இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

ஈழப்பிரச்சினையில் நடுவராக ஸ்விஸ் நாடு. அநுரா செய்யவேண்டிய 3 முடிவுகள். அழிந்த தமிழ் தலைமைகள்.

 

சமீபத்தில் ஈழத் தமிழருக்கிடையேயான ஒற்றுமையின்மை பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஸ்விஸ் நாடு முயல்வதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அந்நாட்டின் தூதுவர் இலங்கை பிரதமரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.





உண்மையில் எங்கோ இருக்கும் ஸ்விஸ் நாடு இலங்கையில் உள்ள ஈழப் பிரச்சனையை அனுக வேண்டிய காரணம் என்ன. இதனால் ஈழத்தமிழருக்கு யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை என்கிறார் வரலாற்றறிவியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள். 

ஊடறுப்பு தளத்தின் நெறியாளர் தமிழரசுவுக்கு தந்த நேர்காணலில் இலங்கை அரசின் இந்த புதிய நகர்வு குறித்தும், ஈழப் பிரச்சனைக்கான தீர்வு குறித்தும் மு.திருநாவுக்கரசு அவர்கள் அளித்த நேர்காணல் கீழே..


நேர்காணல் காணொளி: 



ஊடறுப்பு தளத்திற்கு வழங்கப்பட்ட இந்த நேர்காணல் காணொளியில் மு.திருநாவுக்கரசு அவர்கள் கூறியுள்ள முக்கிய கருத்துக்கள் சிலவற்றின் வரிச் சுருக்கம் கீழே.. 

இலங்கையை ஆண்ட ஆளும் அரசுகள் எதுவாக இருந்தாலும் (இடதுசாரி போல நடிக்கும் அநுராவாக இருந்தாலும்) ஈழப் பிரச்சனைக்கு சமாதானத் தீர்வு காண்பதை ஒரு போதும் செய்யமாட்டார்கள். தங்கள் அரசுகளுக்கு அப்போது ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளிக்க தீர்வுகளாக எதையாவது பேசுவார்கள் செய்வார்களே தவிர நீண்ட கால சமாதானத் தீர்வு அவர்கள் நோக்கமாக ஒருபோதும் இருந்ததே இல்லை. இருக்காது.

கடல்சார் கொள்கை என்பது இல்லையென்றால் ஈழத்தமிழருக்கு இலங்கையில் வாழ்வே இல்லை. பாக் நீரிணைப்பு தான் அவர்களது பலம். அதைத் தான் சிங்கள அரசுகள் தங்களது பலவீனமாக , இந்தியாவின் ஆக்கிரமிப்பு நடக்கப் போகும் பகுதியாக தொடர்ந்து கருதி வருகிறார்கள். இதுவரை தமிழர் சம்பந்தமாக இலங்கை அரசுடன் செய்யப்பட்ட எந்த ஒப்பந்தங்களிலும் பாக் நீரிணை கடலின் உரிமையில் ஈழதமிழருக்கும் பங்கு என்கிற பேச்சே எழவிடவில்லை சிங்கள அரசுகள். அந்தக் கடல் பகுதி எப்போதுமே இலங்கை அரசிற்கு சொந்தமானதாகவே கொள்ளப்பட்டது. அந்தக் கடல்பகுதியை, அதன் அதிகாரத்தை ஈழத் தமிழருக்கோ, இந்தியாவுக்கோ ஒரு போதும் இலங்கை அரசு விட்டுத் தராது. பாக் நீரிணை என்பது சோழப் பேரரசின் காலத்திலிருந்தே இந்தியாவுக்கு பலமாக இருந்துள்ளது. இப்போது இந்தியாவின் கட்டுப்பாட்டில் பாக் நீரிணை இல்லை.

இலங்கை அரசு, ஈழத் தமிழர் மற்றும் இந்தியா இந்த மூன்றும் சந்திக்கும் ஒரு புள்ளியில் மட்டுமே ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வு மையம் கொள்ள முடியும். இந்தியாவால் மட்டும் சர்வதேச அளவில் இப்பிரச்சனையை தீர்த்துவிட முடியாது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் இந்திய ராணுவ வீரர்களை இலங்கைக்குள் இறக்க முடிந்தாலும் இந்தியாவால் பிரச்சனையை தீர்த்துவிட முடியவில்லை. முடியாது. அதற்கு இன்னொரு பலமான வெளி அரசின் ஆதரவு இந்தியாவிற்கு தேவைப்படும். அது வீட்டோ அதிகாரமுள்ள அமெரிக்கா அல்லது ரஷ்யாவாக இருக்கமுடியும். உலகில் உள்ள வேறு எந்த நாடும் இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காணவோ, பேச்சு நடத்தவோ முயலாது.

நார்வே, ஸ்விஸ் போன்றவை அமெரிக்காவின் நிழல்தள நாடுகளாக இருப்பதன் பின்னணியில், ஈழப்பிரச்சனைக்குள் தலையிட அனுமதிக்கப்படுவது ்தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. ஆனால் அவற்றால் ஈழத்தமிழருக்கு பலனில்லை. அவற்றால் தீர்வும் காண முடியாது. ஆனால் ஸ்விஸ் நாட்டிலுள்ள கேன்டன்ஸ்(cantons) எனப்படும் நாடுகளற்ற நிலையை  நைசாக ஈழத் தமிழர் பகுதிகளுககான தாயகமற்ற, நாடற்ற தீர்வாக  திணிக்க அது சிங்களருக்கு உதவலாம். 

கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக ரஷ்யா இந்தியா இடையே இணக்கமான உறவே இருந்து வந்திருக்கிறது. ரஷ்யாவிலிருந்து எந்தவித படையெடுப்புகளோ, படையெடுப்புக்கான ஆயத்தங்களோ கூட இந்தியாவை நோக்கி நிகழ்ந்ததில்லை. உக்ரைன் போரில் இந்தியா ரஷ்யாவை கண்டிக்கவில்லை. மனிதநேய உதவிகள் பற்றிப் பேசியதே தவிர ரஷ்யாவை விமர்சிக்கவில்லை. பங்களாதேஷ் பிரிவினையின் போது ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவை எதிர்த்து நின்றது. 1998ல் இந்தியா அணு ஆயுதம் தயாரித்த போது பொருளாதார தடையை எதிர் கொண்டது. அப்போதும் ரஷ்யா இந்தியாவை கண்டித்ததோடு நின்று கொண்டது, பொருளாதாரத் தடைகள் எதுவும் இந்தியா மீது விதிக்கவில்லை.

ஈழப் பிரச்சனையை சிங்களர்கள் தமிழின அழிப்பு, இந்திய எதிர்ப்பு என்கிற ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே பார்க்கிறார்கள். இந்திய எதிர்ப்பை பலப்படுத்த ஒரே வழி இலங்கையில் தமிழினத்தை அழிப்பதுவே. இதுவே சிங்களர்களின் இந்திய ஆதிக்க எதிர்ப்பு வாதமுமாகும்.

2024ல் அப்போதைய நெருக்கடியை சமாளித்து இந்தியாவிடமிருந்து சில பலன்களைப் பெற பிரதமர் ரணில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கடற்பாலம் கட்டப்படும் என்கிற ஒப்பந்தத்தை செய்தார். தற்போதைய ஜனாதிபதி அநுரா அதை இந்தியாவின் விஸ்தரிப்பு வாதமாக பார்ப்பதோடு, பாலம் கட்டப்படும் வாய்ப்பு இல்லை என்றும் நிராகரித்துவிட்டார். அநுரா தொழிலாளர்களோடும், ஈழத் தமிழர் பகுதிகளில் வந்து செல்ப்பி எடுத்ததோடும் விளம்பரமாகச் செய்து தன்னை முற்போக்காக காட்டிக் கொள்ளமட்டுமே செய்திருக்கிறார். தொழிலாளர்களின் தோழர் என்று படம் காண்பித்தலே அவருக்கு போதுமானதாக இருக்கிறது. நிஜத்தில் ஈழத்தமிழருக்கு அவராலும் எந்த நன்மையும் இல்லை. இன்றும் தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் இருக்கின்றன. தமிழர் பகுதி முழுவதும் ராணுவம் நின்று கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் தமிழர் பகுதிகள் என்பதே இல்லை என்பதாக ஆக்கிவிடுவதே அநுரா குமாரவின் குறிக்கோளாகவும் இருக்கிறது. 

30 ஆண்டுகளான ஈழப் போராட்டத்தில்  ஈழத்தில் உள்ள பெரும் அறிவுஜீவிகள், தலைமைகள், தலைவர்கள் பெரும்பாலோர் கொல்லப்பட்டனர். பிறர் இடம் பெயர்ந்து விட்டனர். பலர் விரக்தியில் அரசியலை விட்டே விலகிப் போய்விட்டனர். இன்றைய நிலையில் ஈழத்தில் தமிழருக்கு வலுவான ஒன்றுபட்ட அரசியல் தலைமைகளை இல்லாமல் அனைத்தும் சீரழிந்து நிற்கிறது.

 இலங்கை அரசியல் யாப்பின் முக்கிய தூண்கள் மகாசங்கம், ராணுவம் மற்றும் ராணுவவாதம். இவையே அதன் இனவெறியை நியாயப்படுத்தி அதை நோக்கி செயல்பட துணை நிற்கின்றன. எனவே ஜனாதிபதி முறையை இலங்கை அரசால் கைவிட இயலாது. யாப்பை மாற்ற இயலாது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை கைவிட நினைத்தால் இந்தியா இலங்கையை விடாது. இந்தியாவுக்கு இலங்கையில் இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு 13ஆவது திருத்தச் சட்டம் மட்டுமே. வேறு எதிலும் இந்தியாவை நம்பி இலங்கை இல்லை. (சீனா நேரடியாக ஈழப் பிரச்சனையில் தலையிடாது. ஆனால் இலங்கையின் வர்த்தக கூட்டாளி என்கிற அடிப்படையில் அனைத்து வகையான உதவிகளையும் இலங்கைக்கு தந்து ஆதரவாக நிற்கும்)


திங்கள், 22 டிசம்பர், 2025

சென்னையில் திறவுகோல். - மு.திருநாவுக்கரசு. 18.11.2006.

ஆசிரியர் குறிப்பு. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் 18.11.2006 திகதி பதிப்பில் அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு வன்னியில் இருந்து எழுதிய சென்னையில் திறவுகோல் எனும் இக்கட்டுரை முதன் முதலாக வெளிவந்தது. இக்கட்டுரையை பின்னர்"" புதினம் "" இணையத்தளமும் மறுபிரசுரம் செய்திருந்த.

காலத்தின் தேவையை உணர்ந்து இக்கட்டுரையை நன்றியுடன் இங்கே மறு பிரசுரம் செய்கின்றோம்.



சென்னையில் திறவுகோல். 
- மு.திருநாவுக்கரசு. 18.11.2006.

திராவிட இயக்கம் தந்த ஜனநாயக எழுச்சி

"சாமானியர்களின் சகாப்தம்" என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் சக்தியாய் 1960களில் திரட்டி எடுத்தார். மக்கள் திரள் அரசியற் சக்தியான போது எதிரிகளின் கொடி, குடை, ஆலவட்டங்கள் சரிந்து விழுந்தன. இதன் வழியே தமிழகமானது மக்கள் திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட களமாகியது.

அப்படி மக்கள் திரளாக்கப்பட்ட தமிழக அரசியலின் பலம்தான் தமிழீழ மக்களின் பலமுங்கூட. இதனை உலகலாவிய அரசியல் யதார்த்தத்தில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

தமிழக மக்களை ஜனநாயக அலைக்குள் இழுத்துவிட்டதில் அண்ணாவிற்கு மிகப்பெரும் பங்கு உண்டு. அந்நியர்களிடமும், மன்னர்களிடமும், பிரபுக்களிடமும் சிக்குண்டு இருந்த அரசியல் அதிகாரத்தை மக்களின் கைகளுக்கு மாற்றுவதற்கான பெயர் தான் தேசியம்.

மன்னர்களிடமோ, வம்சங்களிடமோ, எதேச்சதிகாரிகளிடமோ, இனவாதிகளிடமோ அரசியல் அதிகாரம் சிறைப்பட்டிருக்காது. அதை மக்களின் கைகளுக்கு உரியதாக்குவதைத்தான் ஜனநாயகம் என்கின்றோம். அத்தகைய ஜனநாயகத்தை வாழ வைப்பதற்கான ஒரு வடிவமே தேசியம் என்பதாகும். ஆதலால் தேசியம் என்பது அடிப்படையில் ஜனநாயக அமைப்பு ஆகும்.

எங்கு ஜனநாயகம் இல்லையோ அங்கு தேசியம் இல்லை. அரசியல் அதிகாரம் சாமானியர்களுக்கு உரியது. மக்களே நாயகர்கள். இதுதான் தேசியத்தின் அறைகூவல். இத்தகைய அறைகூவல் 1960களில் தமிழகத்தில் துடிப்புடன் எழுந்தது.

திராவிட இயக்கத்தின் எழுச்சி என்பதும் இத்தகைய தேவையின் வெளிப்பாடுதான் "சாமானியர்களின் சகாப்தம்" என்ற இந்த ஜனநாயக உள்ளடக்கத்தைத்தான் "திராவிட இயக்கம்" என்ற இயக்கத்ின் பெயரில் மக்கள் ஆதரித்தார்கள்.

இலங்கையின் அரசும் - அரசாங்கமும், தமிழ்நாடும்

இலங்கைத்தீவின் அரசியலிலும் அரசியல் தீர்மானங்களிலும் தமிழ் பேசும் மக்களுக்கு பங்கில்லை என்ற போது,  தமது வாழ்நிலையை அவர்கள் தீர்மானிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது, சிங்கள இனவாதம் தனது இரும்புக்கரங்களை விரித்தபோது,

ஜனநாயகத்தின் தேவையாய் தமிழ்பேசும் ஈழ மக்கள் தேசிய வழியில் போராடப் புறப்பட்டமை தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று நிர்ப்பந்தமாகும். அதுவே ஜனநாயகத்திற்கான ஒரே ஒரு மூலமும் ஆகும்.

சிங்கள அரசு இனவாத ஒடுக்குமுறையை கட்டவிழ்த்த விட்ட போது, உலகிலுள்ள அரசுகள், உலகில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசு என்ற ரீதியில் ,  சிங்கள இனவாத அரசுடன் சமரசம் செய்யும் ஒரு நடைமுறையே உலக அரசியலின் இலங்கைக்கான பொதுப் போக்காய் அமைந்தது. அதன் இனவாதப் படுகொலைகளோ அநீதிகளோ உறவாடும் அரசுகளுக்கு ஒரு அநீதியாய் தோன்றுவதில்லை.

பனிப்போரின் பின் பின்னான உலக யதார்த்தங்கள் மேலும் இந்நிலையைப் பலப்படுத்தி உள்ளன. உலகலாவிய பொருளாதார நலன்களுக்காக உலகிலுள்ள அரசுகள் எல்லாம் தம்மிடையே சமரசம் செய்து இலங்கை அரசுடனும் சமரசப் போக்கை நடைமுறையில் பின்பற்றுகின்றன.

இந்நிலையில் தமிழீழ மக்களுக்கான பலம் உலக அரசுகள் என்ற கட்டமைப்புக்குள் இருக்க முடியாது. அரசுகளிடம் நீதி, நியாயம் என்பது இல்லை. மாறாக பொருளாதார, இராணுவ, அரசியல் நலன்களே உள்ளன. இத்தகைய நலன்களுக்காக எத்தகைய அநீதியுடனும் அரசுகள் கைகோர்க்கும், ஒத்துழைக்கும்.

இந்த அடிப்டையில் இலங்கையை ஆளும் அரசுடன் உலகிலுள்ள அரசுகள் ஒத்துழைக்கும் நிலையில் உள்ளன. மனித உரிமை என்ற ஒரு கவசத்தை போர்த்துக்கொண்டு உலகிலுள்ள அரசுகள் ராஜபக்ச அரசாங்கத்தை குறை கூறினாலும் பொருளாதார, இராணுவப் பரிமாணங்களில் உலகில் உள்ள அரசுகள் ராஜபக்சவுக்கு செயல்பூர்வ அர்த்தத்தில் துணை நிற்பதன் அடிப்படையும் இதுவே ஆகும்.

இதில் "அரசு"(State), "அரசாங்கம்"(Government) என்ற பதங்களை அரசியல் விஞ்ஞான அர்த்தத்தில் பொருள் பிரித்து எடைபோட வேண்டும். 
அரசு (State) என்பது நான்கு கூறுகளை உள்ளடக்கிய அரசியல் அமைப்பு.
அவை,

1. ஒரு பரந்த நிலப்பரப்பு,
2. அந்நிலப்பரப்பின் மக்கள்,
3. மக்களின் இறையாண்மை (Sovereignty) மற்றும்
4. மக்களை நிர்வகிக்கும் அரசாங்கம் ஆகியவை. 

இதில் அரசாங்கம் (Government) என்பது அரசின் ஒரு கூறு மட்டுமே. அரசாங்கம் என்பது அரசின் ஆணைகளைச் செயல்படுத்தும் கருவி அல்லது செயல்முறை அமைப்பு (Working Agency) ஆகும்.

உலகில் உள்ள அரசுகளுக்கு இலங்கையின் புவிசார் இருப்பிடத்தின் முக்கியத்துவத்தால் இலங்கை அரசுடனான உறவு அவசியமானது. ஆனால் ராஜபக்ச அரசாங்கம் பற்றி சில வசதியீனங்கள் உலகில் உள்ள சில அரசுகளுக்கு இருந்தாலும் அந்த அரசுகளுக்கு இலங்கை அரசுடனான உறவு அவசியம் என்றதன் அடிப்படையில்தான் அத்தகைய அரசுகளும் ராஜபக்ச அரசாங்கத்திற்கு உதவும் நிலையில் உள்ளன.

இத்தகைய உலகலாவிய அரசுகளின் வியூகத்தை உடைப்பதற்கான ஒரே ஒரு மூலோபாயம் தமிழகம் மட்டும்தான்.

முழு இந்தியாவிலும, அதிகமாக ஜனத்திரள் அரசியலுக்கு பெரிதும் பழக்கப்பட்டிருக்கும் மக்களாய் தமிழ்நாட்டு மக்கள் உள்ளனர். இது அரசியலில் சிறப்பானதும் முற்போக்கானதுமான அம்சமாகும்.

தமிழக மக்களிடம் தமிழீழ மக்கள் பற்றிய நீதியின் பாலான இனமான உணர்வு பெரிதும் உண்டு. சிங்கள உயர் குழாத்தின் தமிழ் இன ஒடுக்கு முறைக்கும் இனப் படுகொலைகளுக்கும் எதிரான நீதியின் பாலான ஒரே ஒரு செயல்பூர்வக் குரலாய் தமிழ்நாட்டு மக்களே இருந்துள்ளனர். இருந்து வருகின்றனர்.

அத்தகைய ஜனத்திரளின் ஒருமித்த ஆதரவுதான் சர்வதேச அரங்கில் தமிழீழ மக்கள் பிரவேசிப்பதற்கான ஒரே ஒரு பாதையாகும்.

சென்னை திரண்ட ழும்போது புதுடில்லி சென்னைக்குப் பணியும்.
புதுடில்லி பணியும் போது உலகம் புதுடில்லிக்கு தலைசாய்க்கும்.
இது தான் எளிமையான சூத்திரம்..

இதனை முற்றிலும் விஞ்ஞான பூர்வமாக விளக்க முயல்வோம்.

இலங்கை அரசு பற்றிய இந்தியாவின் தவறான புரிதல்

இராணுவ அர்த்தத்தில் இலங்கைத்தீவு பிரிக்கப்படாத "" ஓர் அரசாக ""இருப்பது இலாபம் என புதுடில்லி நினைக்கின்றது. ஆனால் அது ஒரு தவறான நினைப்பு என்பதை சிங்கள உயர் குழாத்தின் அரசியலை விளங்கிக் கொண்டோருக்குத் தெரியும். து ஒரு புறமாக இருக்கட்டும்.

(இலங்கை பிரிக்கப்படாத ஓர் அரசாக இருப்பதோ அல்லது ஈழத்தமிழரை முழுவதும் அழித்த, வெறும் சிங்கள இன மக்கள் மட்டுமே வாழும் அரசாக இருப்பதோ, எதுவாக இருந்தாலும், அது, இந்தியா தன்னை அதிகார பலம் கொண்டு என்றைக்காவது விழுங்கிவிடும் ஒரு மாபெரும் மலைப்பாம்பு என்கிற உள்ளூர இருக்கும் அச்சத்தோடும், ஜாக்கிரதை உணர்வோடுமே, 2 ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவை அனுகியுள்ளது, இந்தியாவை தந்திரமாகக் கையாண்டு தப்பித்து வந்துள்ளது என்பதை 
வரலாறெங்கும் உள்ள ஆதாரங்கள் கொண்டு வேறு கட்டுரைகளில் விரிவாக ஆசிரியர் விளக்கியுள்ளார். அந்த மலைப்பாம்பின் குட்டிகளாக ஈழத் தமிழரை சிங்கள இனவாதம் பார்க்கிறது என்பதையும் விளக்கியுள்ளார்.)

புதுடில்லி மேற்படி தவறாக புரிந்துகொண்டு இலங்கையின் "ஒருமைப்பாட்டை" ஆதரித்து உதவுகின்ற போதிலும் புதுடில்லியின் 40 நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட சென்னை கிளர்ந்து எழும் போது அரசியல் நலனுக்காக புதுடில்லி சென்னைக்கு பணிய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.

முதலாவதாக, ஆறரைக்கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாடு எழுச்சி பெறும் போது, அதுவும் ஜனத்திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட தமிழகம் எழும்போது புதுடில்லியால் பணிவதை தவிர வேறு வழி இருக்க முடியாது.

இத்தகைய ஜனத்திரள் என்னும் பலத்தை தமிழகத்திற்கு திரட்டிக் கொடுத்தது தமிழகத்திற்கான அறிஞர் அண்ணாவின் பெருங்கொடையாகும்.

இரண்டாவது அம்சம் மத்தியில் 40 நாடாளுமன்ற ஆசனங்கள்; 
இந்தியாவில் தனிக்கட்சி ஆட்சியின் காலம் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. மாநிலக் கட்சிகளை அரவணைக்கின்ற கூட்ட ரசாங்கங்களே இனிமேல் பதவிக்கு வரலாம்.

இந்த வகையில் கூட்ட ரசாங்கத்தை அமைக்கக்கூடிய எந்த ஒரு முக்கிய கட்சியும் தமிழகத்தை பகைக்க மாட்டாது.

ஆதலால் தமிழக மக்கள்தான் தமிழீழ மக்களுக்கான இருதய சக்தி. அதேவேளை தமிழக மக்களுக்கும் தமிழீழப் பிரதேசமே முதற்தர பாதுகாப்பு அரணாகும் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் சிங்கள உயர்குழாத்து இலங்கை அரசு இந்திய அரசுக்கு எதிரான அரசுகளுடன் சோரம் போகும் இயல்பைக் கொண்டுள்ளது. இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா காலத்தில் இருந்து இற்றை வரை இந்தப் போக்கைத் தெளிவாகக் காணலாம்.

இலங்கையின் மூலோபாய மற்றும் இந்தியப் பெருங்கடலில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு, கிழக்கு என்ற தமிழீழப் பிரதேசங்கள் தமிழ் மக்களின் கையில் இல்லை; சிங்களரின் அதிகாரத்தில் தான் உள்ளன. தமிழர் கையில் இருந்திருந்தால் கூட சிங்கள ஆளும் உயர்குழாத்தினர் இலகுவாகவே அந்நிய சக்திகளுக்கு அடிபணிந்து இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் தெளிவாக கூட்டுச் சேரும் முனைப்பு உள்ளவர்கள்.

இதன்படி தமிழீழ மக்களின் பலம் குன்றினால், தமிழ்நாட்டின், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு முதலில் கெடுவதுடன், அதன் வழியே முழு இந்திய தேசத்தின் பாதுகாப்பும் கெட்டுவிடும். ஆதலால் தமிழீழ மக்கள் இப் பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒரு முக்கியமான கேந்திர மக்கள் என்பதை தமிழகமும் இந்திய தேசமும் கருத்தில் எடுக்க வேண்டியது அவசியம்.

பரந்த இந்தியாவோடு ஏற்படும் உறவால் உலகிலுள்ள ஏனைய அரசுகளுக்கு பாரிய நலன்கள் உண்டு. ஆதலால் இந்திய அரசிற்குள்ளாகத்தான் அவை இலங்கைத்தீவை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு. தற்போது இந்தியா உட்பட உலகில் உள்ள எந்த ஒரு அரசும் தமிழீழ மக்களுக்கு ஆதரவக இல்லை என்பது வெளிப்படையானது.

ஆனால் தமிழ்நாட்டின் ஆறரைக் கோடி மக்களைக் கொண்ட ஜனத்திரளின் முன் புதுடில்லி பணியும் போது முதலில் புதுடில்லியின் கூட்டணி அரசும் தமிழர் பக்கம் தலைசாய்க்கத் தொடங்கும்; ஈழத் தமிழரின் மீதான அநீதிக்கு கேள்வி எழுப்பும் நிலை உருவாகும். அதனைத் தொடர்ந்து உலகில் இந்தியாவுடன் இணக்கமாக உள்ள ஏனைய அரசுகளும் தலைசாய்க்க முற்படும். இறுதியில் எஞ்சியிருக்கும் சில அரசுகளும் காலகதியில் தலைசாய்க்கும். இதுதான் யதார்த்தம்.

ஆதலால் தமிழீழ மக்களின் அனைத்து நலன்களுக்குமான, பெறவேண்டிய நீதிக்கான திறவுகோல் சென்னையில்தான் உள்ளது.

அந்த தமிழக ஜனத்திரளின் ஆதரவே,
உலகளாவிய அர்த்தத்தில் தமிழீழ ஜனநாயக நலனுக்கான திறவுகோலும் கூட.

 

தமிழீழ மக்களும் தமிழ்நாடும்

தமிழீழ ஜனநாயக மீட்பிலிருந்தே சிங்கள மக்களுக்கான ஜனநாயக மீட்பும் உருவாகும். சிங்கள உயர்குழாத்தின் இனவாத அரசியலுக்கு முடிவு கட்டுவதன் மூலம்தான் பரந்துபட்ட சிங்கள மக்களின் ஜனநாயகமும் உருப்பெற முடியும்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளினதும் கட்சி அரசியலுக்குள் தமிழீழ மக்கள் விழத் தேவையில்லை. தமிழ்நாட்டு மக்கள் தங்களின் கட்சி அரசியலை தாங்களே பார்த்துக் கொள்வார்கள். தமிழக மக்கள் எந்தக் கட்சியை பதவிக்கு கொண்டுவர விரும்புகிறார்களோ அது அவர்களின் தெரிவு.

அப்படி தமிழ்நாட்டில் அதிகாரத்திற்கு, பதவிக்கு வருவோரை எம்மை ஆதரிக்குமாறு கோருவதும் அதற்காக தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் நட்பையும் கோரி நிற்பதையுமே தமிழீழ மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறையாகும்.

மக்கள் அலை எழும் போது கட்சிகள் மக்கள் அலைக்கு தாமே செவிசாய்க்கும். ஆதலால் தமிழீழ தேசியப் பிரச்சினையில் தமிழகக் கட்சி நிலைப்பாடுகளுக்குள் அகப்படாது தமிழீழ கொள்கை நிலைப்பாட்டின் பேரில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவை கோரி நிற்பதே ஈழத் தமிழருக்கு அவசியமான மூலோபாயமாகும். தமிழ்நாட்டுடனும் அதன் அனைத்து வகையான வர்த்தக, பொருளாதார, கல்வி , கலாச்சார, தொழில்நுட்ப, அரசியல் அமைப்புக்களுடனும் ஈழத் தமிழர்கள் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டு தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் உள்ள உறவை மேலும் வலுவாக்க வேண்டும்.

தமிழகத்தில் இப்போது ஓர் அலை எழத்  தொடங்கியுள்ளது. அதனைப்பற்றிப் பிடிக்க வேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும். இதனைத் தக்க வகையில் பயன்படுத்த வேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும்.

 

தமிழீழம் - சென்னை - புதுடெல்லி - உலகம்.
இன்றைய உலக அரசியலில் ஒரே ஒரு அரசியல் பொருளாதார ஒழுங்குதான் இருக்கின்றது. அது உலகலாவிய ஏகாதிபத்தியத்தின் மையப் பொருளாதார ஒழுங்குதான்.

உலகிலுள்ள அனைத்துப் பலம் வாய்ந்த பெரிய அரசுகளும் தமக்கிடையே இந்த முழு உலகத்தையும் வர்த்தக ஆதிக்க போட்டியின் நிமித்தம் சந்தைகளாக பங்கு போட்டுக் கொண்டுள்ளன.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன்பு ஏகாதிபத்திய நாடுகளுக்கிடைய உலகம் நாடுகளாகப் பங்கு போடப்பட்டது போல , தற்போது ஏகாதிபத்திய அரசுகளுக்கடையே உலகம் நாடுகளாக அன்றி சந்தைகளாக பங்கு போடப்பட்டுள்ளது. ஆதலால் இன்று உலகளாவிய ரீதியில் வர்த்தகப் போட்டியில் (ஏற்றுமதி - இறக்குமதி) ஈடுபடும் எந்த ஒரு நாடும் ஏகாதிபத்திய நாடுதான்.

உலகளாவிய ரீதியில் ஒரு நாடு தனது பண்டங்களை, மூலப் பொருட்களை சந்தையில் போட்டு வர்த்தக ஆதிக்கப் போட்டியில் ஈடுபடுமானால் அந்த நாடு எந்த நிறக்கொடியை கட்டியிருந்தாலும் அது செயல்பூர்வ அர்த்தத்தில் ஏகாதிபத்திய கொடி தான்.

இந்த வகையில் விதிவிலக்கின்றி வர்த்தக ஆதிக்கத்தில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் ஓர் ஏகாதிபத்திய சந்தை மையக் கூட்டைக் கொண்டுள்ளன. ஆதலால் இத்தகைய அனைத்துப் பெரிய, சிறிய அரசுகளும் இலங்கை அரசுடன் ஒரு அரச ன்கிற வகையில் சமரசத்தைக் கொண்டுள்ளன.

இந்தச் சமரசக்கூட்டில் சோசலிச நாடுகள் என்றும் முதலாளித்துவ நாடுகள் என்றும் வேறுபாடு இல்லை. நீதியென்றும், நேர்மையென்றும் இல்லை.

கொடியின் நிறம்தான் வேறு. கொடித் துணிகளின் பண்பு ஒன்றுதான். ஆதலால் கற்பனாவாத அரசியலுக்கு வெளியே இரத்தமும் சதையுமாக அரசியலை யதார்த்த நிலையில் வைத்து மதிப்பிட்டு தமிழீழ மக்களின் தேவைக்குப் பொருத்தமான ஒரு யதார்த்த பூர்வ அணுகுமுறை அவசியம்.

மேற்படி பெரிய அரசுகளின் உலகளாவிய கூட்டுச் சமரசங்களுக்கு வெளியே தமிழக மக்களின் ஜனத்திரள் என்ற ஜனநாயகப் பலம்தான் அரசுகளின் சமரச ஒழுங்கிற்கு வெளியே தமிழீழ மக்களின் நலன்களை உலகப்பரப்பில் ஸ்தாபிக்க உதவும்.

 உண்மையில் தமிழீழ மக்களின் போராட்டமானது தேசிய வடிவிலான ஜனநாயக மீட்புப் போராட்டமாகும். தமிழீழ மக்களின் நலன்கள் சென்னை - புதுடில்லி - உலகம் என்ற ஒரே ஒரு பாதையை மட்டுமே கொண்டிருக்கின்றது.

இலங்கை அரசு தமிழரை சர்வதேச அரசுகளால் சுற்றி வளைத்தே ஒடுக்குகின்றது. அது இராணுவ பொருளாதார உதவிகளை ஒருபுறம் அமெரிக்காவிடம் இருந்தும் மறுபுறம் சீனாவிடம் இருந்தும் பெறுகின்றது. அப்படியே ஒருபுறம் இந்தியாவிடம் இருந்தும் மறுபுறம் பாகிஸ்தானிடம் இருந்தும் பெறுகிறது.

இப்படி கொள்கை, கொடி, குடை வேறுபாடின்றி தமிழருக்கு எதிராக அனைத்து நாடுகளின் உதவிகளையும் இலங்கை அரசு பெறுகிறது.

தேசிய இனப்பிரச்சனை என்பது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. அது எப்பொழுதும் ஒரு சர்வதேச பிரச்சனையாகும்.

ஆகையால் தமிழீழப் பிரச்சனையை சர்வதேசப் பரிமானத்தால் மட்டுமே தீர்க்க முடியும். தமிழீழ பிரச்சனையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை சென்னை - புதுடில்லி- உலகம் என மட்டுமே அமைய முடியும்.

 - மு.திருநாவுக்கரசு. 18.11.2006.

 

திங்கள், 23 ஜூன், 2025

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் - மு.திருநாவுக்கரசு.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் | Eelam Tamils Political Contents

பயணம் செய்ய இலக்கு வேண்டும். பறப்பதற்கு சிறகுகள் வேண்டும். கொடி உயரக் கொழுகொம்பு வேண்டும். படகு பிழை என்பதற்காக பயணம் தவறில்லை. படகு பிழை என்றால் படகைத் திருத்து. படகோட்டி பிழையென்றால் ஓட்டியை மாற்று. ஆனால் பயணத்தை மாற்றாதே.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான கடந்த ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலான தமிழ் அரசியற் தலைமைகளின் போக்கு , வீழ்ந்தவன் மேல் மாடு ஏறி மிதிப்பது போல் உள்ளது. தமிழ் கட்சிகளுக்குள்ளும் தமிழ் கட்சிகளுக்கு வெளியிலும் தமிழ் கட்சிகளுக்கு இடையேயும் உள்நாட்டுப் பரிமாணத்திலும், வெளிநாட்டுப் பரிமாணத்திலும் தமிழ் அரசியல் ஒரு புதிய பாதையை, புதிய வழிமுறையை, புதிய பரிமாணத்தைத் தேடவேண்டியுள்ளது.

இங்கு குறிப்பாக உள்நாட்டு வெளிநாட்டு பரிமாணத்தில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய யதார்த்த பூர்வமான நிலைமைகளைச் சரிவர அடையாளம் கண்டு அதனை முன்னெடுக்குமாறு இக்கட்டுரை கூறி நிற்கின்றது. அதற்கான அறிவார்ந்த, நடைமுறைக்கு அவசியமான முன்மொழிவே இக்கட்டுரையாகும்.

விடுதலைப் போராட்டம்

காலனிய ஆதிக்கத்திற்கெதிரான தேசிய விடுதலைப் போராட்டங்கள் சந்தேகத்திற்கிடமின்றி உலகிலனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. சில வேளைகளில் தலைமை தாங்குவதில் தவறிருந்தால் விடுதலைக்கான காலம் பின்தள்ளப்படுமேயாயினும் விடுதலை அடைவது நிச்சயம்.

அரசற்றதேசிய இனங்கள் அரசமைப்பதற்கான விடுதலைப் போராட்டங்களனைத்தும் வெற்றி பெற்றன என்று சொல்வதற்கில்லை. அதில் பெருந்தோல்வியடைந்தவைகளும், விடுதலை சாத்தியமற்றவைகளுமுண்டு. உதாரணமாக திபெத்திய விடுதலைப் போராட்டம் ஒருபோதும் சுதந்திர அரசமைப்பதற்குச் சாத்தியமற்றது.

ஒருபுறம் திபெத் கடல் வழியின்றி மலைவாழ் நிலத் தொடரால் நிலப் பூட்டுண்ட நிலையில் (Land locked) அதனைச் சூழச்சிறிதும் சாதகமற்ற அயல்நாடுகள் காணப்படுவதோடு, அதன்மீது ஆதிக்கம் செலுத்தும் அதன் எஜமானிய நாடான சீனா உலகில் இரண்டாவது அணுவாயுத வல்லரசாகக் காணப்படும் நிலையில் உள்நாட்டு, வெளிநாட்டு அண்டைநாட்டு அரசியல் - இராணுவ நிலைமைகளேதுவும் அதற்குக் கைகொடுக்க முடியாது.

மேலும் அண்டை நாடான இந்தியா 1950களில் உதவ முற்பட்ட நிலையில் சீனாவுடனொரு பெரும் யுத்தத்தை எதிர்கொண்டு அதில் தோல்வியடைந்து, தன் நிலப்பரப்பைக் கூட இந்தியா இழந்து இன்று வரை மீட்க முடியாத அளவுக்கு அதன் இறுக்கமான நிலையுள்ளது. மேற்குலகமும் தன் தார்மீக ஆதரவைத் தீபெத்துக்கு வழங்கினாலும் நாடு பிரியக்கூடிய அளவுக்கு அவை இராணுவ ரீதியில் ஆதரவளிக்க மாட்டா.

திபெத்தின் அமைவிடம், புவிசார் அரசியற் சூழல், அண்டை நாட்டுச்சூழல், மற்றும் சர்வதேச உறவுகள் போன்ற எதுவுமே திபெத் இறைமை கொண்ட தனியரசாவதற்கான வாய்ப்பையளிக்க மாட்டாது. அரசற்ற பல தேசிய இனங்கள் விடுதலை அடைவதற்கு ஏதுவாகவிருந்த காரணங்களையும், அவ்வாறே அரசற்ற பல தேசிய இனங்கள் விடுதலை அடைய முடியாதிருப்பதற்கான காரணங்களையும் பிறிதொரு கட்டுரையில் தனியாக ஆராயலாம். அதேவேளை விடுதலையடையக்கூடிய அரசற்ற இனங்களின் நடப்பு நிலையுமுண்டு.

இந்த வகையில் ஈழத்தமிழர் இறைமையுள்ள தனியரசாக விடுதலை அடையக்கூடிய அடிப்படை வாய்ப்பைக் கொண்டுள்ளனர். அது மந்திரக்கோல் கொண்டு செய்யக்கூடிய விடயமல்ல. சூழ்நிலைகளைக் கையாளக் கூடிய வல்லமையினால் உருவாக்கப்படக்கூடிய ஒரு யதார்த்த நிலைமையாகும். யதார்த்தம் வாய்ப்பாக இருந்தாலும் அந்த யதார்த்தத்தை விடுதலைக்கான நடைமுறையாக முன்னெடுக்க வல்ல தலைமைத்துவம் இன்றியமையாதது.

இத்தகைய பின்னணியில் ஈழத் தமிழர்களின் விடுதலை சார்ந்து காணப்படக்கூடிய உள்நாட்டு, அண்டை நாட்டு, சர்வதேச, உலகம் தழுவிய வகையிற் காணப்படும் யதார்த்தத்தை ஒரு தெளிவான கணிதவகைக் கணிப்பீட்டுக்குட்படுத்தி நடைமுறைச் சாத்தியமான கணிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வகையில் ஓர் அரசற்ற இனத்தின் நலனுக்காக ஒத்த பண்பாட்டு அடையாளத்தின் அடிப்படையிலோ அல்லது ஒத்த இன, மத,மொழி அடையாளத்தின் அடிப்படையிலோ இன்னொரு நாட்டில் வாழும் ஒத்த இன மக்கள் காட்டக்கூடிய அரசியல் அக்கறையும், ஒத்துழைப்பும் வெளிநாட்டு இனச் சகோதரத்துவ அரசியல் எனப்படும். கனடா வாழ் பிரான்ஸ் இன கியூபெக் மக்களுக்கு கனடிய ஆங்கில மேலாண்மை மத்திய அரசுடன் இனப்பிரச்சனை எழுந்த பொழுது பிரான்ஸ் அரசும், பிரான்ஸ் மக்களும், பிரான்ஸ் இன கியூபெக் மக்களுக்கு ஆதரவாகவும், அனுசரணையாகவும் செயல்பட்டனர்.

 ஈழத்தமிழர்

குறிப்பாக 1967 ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதி டி கோல் கியூபிக் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக மண்ரயலி பகிரங்கமாகப் பேசினார். (Charles de Gaulle famously uttered the phrase "Vive le Québec libre!" (Long live free Quebec!). அந்தப் பேச்சு கனடிய, அமெரிக்க, பிரித்தானிய, நேட்டோ அரசியலில் ஒரு நொதியத்தை (Catalyst) உருவாக்கியது.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் | Eelam Tamils Political Contents

கியூபெக் மக்கள் தாம் விரும்பிய ஒரு சமஸ்டி அரசியற் தீர்வை அடைய அது பெரிதும் வழி வகுத்தது. இதே போல பாலஸ்தீனிய மக்களுக்கு அரபுலக நாடுகளும், அரேபிய மக்களும், இஸ்லாமிய நாடுகளும், உலகெங்கும் பரந்து வாழும் இஸ்லாமிய மக்களும் ஆதரவாயும், அனுசரணையாகவும் செயற்படுகின்றனர். மேற்படி இவையிரண்டும் வெளி நாட்டு இனச் சகோதரத்துவ அரசியலுக்கு முக்கிய உதாரணங்களாகும். இப்படி உலகிற் பல இனச்சகோதரத்துவ உறவுகள் உள்ளன. ஈழத் தமிழர் தொடர்பான விடயத்தில் தமிழ்நாடு வாழ் தமிழ் மக்கள் இன, மத,மொழி, பண்பாட்டு அடிப்படையில் ஒத்த இனத்தவராவர்.

மதப்பண்பாட்டு அடிப்படையிலெடுத்துக் கொண்டால் ஈழத் தமிழருடன் இந்தியா ஒரு பொதுவான அல்லது மேம்போக்கான ஒத்த தன்மையைக் கொண்டுள்ளது. குறிப்பாக வகுத்துபார்க்கையில் அரைச் சமஸ்டி அரசான தமிழக அரசும், தமிழக மக்களுந்தான் உலகளாவிய நிலப்பரப்பில் ஈழத் தமிழ் மக்களுக்கென்று இருக்கக்கூடிய ஒரே ஒரு வெளிநாட்டு இனச்சகோதரத்துவ அரசியற் களமாகும்.

அந்தக்களம்தான் ஈழத் தமிழர்களுக்கான சர்வதேச அரசியற்களம். அதைத் தவிர வேறெந்த சர்வதேசத் தளமும் ஈழத்தமிழரின் இலக்கையடைய உதவாது. தமிழகத்துக்கு வெளியே உலகிலிருக்கக்கூடிய எந்தவொரு சர்வதேச அரசியற்களமும் ஈழத் தமிழருக்காக ஆங்காங்கே குரல் கொடுக்கக்கூடுமேயானாலும் யாராலும் ஈழத் தமிழர்களுக்கு வாழ்வளிக்க முடியாது. அரசியல் யதார்த்தத்தில் தமிழகத்தைத் தவிர உலகில்வேறு எந்தக்களமும் ஈழத்தமிழருக்குப் பெரியயளவில் உதவ முடியாது.

இதுதான் விஞ்ஞானபூர்வமான அரசியல் யதார்த்தம். இதனை உணரத்தவறினால் கற்பனையில் சிறகடித்து வானிற்பறக்கலாம்; யதார்த்தத்தில் தலைகுத்துண்டு முள்ளிவாய்க்கால் போன்ற புதை குழிகளுக்குள் புதையலாம். அரசியற்தத்துவத்தில் உண்மை - யதார்த்தம் - நடைமுறை - மேலான நடைமுறை என நான்கு அம்சங்கள் உண்டு (Truth -- Reality -- Practice Praxis). அதாவது "பசி" என்பது உண்மை, சோறு சமைக்க அரிசி போதாது.

ஆனால் அது கஞ்சி காய்ச்சப் போதும் என்பது யதார்த்தம். அதைக்கஞ்சி காய்ச்சினால் அது ஒரு சாதாரண நடைமுறை. ஆனால் கூடவே 2 கோழி முட்டையும், அரைப் போத்தல் ஜாமும் இருக்கும் நிலையில் அந்த அரிசியையும், முட்டையையும் சேர்த்து விற்றால் பாண்( Bread) வாங்கி ஜாமுடன் வயிறாறச் சாப்பிடலாம் என்று தாய் முடிவெடுக்கிறாள். தாயின் செயல் மேலான நடைமுறை (Praxis).

' உண்மை -யதார்த்தம் - நடைமுறை மேலான நடைமுறை " என்ற தத்துவநிலை காதல் - கல்யாணம் -- குடும்பம் --உறவு -பகை --சண்டை-- சச்சரவு - நாடு-- அரசு-- வழக்கு -- கணக்கு --யுத்தம் -உள்நாடு -- சர்வதேச ம் --அரசியல் --- பொருளாதாரம் ஆகிய அனைத்துக்கும் பொருந்தும். இது வாழ்வியலிலும், பரந்த அரசியலிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அடிப்படைத்தத்துவம்.

தமிழகம் 

அரசற்ற தேசிய இனங்களின் அரசமைப்பதற்கான தேசிய விடுதலைப் போராட்டங்கள் எதுவும் தெளிவான, வெளிப்படையான, பொருத்தமான வெளிநாட்டு ஆதரவின்றி ஒரு போதும் விடுதலை சாத்தியமாகாது. இந்த வகையிற் பலம் வாய்ந்த பொருத்தமான வெளியாதரவின்றி அரசமைப்பதற்கான தேசிய விடுதலைப் போராட்டங்களெதுவும் கொழுகொம்பின்றி உயர முடியாத கொடியின் கதையாகவேயமையும். தமிழகம் இந்தியாவிற் பலம் வாய்ந்த மாநிலம்.

இந்து மகாகடலில் இந்தியாவின் அமைவிடத்தைப் பொறுத்தவரையில் இந்து மாகடலில் தமிழகம்தான் இந்தியாவின் வாயிலாக உள்ளது. கடல் சார்ப் புவியியல் அடிப்படையில் இந்தியாவுக்கான இருதய நிலைமாய்த் தமிழகமுள்ளது. கடல்சார் அடிப்படையிற் இந்தியாவின் எதிர்கால வாழ்வுக்கான அடித்தளம் தமிழகம் தான். கூடவே ஈழத்தமிழரின் நிலப்பரப்பு அதனோடு நீண்டு இந்தியாவுடன் பாக்கு நீர்இணை வழியாக தொடுபட்டிருக்கும் மக்களாய் ஈழத்தமிழருள்ளனர்.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் | Eelam Tamils Political Contents

ஈழத்தமிழரின் கடல்சார் முக்கியத்துவத்தை இந்தியாவால் எதிர்காலத்தில் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. கூடவே தமிழகத்தின் நலனும் ஈழத்தமிழர்கள் மீது பெரிதும் தங்கியுள்ளது. பின்னணியிற் பலம் பொருந்திய தமிழகத்தில் இந்திய மத்திய அரசை தனது செல்வாக்குக்கு எப்போதும் உட்படுத்த முடியும். விரும்பியோ, விரும்பாமலோ இந்திய மத்திய அரசுக்குத் தமிழகமும், ஈழத்தமிழரும் தவிர்க்க முடியாத பெரும் சக்திகளாவர்.

பாக்கு நீரிணைதான் சிங்களவருக்கு ஒரு நாட்டை கொடுத்ததும், சிங்கள பௌத்தத்துக்கான அருணாக அமைந்ததுமாகும். அதேவேளை அந்தப் பாக்கு நீரிணை வழியாக தமிழகத்துடன் இருக்கக்கூடிய உறவுதான் ஆயுதப் போராட்டத்திற்கான பின்புலமாகவும், அனைத்து ஆயுத இயக்கங்களின் தொட்டிலாகவும் அமைந்து ஆயுதப் போராட்டம் வளர அடிபோலியது.

ஆயுதப் போராட்டத் தலைவர்களனைவரும் இலங்கையரசால் கொல்லப்பட முடியாதளவிற்கு தமிழகம் அனைவருக்கும் சரணாலயமாகவிருந்தது. இனியுமதுதான் உண்மை. அதாவது தமிழகத்துடனான புவியியலமைவிடமும், பண்பாட்டுத் தொடர்ச்சியும் இதனை என்றும் வலுவாகப் பேணவல்லவை. தற்காலிக கோப - தாபங்களினால் இவை அழிந்து போக முடியாதவை.

ஒருபுறம் ஈழத்தமிழருக்கு எந்தவொரு வெளி அரசினதும் வெளிப்படையான ஆதரவு கிடைக்க முடியாத சர்வதேச அரசியற்சூழலிருக்கும் போது, அரசாகக் காணப்படும் இலங்கை அரசை மீறி எந்தவொரு அரசும் உறவு கொள்வதற்கான வாய்ப்பற்ற நிலையிலும் அசுர பலத்துடன் சிங்கள அரசு செயல்படும் நிலை ஈழத்தமிழ்த் தேசிய இனம் அழிந்து போகக்கூடியதாகக் காணப்படும் யதார்த்த நிலையில் தமிழகம் ஒன்று மட்டுந்தான் ஈழத்தமிழருக்கான ஊன்றுகோலாக விளங்க முடியுமென்பதால் அதனைத் தமிழகம் செய்ய வேண்டுமென்று தெளிவான அரசியற் தீர்மானங்களின் மூலம் ஈழத்தமிழர் அரசியலை ஈழத்தமிழ்ச் சக்திகள் முன்னெடுக்க வேண்டும்.

சுதந்திரத்தின் பின் முழு இந்திய அரசியலில் முன்னெப்பொழுதுமோ அல்லது பின்னெப்பொழுதுமோ வரலாறு கண்டிராத மாபெரும் முழு நாள் ஹர்த்தால், கதவடைப்புப் போராட்டம் ஈழத்தமிழரின் பெயரால் 1983 ஆம் ஆண்டு ஓக்கஸ்ட் 16 ஆம் திகதி தமிழகத்தில் முழு அளவிலான வெற்றியுடன் நிகழ்ந்தது. தமிழக சட்டசபையில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை தான் என்ற ஒருமனதான தீர்மானம் இதுவரை இரண்டு தடவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் 19 இளைஞர் - யுவதிகள் ஈழத்தமிழரின் பெயரால் தீக்குளித்து தம்மினிய உயிர்களை ஈய்ந்துள்ளார்கள்.

இவற்றையெல்லாம் கருத்திலெடுத்து ஈழத்தமிழர்கள் இந்தியாவில் கட்சி சார்பற்ற வகையிலான அரசியலை வீரியத்துடன் புது மெருகூட்டி முன்னெடுக்க வேண்டும். இந்த இன சகோதரத்துவ அரசியலைத் தவிர சர்வதேச அரங்கில் ஈழத்தமிழருக்கு வேறெந்தப் பலமான தளமும் கிடையாது. அப்படி கண்மூடித் தனமாக யாரும் சொல்வார்களேயானால் இறுதியில் அவர்கள் மிகக் குறும் காலத்தில் தமது இரண்டு கரங்களையும் உயர்த்திக்கொண்டு இனப்படுகொலையாளர்களின் கால்களில் வீழ்ந்து மடிவதைத் தவிர வேறெதுவும் மிஞ்சாது. இது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு, சர்வதேச அரசியல் யதார்த்தக் கணிப்பீடாகும்.

--------------------------------


இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 22 June, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது

https://tamilwin.com/article/eelam-tamils-political-contents-1750632973

அதிகம் பார்க்கப்பட்டவை: