதரித்து உதவுகின்ற போதிலும் புதுடில்லியின் 40 நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட சென்னை கிளர்ந்து எழும் போது அரசியல் நலனுக்காக புதுடில்லி சென்னைக்கு பணிய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.

முதலாவதாக, ஆறரைக்கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாடு எழுச்சி பெறும் போது, அதுவும் ஜனத்திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட தமிழகம் எழும்போது புதுடில்லியால் பணிவதை தவிர வேறு வழி இருக்க முடியாது.

இத்தகைய ஜனத்திரள் என்னும் பலத்தை தமிழகத்திற்கு திரட்டிக் கொடுத்தது தமிழகத்திற்கான அறிஞர் அண்ணாவின் பெருங்கொடையாகும்.

இரண்டாவது அம்சம் மத்தியில் 40 நாடாளுமன்ற ஆசனங்கள்; 
இந்தியாவில் தனிக்கட்சி ஆட்சியின் காலம் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. மாநிலக் கட்சிகளை அரவணைக்கின்ற கூட்ட ரசாங்கங்களே இனிமேல் பதவிக்கு வரலாம்.

இந்த வகையில் கூட்ட ரசாங்கத்தை அமைக்கக்கூடிய எந்த ஒரு முக்கிய கட்சியும் தமிழகத்தை பகைக்க மாட்டாது.

ஆதலால் தமிழக மக்கள்தான் தமிழீழ மக்களுக்கான இருதய சக்தி. அதேவேளை தமிழக மக்களுக்கும் தமிழீழப் பிரதேசமே முதற்தர பாதுகாப்பு அரணாகும் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் சிங்கள உயர்குழாத்து இலங்கை அரசு இந்திய அரசுக்கு எதிரான அரசுகளுடன் சோரம் போகும் இயல்பைக் கொண்டுள்ளது. இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா காலத்தில் இருந்து இற்றை வரை இந்தப் போக்கைத் தெளிவாகக் காணலாம்.

இலங்கையின் மூலோபாய மற்றும் இந்தியப் பெருங்கடலில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு, கிழக்கு என்ற தமிழீழப் பிரதேசங்கள் தமிழ் மக்களின் கையில் இல்லை; சிங்களரின் அதிகாரத்தில் தான் உள்ளன. தமிழர் கையில் இருந்திருந்தால் கூட சிங்கள ஆளும் உயர்குழாத்தினர் இலகுவாகவே அந்நிய சக்திகளுக்கு அடிபணிந்து இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் தெளிவாக கூட்டுச் சேரும் முனைப்பு உள்ளவர்கள்.

இதன்படி தமிழீழ மக்களின் பலம் குன்றினால், தமிழ்நாட்டின், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு முதலில் கெடுவதுடன், அதன் வழியே முழு இந்திய தேசத்தின் பாதுகாப்பும் கெட்டுவிடும். ஆதலால் தமிழீழ மக்கள் இப் பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒரு முக்கியமான கேந்திர மக்கள் என்பதை தமிழகமும் இந்திய தேசமும் கருத்தில் எடுக்க வேண்டியது அவசியம்.

பரந்த இந்தியாவோடு ஏற்படும் உறவால் உலகிலுள்ள ஏனைய அரசுகளுக்கு பாரிய நலன்கள் உண்டு. ஆதலால் இந்திய அரசிற்குள்ளாகத்தான் அவை இலங்கைத்தீவை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு. தற்போது இந்தியா உட்பட உலகில் உள்ள எந்த ஒரு அரசும் தமிழீழ மக்களுக்கு ஆதரவக இல்லை என்பது வெளிப்படையானது.

ஆனால் தமிழ்நாட்டின் ஆறரைக் கோடி மக்களைக் கொண்ட ஜனத்திரளின் முன் புதுடில்லி பணியும் போது முதலில் புதுடில்லியின் கூட்டணி அரசும் தமிழர் பக்கம் தலைசாய்க்கத் தொடங்கும்; ஈழத் தமிழரின் மீதான அநீதிக்கு கேள்வி எழுப்பும் நிலை உருவாகும். அதனைத் தொடர்ந்து உலகில் இந்தியாவுடன் இணக்கமாக உள்ள ஏனைய அரசுகளும் தலைசாய்க்க முற்படும். இறுதியில் எஞ்சியிருக்கும் சில அரசுகளும் காலகதியில் தலைசாய்க்கும். இதுதான் யதார்த்தம்.

ஆதலால் தமிழீழ மக்களின் அனைத்து நலன்களுக்குமான, பெறவேண்டிய நீதிக்கான திறவுகோல் சென்னையில்தான் உள்ளது.

அந்த தமிழக ஜனத்திரளின் ஆதரவே,
உலகளாவிய அர்த்தத்தில் தமிழீழ ஜனநாயக நலனுக்கான திறவுகோலும் கூட.

 

தமிழீழ மக்களும் தமிழ்நாடும்

தமிழீழ ஜனநாயக மீட்பிலிருந்தே சிங்கள மக்களுக்கான ஜனநாயக மீட்பும் உருவாகும். சிங்கள உயர்குழாத்தின் இனவாத அரசியலுக்கு முடிவு கட்டுவதன் மூலம்தான் பரந்துபட்ட சிங்கள மக்களின் ஜனநாயகமும் உருப்பெற முடியும்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளினதும் கட்சி அரசியலுக்குள் தமிழீழ மக்கள் விழத் தேவையில்லை. தமிழ்நாட்டு மக்கள் தங்களின் கட்சி அரசியலை தாங்களே பார்த்துக் கொள்வார்கள். தமிழக மக்கள் எந்தக் கட்சியை பதவிக்கு கொண்டுவர விரும்புகிறார்களோ அது அவர்களின் தெரிவு.

அப்படி தமிழ்நாட்டில் அதிகாரத்திற்கு, பதவிக்கு வருவோரை எம்மை ஆதரிக்குமாறு கோருவதும் அதற்காக தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் நட்பையும் கோரி நிற்பதையுமே தமிழீழ மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறையாகும்.

மக்கள் அலை எழும் போது கட்சிகள் மக்கள் அலைக்கு தாமே செவிசாய்க்கும். ஆதலால் தமிழீழ தேசியப் பிரச்சினையில் தமிழகக் கட்சி நிலைப்பாடுகளுக்குள் அகப்படாது தமிழீழ கொள்கை நிலைப்பாட்டின் பேரில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவை கோரி நிற்பதே ஈழத் தமிழருக்கு அவசியமான மூலோபாயமாகும். தமிழ்நாட்டுடனும் அதன் அனைத்து வகையான வர்த்தக, பொருளாதார, கல்வி , கலாச்சார, தொழில்நுட்ப, அரசியல் அமைப்புக்களுடனும் ஈழத் தமிழர்கள் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டு தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் உள்ள உறவை மேலும் வலுவாக்க வேண்டும்.

தமிழகத்தில் இப்போது ஓர் அலை எழத்  தொடங்கியுள்ளது. அதனைப்பற்றிப் பிடிக்க வேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும். இதனைத் தக்க வகையில் பயன்படுத்த வேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும்.

 

தமிழீழம் - சென்னை - புதுடெல்லி - உலகம்.
இன்றைய உலக அரசியலில் ஒரே ஒரு அரசியல் பொருளாதார ஒழுங்குதான் இருக்கின்றது. அது உலகலாவிய ஏகாதிபத்தியத்தின் மையப் பொருளாதார ஒழுங்குதான்.

உலகிலுள்ள அனைத்துப் பலம் வாய்ந்த பெரிய அரசுகளும் தமக்கிடையே இந்த முழு உலகத்தையும் வர்த்தக ஆதிக்க போட்டியின் நிமித்தம் சந்தைகளாக பங்கு போட்டுக் கொண்டுள்ளன.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன்பு ஏகாதிபத்திய நாடுகளுக்கிடைய உலகம் நாடுகளாகப் பங்கு போடப்பட்டது போல , தற்போது ஏகாதிபத்திய அரசுகளுக்கடையே உலகம் நாடுகளாக அன்றி சந்தைகளாக பங்கு போடப்பட்டுள்ளது. ஆதலால் இன்று உலகளாவிய ரீதியில் வர்த்தகப் போட்டியில் (ஏற்றுமதி - இறக்குமதி) ஈடுபடும் எந்த ஒரு நாடும் ஏகாதிபத்திய நாடுதான்.

உலகளாவிய ரீதியில் ஒரு நாடு தனது பண்டங்களை, மூலப் பொருட்களை சந்தையில் போட்டு வர்த்தக ஆதிக்கப் போட்டியில் ஈடுபடுமானால் அந்த நாடு எந்த நிறக்கொடியை கட்டியிருந்தாலும் அது செயல்பூர்வ அர்த்தத்தில் ஏகாதிபத்திய கொடி தான்.

இந்த வகையில் விதிவிலக்கின்றி வர்த்தக ஆதிக்கத்தில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் ஓர் ஏகாதிபத்திய சந்தை மையக் கூட்டைக் கொண்டுள்ளன. ஆதலால் இத்தகைய அனைத்துப் பெரிய, சிறிய அரசுகளும் இலங்கை அரசுடன் ஒரு அரச ன்கிற வகையில் சமரசத்தைக் கொண்டுள்ளன.

இந்தச் சமரசக்கூட்டில் சோசலிச நாடுகள் என்றும் முதலாளித்துவ நாடுகள் என்றும் வேறுபாடு இல்லை. நீதியென்றும், நேர்மையென்றும் இல்லை.

கொடியின் நிறம்தான் வேறு. கொடித் துணிகளின் பண்பு ஒன்றுதான். ஆதலால் கற்பனாவாத அரசியலுக்கு வெளியே இரத்தமும் சதையுமாக அரசியலை யதார்த்த நிலையில் வைத்து மதிப்பிட்டு தமிழீழ மக்களின் தேவைக்குப் பொருத்தமான ஒரு யதார்த்த பூர்வ அணுகுமுறை அவசியம்.

மேற்படி பெரிய அரசுகளின் உலகளாவிய கூட்டுச் சமரசங்களுக்கு வெளியே தமிழக மக்களின் ஜனத்திரள் என்ற ஜனநாயகப் பலம்தான் அரசுகளின் சமரச ஒழுங்கிற்கு வெளியே தமிழீழ மக்களின் நலன்களை உலகப்பரப்பில் ஸ்தாபிக்க உதவும்.

 உண்மையில் தமிழீழ மக்களின் போராட்டமானது தேசிய வடிவிலான ஜனநாயக மீட்புப் போராட்டமாகும். தமிழீழ மக்களின் நலன்கள் சென்னை - புதுடில்லி - உலகம் என்ற ஒரே ஒரு பாதையை மட்டுமே கொண்டிருக்கின்றது.

இலங்கை அரசு தமிழரை சர்வதேச அரசுகளால் சுற்றி வளைத்தே ஒடுக்குகின்றது. அது இராணுவ பொருளாதார உதவிகளை ஒருபுறம் அமெரிக்காவிடம் இருந்தும் மறுபுறம் சீனாவிடம் இருந்தும் பெறுகின்றது. அப்படியே ஒருபுறம் இந்தியாவிடம் இருந்தும் மறுபுறம் பாகிஸ்தானிடம் இருந்தும் பெறுகிறது.

இப்படி கொள்கை, கொடி, குடை வேறுபாடின்றி தமிழருக்கு எதிராக அனைத்து நாடுகளின் உதவிகளையும் இலங்கை அரசு பெறுகிறது.

தேசிய இனப்பிரச்சனை என்பது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. அது எப்பொழுதும் ஒரு சர்வதேச பிரச்சனையாகும்.

ஆகையால் தமிழீழப் பிரச்சனையை சர்வதேசப் பரிமானத்தால் மட்டுமே தீர்க்க முடியும். தமிழீழ பிரச்சனையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை சென்னை - புதுடில்லி- உலகம் என மட்டுமே அமைய முடியும்.

 - மு.திருநாவுக்கரசு. 18.11.2006.

 

வெள்ளி, 7 நவம்பர், 2025

போராட்டத்தை இனி எங்கிருந்து தொடங்குவது; எப்படி தொடங்குவது ?

 3/11/2025

 

ஆயிரம் வியாக்கியானங்களுக்கு அப்பால்

போராட்டத்தை இனி எங்கிருந்து தொடங்குவது; எப்படி தொடங்குவது ?

மு. திருநாவுக்கரசு.



 

கட்டுண்டோம் , சிறைப்பட்டோம், மிச்சம் மிகுதி இல்லாமல் எல்லாவற்றையும் இழந்தோம். ஆயினும் நாம் மீண்டெழ  வேண்டும்,

ஆயிரம் விளக்கங்களும் பல்லாயிரம் வியாக்கியானங்களும் சொல்லப்படுவது சரி ; ஆனால் அதற்கும் அப்பால்  ஈழத் தமிழரின் விடிவுக்கான பாதையை இனி எங்கிருந்து தொடங்குவது? எப்படி தொடங்குவது ? என்ற  வினாவுக்கான பதிலை காண வேண்டியது முதன்மையானது. .

 

மாண்டுபோன புதைகுழியிலிருந்தே எழுச்சியும் தொடங்கும்


ஒருவர் தான் விழுந்து கிடைக்கும் இடத்திலிருந்துதான் எழ வேண்டுமே தவிர வானத்திலிருந்தோ அல்லது எங்கோ தொலை தூரத்தில் இருந்தோ  எழமுடியாது.

 

"இந்த உலகம் எப்படி காணப்படுகின்றது என்பதை பற்றி மட்டுந்தான் இதுவரை தத்துவஞானிகள் பல்வேறு வழிகளிலும்

வியாக்கியானப்படுத்தி உள்ளார்கள். ஆனால் இங்கு முக்கியமான விடயம் என்னவெனில் அதை எப்படி மாற்றுவது  என்பதுதான்" - காரல் மார்க்ஸ். 

 ( " Philosophers have hitherto only interpreted the world in various ways , the point is change it" - Karl Marx)

 

அனைவரும் வீழ்ந்து உழன்று தங்களுக்குள் பலவாறு மோதுண்டு கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு மேற்படி கால் மார்க்ஸின் தத்துவஞானக்  கூற்று ஒரு  திறவுகோலாய் அமையவல்லது.

 

கூரையில் இருந்து விழுந்து திகைத்துப் போன பல்லியும் தன்னையும்  தான் வீழ்ந்து கிடக்கும்  இடத்தையும் சுதாரித்து , மீண்டும் கூரைக்குப் போக வேண்டுமானாலும் வீழ்ந்த இடத்தில் இருந்துதான் மெல்ல ஊர்ந்து அக்கம் பக்கமாய் நகர்ந்து பொருத்தமாக மேல் நோக்கி போகிறது.

 

முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக்கு பின் ஈழத் தமிழர் இனி எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதில் மிகவும் இலகுவானது.  உள்நாட்டு -- வெளிநாட்டு களநிலை யதார்த்தத்தை கருத்துக்கு எடுத்து அந்த இரண்டு அந்தலைகளையும் ஒன்றோடு ஒன்று முடிவதன் மூலம் ஈழத் தமிழர் சார்ந்த அரசியலில் ஒரு புதிய உராய்வையும் அரசியற் பெரு  வெடிப்பையும்  ஏற்படுத்த முடியும்.

 

உள்நாட்டு களநிலை யதார்த்தம்  கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு இயல்பானது.

 

அதாவது 2009 ஆம் ஆண்டு மே மாதத்தோடு ஈழத் தமிழரின் அரசியல் வாழ்வு புதைகுழிக்குள் மாண்டுள்ளது. ஆதலால்  மாண்டு கிடக்கும் அந்தப் புதைகுழிக்குள் இருந்துதான் ஈழத்தமிழரின் அரசியலைத் இனித் தொடங்க வேண்டும்.  

 

எதிரி தமிழ் மக்கள் தரப்பில் இருந்து , புலிகளிடம் இருந்த ஆயுதங்களை மட்டும் பறிக்கவில்லை கூடவே தமிழ் மக்களையும் ஆடை களைந்து நிர்வாணமாக்கி,  நீண்ட பெரும் பண்பாட்டுத் தோலையும் உரித்தெறிந்தார். மேலும் புதைகுழியோடு தமிழ் தேசியத்தை மூடி  முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்றும் நம்பினார்.

 

ஆதலால் அந்தப் புதைகுழியில் இருந்துதான், ஆதாவது மனிதனும் பண்பாடும் நிர்வாணம் ஆக்கப்பட்ட அந்தப் புதைகுழியில் இருந்துதான் ஈழத் தமிழரின் அடுத்த கட்ட அரசியலைத் தொடங்க வேண்டும்.

 

எதிரி  தமிழர் தரப்பில் இருந்த கோட்டை கொத்தளங்களை மட்டும் தகர்க்கவில்லை.  கூடவே தன்னைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த  தர்ம அரண்களையும் தகர்த்து தன்னை பெரும் இனப்படுகொலையாளி என்றும் ம்பலப்படுத்தியுள்ளார்.

 

முதலாவது அர்த்தத்தில் தமிழர் தரப்பின் கையில் இருந்து ஆயுதங்களை பறித்ததற்கு பதிலாக மக்கள் திரளை ஆயுதமாக்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார்.  உண்மையான அர்த்தத்தில் தற்போதைய சர்வதேச யதார்த்தத்தின் கீழ் மக்கள் திரள் என்பது வெடிகுண்டுகளை விடவும் பலமான ஆயுதமாகும்.

 

"இனப்படுகொலைக்குப் பரிகாரம் பிரிந்து செல்லல் மட்டுமே"  என்ற அரசியல் கூற்று மிகவும் ஆழமானது .

 

இனப்படுகொலைக்கு  எதிராக அந்த படுகொலைக்கு உள்ளான  மக்களிடம்  இயல்பாகவே அந்த எதிரிக்கு எதிராக கோபமும் வெறுப்பும் இருக்கும். இந்நிலையில் சர்வதேச அரசியல் யதார்த்தத்தை ஒருகணம் பார்ப்போம்.  

 

ஆயுதப் போராட்டங்களை அரசுகள் ஒடுக்கியதால், உருவாகி வரும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள்.

அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான 2001  பின் லேடனின் தாக்குதலுக்குப்பின் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 2001 செப்டம்பர் 28ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட  இல. 1373 தீர்மானத்தின் அடிப்படையில் உலக அரங்கில் ஆயுதப் போராட்டங்கள் அனைத்தும் சர்வதேச பயங்கரவாதம் என்ற பட்டியலுக்குள் வரும் நிலை உருவானது. 

 

மனிதன் மட்டுமல்ல ஒவ்வொரு உயிரும் தன் வாழ்வுக்காக போராடுவது இயல்பு.  எனவே மனிதனின் கூட்டு உரிமைக்கான ஆயுதப் போராட்டங்கள் தடை செய்யப்படும்போது மக்களின் போராட்டங்களுக்கும் எழுச்சிகளுக்கும்  வடிகால் இல்லாமல் போய்விடும். எனவே ஆயுதப் போராட்டங்களை தடை செய்ததற்கு பதிலாக சமாதான வழியிலான  மக்கள் எழுச்சி போராட்டங்களை அனுமதிக்க வேண்டியது தவிர்க்க முடியாத யதார்த்தமாய் மாறியது.

 

இத்தகைய பின்னணியில் பல ஆசிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் மக்கள் கிளர்ச்சி போராட்டங்கள் எழுந்தன.

இந்த வரிசையில் குறிப்பாக துனீசியா, இலங்கை, பங்களாதேஷ் போன்ற பல நாடுகளில்  மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகளின் வாயிலாக ஆட்சியாளர்கள்   சிம்மாசனத்தைவிட்டுத் துரத்தியடிக்கப்பட்டனர். மேலும் பல ஆசிய நாடுகளிலும் அமெரிக்கா உட்பட வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டங்கள்  மக்களுக்கு எதிரான ஆளும் குழாங்களை  பணிய வைத்தன.




 

குறிப்பாக அமெரிக்காவில் 2020 மே கடைசி வாரத்தில் கறுப்பினத்தவரான  George  Floyd ஐ  வெள்ளையின  போலீஸ் அதிகாரி கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தி மூச்சுத் திணறவைத்தே படுகொலை செய்ததற்கு எதிராக அமெரிக்கா எங்கும் கறுப்பின மக்களின் எழுச்சி போராட்டங்கள் தெருக்களை நிரப்பின.   


 


அமெரிக்காவில் தொடர்ந்து எட்டு வருடங்கள் ஜனாதிபதியாக இருந்த  அரைக் கறுப்பு இனத்தவரான திரு  பராக் ஒபாமாவின் பதவிக்  காலம் முடிந்த ஒன்றரை வருடங்களுக்குள் அவர் அமெரிக்கா ஆளும் வர்க்கத்தின் இத்தகைய இன வெறுப்புச் செயலுக்கு எதிராகவும் கொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு ஆதரவாகவும் எழுந்த  மக்கள் போராட்டங்களுக்கு முற்றிலும் ஆதரவாக ஒரு பெரும் காத்திரமான அறிக்கையை 2020 யூன் 3 தேதி வெளியிட்டார்.

 

அந்த அறிக்கையில் அவர் வெளியிட்ட வாசகங்கள் பெரிதும் கவனத்திற்குரியவை.

 

மக்கள் கிளர்ச்சி போராட்டங்களுக்கு எதிராக பேசி வருவோர்களை நோக்கி பின்வருமாறு கூறினார் :

 

"போராட்டங்களுக்கு எதிராக பேசுவோர்களே கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்; இந்த நாடு போராட்டங்கள் மீது கட்டி எழுப்பப்பட்டது . அதுதான் அமெரிக்க விடுதலைப் புரட்சி."

"இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கான ஒவ்வொரு  அடியும்,  மக்களின் சுதந்திரத்தை விரிவாக்குவதற்கான ஒவ்வொரு அடியும், எமது ஆழமான இலட்சியங்களை வெளிப்படுத்துவதற்கான ஒவ்வொரு அடியும் ஆளும் அதிகார வர்க்கத்தினரை நிலைகுலையச் செய்த இத்தகைய போராட்டங்கள் வாயிலாகவே முன்னெடுக்கப்பட்டன".

 

திரு , ஒபாமாவின்  வலுவான இந்த அறிக்கை சாதாரண வெள்ளையர்களின் மனங்களை கவ்விப் பிடித்தது.  பதவியில் இருந்த ஜனாதிபதி உட்பட ஆழும் குழாத்தை ஈடாட வைத்தது.

போராட்டம் குறிப்பிடக்கூடிய வெற்றியை அடைந்தது.  

தண்டனைகளுக்கு அப்பால் பரந்த அமெரிக்க மக்கள் அபிப்பிராயம் கறுப்பின ஒடுக்கு முறைக்கு எதிராக முன்னேற்றகரமான திரட்சியை அடைந்தது.

 

மக்கள் எழுச்சிப் போராட்டங்களின் காலம் இது

இன்றைய உலகளாவிய சூழலில் இனப்படுகொலைக்கு  எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நிகழக்கூடியதற்கான காலநேர தட்பவெப்ப சூழல் கனிவடைந்து இருக்கிறது.  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்னான கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் தலைமைகள் இதனை முன்னெடுக்க முற்றிலும் தவறிவிட்டன என்பது மட்டுமன்றி , அதாவது புதைகுழிகளை முன்னெடுப்பதற்கு பதிலாக

புதை குழிகளை மூடி மறைத்து சிங்கள இனவாத ஆட்சிக்கு உதவி செய்யும் முகமாகவே அரசியல் நடத்தி வருகின்றன.

 

குறிப்பாக முதலாவதாக 2010 ஆம் ஆண்டு தேர்தல் அரங்கை இலங்கை அரசு திறந்து விட்டது. அந்தத் தேர்தல் சூழலில் இனப்படுகொலையை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு செங்கம்பளம் என விரிந்து. ஆனால் அப்போது வஞ்சகம் இன்றி எல்லா தமிழ்த் தலைகளும்  இனப்படுகொலைக்கு எதிராக அந்தத் தேர்தலை பயன்படுத்துவதற்கு பதிலாக இனப்படுகொலை புரிந்த இராணுவ தலைவனுக்கு வாக்களிக்குமாறு  மக்களை தூண்டி அந்த மக்கள் பாதக அரசியலை நிறைவேற்றினார்கள்.

 

இது விடயத்தில்  களத்தில் உள்ள எந்தொரு  தமிழ்த் தலைவரும் விதிவிலக்கானவர் அல்ல.

 

2022 ஆம் ஆண்டு  பதவியில் இருந்த ராஜபக்சாக்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி பெரிதாய் எழுந்தபோது இராணுவ மிடுக்கு மிக்க இரண்டு ராஜபக்சகளாலும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பொலீஸ் --  இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது போனது.

 

ராஜபக்சாக்கள் மக்களை கடுமையாக ராணுவம் கொண்டு அடக்க இயலாமல் போனதன் உளவியல் காரணம் என்னவெனில் ஓர் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் சிங்கள மக்களின் மனநிலை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையோடு இணைந்து போக தொடங்கிவிடும்.

இராணுவம் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை புரிந்துள்ளதுதான் என்ற கருத்தை சிங்கள மக்கள் நம்பத் தொடங்குவர்.

 

இப்பின்னணியில் இராணுவம் தன் கௌரவத்தை இழக்கும். இத்தகைய இராணுவத்துக்கு எதிராக மக்கள்  மேலும் கிளர்ச்சிகளை பெரிதும் முன்னெடுக்கலாம் என்பதுடன் கூடவே  முள்ளிவாய்க்கால் படுகொலை என்ற  பழியை சுமந்து திரியும் ராணுவம், சிங்கள மக்கள் மேலேயே ராணுவ நடவடிக்கை எடுத்தால்  மேலும் மதிப்பிழந்து அவமானத்துக்கு உள்ளாக நேரும் என்ற அச்சம் ஆட்சியாளர்கள் மத்தியிலும் இராணுவத்தின் மத்தியிலும் நிலவியது.  ஆதலால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னணியில் ஆட்சியாளர்களால் மக்களை நோக்கி மீண்டும் துப்பாக்கிகளை உயர்த்த முடியவில்லை.

 

இத்தகைய ஒரு பின்னணியில் தமிழ் தலைவர்கள்  ஜனநாயக பூர்வமான மக்கள் கிளர்ச்சிப்  போராட்டங்களை 2010 ஆண்டு தேர்தலுடன் முன்னெடுத்து இருந்தால் சிங்கள இனப்படுகொலை அரசு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நெருக்கடிகளுக்கு உள்ளாக நேர்ந்திருக்கும். இனப்படுகொலை வாயிலாக  அரசுக்கு ஏற்பட்ட பெரும்  காயத்தினதும் அபகீத்தியினதும் பின்னணியில் தமிழ் தலைவர்களுக்கு எதிராக, அமைதிவழிக் கிளர்சியில் ஈடுபடக்கூடிய தமிழ் மக்களுக்கு எதிராக  அரசால் துப்பாக்கிப் பிரயோகங்கள் செய்ய முடியாது.

 

இத்தகைய ஒரு வாய்ப்பான வரலாற்று -- அரசியல் பின்னணியில் இனப்படுகொலையை முன்னெடுப்பதற்கு பதிலாக இனப்படுகொலைக்கான விசாரணை முடிவடைந்துவிட்டது என்று மக்களுக்கு கண்ணைக் குத்திப் பொய் சொல்லும் அளவுக்கு இனப்படுகொலை ஆட்சியாளரின் சேவகர்களாக தமிழ் தலைவர்கள் செயற்பட்டனர்.

 

வேட்டைக்காரனுக்கு தெரியும் உடும்புக்கு வால் இருப்பது அதனை அதன் வாலால் கட்டிப் போடுவதற்கே என்று. சிங்களத் தலைவர்களுக்கு தெரியும் தமிழருக்கு தலைவர்கள் இருப்பது தமிழரை தமிழ் தலைவர்களால் கட்டி போடுவதற்கே.

 

ஆனால்  இனியாவது விதிவிலக்கின்றி இந்த தமிழ் தலைவர்கள் அனைவரும் இனப்படுகொலைக்கு எதிரான  மக்கள் போராட்டத்தை இதய சுத்தியுடன் முன்னெடுப்பார்களே ஆயின் வரலாறு இவர்களின் பாவங்களை மன்னித்திடக்கூடும்.

 

1914 ஆம் ஆண்டு 11 இலட்சம் ஆர்மேனிய கிறிஸ்தவ மக்கள் இஸ்லாமிய துருக்கிய பேரரசால் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இன்றும் குரல் எழுப்பப்படும் நிலை இருக்கையில் ஒன்றரை தசாப்தங்களுக்குள் நிகழ்ந்து முடிந்த இனப்படுகொலை ஒன்றும் பழையதல்ல. இனியும் அதனை புது மெருகுடனும் புது வீச்சுடனும் முன்னெடுக்க முடியும்.

 

எங்கிருந்து தமிழ் மக்களின் போராட்டத்தை தொடங்குவது என் கேள்விக்கான பதில்.. 
எந்தப் புதைகுழியில்  தமிழ் மக்களின் தலைவிதி முடிந்தது என்று எதிரி நினைத்தாரோ,  அங்கு அந்தப் புதைகுழியில் இருந்து தமிழ் மக்கள்  தமது அந்தப் போராட்டத்தை தொடங்க வேண்டும்.

 

இனி எப்படி தொடங்குவது என்பது அடுத்த கட்டுரையில் தொடரும்...

அதிகம் பார்க்கப்பட்டவை: