திங்கள், 25 ஏப்ரல், 2022

"கொழும்புக் கொந்தளிப்பும் ஈழத்தமிழரும் கற்பனையும் யதார்த்தமும் கொள்கை ஆய்வு" - உரை. பாகம் 2.

 ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களால் 24.04.2022  அன்று நடாத்தப்பட்ட "கொழும்புக் கொந்தழிப்பும் ஈழத்தமிழரும் கற்பனையும் யதார்த்தமும் கொள்கை ஆய்வு" என்கிற உரையாடல் வகுப்பின் இறுதிப் பகுதி இங்கே பிரசுரமாகிறது.

ஸ்பெயினில் 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் போது ஐரோப்பிய நாடுகள் ஸ்பெயினை பாதுகாக்க முற்பட்டன. அது ஏன் என்பது ஒரு அரசியல் பொருளாதார விளக்கமூடாக சொல்லலாம். ஸ்பெயினின் பிரச்சனை என்பது ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த வரையில் அவர்களின் சுமையாக மாறும். எனவே ஸ்பெயினின் பிரச்சனையை தீர்க்காமல் பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி போன்ற நாடுகள் நிம்மதியாக இருக்க முடியாது. எனவே இந்த நாடுகள் எல்லாம் சேர்ந்து ஐரோப்பிய யூனியன் எல்லாம் சேர்ந்து ஸ்பெயினை இரவோடு இரவாக அதன் பொருளாதார பிரச்சனைகளிலிருந்து விடுவித்தார்கள்.

 இலங்கையின் பொருளாதார பிரச்சனையை தீர்க்க இப்போது பல நாடுகள் முன் வருகின்றன. அதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. ஸ்பெயினில் அதை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படை தீர்மானத்திலிருந்த ஸ்பெயினுக்கு பொருளாதார உதவி வழங்கப்பட்டது. இலங்கையில் அப்படி அல்ல, "இறால் போட்டு சுறா பிடிக்கிறது போல." இலங்கைக்கு பல நாடுகள் உதவப் போகின்றன. சர்வதேச நாணய சபை (IMF) உதவப் போகிறது, உலக வங்கி (world bank) உதவப் போகிறது. அமெரிக்கா உதவப் போகிறது. ஜப்பான் உதவப் போகிறது. இந்தியா, சீனா போன்ற நாடுகள் எல்லாமே இலங்கைக்கு உதவப் போகின்றன. இந்த நாடுகள் தங்களுடைய நலன் நோக்கு நிலையில் நின்று கொண்டு தான் இலங்கைக்கு உதவப் போகின்றன.

எனவே இலங்கையின் பிரதான பிரச்சனை என்னவென்றால் முதலாவதாக சொன்னது போல அமெரிக்க அரசியல் என்பது உலகம் பற்றியது. இலங்கையில் தமக்கு தேவையான அரசியல் இலாபத்தை எவ்வாறு தேடுவது என்பது பற்றியது தான். இலங்கைக்கு பணத்தை கொடுத்து இந்த அரசாங்கத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும். ஒரு குறுகிய காலத்திற்கு இவ்வாறு தக்க வைக்க இவர்களால் முடியும். இது முதலாவது பிரச்சனை. இனப்பிரச்சினை அப்படியே பொங்கி எழுந்து வெளியே வரும். அதனை தீர்க்க மாட்டார்கள்.  

இந்த பின்னணியில் இலங்கையினுடைய பிரச்சனையை கைத்தொழில் மயமாக்கம் செய்தோ, விவசாயத்தை நவீன மயப்படுத்தியோ, மீன்பிடி தொழிலை நவீன மயப்படுத்தியோ இலங்கை உள்ளூர் உற்பத்தியை உருவாக்கியோ இவர்கள் தீர்க்க போவதில்லை. மாறாக வெளிநாடுகளில் தங்கள் பண்டங்களை வாங்குவதற்கு கடன் கொடுக்க போகிறார்கள்.  இதன் மூலம் பணத்தை கொடுத்து இலங்கைக்கு தங்களுடைய வர்த்தகத்தையும் தங்களுடைய அரசியல் பிடியையும் பிடிக்க போகிறார்கள்.

இலங்கை தன்னுடைய  இறைமையை எல்லா வழிகளிலும் இழந்தது தமிழ் மக்களை அழித்ததன் மூலம்தான். எல்லா நாடுகளிடத்திலேயும் கை ஏந்தி தன் முழு இறைமையையும் விற்க போகிறது இலங்கை. தன்னுடைய சகோதர இனத்தோடு இலங்கையின் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு ஈழ தமிழர்களும் இலங்கையிலுள்ள ஏனைய இனங்களும் சிங்கள மக்களும் சேர்ந்து இறைமையை பங்கிட்டு வாழ்வதற்கு பதிலாக, அரசியல் அதிகாரத்தை ஒருவருக்கு ஒருவர் பங்களித்து வாழ்வதற்கு பதிலாக இலங்கை இறைமையை முற்றிலும் விற்று வாழ்கின்ற ஒரு அரசியலை இலங்கையின் சிங்கள தலைவர்கள் அரங்கேற்றி விட்டார்கள். இதிலிருந்து மீள முடியாது. எனவே தற்காலிகமாக ஏற்படக்கூடிய பொருளாதார மீட்சி என்பது அந்த அரசை பாதுகாப்பதோடு சம்பந்தப்பட்டது. இறுதியாக ஒரு கட்டத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வு பற்றிய போராட்டம் திரும்பி வரும்.

அமெரிக்காவிற்கு எப்படி அமெரிக்கா எனும் நாடு உலகமாக இருக்கிறதோ அவ்வாறே சீனாவிற்கு சீனா என்ற நாடு என்பது இந்துமா கடலாக இருக்கிறது. சீனாவின் கண்ணோட்டத்தில் இந்துமா கடல் சீனாவின் ஒரு பகுதி. சீனா தெளிவாகச் சொல்கிறது. இலங்கையில் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் கை ஓங்கி இருக்கின்ற நிலையில் சீனா சற்று ஓரடி ஈரடி பின்னே போயிருக்கிறது.  இருந்தாலும் சீனாவினுடைய இறுதி தீர்வு அதனுடைய கட்டமைப்பான அபிவிருத்தி வளர்ச்சி தான். அது இலங்கையோடும் பாகிஸ்தானோடும் பர்மாவோடும் சேர்த்து கடல் ரீதியாக தன்னுடைய கட்டமைப்பை விருத்தி செய்கிறது. எனவே அதிலிருந்து சீனா பின் வாங்கி போய்விட முடியாது. பின் வாங்கினால் இந்தியா சீனாவிற்கு உலகம் இல்லை.

இந்தியாவிற்கு இலங்கையில் ஒரு தளம் தேவையில்லை. ஏனென்றால் 7500 கிலோமீட்டர் நீளமான இந்துமா கடல் கரையோரத்தை கொண்ட இந்தியாவிற்கு இலங்கையில் தளம் தேவையில்லை. மாறாக இந்தியாவிற்கு தேவைப்படுவது என்வென்றால் இலங்கைக்கு எந்தவொரு நாடும் வரக்கூடாது என்பது தான். சீனாவோ அமெரிக்காவோ இலங்கையில் தளம் அமைக்க கூடாதென்பது தான் இந்தியாவின் தேவை. இந்துமாகடல் இல்லாத சீனாவிற்கு தான் இலங்கை தேவை.

இலங்கையை பொறுத்தவரையில் இந்தியா அப்படி அணுகும் என்று தெரிந்திருப்பதனால், இந்தியா எப்பொழுதுமே அனுசரித்துப் போகும் என்று தெரிந்து இருப்பதனால் நெருக்கடி வரும்போது இந்தியாவிடம் இலங்கை காசு வாங்குகிறது. காசு வாங்கிக் கொண்டு நாளைக்கு கையை விடும். இன்றைக்கு இருக்கின்றவர்கள் இன்னுமோர் ஐந்து வருடங்களில் இருப்பார்கள் என்று இல்லை, இன்னுமொரு புதிய அரசாங்கம் வரும். அது இந்தியாவுடன் சுமூக உறவு வைத்திருக்க வேண்டுமென்பது நிபந்தனை கிடையாது. அவர்கள் தங்களது சூழலுக்கு பொருத்தமானவர்களுடன் உறவை வைத்திருப்பார்கள்.

ஆனால், கட்டமைப்பு என்பது பலமானது. சீனா இலங்கையை கட்டமைப்பு வளர்ச்சியூடாக அணுகுகிறது. இந்தியா உதவி செய்து இலங்கையை தன்னுடன் அணைக்கப் பார்க்கிறது. உதவி செய்யும் உறவு ஒரு நிமிடத்தில் அற்று போகலாம். கட்டமைப்பை வெட்ட முடியாது. இந்தவகையில் இன்று இந்தியா வைத்து இருக்கின்ற மென்மையான போக்கை நாளை கைக்கொள்ள முடியாது. இந்தியா விரும்பினாலும் கைக்கொள்ள முடியாது. இனப்பிரச்சினை பூகம்பமாக எரிமலையாக  எழும்பும். அது தீர்க்கப்படாது. ஈழத்தமிழர்கள் பலமான பாரம்பரிய கலாச்சார பின்னணியை கொண்டவர்கள். இந்த பிராந்தியத்தில் தென்னிந்தியாவுடன் சேர்த்து அவர்களுக்கு நீண்ட வரலாறு உண்டு.

இதுவரை நாங்கள் இலங்கையினுடைய பிரச்சினை தீர்க்கப்படாத அடித்தளத்தை கொண்டது என்பதையும், அது அரசியல் பொருளாதார ரீதியாக பொருட்களை வாங்கி விற்கின்ற ஒரு தரகு வர்த்தக நாடாக இருக்கிறது என்பதனையும் நாங்கள் கருத்தில் கொள்வோம். ஆனால் தீவாக இருக்கிற நாடு மீனை இறக்குமதி செய்கிறது எனும் துயரத்தை புரிந்து கொள்வதில் இருந்து இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரத்தை பார்ப்போம். ஈழத்தமிழர்களுடைய மூளை இலங்கையினுடைய அரசை கட்டமைக்க பயன்படவில்லை. ஈழத்தமிழர்கள் இலங்கை அரசிற்கு விசுவாசமாக இல்லை, சம்பளம் பெறுகின்ற உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அது வேற விடயம். ஆனால் இலங்கையை கட்டி வளர்க்க வேண்டும் என்ற பற்று பாசத்தோடு இலங்கை தமிழர்களுடைய மூளை இலங்கை அரசுக்கு உதவவில்லை. உதவவும் மாட்டாது. அந்த சிந்தனையோடு நாங்கள் யாருமில்லை. ஆதலால் ஈழத்தமிழர்களுடைய மூளை வளம் என்பது இலங்கையை கட்டியெழுப்ப போவதில்லை.

இலங்கை சிங்களவர்களுடைய மூளை தமிழர்களை ஓடுக்குவதிலேயே திருப்பப்பட்டிருக்கிறது. எனவே அதுவும் நேர்மறையான பாத்திரத்தை கொள்ளாது. சிங்களவர்களோடு இருக்கின்ற நிபுணர்கள் அறிஞர்கள் எல்லோரும் தமிழர்களை எவ்வாறு ஒடுக்குவது என்பதற்கு தங்களுடைய மூளையை செலவழிக்கின்றார்கள். தமிழ் தரப்பு தம்மை மீட்பதற்கு மூளையை எவ்வாறு பயன்படுத்துவது என்ற சிந்திப்பது குறைவு. அவர்கள் வெளிநாடுகளுக்கு போய் விடுகிறார்கள். அதிலிருந்து தமிழ் தரப்பு தனது மூளையை பயன்படுத்துகிற ஒரு கட்டம் வரும். அது தவிர்க்க முடியாதது. நிச்சயமாக வரும். இதை நான் கற்பனையில் சொல்லவில்லை. இதற்கு ஒரு யதார்த்தம் உண்டு.

சரி இப்படிப்பட்ட இந்த நிலையில் நாங்கள் அரசியல் பொருளாதாரம் பற்றி உள்நாட்டு, சர்வதேசம், பூகோளம் என்ற மூன்று அடுக்குகளிலும் வைத்துப் பார்ப்போம். இப்பொழுது பாருங்கள்.
வெறும் உள்நாட்டு கண்ணோட்டத்தோடு  இலங்கை அரசியலை நீங்கள் பார்த்தால் நிச்சயம் தோல்வியடைவீர்கள்.
இந்தியாவை வைத்து மட்டும் பார்த்தால் தோல்வியடைவீர்கள், அமெரிக்காவை வைத்து மட்டும் பார்த்தால் தோல்வியடைவீர்கள். ஆனால் இந்த மூன்று அடுக்குகளிலும் பார்த்தால் தோல்வியடையமாட்டோம்.

உலக அளவில் முதலாம் உலக மகா யுத்தம் முடிந்த பின்பு லெனின் தன்னுடைய சோஷலிச பொருளாதார கொள்கை தோல்வியடைந்ததை உணர்ந்தார். எனவே புதிய பொருளாதார திட்டம் என்கிற கொள்கைக்கு போனார். அங்கு கலப்பு சந்தை பொருளாதாரத்தை கொண்டு வர முற்பட்டார். புதிய சிந்தனை தேவை என்பதை லெனின் உணர்ந்தார் என்பதை சுட்டிக்காட்டவே நான் இதனை கூறினேன். இந்த 1921ஆம் 22ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு புதிய விழிப்புணர்வு ரஸ்யாவில் ஏற்பட்டது. முக்கியமாக ட்ரொஸ்கி, புக்காரின் என்கின்ற இரண்டு பேர் பொருளாதார கொள்கையை திடமாக முன்வைத்தனர். விரைவான கைத்தொழில் பொருளாதாரம் வேண்டுமென்று அவர்கள் ஆணித்தரமாக முன் வைத்தார்கள். மாறாக ஸ்டாலின் நிலச்சீர்திருத்தத்தையம் விவசாயத்தையும் முதன்மைப்படுத்தினார். அவர் சொன்னது சரி. ஆனாலும் அவற்றை விடவும் முக்கியமானதாக இருந்தது உண்மையிலேயே கைத்தொழில் மயமாக்கம் தான்.

 ட்ரொஸ்கி, புகாரின் இரண்டு பேருமே கொலை செய்யப்பட்டு விட்டார்கள். புகாரின் மரண தண்டனை விதிக்கப்பட்டு ஸ்டாலினால் கொல்லப்பட்டார். ஸ்டாலின் அனுப்பியவரால் ட்ராஸ்கி மெஸ்க்கிக்கோவில் வைத்து கொல்லப்பட்டார். இந்த இரண்டு பெரிய சிந்தனையாளர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள். புரட்சியாளர்களை கொன்றது புரட்சியாளர்கள் தான். இது புரட்சியின் வரலாற்றில் சோகமான ஒரு உண்மை. இது வரலாறு முழுக்க நிகழ்கிறது.

இந்த ட்ரொஸ்கியினுடையதும் புகாரினினுடையதுமான கைத்தொழில்மயமாக்க கொள்கையை தான் டென்ஷியாவோபிங் பின்னர் கையில் எடுத்தார். ட்ரொஸ்கியும், புகாரினும் கொல்லப்பட்ட இடத்தில் ரஸ்யா கைத்தொழில் மயமாக்கத்தில் வீழ்ச்சியடைந்தது. அது சரணாகதி அடைந்தது. அது பனிப்போரில் வீழ்ச்சியடைந்த கதை ஒரு நீளமான சோகம். இந்த காலகட்டத்தில் தான் ரஷ்யாவினுடைய வீழ்ச்சியை கண்ணால் கண்டு கொண்டிருந்த டென்ஷியாவோபிங் அந்த இருவரினது கொள்கைகளையும் கையில் எடுத்தார்.

 ஆனால், இந்த இரண்டு பேரினுடைய பொருளாதார கொள்கையிலும் முக்கியமான வேறுபாடு இருக்கிறது. புகாரினினுடையது உள்நாட்டு தேசிய அளவிலான நவீன கைத்தொழில் மயமாக்கம். ட்ரொஸ்கியினுடையது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கைத்தொழில் மயமாக்கம். இருவர் சொல்லியதிலும் முக்கியமான விடயம் என்னவென்றால் சோசலிச கட்டமைப்பிற்குள்ளே தொழில் மயமாக்கம் என்பது. ஆனால் டென்சியாவோபிங் ஏகாதிபத்திய அமைப்பிற்குள்ளே கைத்தொழில் மயமாக்கம் என்று சொன்னார். இந்த இரண்டு அமைப்புகளும் (system) வேறு வேறு.

இந்தியா ஒத்துழைப்பு பொருளாதாரத்தை (collaboration economy) ஐக் கொண்டு வந்தது. அது இந்திய பிரதமராக இருந்த நரசிம்மராவால் கொண்டு வரப்பட்டது. சீனாவில் 1979ஆம் ஆண்டு உருவாக்கபட்ட திட்டம் சுமாராக 15 வருடங்களின் பின் வளர்ச்சியை கண்ட பொழுது இந்தியா திகைத்து போய் விட்டது.  இந்தியாவில் இருந்தது ஏறக்குறைய மூடிய பொருளாதாரம். அது தேசிய முதலாளித்துவத்தோடு இருந்தது. தேசிய முதலாளித்துவத்தில் இந்தியாவினுடைய கைத்தொழில் உலக கைத்தொழில் பண்டங்களுடன் போட்டியிட கூடிய தன்மையை கொண்டு இருக்கவில்லை. எனவே இந்தியாவை ஒத்துழைப்பு பொருளாதாரத்திற்கு இட்டு சென்றவர் நரசிம்மராவ்தான்.

நான் எப்போழுதும் ஒன்று சொல்வேன். இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் இரண்டு பிரதானமான தூண்கள் உண்டு. ஒன்று, நேருவினுடைய பழைய அணிசாரா கொள்கை என்ற பிழையான கொள்கையினை, பங்களாதேஸ் பிரச்சனையின் போது இந்தியாவை பலம் பொருந்திய தேசமாக உருவாக்குகின்ற மறுபக்கம் கொண்டு சென்றவர் இந்திராகாந்தி. இதன் பின்பு 1970களின் மத்தியில் இந்தியா செய்த உள்நாட்டு தவறுகளை நான் எற்கிறேன் என்பது அர்த்தம் அல்ல. அவருடைய வெளிநாட்டு கொள்கையில் இந்தியாவை மிக ஸ்திரமாக  வழி நடத்தினார். இராணுவ ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் இந்தியாவை ஒரு பலமாக உருவாக்குவதில் 71, ஆம் 72ஆம் ஆண்டு காலத்தில் இந்திராகாந்தியின் பங்களிப்பு அதிகம்.
அதேபோல இந்தியாவினுடைய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் நரசிம்மராவின் பங்களிப்பு பெரிது. இன்று இந்தியா அனுபவிக்கின்ற பொருளாதாரம் நல்லது கெட்டது மேன்மையானது மேன்மையற்றது எல்லாவற்றுக்கும் அப்பால் இந்தியா அனுபவிக்கின்ற இன்றைய பொருளாதாரத்தினுடைய தந்தை உண்மையான அர்த்தத்தில்  நரசிம்மராவ் தான். அவருடைய ஒத்துழைப்பு பொருளாதாரம் தான். இது இரண்டாவது தூண்.

இப்போது சோவியத்தினுடைய வீழ்ச்சிக்கு காரணம் கைத்தொழில் இல்லாமல் போனது. சீனாவினுடைய உலகளாவிய ஏகாதிபத்திய வளர்ச்சிக்கு காரணம் அது கைத்தொழில் மயமாக்கத்திற்கு போனது. இந்தியா தானாக மாற்றத்திற்கு போகவில்லை. அது சீனாவினுடைய வளர்ச்சியினால் அதற்கு நிர்பந்திக்கப்பட்டு இந்தியா இந்த மாற்றத்திற்கு போனது. சரி இப்போது உங்களுக்கு இது பற்றிய ஒரு பார்வை வந்திருக்கும். இதன் பின்பு மிகப்பெரிய ஆசிய நாடுகளான இந்தியாவும், சீனாவும் திறந்த பொருளாதாரம் மற்றும் ஏகாதிபத்தியத்தோடு இணைக்கப்பட்ட கைத்தொழில் மயமாக்கம் என்பவற்றுக்கு போகிறார்கள். பின்பு உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஆசிய ஆபிரிக்க நாடுகள், இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்துமே திறந்த பொருளாதாரம், கைத்தொழில் மயமாக்கம் என்கின்ற கொள்கைக்கு போயின.

1990 களின் மத்தியில் இந்த உலகம் முழுக்க கைத்தொழில் மயமாக்கம்  என்ற கொள்கைக்கு 100 வீதம் வந்து விட்டது. இலங்கை இன்னும் வரவில்லை. இலங்கையை விடவும் பிந்தி வந்த நாடுகள் முன்னுக்கு வந்துவிட்டன. மலேசியா, தாய்வான், ஹொங்கொங் எல்லாம் மிகவும் பிந்திய வரலாறுகளை கொண்டவை. அவர்கள் முன்னுக்கு வந்துள்ளனர். இலங்கை வரவில்லை. இப்படியாக இலங்கையில் சீரழிந்து போகின்ற பொருளாதார கட்டமைப்பில் அவர்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டுக் கடன் என்பது வெளிநாடுகளுடன் ஒரு அனுசரிப்பைச் செய்ய உதவுமே தவிர இலங்கையை அபிவிருத்தி செய்ய உதவாது. இலங்கையை வாழ வைக்க உதவாது.

 இலங்கையில் இன்றைய பாணுக்கும், பருப்புக்கும், எரிவாயுவுக்கும் சண்டை பிடிக்கின்ற இந்த மக்களோடு ஈழத்தமிழர்களை ஒப்பிடுவதா?  30 வருடமா மின்சாரம் இல்லை, எரிபொருள் கிடையாது, எரிவாயு, மண்ணெண்ணெய் கிடையாது. மக்கள் தங்களுடைய சுய சார்பு பொருளாதாரத்தால் தனது சொந்தக்காலில் தங்கி நின்றார்கள். நெல் இருந்தது, கால்நடை இருந்தது, பால் இருந்தது, மீன் இருந்தது, காட்டுலிருந்து பெற்ற உணவு இருந்தது. இந்த மக்களுக்கு குடிக்க ஐஸ்கிறீம் இல்லாமல் இருந்திருக்கலாம், அலங்காரமான ஆடை இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் வாழ்ந்தார்கள். 30 வருட காலமாக வாழ்ந்த இந்த மக்களின் வாழ்க்கையோடு பார்க்கிற பொழுது இந்த மூன்று மாத கால சிங்கள மக்களின் இந்த வாழ்க்கை தமிழர்களின் கண்ணில் ஒரு பொருட்டாக ஒரு போதும் வரப்போவதில்லை. தமிழ் மக்களின் இந்த 30 வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கை என்பது அவர்களுடைய பிரதேசத்தினுடைய சுய சார்பு தன்மை. அவர்களுடைய மனதில் ஊறிப்போய் இருக்கின்ற, அதாவது ஈழத்தமிழர்கள் எப்பொழுதும் எந்த துன்பத்திலும் தலை நிமிர்ந்து நிற்கின்ற ஒரு விடாமுயற்சியுள்ள சளையாத மக்கள் என்கின்ற தன்மை.

இத்தகைய பின்னணியில் இனி, மீளப்போகின்ற இலங்கையின் அமைப்பை மாற்ற (system change) வேண்டும் என்று நாமல் ராஜபக்ச சொல்கிறார். அவர் சொல்லும் அமைப்பு மாற்றம் என்பது என்ன? பொருளாதார முறையை மாற்றுவதற்கு பெயர் தான் அமைப்பு மாற்றம். அவர் சொல்லுவது அதுதான். அவர்கள் இந்த அமைப்பைத் தான் வைத்திருக்க போகிறார்கள். இன்றைய உலக வர்த்தக பொருளாதார அமைப்பைத்தான் வைத்திருக்கப் போகிறார்கள். பிரச்சனை அமைப்பு அல்ல. பிரச்சனையாக இருப்பது கட்டமைப்பு. இங்கே பிரச்சினை அமைப்பு (system) அல்ல கட்டமைப்பு (structure).

உதாரணமாக, அமெரிக்கா என்ற நாடு முதலாளித்துவத்தை அமைப்பு (system) ஆக கொண்டு இருக்கிறது. சமஷ்டி அரசியலமைப்பை (federal constitution) கட்டமைப்பாக (structure) கொண்டிருக்கிறது. அவர்களுடைய அரசியல் கட்டமைப்பு (political structure)  சமஷ்டியாக இருக்கிறது. ஆகவே அமைப்பு வேறு கட்டமைப்பு வேறு. நாமல் சொல்கின்ற அமைப்பு என்னவென்று தெரியாது.

கட்டமைப்பை மாற்ற வேண்டும். இந்த கட்டமைப்பு மாற்றப்படாத நிலையில் ஒரு தீர்வும் கிடைக்க போவதில்லை. ஆதலினால் திரும்பவும் தெளிவான வார்த்தையில் சொல்வதானால், ஈழத்தமிழர்களுடைய அரசியல் பிரச்சனை தீராத வரைக்கும் இலங்கையில் எந்த பொருளாதாரவிருத்தியும் இல்லை. தமிழ் மக்களின் மூளையில் சமாதானம் என்கின்ற ஒரு வார்த்தை எழாத வரைக்கும் அவர்களிடமிருந்து முதலீட்டுக்கும் இலங்கையில் இடமில்லை. வெளிநாடு கடன் கொடுக்கும். முதலீடு செய்யாது. இலங்கையில் இருக்க கூடிய இந்த அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில்  யாரும் துணிந்து முதலீடு செய்ய வர மாட்டார்கள். இது ஒரு ஆழமான பிரச்சனை.

உலகத்தில் ஒரே ஒரு கருத்தியல் தான் இருக்கிறது. இதில் நாடுகளுக்கு இடையில் எல்லை எதுவும் கிடையாது. பனிப்போர் முடிந்ததன் பின்பு திட்டவட்டமாக சந்தை பொருளாதார ஏகாதிபத்திய பொருளாதார முறை தான் உலக ஒழுங்காக இருக்கிறது. இது தான் உலக முழுவதற்குமான கருத்தியல். அமெரிக்காவினதும் இது தான், சீனாவினதும் இது தான், இந்தியாவினதும் இது தான், ரஸ்யாவினதும் இது தான். எனவே உலகத்தில் இந்த கருத்தியலில் வேறுபாடு என்று எந்தவொரு அரசிடமும் கிடையாது.

உலகம் முழுவதுமே ஒரே மாதிரியான கருத்தியலின் கீழ் உள்ளன. அப்படியானால் நாடுகளுக்கு இடையிலான போராட்டங்கள், முரண்பாடுகள் என்ன?  அங்கு ஒரு போட்டி இருக்கிறது. ஒரே கருத்தியலுக்குள் போட்டிகள் இருக்க முடியும். ஒரு சந்தை முறைக்குள் பொருளாதாப் போட்டி நிகழும். ஆனால் அந்த போட்டி பகைமை கொண்டதாக இருக்க போவதில்லை. எல்லா நாடுகளும் ஒரு கருத்தியலைத் தான் கொண்டிருக்கின்றன.


இதற்குள் இலங்கையின் நிலை என்ன? வர்த்தக பொருளாதாரம் தான் அதனுடைய கருத்தியலாக இருக்கிறது. கைத்தொழில் பொருளாதாரம் கிடையாது. விவசாய பொருளாதாரம் தான் இருக்கிறது. அங்கும் நவீன மயமாக்குதல் கிடையாது. இது அவர்களுடைய பொருளாதாரம் பற்றிய அடிப்படை பிரச்சனை. இலங்கையினுடைய ஆட்சியில் இருக்கின்ற அல்லது கல்வி கற்றுக் கொண்டு இருக்கின்ற நிபுணர்கள் மூடிய பொருளாதாரத்திலிருந்தும் வர்த்தக பொருளாதாரத்திலிருந்தும் வெளிவந்தவர்கள் தான். மூடிய பொருளாதாரம் வர்த்தக பொருளாதாரம் என்பவற்றிலிருந்து வந்தவர்களுக்கு உற்பத்தி சார்ந்த ஒரு கைத்தொழில் மயமாக்கல் சிந்தனை வரவில்லை. வர இயலாது. அது கொஞ்ச காலம் எடுக்கும். அதற்கு புரட்சிகரமாக சிந்திக்கிற நல்ல தலைவர்கள் தேவை.


அது ஈழத்தமிழர்களுடைய பிரச்சனையை தீர்க்கின்ற வகையிலான ஒரு புரட்சிகர மாற்றம் ஒன்று சிங்களவர்கள் மத்தியில் வந்தால் தான் சாத்தியம்.  சிங்கள மக்கள் மத்தியில் பெருந் தலைவர் (great leader) கிடையாது. சிறந்த தலைவர் என்று சொல்லக் கூடிய ஒருவரும் கிடையாது. அங்கு தலைவர்கள் சாகசம் செய்வார்கள். எதிரிகளை வீழ்த்துவது தான் அவர்களுடைய சாதனை. அவர்களுக்கு நாட்டை கட்டியெழுப்புவது ஒரு சாதனை இல்லை. சமாதானத்தை உருவாக்குவது அவர்களுக்கு சாதனை இல்லை. மக்களை அழிப்பது தான் அவர்களுடைய சாதனை. இப்படிப்பட்ட சாதனையை கொண்ட தலைமைத்துவத்தையும், அறிவியலையும்,  இராணுவத்தையும், தலைவர்களையும் கொண்ட ஒரு தேசத்தில் இனியும் அமைதி நிலவும் என்கிற வரலாற்று போக்கு கண்ணுக்கு தெரியவில்லை.


இப்படிப்பட்ட நிலையில் இப்போது வரக்கூடிய எந்தவொரு தற்காலிகமான சுமூகநிலையும் ஈழத்தமிழர்களுடைய தீர்க்கப்படாத பிரச்சனை. அதாவது இனி எந்த அரசியல் யாப்பு திருத்தமும் கொண்டு வர மாட்டார்கள். தமிழர்களுக்காக எந்தவித சமஷ்டி ஆட்சியும் கொண்டுவர தயாராக இருக்க மாட்டார்கள். தமிழர்களுக்காக போராட வேண்டிய ஒரு கால கட்டத்தை தமிழர்கள் 100 வீதம் தவற விட்டிருக்கிறார்கள். அதாவது, ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். எமக்கு சமஸ்டி முறை வேண்டும் நாங்கள் இலங்கையை கட்டி எழுப்ப ஒத்துழைப்போம் என்று சொல்லியிருக்க வேண்டும். சமஸ்டி முறையின் கீழ் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று போராடி இருக்க வேண்டும்.


அவ்வாறு செய்யும் பொழுது சிங்கள தலைவர்கள் சிங்கள மக்களை கைது செய்ய முடியாது என்பது போல தமிழ் மக்களை கைது செய்ய முடியாது. ஒரு சிங்கள மகன் கொல்லப்பட்டதற்கு மகா சங்கம் கண்டனம் தெரிவித்து இரங்கல் வெளியிட்டிருக்கிறது. ஒன்றரை இலட்ச மக்கள் கொல்லப்பட்டதற்காக ஒன்றும் செய்யவில்லை. ஆனாலும், இந்த கட்டத்தில் தமிழர்களும் சேர்ந்திருந்தால் மகா சங்கம் அப்படி தமிழர்களை புறக்கணிக்கின்ற நேரடியான நடவடிக்கையில் ஈடுபட்டு கைது செய்கின்ற நடவடிக்கைக்கு ஆதரவளிக்க முடியாது. அது ஒரு வகையில் எங்களுக்கு ஒரு தளத்தை தேடி தந்திருக்கும்.



கைது செய்து சிறைக்கு போவது என்பது அரசியலின் ஒரு அங்கம். எமது தலைவர்கள் கைதிகளாக இருக்க தயாரில்லை. அவர்கள் பணங்களையும் பண்டங்களையும் பேணவும் பாதுகாக்கவும் தான் தயாராக இருக்கிறார்கள். இந்த பின்னணியில் தமிழர்கள் தலைவர்களால் கைவிடப்பட்ட மக்களாக இருக்கிறார்கள். தமிழர்களை கை விட்டது வெளிநாடுகள் மட்டுமல்ல. தமிழ் தலைவர்களும் கை விட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கை மண்ணில் கை விடப்பட்ட மக்களாக இருக்கின்ற தமிழ் மக்களை வெளிநாடுகளும் கை விட்டு விடுகின்றன. இந்த ஒரு விடயத்தை கருத்தில் கொள்ளத் தவறக் கூடாது.



சில மாதங்களில் இந்த கொந்தளிப்பு அது பாரியளவில் இலங்கையினுடைய அரசியலை பெரிதாக குழப்பும். இன்று இருப்பது போல் இருக்காது. தற்செயலாக ஓரடி பின்னால் வைத்திருக்கும் சீனா ஈரடி முன்னால் வைக்க தான் போகிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஈழத்தமிழர்கள் போராடி தான் ஆவார்கள். அது இன்னொரு பக்கம் இருக்கட்டும். ஈழத்தமிழர்கள் போராட முந்தியது போல ஈழத்தமிழர்களை இனிமேலும் கொல்ல இயலாது. வரலாற்றின் வளர்ச்சி இடம் கொடுக்காது. ஆனால் கலவரங்கள் வரலாம். அரசு நேரடியாக கொல்லுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு விடயமாக இருக்கும் அது போராட்டத்தின் வெற்றியாக இருக்கும். எனவே இலங்கை அரசியலில் வரக் கூடிய காலங்களில் இன்று ஒரு சின்ன ஓய்வுநிலை ஏற்பட்டாலும் அது சிங்கள மக்களுக்கு தீர்வாக இருந்தாலும் அது தமிழ் மக்களுக்கு தீர்வாக இருக்க போவதில்லை.


தமிழ் மக்களும் தமிழ் தலைவர்களும் இந்த இடத்தில் வரலாற்று வாய்ப்பை கைவிட்டு விட்டார்கள். தனிப்பட்டவர்களை குறை சொல்லுவதோ குற்றம் சொல்லுவதோ இங்கு நோக்கம் இல்லை. அறிஞர்கள் கூட நிலைமைகளை சரியாக இனங்கண்டு தமிழ் மக்களுக்கு வழிகாட்ட தவறி விட்டார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சிங்கள இன வாத அரசை பாதுகாக்கும் பணியை தான் தமிழ் அரசியல் தலைவர்கள் பெருமளவில் செய்கிறார்கள். தமிழ் மக்களை அவர்கள் கைவிட்டு இருக்கிறார்கள். இந்த போராட்டத்தை முன்னெடுக்க தவறி உள்ளார்கள். இதனால் வரக்கூடிய சோகமான விடயம் ஒன்று நான்கு ஐந்து வருடங்களின் பின்னர் கொடூரமான பக்கங்கள் வரும். ஈழத்தமிழர்களுடைய பிரச்சனை தீர்க்கபடாத வகையில் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கின்ற இந்த காசு இலங்கையின் பொருளாதாரத்தை ஒரு போதும் தூக்கி நிறுத்த மாட்டாது. அது மீண்டும் கிளம்பும். எனவே கொந்தளிப்புக்கான ஒரு வாய்ப்பை மீண்டும் இந்த அரசியல் ஏற்படுத்தும். இலங்கையில் தீர்க்கப்படாத பிரச்சனையின் பின்னணியில் இலங்கை தீவு இரண்டாக உடைவது இறுதியிலும் இறுதியான தீர்வாக போகும்.

 

இலங்கை தீவு இரண்டாக உடைவதற்கு உரிய போக்கை இந்த நெருக்கடி சற்று தாமதப்படுத்தி இருந்தாலும் அதை முடித்து வைக்க மாட்டார்கள். இந்த நெருக்கடியிலிருந்து அது அடுத்த கட்டமாக அது வெடித்து வெளியேறி வரும். இலங்கையின் பிரச்சனைக்கு தீர்வு எந்தவொரு அரசாலும் ஒருபோதும் காண முடியாது. அது நாடு இரண்டாக உடைவது என்பதின் மூலம் மட்டும் தான் இலங்கைக்கு தீர்வு வரும். அது தான் இந்த பிராந்தியத்தில் சமாதானத்தை கொண்டு வரும். உடையும் என்பது என்னுடைய உளவியல் ரீதியான முடிவு கிடையாது அறிவியல் ரீதியான முடிவை தான் சொல்கிறேன். நாம் இலங்கையில் ஒன்றுப்பட்ட மக்களாக இருப்பது எனக்கு மிகுந்த விருப்பம் ஆனால் அதற்கு இடமில்லை எனும் போது நாங்கள் எப்படி ஒன்றுப்பட முடியும்? அந்தவகையில் இலங்கை இரண்டாக உடைவதற்கான ஒரு வரலாற்று போக்கை இன்றைய சின்ன தீர்வு ஏற்படுத்த போவதில்லை. மாறாக இது அடுத்த கட்டத்திற்கு போகும் என்பதையே உய்த்துணரக் கூடியதாக இருக்கிறது.

நிமிர்வு இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை.

https://www.nimirvu.org/2022/08/02.html









ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

"கொழும்புக் கொந்தளிப்பும் ஈழத்தமிழரும் கற்பனையும் யதார்த்தமும் கொள்கை ஆய்வு" - உரை. பாகம் 1.

 ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களால் 24.04.2022  அன்று நடாத்தப்பட்ட "
கொழும்புக் கொந்தளிப்பும் ஈழத்தமிழரும், கற்பனையும் யதார்த்தமும், கொள்கை ஆய்வு" என்கிற உரையாடல் வகுப்பின் முதல் பகுதி இங்கே பிரசுரமாகிறது. (நிமிர்வு இணையதளத்தில் வெளிவந்த கட்டுரை)




24.04.2022

இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி சில மாதங்களில் தீர்ந்து போகலாம். அப்போது சிங்கள மக்களின் பிரச்சினையும் தீர்ந்து போய்விடும். பாணும், பருப்பும், எரிவாயுவும் சந்தைக்கு வந்துவிடும் அப்போது பிரச்சினைகள் அவர்களின் பக்கத்தில் தீர்ந்துவிடும். அவர்களுடைய வாழ்வில் அரசியல் பொருளாதாரப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வும் ஏற்பட்டு போய்விட முடியும். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஏற்படுத்தப்பட்ட  சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்படப் போவது இல்லை. தமிழ் மக்களின் மண்ணில் கட்டப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட விகாரைகள் இல்லாமல் போகப் போவதில்லை. இராணுவம் திரும்ப பெறப்படப் போவதில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகள் எதுவும் தீரப் போவதில்லை.

இந்த பொருளாதார நெருக்கடியில் சிங்கள மக்கள் சில மாதங்களுக்குள் விடுதலை அடைவார்கள். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் நிரந்தரமாக வளரப் போகின்றன. தமிழ் மக்கள் தொடர்ந்து கட்டப்பட்ட விகாரைகளுக்குள்ளும், நிர்மாணிக்கப்பட்ட சிங்கள குடியேற்றங்களுக்குள்ளும், இராணுவ மயமாக்கப்பட்ட வாழ்க்கைக்குள்ளும் தான் இருப்பார்கள். இது தொடர்பாக தமிழ் தலைவர்களுக்கும், அறிஞர்களுக்கும் ஒரு கொள்கை ரீதியிலான சரியான பார்வை அவசியம்.

முதலாவதாக, அரசியலை வெறுமனே உள்நாட்டு பரிணாமத்தில் ஒருபோதும் பார்க்கக் கூடாது.   உண்மையில் அது உலகளாவிய கண்ணோட்டத்தோடும் சர்வதேச பார்வையோடும் உள்நாட்டு தேசிய நகர்வோடும் உள்நாட்டில் காணப்படுகின்ற கசப்பான கள யதார்த்தத்துடனும் இணைத்து அதனை பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கப்படாத எந்த ஒரு பார்வையுமே தவறானது. 

முதலாவதாக கருத்தில் கொள்ளவேண்டிய விடயம், இது வெளிநாடுகளின் பொருளாதாரத்தோடு இணைக்கப்பட்ட பிரச்சினை அல்ல. இது உள்நாட்டில் உருவாகி இருக்கின்ற ஒரு பொருளாதார பிரச்சினை. ஒரு தரகு வர்த்தகத்தை பிரதானமாக கொண்டிருக்கக்கூடிய இலங்கையில் இலகுவாக வெளிநாட்டு பணத்தோடு பிரச்சினை தீர்க்கப்பட முடியும். இந்தியா,  சீனா, ஜப்பான், அமெரிக்கா இந்த நான்கு நாடுகளும் இலங்கைக்கு பண உதவி செய்வதாக முன்வந்துள்ளனர். கூடவே உலக வங்கி,  சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பண உதவி செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தும் வெளிநாட்டு ரீதியிலானவை. இத்தகைய வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப் பெற்றதும் இலங்கை தன்னை தூக்கி நிறுத்தி விடும். ஆனால் வீழ்ந்த தமிழர்கள் மேலும் மிதிக்கப்படும் நிலையே இருக்கும். இங்கு வெளிநாட்டு ரீதியிலான பரிமாணத்தில் இந்த பிரச்சினை தீர்க்கப்பட போகின்றது.

இலங்கை பிரச்சினையை சர்வதேச மற்றும் உலகளாவிய கண்ணோட்டம் இரண்டிலும் வைத்து பார்க்க வேண்டும். நான் சர்வதேசம் என்றும் உலகளாவிய கண்ணோட்டம் என்றும் இரண்டாக சொற்களை பிரித்து பயன்படுத்துகின்றேன். இந்த வகையில் இன்றைய பிரச்சினையை உள்நாட்டு பரிமாணத்திலும் சர்வதேச பரிமாணத்திலும் அதை கடந்து உலகளாவிய கண்ணோட்டத்திலும் மூன்று படிக்கட்டுகளாக நாம் ஆராய வேண்டும். முதலாவதாக உலகளாவிய கண்ணோட்டத்தை எடுக்கும் போது அமெரிக்கா என்ற ஒரு நாட்டிற்கு அமெரிக்காவினுடைய கண்ணோட்டத்தில் நின்று பார்த்தால் அமெரிக்கா என்பது உலகம். அமெரிக்காவிற்கு முழு உலகமும் அதனுடைய உலக கண்ணோட்டத்திற்கு உரியது. அப்படியே சீனா என்ற ஒரு நாட்டிற்கு முழு உலகமும் சீனாதான். சீனாவிற்கு முழு உலகமும் அதனுடைய  கண்ணோட்டத்திற்கு உரியது.` இதனை தத்துவார்த்த அடிப்படையில் பார்ப்போம். 

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா செயல்படும் தளங்கள் , எல்லைகள்.
அரசியல் என்பது பொருளாதாரம் பற்றிய ஒரு வித்தை. அரசியல் என்பது பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி நிர்ணயிக்கின்ற ஒரு செயற்பாடு. அது ஒரு இயங்கும் தன்மை கொண்டது. எனவே அரசியல் என்பது பொருளாதாரத்தைப் பற்றிய வித்தை அது பொருளாதாரத்தை இயக்கும் ஒரு துறை.
இப்படி பார்க்கையில் அமெரிக்காவின் அரசியல் என்பது உலகளாவிய பொருளாதாரத்தை தன்வயப்படுத்துகின்ற தன்மயப்படுத்துகின்ற அரசியலை கொண்டது. எனவே அமெரிக்காவின் கண்ணோட்டத்தில் அவர்களுக்கு நாடு என்பது முழு உலகமும் தான். முழு உலக பொருளாதாரத்தையும் தன்மயப்படுத்துகின்ற ஒரு அரசியல் தான் அமெரிக்க அரசியல். அதனைத்தான் சீனாவும் இப்பொழுது கையெடுத்து இருக்கின்றது. உலகளாவிய பொருளாதாரத்தை தன்வயப்படுத்தி தமது நலனுக்கு உட்படுத்துகின்ற அரசியலை தான் சீனா செய்கின்றது. 

அதே வேளையில் மூன்றாவது பெரிய நாடான ரஷ்யாவை எடுத்துக்  கொண்டால், அதனுடைய உலகம் என்பது, முதலாவதாக கிழக்கு ஐரோப்பா, இரண்டாவதாக கருங்கடல் பிரதேசமும் மத்தியதரைக் கடல் பிரதேசமும், விளிம்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அதற்கு உலகமாக உள்ளது. இவ்வளவுதான் ரஷ்யாவினுடைய உலகம். 

நான்காவதாக இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் உலகம் என்பது அடிப்படையாக தென்னாசியப் பிராந்தியம் தான். அதனுடைய நீட்சியாக இந்தோ பசுபிக் பிராந்தியம் இருக்கின்றது. ஆனால் அதனுடைய அடித்தளம் இந்தியா என்று எடுத்தால் இந்தியாவினுடைய பிரதானமாக அரசியல் பொருளாதாரம் தென்னாசியாவை சார்ந்தது. இந்தியாவிற்கு தென்னாசியா தான் உலகம். 

அமெரிக்கா என்னும் தேசம் ஒரு ஜனாதிபதியை கொண்டிருக்கிறது. அது முழு தேசத்திற்கும் முழு உலகத்திற்குமான ஒரு தலைவராக ஜனாதிபதியை நியமித்திருக்கிறது. அமெரிக்காவைச் சார்ந்த முழு உலகத்திற்கும் ஆன ஒரு தலைவனாக ஜனாதிபதியை தெரிவு செய்து வைத்திருக்கிறது. அமெரிக்காவின் முதலாவது அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் தான்.

இந்தியாவிற்கு முதலாவது அமைச்சர் பிரதம மந்திரி, இரண்டாவது உள்நாட்டு அமைச்சர். இந்தியா எனும் நாட்டிற்கு முதலாவது அமைச்சர் உள் விவகார அமைச்சர். ஏனென்றால் இந்தியாவிற்கு சாதி பிரச்சனை, சமய பிரச்சனை, இனங்களின் பிரச்சனை, மாநிலங்களின் பிரச்சனை, உள்நாட்டு கல்வி அபிவிருத்தி, உள்நாட்டு சமூக வளர்ச்சி போன்ற பிரச்சினைகள். இவை அனைத்தையும் சேர்த்து உள்நாட்டு அமைச்சு இருக்கின்றது. இந்தியா என்ற தேசத்திற்கு ஒரு நாட்டிற்கு அதனுடைய பிரதான பிரச்சினையாக உள்நாட்டுப் பிரச்சினை தான் இருக்கிறது. எனவே இந்தியாவிற்கு உள்நாட்டு அமைச்சர் முக்கியமானது. 

அமெரிக்காவிற்கு வெளிநாட்டு அமைச்சர் முக்கியமானவர். ஏனென்றால் அமெரிக்கா உலகம் முழுவதிலுமுள்ள பொருளாதாரத்தை தன் வயப்படுத்த விரும்புகிறது. ஆகவே அமெரிக்காவின் முதலாவது அமைச்சர் வெளிநாட்டு அமைச்சர். இந்தியாவினுடைய அமைச்சரவையில் முதலாவது உள்துறை அமைச்சர், இரண்டாவது நிதியமைச்சர், மூன்றாவது பாதுகாப்பு அமைச்சர், நான்காவது தான் வெளிவிவகார அமைச்சர். இப்படி இந்த உலகில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றினதும் தனிப்பட்ட தன்மைகளுக்கேற்ப அவர்கள் வரையறுத்துக் கொண்ட உள்நாட்டு வளர்ச்சி நிலைக்குப் பொருத்தமாக அதனுடைய அமைச்சர்கள் நிர்வாக கட்டமைப்புக்கள் இருக்கும். அவர்களுடைய அரசியல் செயற்பாடுகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதற்கு அமைவாகவே நிகழும். 

இலங்கையில் முதலாவது பதவி ஜனாதிபதியின் உடையது. இரண்டாவது முக்கியமான பதவி பிரதமர் அல்ல. இரண்டாவது முக்கியமான அமைச்சர் பாதுகாப்பு அமைச்சர். பாதுகாப்பு அமைச்சருக்கு பின்தான் பிரதமர். பிரதமருக்கு பாதுகாப்பு அமைச்சு இலங்கையில் கொடுக்கப்பட மாட்டாது.  பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதிக்கு உரியது என வகுக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அந்த பாதுகாப்பு அமைச்சு இலங்கையில் உள்நாட்டில் இன ஒடுக்குமுறையை செய்வதற்கு தேவைப்படுகிறது. இனங்களை அழிப்பதற்கு தேவைப்படுகிறது. உள்நாட்டு யுத்தத்தை நடத்த தேவைப்படுகிறது. உள்நாட்டு அரச வன்முறைகளை  மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு பிரதானமாக இருக்கின்றது. 

இத்தகைய பின்னணியில் ஒவ்வொரு நாட்டினுடைய அமைச்சரவையும் அதன் உள்ளடக்கத்தோடு அமைக்கப்படுகின்றன. ஆகையால் ஒரு நாட்டை அதன் உள்நாட்டு பரிமாணத்திலும் அதன் சர்வதேச பரிமாணத்திலும் வைத்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையினுடைய இன்றைய பிரச்சினை பற்றி கோட்பாட்டு ரீதியாக, தத்துவரீதியாக, சித்தாந்த ரீதியாக இதுவரை சிங்கள புத்திஜீவிகள் இன்னும் வரையறுக்கவில்லை. இது ஒரு முக்கியமான விடயம். அவர்களுடைய பார்வைக்குள் ஈழத்தமிழ் மக்களை உள்ளடக்கிய வகையில் இந்த பிரச்சனைகளை அவர்கள் பார்க்கவில்லை.


இலங்கையின் இன்றைய பொருளாதார பிரச்சனை

அறிவியல் ரீதியில் நாங்கள் ஒரு விடயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆழ்ந்து அகன்ற பார்வை இருக்க வேண்டும். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சொல்கிறார். "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்று. ஆழ்ந்து அகன்ற பார்வை இருக்க வேண்டும்.   அவர் கூடவே சொல்கிறார் "பொய் ஆயின எல்லாம் போய் அகல” என்று. ஆழ்ந்து அகன்ற பார்வை இருந்தால் பொய்கள் எல்லாம் போய் அகன்று விடும். குறிப்பாக ஈழத் தமிழர்களாகிய நாம் அவ்வாறு ஆழ்ந்து அகன்று பார்க்க வேண்டிய முதலாவது பொறுப்பில் இருக்கிறோம். ஏனென்றால் எங்களுக்குத்தான் உயிர் பாதுகாப்பு, உடமை பாதுகாப்பு, உரிமை பாதுகாப்பு பற்றிய பிரச்சனை. 

இலங்கையினுடைய இன்றைய பொருளாதார பிரச்சனையை எல்லா நாடுகளும் சேர்ந்து தீர்த்து வைக்க போகின்றன. எங்களுடைய பிரச்சனையை ஒருவருமே தீர்ப்பாரில்லை. இந்த வகையில் இந்த பிரச்சினையை ஆழ்ந்து அகன்று நாங்கள் பார்க்க வேண்டும். குறிப்பாக அறிவியல் உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். அலை எழுகிறது, நீர்க்குமிழிகள் தோன்றுகின்றன, சாதாளைகள் அடிபடுகின்றன. நீர்க்குமிழி அறிவியல் எமக்கு வேண்டாம். சாதாளைகளை எண்ணி கணக்கெடுக்கும் சாதாரண அறிவியலும் எமக்கு வேண்டாம். மாறாக அலை எழுவது பற்றிய மூல அறிவு எமக்குத் தேவை. அதனுடைய கோட்பாட்டு உள்ளடக்கம் எமக்கு தேவை. அப்படித்தான் நாம் அரசியலை பார்க்க வேண்டும். 

நீர்ப்பரப்பின் மீது காற்று உராய்வை ஏற்படுத்துகிறது. அது அலையை தோற்றுவிக்கிறது. அந்த காற்று தொடர்ச்சியாக நீர்ப்பரப்பின் மீது உராய்வை ஏற்படுத்துவதனால் அலைகள் கும்பம் கும்பமாக குவியல்களாக அல்லது வரம்பு வரம்பாக எழுகின்றன. அவற்றில் நீர்க்குமிழிகள் தோன்றுகின்றன. ஒரு அலை நீர்க்குமிழியை கொண்டு வர இன்னொரு அலை நீர்க்குமிழியை அழித்து விட்டு போய் விடுகிறது. இந்த நீர்க்குமிழி அறிவியலை மட்டும் நாங்கள் பார்க்காமல் நாங்கள் அடிப்படையில் நீரையும் காற்றையும் காற்றுக்கும் நீருக்கும் இடையில் ஏற்படுகின்ற மோதலையும் அதன்பின் விளைவாய் தோன்றுகின்ற அலைகளையும் அதன் தொடர்ச்சியாக தோன்றுகின்ற அலைகள் மலை போன்று குவிந்து குவிந்து வருவதையும் ஒரு தொடர் அறிவியலுக்குள்ளால் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படித்தான் இலங்கையின் இன்றைய அரசியல் பொருளாதாரப் பிரச்சினையை நாங்கள் பார்க்க வேண்டும்.

முதலாவது உலகளாவிய அரசியல் கண்ணோட்டத்தில் நின்று இந்தப் பிரச்சனையை பார்ப்பதற்கு நாம் தயாராக வேண்டும். இரண்டாவது, இலங்கையில் ஏற்பட்டிருக்கக் கூடிய இன்றைய அரசியல் பொருளாதார பிரச்சினை வெறுமனே ஒரு இராஜபக்ச குடும்பத்தின் தவறுகளில் இருந்தோ  அவர்களுடைய ஊழல்களில் இருந்தோ தோன்றியது அல்ல. இது கடந்த முக்கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட இலங்கையின் பிழையான அரசியல் பொருளாதார கொள்கையில் இருந்து தோன்றியது. அதனால் தான் இதனை கொள்கை ஆய்வு என்று நான் வரையறை செய்து இருக்கிறேன். இந்தக் கொள்கை ஆய்வை இங்கே நாங்கள் திட்ட வட்டமான வரைபடங்களோடு செய்தாக வேண்டும். 

2005 ஆம் ஆண்டு ராஜபக்சக்களுக்கு சிங்களமக்கள் பெருந்தொகையாக ஆதரவளித்தார்கள். 2005ஆம் ஆண்டு இராணுவம் ஆதரவளித்தது. ஊடகங்கள் ஆதரவளித்தன. மகாசங்கம் ஆதரவளித்தது. அறிஞர்கள் ஆதரவளித்தார்கள். எதிர்க்கட்சிகள் ஆதரவளித்தன. வெளிநாடுகள் ஆதரவு அளித்தன. இப்படி அளிக்கப்பட்ட ஒன்று திரட்டப்பட்ட அனைவரது ஆதரவுடனும் யுத்தம் நடந்தது. யுத்தத்தின் மறுபக்கம் தானே இன்றைய பொருளாதார பிரச்சனை. எனவே இவ்வளவு பேரும் இந்த பொருளாதார பிரச்சினையில் பங்காளிகள். இன ஒடுக்குமுறையில் விளைந்த யுத்தத்தில் இவ்வளவு பேரும் தங்களுடைய பங்குகளை மறைப்பதற்கு இன ஒடுக்குமுறையை பற்றி பேச தவறுகிறார்கள். 

எனவே அனைவரினதும் பங்கும் இதில் இருக்கிறது. உள்நாட்டில் உள்ள அனைத்து சக்திகளினதும் பங்கு, உள்நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களினதும் பங்கு, மகா சங்கத்தின் பங்கு, இராணுவத்தின் பங்கு என அனைவரின் பங்கும் இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியும் யுத்தத்தை தெளிவாக  ஆதரித்தது. இப்படி இந்த யுத்தத்திலிருந்து ஒருவரையும் நீங்கள் விடுவித்து பார்க்க முடியாது.

இப்பொழுது ராஜபக்சவை ஊழல் காரணமாக அல்லது பொருளாதார பிரச்சினை காரணமாக வீட்டிற்கு போ என கூறும் அதே மக்கள் தான் ராஜபக்சவை ஆதரித்தார்கள். எனவே அனைத்து மக்களினதும் அனைத்து சக்திகளினதும் இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் திரட்சியினதும் வெளிப்பாடுதான் ராஜபக்சவே தவிர ராஜபக்ச வானத்தில் இருந்து குதித்த ஒரு புதினப் பொருள் கிடையாது. ஒரு புதினப் பொருளாக இதனை பார்ப்பதற்கு பதிலாக அரசியலின் ஒரு விளைபொருளாக நாங்கள் இதனை பார்க்க வேண்டும். 

கடந்த முக்கால் நூற்றாண்டுக்கு மேற்பட்ட அரசியலின் ஒரு  விளைபொருளாக பார்க்க வேண்டும். அதனை பார்ப்பதற்கு ஈழத்தமிழர்கள் நூறுவீதம் தவறுகிறார்கள். இப்போது இந்த அரசியலில் பங்கெடுக்காமல் இருப்பதன் மூலம் ஈழ தமிழ் மக்களுக்கு ஈழ தமிழ் வாழ் அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் அறிஞர்களும், நிச்சயமாக தீங்கு இழைக்கின்றார்கள். தவறு இழைக்கின்றார்கள் என்று வரலாறு எதிர்காலத்தில் சொல்லும்.

இலங்கையினுடைய அரசியல் கொள்கை என்பது அதன் பொருளாதார கொள்கை

இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனையோடு இணைத்து இந்தப் பொருளாதாரப் பிரச்சனையை பார்ப்பதற்கு ஏதுவாக நான் ஒரு விடயத்தை தொடங்கப் போகிறேன். அரசியல் என்பது பொருளாதாரம் பற்றிய ஒரு வித்தை. இதுதான் முதலாவது கோட்பாடு. பொருளாதாரம் எவ்வாறு இயங்கும் என்பதை நிர்ணயிக்கும் ஒரு இயக்க சக்திதான் அரசியல். இந்த அரசியல் தான் கொள்கை வகுக்கிறது. கொள்கைக்கு உட்பட்டே பொருளாதாரம் இயங்குகிறது, இராணுவம் இயங்குகிறது, பொலிஸ் இயங்குகிறது. இந்தக் கொள்கைக்கு உட்பட்டே அதிகாரிகள் இயங்குகிறார்கள், இந்தக் கொள்கைக்கு உட்பட்டே மக்கள் இயக்கப்படுகின்றார்கள். எனவே கொள்கை முதலாவது. இலங்கையினுடைய அரசியல் கொள்கை என்பது அதன் பொருளாதார கொள்கை இதை நாங்கள் முதலாவதாக கருத்தில் கொள்ள வேண்டும்.

இவற்றைப் புரிந்து கொள்வதற்கு உலகளாவிய அரசியல் பற்றிய அடிப்படை தெளிவாக தெரிய வேண்டிய ஒன்று. அதை நான் இப்போது இலங்கை பற்றி சொல்லிக் கொண்டு வந்து இறுதியாக உலகளாவிய அரசியலோடு இணைக்க போகின்றேன்.
இப்போது இலங்கை உள்நாட்டு அரசியலுக்கு வருவோம். சுதந்திரமடைந்த இலங்கையினுடைய அரசியலில் இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரத்தை நிர்ணயிக்கின்ற சக்திகளாக பலர் இருந்தார்கள். பல சக்திகள் இருந்தன. அறிஞர்கள், மத நிறுவனங்கள், கட்சிகள் இருந்தன. இதில் முதலாவது கட்சிகள் என்று எடுத்தால் ஐக்கிய தேசிய கட்சி இரண்டாவது ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி மூன்றாவது, பொதுஜன பெரமுன அடுத்தது லங்கா சமசமாஜ கட்சி இந்த நான்கு கட்சிகளும் இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரத்தை நிர்ணயித்த பிரதான காரணிகளாக இருந்தன. ஜே. வி. பி தோல்வியடைந்த ஒரு சக்தி. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி என்பவற்றின் அரசியல் பொருளாதாரம் பற்றி நான் பேசப் போவதில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமரான டி. எஸ். சேனநாயக்க, ஒற்றையாட்சியின் கீழ் விவசாயம், வறண்ட வலய குடியேற்றத்திட்டம், அந்நிய செலவாணியை பெறும் பெருந்தோட்ட பயிர்ச்செய்கை என்பவற்றைத் தான் இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரமாக திட்டமிட்டார்.

பின்னாளில் லீ குவான் யூ  ஜெயவர்த்தனவுக்கு கூறிய வசனம் பலருக்கும் தெரியும். அத்தோடு லீ குவான் யூ கூறிய இன்னுமொரு முக்கியமான வசனமும் இருக்கிறது. அது பல பேருக்கு தெரிந்திருக்காது.
ஈழ தமிழர்களுடைய மூளை சிங்கப்பூரையும் மலேசியாவையும் கட்டியெழுப்புவதில் பெரிதும் பயன்பட்டுள்ளது. அதனை நாங்கள் திறமையாக பயன்படுத்தி உள்ளோம். நீங்களும் அவர்களை பயன்படுத்தி இலங்கையை மேலும் உன்னதமான நிலைக்கு கொண்டு வர முடியாததை எண்ணி நான் கவலை அடைகிறேன். அதற்கு காரணம் உங்களின் இனம் சார்ந்த கொள்கை தான் என்று லீ குவான் யூ கூறி இருக்கிறார்.
இங்கு இனப் பிரச்சினை சார்ந்த கொள்கை இலங்கையை சிறப்பாக வடிவமைக்க முடியாமல் போனதற்கான காரணம் உணரப்படுகின்ற ஒரு இடத்தை காண்கின்றோம். ஈழ தமிழர்களின் மூளையை பற்றி புகழ்ச்சியாக நான் சொல்ல வரவே இல்லை. அதை நான் ஒரு பொருளாதார காரணியாக தான் சொல்ல வருகிறேன். 

உலகம் முதலாம் உலகமகா யுத்தத்தின் பின்பு ஒரு கைத்தொழில் மயமாக்கத்தை பற்றி அதிகம் உணரத் தொடங்கியது.  கொம்யூனிஸ்டுகள் உட்பட, ரஷ்யா உட்பட, லெனின் உட்பட கைத்தொழில் மயமாக்கத்தின் தேவையை, அவசியத்தை உணரத் தலைப்பட்டார்கள்.  விவசாயப் பொருளாதாரத்தில் இருந்து மேம்பட்டு கைத்தொழில் பொருளாதாரம் வர வேண்டும் என்கிற சிந்தனை முதலாம் உலகமகா யுத்தத்தின் பின்பு உலகளாவிய ரீதியில் விருத்தியடையத் தொடங்கியது. 

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்பு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட இலங்கை தீவு விவசாய பொருளாதார கொள்கையையும், பெருந்தோட்ட விவசாய கொள்கையையும், இறக்குமதி வர்த்தக பொருளாதாரத்தையுமே அடிப்படையாக கொண்டு வரையறுக்கப்பட்டது. அது கைத்தொழிலை அல்ல. தமிழின ஒடுக்குமுறையை மையமாக கொண்டு குடியேற்றத்தை அடிப்படையாக கொண்டு அமைந்தது. எனவே அதனுடைய  புற்றுநோய் அங்கே உற்பத்தியாகியது. ஒன்று பொருளாதார கொள்கை அதை நிறைவேற்றுவதற்கான அரசியல் கொள்கை. சிங்கள குடியேற்றங்களை தமிழ் மண்ணில் ஸ்தாபிப்பது என்ற பொருளாதார கொள்கையே பிழையானது. 

இந்த காலகட்டத்தில் இலங்கையில் சரியான பொருளாதார கொள்கையை முன்வைத்த ஒரே ஒரு பகுதி இருக்கிறது. அது லங்கா சமசமாஜ கட்சி மட்டும் தான். அது மொஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி கூட இல்லை. லங்கா சமசமாஜ கட்சி ட்ரொஸ்கியினுடைய வாரிசுகள்.  ட்ரொஸ்கி  கைத்தொழிலின் ஊடாக உலகளாவிய ரீதியாக வளர வேண்டும் என்ற கோட்பாட்டை கொண்டிருந்தார். எனவே லங்கா சபசமாஜ கட்சி கைதொழிலை இலங்கையில் பிரதானமாக உருவாக்க வேண்டும் என்றும் குடியேற்றம் இலங்கையில் விவசாயத்தை அபிவிருத்தி செய்ய உதவாது என்றும் சொன்னார்கள். சிங்கள குடியேற்றத்தை இனப்பிரச்சினையின் கண்ணோட்டத்தில் அவர்கள் பார்க்கவில்லை.  ஆனால் சிங்கள குடியேற்றத்தை அது பொருளாதார விருத்திக்கு உதவாது என்ற அடிப்படையில் தான் நிராகரித்தார்கள். இன அடிப்படையில் அல்ல. இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் மட்டும் தான் இலங்கையின் சரியான பொருளாதார கொள்கையை பற்றிய கோட்பாட்டு ரீதியான கருத்தை கொண்டு இருந்தார்கள். பின்னர் 70 களில் அவர்கள் பல தவறுகளை செய்தார்கள் என்பது வேறு விடயம். 

இந்த விவசாய பொருளாதார கொள்கை மிக மோசமான பிரச்சனையாக இருக்கிறது. டி. எஸ். சேனநாயக்கா மலையக மக்களினுடைய வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறித்தார். 1947ஆம் ஆண்டு இலங்கையினுடைய மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈழ தமிழர்களின் மொத்த சனத்தொகையை விடவும் மலையக தமிழரின் சனத்தொகை அதிகமானது. இது பற்றி யாரும் பேசுவதில்லை. வசதியாக எல்லோரும் கை விட்டு செல்கின்றார்கள். ஈழ தமிழர்கள் இலங்கையினுடைய இரண்டாவது பெரிய இனம் என்று சொல்லுகிறோம்.  ஆனால் ஈழ தமிழர்களின் சனத்தொகையின் அளவை விடவும் மலையக தமிழர்களின் சனத்தொகை 47ஆம் ஆண்டு புள்ளி விபரத்தில் அதிகமானது. இந்த மலையக தமிழருடைய குடியுரிமை வாக்குரிமை பறிக்கப்படுகிறது. நாடற்றவர்களாக வைத்திருக்கப்படுகிறார்கள். நாட்டில் உரிமை அற்று  தோட்ட தொழிலாளர்களாக வாழ்கிறார்கள். இந்த கட்டத்தில் மலையக தொழிலாளர்களுடைய கண்ணீரிலும் இரத்தத்திலும் விளைந்த பணம் தான் இலங்கைக்கான அந்நிய செலவாணியை பெற்றுக் கொடுத்தது. இலங்கையரின் விவசாயம் அல்ல.

கடலை ஆதாரமாக கொண்ட பொருளாதாரம் தொடர்பில் இலங்கை ஒருநாளும் யோசிக்கவில்லை. சோகம் என்னவென்றால், ஒரு தீவான இலங்கை வெளிநாடுகளிலிருந்து தகரங்களில் அடைக்கப்பட்ட மீனை இறக்குமதி செய்கிறது. அவர்கள் மீனை மையமாக கொண்ட கைத்தொழிலுக்கு போயிருக்க வேண்டும். விவசாயத்தை மையமான கைத்தொழிலுக்கு போயிருக்க வேண்டும். மீன்களை தகரங்களில் அடைப்பது, விவசாய உற்பத்திகளை பதப்படுத்துவது போன்ற கைதொழில்களை உருவாக்கி இருக்க வேண்டும். முதலாவது விவசாய கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமும் அதனை பின்பற்றி வந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கமும் ஒரே கொள்கையை தான் கொண்டு இருந்தன. தோட்ட தொழிலாளிகளுடைய உழைப்பில் இருந்து தான் இலங்கைக்கு அந்நிய செலவாணி வந்து கொண்டு இருந்தது. அந்த பணம் இலங்கையின் அரசியலில் இரண்டு விதங்களில் பயன்பட்டது. அதனை அரசியல் ரீதியாக சமூகவியல் ரீதியாக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 


முதலாவது அந்த பணத்திலிருந்து தான் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு தேவையான எண்பது வீதமான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதே போல அந்த பணத்திலிருந்து தான் இலங்கையின் பொதுச்சேவை தொழில் செய்யப்பட்டது. இலங்கை ஒரு பொதுச்சேவை தொழில் நாடு. இலங்கையில் இருக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளும் சரி, கல்வி வசதிகளும் சரி, மருத்துவ வசதி போன்ற பொதுச்சேவைகள் எல்லாம் இந்த தோட்ட தொழிலாளிகளினுடைய உழைப்பில் இருந்து தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கல்வியும் பொதுச்சேவையோடு சம்பந்தப்படுகிறது. அந்த கல்வியும் சேவை தொழிலுக்கான கல்வி ஆகிறது. ஒரு உற்பத்திக்கான கல்வி அல்ல. சமூக விருத்திக்கான கல்வி அல்ல. எனவே விவசாய கொள்கை பிழை, இறக்குமதி பொருளாதார கொள்கை பிழை, நாட்டிற்கு வருமானத்தை தேடி கொடுத்த மக்களுக்கு குடியுரிமை இல்லை, வாக்கு உரிமை இல்லை, இருப்பதற்கு வீடு இல்லை, நாடும் இல்லை. இந்த அடித்தளத்தில் தான் இலங்கையின் பொருளாதாரம் கட்டி எழுப்பபட்டது. இது ஒரு பக்கம்.


இரண்டாவது சீமெந்து தொழிற்சாலையை காங்கேசன்துறையில் அமைத்தார்கள். இந்த தொழிற்சாலையிலிருந்து எடுக்கப்பட்ட சீமெந்து இலங்கையின் தென்பகுதியில் கோபுரங்களுக்கு உதவின. வடக்கு சுண்ணக்கல்  குடாநாடு அதல பாதாளமானது. அங்கே அவர்கள் தங்களுடைய தொடர் மாடி கட்டிடங்களையும் நீர்த்தேக்கங்களையும் மதகுகளையும் இங்கிருந்து வந்த வளத்தில் இருந்து கட்டினார்கள். ஏன் சொல்கிறேன் என்றால் மலையக மக்களினுடைய உழைப்பின் இரத்தமும் வடக்கினுடைய சீமெந்தும் வடக்கு கிழக்கில் இருந்த மூல வளங்களும் தான் இலங்கையினுடைய பொருளாதாரத்திற்கு உதவின. 

இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசம் எப்பொழுதும் நெல்லில் தன்னிறைவு, மீனில் தன்னிறைவு, கால்நடையில் தன்னிறைவு என்று இருந்தது. இன்று வரை கிழக்கு மாகாணத்தில் போதிய கால்நடை உண்டு. போதிய பால் உண்டு. கிழக்கு மாகாணம், குறிப்பாக அம்பாறை உணவு களஞ்சியமாக விளங்குகிறது. வடக்கு கொக்கிளாய் கொக்குதொடுவாய் அந்த பகுதிகளிலிருந்து இந்த பக்கம் மன்னார் பருத்தித்துறையான பேதுரு மேடை,கண்ட மேடை, வோட்ச் கண்ட மேடை என எல்லாம் மீன் வளங்கள் நிறைந்த இடங்கள். இங்கிருந்து தெற்கிற்கு மீன் இறால் எல்லாம் போயின. ஏன் யுத்த காலத்தில் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் மன்னாருக்குள்ளால் தெற்கிற்கு இறால், மீன், கடலட்டை போன்ற பொருட்கள்  சென்றடைந்தன. அந்தளவுக்கு யுத்த காலத்தில் கூட நெல்லையும் கடல் உணவுகளையும் தெற்கிற்கு வழங்கியது. இப்படி நிலமை இருக்கிறது. ஆனால் இந்த வடக்கு கிழக்கு மக்கள் கை விடப்பட்டிருக்கிறார்கள். இந்த மக்களினுடைய வாழ்வு ஒடுக்கு முறைக்கு உள்ளாகி இருக்கிறது. இதனை பற்றி சிந்திக்க சிங்கள புத்திஜீவிகளும் யாரும் தயாரில்லை. 


பின்னர் S.W.R.D. பண்டாரநாயக்கா 56 ஆம் ஆண்டு வரும் போது பஞ்சமகா வலவேகு எனும் கோட்பாட்டை கொண்டு வந்தார். பஞ்சமகா வலவேகு என்றால் என்ன, முதலாவது மகாசங்கம் (பிக்குகள்), இரண்டாவது உள்நாட்டு வைத்தியர்கள், மூன்றாவது கல்வி (உள்ளூர் ஆசிரியர்கள்), நான்காவது விவசாயம், ஐந்தாவது கைத்தொழில். கைத்தொழிலில் பண்டாரநாயக்கா காலத்தில் எதுவுமே நிகழவில்லை. மற்ற நான்கை சொன்னாலும் இந்த நான்கிலும் பண்டாரநாயக்கா தோல்வி அடைந்தார். அதாவது, முதலாவதாக எதனை நிறுத்தினாரோ, எந்த பிக்குக்களை முதலாவதாக நிறுத்தினாரோ அந்த பிக்குக்களாலேயே அவர் கொல்லப்பட்டார். முழு அளவில் இன பிரச்சினையை அடிப்படையாக வைத்து கொண்டு பிழையான பொருளாதார கொள்கையையும் இன ஒடுக்கு முறையை தெளிவாக செய்கின்ற ஓர் அரசியலைத் தான் UNP யும் SLFP  யும் முன்னெடுத்தன. எனவே இவர்கள் இரண்டு பேரினுடைய அரசியலும் தோல்வியில் முடிவடைந்தன.


பின்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா சில கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து உள்நாட்டு பொருளாதாரம் பற்றிய கொள்கையில் பயணித்தார்கள். அதில் அவர்கள் கைத்தொழில் பற்றி பேசினார்கள். என். எம்  பெரேரா பொருளாதாரத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர். அவர் ட்ரொஸ்கியவாத அடிப்படையில் கைத்தொழில் பற்றிய சிந்தனையை கொண்டிருந்தவர். ஆனால் வெறும் கை முழமிடாது. அவருடைய காலத்தில் அவர் சொன்ன கைத்தொழிலுக்கு தேவையான மூலதனம், முதலீடு, தொழினுட்பம் இந்த மூன்றும் கிடையாது. அங்கு என். எம்  பெரேராவினுடைய அரசியல் பொருளாதாரம் முழு அளவில் தோல்வி அடைந்தது. அதனால் அவர்கள் முழு அளவில் அரசியலில் இருந்து நிராகரிக்கப்பட்டார்கள். ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவும் அன்றோடு அரசியலில் இருந்து அகற்றப்பட்டு விட்டார். இங்கு தொடர்ச்சியாக சிங்கள அரசியலில் அரசியல் பொருளாதாரம் என்பது விவசாயத்தை அடிப்படையாக கொண்டே இயங்கி கொண்டு வருவதை நீங்கள் காண கூடும்.


இப்போது அடுத்த கட்டத்திற்கு போவோம். இந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து தான் இன்று பொதுஜன பெரமுன எழுந்து இருக்கிறது. அதன் புத்தி ஜீவிகள் அமைப்பு என அதிகாரிகள் இணைந்த அமைப்பாகவும் சொல்லப்படுகின்றது வியத்மக. இது பண்டார நாயக்காவினுடைய பஞ்சபலவேகய கொள்கையினுடைய நீட்சி தான். அங்கு உருவாகிய இன வாத கோட்பாட்டை கொண்ட சிந்தனையாளர்களினுடைய நீட்சி தான் இது. எனவே இவர்களுக்கு இனவாதத்திற்கு வெளியே இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தை சிந்திக்க தெரியாது. இவர்களுக்கு மூடப்பட்ட பொருளாதாரத்திற்கு வெளியே அரசியலை சிந்திக்க தெரியாது. எனவே இலங்கையில் ஒன்று, மூடப்பட்ட பொருளாதாரம், இரண்டு, இனவாத பொருளாதாரம். இந்த இரண்டும் கைத்தொழில் மயமற்ற பொருளாதாரங்கள். மூன்று, அதற்கான அரசியல், நான்கு, நடைமுறை. இவை அனைத்தும் சேர்ந்து இலங்கையின் அரசியலை எப்பொழுதுமே புற்றுநோய் உடையதாக வைத்திருக்கின்றன.


இந்த பின்னணியில் வியத்மக இனவாதத்திற்கு தான் சேவை செய்யும். நாட்டின் அபிவிருத்திக்கு சேவை செய்யாது. இப்பொழுது தெருவில் நின்று சத்தம் போடுகின்ற இந்த போராளிகள், இந்த கிளர்ச்சியாளர்கள் எல்லோரும் நாளைக்கு பாணும், பருப்பும், எரிவாயுவும் வந்தவுடன் வீட்டிற்கு போய் விடுவார்கள். அவர்கள் அதை விட வேறுமாதிரி நினைப்பார்கள் என யாரும் சிந்திப்பது தப்பு. அவர்கள் பழக்கப்பட்ட முறை வேறு. இப்பொழுது தெருவில் குரல் எழுப்புவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆயினும் அது நீடிக்காது. இது ஒரு அடுத்த கட்ட பிரச்சினை.


அப்படி என்றால் இப்போது இலங்கை பிரச்சினை என்ன? இங்கே நாங்கள் தெளிவாக பார்க்க வேண்டிய ஒரு மிகப் பெரிய விம்பம் இருக்கிறது. இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரம் கைத்தொழில் மயமாக்கத்தோடு சம்பந்தப்படாமல் உருவாக்கப்பட முடியாது. மீன்பிடி கடல் வள அபிவிருத்தியோடு சம்பந்தப்படாமல் உருவாக்க முடியாது. விவசாயத்தை நவீனமயப்படுத்தி விவசாய அடிப்படையிலான கைத்தொழிலை உருவாக்காமல் உருவாக முடியாது. எனவே இலங்கையினுடைய அரசியல் பொருளாதாரம் பற்றிய ஒரு புதிய பார்வை வேண்டும். இது பொருளாதார பிரச்சனை. இதனை செய்வதற்கு இனப்பிரச்சினை பற்றிய விடயத்தை முதலில் தீர்த்தாக வேண்டும்.


இலங்கையின் ஜனநாயகம் பற்றி பார்ப்போம். டொனமூர் அரசியல் யாப்பின் ஊடாக 1931ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்குமான வாக்குரிமை வழங்க பட்டது. இது ஒரு ஜனநாயகத்திற்கு கிடைத்த பெரு வெற்றி. பிரித்தானியாவில் 26ஆம் ஆண்டு தான் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. சகல பெண்களுக்குமே 26 ஆம் ஆண்டில் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் இலங்கைக்கு 31ஆம் ஆண்டு வாக்குரிமை வழங்கப்பட்டது.  இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்த டொனமூர் அரசியல் யாப்பு என்ன செய்ததென்றால் வாக்குரிமையை இலங்கைக்கு வழங்கி இலங்கையின் ஜனநாயகத்தை விழுங்கி விட்டது. அது ஜனநாயகத்தை விழுங்க கூடியவாறு வடிவமைக்கப்பட்டு விட்டது. இனங்களுக்கு இடையிலான உரிமைகளை ஜனநாயக ரீதியாக தீர்ப்பதற்கான அதனுடைய மண் சார்ந்த பிரதேசம் சார்ந்த ஒரு தீர்வை முன் வைத்திருந்தால் டொனமூர் அரசியல் யாப்பில்  வாக்குரிமை பயனளித்திருக்கும். மாறாக அது  74 வீதமான சிங்கள பௌத்தர்களின் கையில் அரசியல் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டது. இதன் மூலம் இலங்கையில் ஜனநாயகம் எனும் உன்னதமான விடயத்திற்கு பதிலாக இன நாயகம் தோன்றியது. எனவே இலங்கையின் வரலாறு இனநாயகத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.


இந்த இன நாயகத்தின் அடிப்படையில் அரசியல் யாப்பு உருவாக்குவதற்கும் சிங்கள தலைவர்கள் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் ஒரு பின்னணி இருந்தது. அது இந்திய எதிர்ப்பு வாதம். மகாத்மாகாந்தியை 1927ஆம் ஆண்டு யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் வரவேற்றது. இந்திய விடுதலைப் போராட்டத்தை ஈழ தமிழர்கள் இலங்கைக்கு கொண்டு வந்து விட போகிறார்கள் என்ற வெள்ளையர்கள் பார்த்தார்கள். இதன் மூலம் இலங்கையை எதிர்காலத்தில் பிரித்தானியா இழக்க வேண்டி வரப்போகிறது. இந்திய தேச விடுதலை போராட்டம் இலங்கை வரை விஸ்தரித்தால் இந்தியாவின் பகுதியான இலங்கை போன பின்பு இலங்கையில் ஒரு நாளும் தளம் அமைக்க முடியாது. இந்துமா கடலில் இலங்கையை ஒரு நாளும் தமது தேவைக்கு பயன்படுத்த முடியாது என்ற அச்சத்தின் காரணமாகத் தான் டொனமூர் அரசியற் குழுவினர் சிங்கள மக்களுக்கு அரசியல் அதிகாரத்தைக் கொடுத்து, அனைவருக்குமான வாக்குரிமையை வழங்கினர். 74 வீதமான மக்களின் கைகளில் அரசியல் அதிகாரம் போனது. அதை சிங்கள தலைவர்கள் மகிழ்ச்சிச்சியுடன் வரவேற்றார்கள். அன்றிருந்த தமிழ் தலைவர்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை.


இந்த அரசியல் யாப்பினுடைய மாபெரும் தவறுகளில் இருந்து தான் இலங்கையினுடைய இன்றைய அரசியற் கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது. நாடாளுமன்ற முறை, தேர்தல் முறை, கெபினட் முறை அதன் பின்பு புதிது புதிதாக ஜனாதிபதி முறை எல்லாம் இந்த கட்டமைப்பில் இருந்து தான். எனவே இலங்கை முழுக்க முழுக்க இனவாத அடிப்படையிலேயே அரசியல் யாப்பு உருவாகிய ஒரு நாடு. இப்போது இலங்கையில் ஒரு விடயத்தை தெளிவாக பார்க்கலாம். இராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்பது மகா சங்கத்தின் தெளிவான முடிவு. இராஜபக்ச குடும்பம் தவறு செய்கிறது என்பது யாவருக்கும் தெரியும். அது ஊழல் நிறைந்தது என்பதும் யாவருக்கும் சந்தேகமின்றி தெரியும். அவர்கள் தேசபக்தர்கள் இல்லை அவர்கள் குடும்ப பக்தர்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர்களை விட்டால் இந்திய எதிர்ப்புக்கும் தமிழின அழிப்புக்கும்  பொருத்தமானவர் இலங்கையில் கிடையாது. வரக்கூடிய எந்த மாற்று சக்திகளாலும் இந்திய எதிர்ப்பு தமிழின அழிப்பு என்ற அடிப்படையில் ஒரு தெளிவான உறுதியான தலைமைத்துவத்தை உருவாக்க முடியாது. 


எனவே இராஜபக்ச குடும்பத்தை அகற்றுவதற்கு அவர்கள் விரும்பவில்லை. அந்த நிலையில் தான் அமெரிக்கா விரும்பிய 19வது சீர்திருத்த சட்டத்தை மீளக் கொண்டு வந்து வெளிநாட்டு நிதிகளை பெற்று இராஜபக்சக்களை காப்பாற்றி இலங்கையை இன்றைய நெருக்கடியிலிருந்து மீட்க வேண்டுமென்பது மகா சங்கத்தின் முடிவு. மகாசங்கம் தெளிவாக யோசித்திருக்கிறது. ஒருவகையில் 20 ஆவது திருத்தத்தை நீக்கினால் சிங்கள மக்களை திருப்தி படுத்தலாம். 19வது ஜே. வி. பி கொண்டு வந்தது, ரணில் சிறிசேனா கொண்டு வந்தது. அதை மீளக் கொண்டு வந்து விட்டால் ஒரு மாற்றத்தை கொண்டு வரலாம். ஆனால் கோத்தாபய ராஜாபக்ச பதவியில் இருப்பதற்கு தான் அந்த செயற்பாடு. இந்த ஏற்பாட்டின் கீழ் அவர்கள் 19வது சீர்திருத்தத்தை பற்றி சொல்கிறார்கள். அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று சொல்கிறார்கள். அதனை 21வது சட்ட திருத்தமாக கொண்டு வருவோம் என்று சொல்கிறார்கள்.


இதைவிட இன்னொன்றும் முக்கியம் இலங்கையினுடைய அரசியல் யாப்பு கமிஷன் தலைவராக இருந்த ரொமேஷ் டி. சில்வா 44 A என்கின்ற உள்ளீடை கொண்டு வர வேண்டுமென்று சொல்லி இருந்தார். அரசியல் யாப்பிலே 44வது சரத்திற்கு மாற்றம் கொண்டு வருவோம் என்று சொல்லி இருந்தார். பொருளாதாரப் பிரச்சினைக்கு அரசியல் யாப்பில் ஒரு மாற்றம் கொண்டு வந்து நாடாளுமன்றில் நான்கில் மூன்று பெரும்பான்மை வாக்குக்களோடு 44A கொண்டு வருவோம் என்று சொன்ன அந்த அரசியல் யாப்பின் நிபுணர் குழுவின் தலைவர் தமிழரது பிரச்சினைக்கும் சமஸ்டி ரீதியிலான தீர்வை கொண்டு வந்து அதையும் ஒரு சரத்தாக இணைப்போம் என்று சொல்லவில்லை. இந்த சரத்தை கொண்டு வரலாம் என்றால் அந்த சரத்தை ஏன் கொண்டு வர முடியாது? அவர்கள் தமிழருக்கு உரிமைகள் வழங்குவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இன்று குறைந்தபட்சம் சமஸ்டியை மூன்று கட்சிகள் கேட்கின்றன. “நான் சமஸ்டியை உள்ளடக்கவில்லை. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கட்சிகளும் அதை சொல்கின்றன. அந்த ஜனநாயக ரீதியிலான மக்களின் நடவடிக்கை எதிர்ப்பதற்கு நான் யார்? ஆகவே அதனை உள்ளடக்குகிறேன்.” என்று சொல்லி ஒரு தீர்வை முன்வைக்கலாம் தானே. 


ஆனால், இந்த பாண், அரிசி, பருப்பு, சமையல் எரிவாயு பிரச்சனையை தீர்ப்பதற்கு இன்றைய அரசியல் யாப்பிற்கு சீர்திருத்தத்தை செய்வதற்கு மகா சங்கம் ஓடி வருகிறது. சங்க கட்டளை பிறப்பிப்பேன் என்று கூட சொல்கிறது. சங்க கட்டளை என்பது பலருக்கு தெரிந்திருக்காது. அது மோசமான ஒரு விடயம்.  சங்கம் என்பது பிக்குகளை அதாவது பௌத்த துறவிகளை சங்கம் என்று சொல்வது. சங்கத்தோடு சேர்ந்து அவர்கள் பௌத்த சாசனத்தின் அடிப்படையில் கட்டளை பிறப்பிப்பார்கள். அந்த கட்டளை இறுதியிலும் இறுதியானது. அதை யாரும் கேலிக்குள்ளாக்க முடியாது. எனவே சங்க கட்டளையின் படி ஆட்சி இருக்கும். கோத்தாபய வீட்டிற்கு போக வேண்டும் என்று சங்கம் கட்டளை இட்டால் அது தான் நடக்கும். அது சட்டப்படி அல்ல, நடைமுறைப்படி. அப்படி சங்க கட்டளை பிறப்பிக்க போகிறோம் என்று சொல்கின்ற மகா சங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுக்கு சங்க கட்டளை பிறப்பிப்பதாக சொல்லலாம் தானே. சொல்ல மாட்டார்கள். 


https://www.nimirvu.org/2022/08/blog-post_23.html

சனி, 16 ஏப்ரல், 2022

இனப்படுகொலையின் மறுபக்கமே இன்றைய சிங்கள அரசியற் கொதிநிலை; இதில் தமிழரின் நிலையென்ன? அடுத்ததென்ன? பகுதி : 02

 ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களால் 10.04.2022  அன்று நடாத்தப்பட்ட "இனப்படுகொலையின் மறுபக்கமே இன்றைய சிங்கள அரசியற் கொதிநிலை; இதில் தமிழரின் நிலையென்ன, அடுத்ததென்ன?" என்கிற உரையாடல் வகுப்பின்  இறுதிப்பகுதி இங்கே பிரசுரமாகிறது.

10.04.2022.  பாகம் 2.

இப்போது பலரும் பலவாறு சொல்கின்றார்கள். இடைக்கால அரசாங்கம், தற்காலிக அரசாங்கம் அல்லது ஒரு செயற்பாட்டுக் குழு போட்டு பொருளாதார பிரச்சனைக்கான உடனடித் தீர்வு பற்றி பேசுகிறார்கள். தமிழ்த் தலைவர்கள் எல்லோருமே கதியற்றவர்களாக கையாலாகாதவர்களாய் மெளனிகளாய் இருக்கின்றார்கள்.

எந்தவிதமான விழிப்புமற்று அண்டைநாடு சர்வதேச அரசியல், ஈழத்தமிழர் அரசியல் சிங்களவர் அரசியல் இவற்றை இணைத்துப் பார்க்க எதுவுமே தெரியாதவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு தெரிந்திருந்தால் இதுவரை சொல்லியிருப்பார்களே. எதனையும் அவர்கள் சொல்லவில்லை.

இலங்கையின் இடைக்கால அரசு அமைக்கப்படுவதைப் பற்றி எல்லோரிடமும் கற்பனைகளுண்டு. ராஜபக்க்ஷக்களை வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்கின்ற குரல்கள் பெரிதாய் எழுந்திருக்கின்றன. இதில் இலங்கையின் அரசியல் கலாசாரத்தை பற்றி மறுபடியும் சொல்லலாம். 

இந்து வேதாந்தத்தில் துவைதம், அத்வைதம் என்ற இரண்டு சொற்பிரயோகங்கள் உண்டு. துவைதம் என்றால் இரண்டு. அத்வைதம் இரண்டு அல்ல. ஜீவாத்மாவும் பரமாத்வாவும் இரண்டு என சொல்கிறது துவைதம். ஜீவாத்மாவும் பரமாத்வாவும் இரண்டு அல்ல என்கிறது அத்வைதம். இது தான் இலங்கையின் இன்றைய அரசியல் நிலைமைக்கு பொருத்தமான சிறப்பான எடுகோள் ஆகும். இலங்கை அரசில் ஒரு ஜனாதிபதி இருப்பார் அவருக்கு கீழ் ஒரு இடைக்கால அரசாங்கம். இதனைப் பார்த்தால் இரண்டு  போன்று இருக்கும். ஆனால் ஜனாதிபதி அதிக அதிகாரம் உடையவர் என்பதால் இரண்டு அல்ல ஒன்று தான். ஜனாதிபதியின் அதிகாரம் கலைக்கப்படாதவிடத்து இங்கு ஏற்படுத்தப்படும் எந்த அரசாங்கமும் கோத்தாபயவினுடையதும் ராஜபக்சகளினுடையதும் மட்டுமே தான்.



யாராவது ராஜபக்சகளினை காப்பாற்றும் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவி அவர்களை காப்பாற்றி விட்டு வெளியே வரலாம். அவ்வளவு தான் நடக்கும். இடைக்கால அரசாங்கம் என்று சொல்லி வெளிநாடுகளில் கடன் பெறக்கூடிய சக்திகள் அரசில் பங்கெடுத்து ராஜபக்சகளை காப்பாற்றி விட்டு வெளியே வருவதற்கான ஒரு வாய்க்காலைத்தான் ராஜபக்சகளும் விரும்புகின்றார்கள். 

இலங்கையினுடைய புதிய அரசியல் யாப்பை பிரேரித்த நிபுணர் குழுவினுடைய தலைவர் ஒருவருடைய விடயம் பற்றி பார்க்கலாம். சஜித் பிரேமதாஸ கேட்டுக் கொண்டது, 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கி விட்டு 19 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் அதிகாரமற்ற ஜனாதிபதி வேண்டுமென்று. அப்படி இருந்தால் தான் பிரதமர் பதவியை பொறுப்பேற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்கத் தயாரென்று கூறினார். ஆனால் அரசியல் யாப்பு குழு தலைவர் ரொமேஸ் டி சில்வா மற்றும் மனோகரா டி சில்வாவும் ஆகிய இரண்டு சட்டத்தரணிகளும் சேர்ந்து  ஜனாபதிக்கு ஆலோசனையாக ஒரு திட்ட வரைபொன்றை வழங்கி இருக்கின்றனர். அதில் இன்றைய 44 ஆவது சரத்தின் கீழ் 44A என்கின்ற ஒரு உப பகுதியை அதனோடு புகுத்தி விடுமாறு சொன்னார்கள். இங்கு சஜித் கேட்டது 20 ஆவதை நீக்கு என்பதாகும். ஆனால், இந்த 44A  என்ன சொல்கின்றதென்றால் மந்திரி  சபையையும் பிரதமரையும் பதவியில் இருந்து உடனடியாக கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகிறது. அதன் கீழ் 15 பேரைக் கொண்ட ஒரு மந்திரிசபையை நியமித்து அதற்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவரை பிரதமராக நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்குகிறது. பிரதமரை விட மற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டியதில்லை. எந்த கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டியதில்லை. நிபுணர்களாக இருக்க வேண்டும். இதனை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும். இச்சபை ஒரு வருடத்திற்கு பதவியில் இருக்கும். விரும்பினால் மீண்டும் இரண்டாவது தடவை நீடிக்கலாம். இது தான் அவர்களுடைய பிரதானமான முன்வரைபு.

இதன் கீழ் இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்கி ஜனாதிபதியின் கீழ் ஒரு அரசாங்கத்தை நடத்துவது என்றும் எதிர்கட்சித் தலைவரும் ஜனாதிபதியும் கூடி ஒரு பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் அவர்கள் முன்வைக்கின்றனர். இதனை பார்த்தால் புதியது போல தோன்றும். 

இது அமெரிக்க அரசியல் யாப்பிலுள்ள ஜனாதிபதியின் அதிகாரத்தை அப்படியே பிரதிபலிக்கின்றது. அமெரிக்க அரசியல் யாப்பில் ஜனாதிபதி பிரதிநிதி சபையின் உறுப்பினராகவோ செனட்சபையின் உறுப்பினராகவோ இருக்க வேண்டும் என்று இல்லை. அவர் தனக்குரிய அமைச்சர்களை நியமிப்பார். அது செனட் இனுடைய அனுமதியை பெற்றால் சரி. அது பிரசித்தமானதாக நிபுணர்களை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த அமெரிக்க யாப்பில் காணப்படும் இந்த அம்சங்களை தான் அதாவது அரசாங்கம் அமைப்பதற்கு கோத்தாபயவிற்கு அதிகாரத்தை வழங்குவது தான் அவர்கள் புகுத்த நினைக்கும் 44A இனுடைய விளக்கம்.

இந்த முன்வரைபில் சஜித் பிரேமதாஸ கேட்டதற்கு எதிராகத் தான் சொல்லப்பட்டுள்ளது. என்ன எப்படியோ அத்வைதமே இறுதி முடிவு.  துவைதம் அல்ல. இடைக்கால அரசாங்கம் என்ற ஒன்று  ஜனாதிபதியிலிருந்து பிரிந்தது அல்ல. இந்த அத்வைதத்தை நீங்கள் இலங்கையினுடைய முழு அரசியலிலும் பார்க்கலாம்.



தமிழ் மக்களை ஒழிப்பதற்கு ஏதுவாகவே ஜனாதிபதி முறைமை இலங்கையில் வெற்றிகரமாக ஜெ.ஆர். ஜெயவர்தனாவால் நடைமுறையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி முறைமை இல்லையேல் முள்ளிவாய்க்கால் படுகொலையை  தாங்கள் இலகுவில் வென்றிருக்க முடியாதென்று சிங்கள தலைவர்கள், புத்தி ஜீவிகளும் அதனைசெய்தவர்களும் வெளிப்படையாக சொல்லி இருக்கின்றார்கள். ஜனாதிபதி முறைமை என்பது அனைத்து வகை சர்வாதிகாரத்திற்கும் அடிப்படையாக இருக்கின்றது. வளர்ச்சிகள் கிடையாத இலங்கை போன்ற ஜனநாயக நாட்டில் எல்லாமே தலைகீழ். இலங்கையில் பெரும்பான்மையினரின் இனநாயகம் தான் இருக்கின்றது. இங்கு ஜனநாயகத்திற்கான அம்சம் கிடையாது. புள்ளடி போடும்  ஒரு கலாசாரம் இருக்கின்றது. அதனூடாக வெற்றிபெற்றவர்கள் ஆட்சியமைக்கின்ற ஒரு பாரம்பரியம் இருக்கின்றது.

நீதி, தர்மம் என்பவற்றுக்கு சிங்கள அரசியல் கலாசாரத்தில் இடமே கிடையாது. ஆதலினால் இத்தகைய சிங்கள அரசியல் கலாசாரத்தில் நாம் நீதியை பற்றி சிந்திக்கமுடியாது. தமிழ் மக்கள் தங்களுக்கான நீதியை பெறும் விடயத்தில் மிகவும் கட்டுக்கோப்புடன் யோசிக்க வேண்டும். இலங்கை 2500 வருடகால பிரசித்தமான அரசியல் வரலாற்றை கொண்ட ஒரு நாடு. உலகத்தில் 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இறுக்கமான பாரம்பரியத்தை கொண்ட முதலாவது நாடு சீனா தான். அடுத்து ரஷ்யா ஒரு பிரசித்தமான பேரரசுக் கலாசாரத்தைக் கொண்ட நாடு. மன்னராட்சி, பலம் பொருந்திய இராணுவ கட்டமைப்பை கொண்ட நாடு. 

இவற்றுக்கடுத்து இலங்கைதான் இப்பண்புகளை கொண்டுள்ளது. சிங்களவர்களுக்கு 2500 வருடகாலம் தொடர்ச்சியாக எழுதப்பட்ட வரலாறும் மன்னர் பாரம்பரியங்களுமுண்டு. இடைக்கிடை சில இடையீடுகள் இருந்தாலும் 2500 வருடகாலம் தொடர்ச்சியான தெளிவான அரசகட்டமைப்பு வளர்ச்சியை உடையது. சிங்களவர்களை பொருத்தவரை அரசு என்பது மிகவும் வளர்ச்சியடைந்த ஒரு உறுதியான நிறுவனம். அரசாங்கம் (government) மற்றும் அரசு (state) இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும். கோத்தாபய ஓர் அரசாங்கம். ஆனால் சிங்கள பௌத்தம் ஓர் அரசு. இந்த அரசு மிகவும் பலமானது. இதற்கு பலமான இராணுவம் 1979 இற்கு பின்பு கட்டியெழுப்பப்பட்டது. அது ஒரு குறுகியகால வரலாறைத் தான் கொண்டது. தமிழ் மக்களை கொலை செய்வதையும் மற்றும் எல்லாவிதமான ஏகபோக அக்கிரமங்களையும் சிங்கள மக்கள் அங்கீகரித்ததன் மூலம் அது ஒரு முனைப்பான வளர்ச்சியை அடைந்து விட்டது. வெளிநாடு ஒன்றுடன் யுத்தம் புரிந்ததை போல அப்பாவித் தமிழ்மக்களை கொன்று பெருவளர்ச்சியடைந்த இராணுவக் கட்டமைப்பை கொண்டுள்ளது. 

அடுத்தது சிங்கள அதிகாரக்கட்டமைப்பு (bureaucracy) இந்த முழு ஆசியாவிலேயே  பலம் வாய்ந்தது. ஜப்பானை இந்தியாவை மற்றும் சீனாவை விடவும் பலம் வாய்ந்தது. உலகத்திலேயே அதிகாரக்கட்டமைப்பை கட்டியாள்வதில் சீனா தான் பலம் வாய்ந்தது. அதனை அறிவார்ந்ததாக அறிமுகப்படுத்தியதும் அதுதான். அதாவது இந்த பரீட்சை முறையென்பதை சீனா தான் உலகுக்கு கொண்டு வந்தது. அங்கிருந்து தான் அது கிரேக்கத்திற்கு போய் ஐரோப்பாவிற்கு போய் திருப்பி எங்களுக்கு வந்தது. சீனர்கள் மத்தியில்  சாதியமைப்புகூட இல்லை.  எனவே திறமைசாலிகள் ஆட்சிக்குவருவதை விரும்பினார்கள். திறமைசாலிகளை தெரிவு செய்வதற்குரிய ஒரு முறை தான் பரீட்சை. அதிகாரக்கட்டமைப்பில் திறமைசாலிகளை நியமிப்பதற்கு அவர்களது குடும்பத்திற்குள்ளால் சாதிக்குள்ளால் ஆட்களை தெரிவுசெய்வதற்கு இடமில்லாத போது திறமைக்குள்ளால் தெரிவு செய்ய முற்பட்ட போதுதான் அவர்கள் பரீட்சை என்கின்ற முறையை கொண்டு வந்தார்கள்.  அது தான் இன்று உலகம் முழுவதும் இருக்கின்றது.

இதில் சிங்கள அதிகாரக்கட்டமைப்பு மிக தெளிவான திட்டவட்டமான வளர்ச்சியை அடைந்துள்ளது. பெளத்த மதத்தின் பின்னணியில் அவர்கள் சாதி வேறுபாடுகள் உண்டு.  அதிலும் அரசியலில் 100% சாதி வேறுபாடுகள் உண்டு. அது தமிழர்களுக்கு தெரியாது. தீண்டாமைதான் சிங்கள மக்களிடம் இல்லை, ஆனால் சாதி வேறுபாடு இருக்கிறது. சிங்கள மக்களிடம் உள்ள அதிகாரக்கட்டமைப்பு மிகவும் உறுதியானது. மிகவும் திறமையானது. தமிழ்மக்களிடமும் அதிகாரக்கட்டமைப்பு இருக்கின்ற போதும் அது சிங்கள மக்களிடம் இருப்பதிலிருந்து பன்மடங்கு வேறுபடுகின்றது. 

தமிழ் அதிகாரக்கட்டமைப்பு தீர்மானமெடுக்கும் ஒன்று அல்ல. அரசியல் தீர்மானத்தில் பங்காளிகள் அல்ல. தமிழ் அதிகாரக்கட்டமைப்பில் உள்ளவர்கள் சிங்கள அரசும் மந்திரிகளும் எடுக்கின்ற தீர்மானத்தை நிறைவேற்றுபவர்கள் மட்டுமே. தமிழர்கள் பல்வேறுப்பட்ட பெரிய அமைச்சு அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் ஒரு எழுத்து தீர்மானத்தை எடுக்க அனுமதிக்கபடாதவர்களேயாகும். சிங்கள ஆட்சியாளர்கள் வழங்குகின்ற கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள் மட்டுமே. எல்லாவற்றிற்கும் எஜமானிடம் அனுமதி கேட்டு நிற்பார்கள். எஜமான் சொல்வதையே செய்வார்கள். அந்த வகையில் சிங்கள அதிகாரக்கட்டமைப்பு தான் அதிகாரமுள்ள ஒன்றாக இருக்கிறது.



சிங்கள அரசில் முதலாவது பெளத்த மகாசங்கம் பலமான நிறுவனம். இராணுவமும் அதிகாரக் கட்டமைப்பும் பலமான நிறுவனங்கள். அதிகாரக் கட்டமைப்பு இரண்டு வகையாகப் பிரிக்கப்படலாம். ஒன்று, உள்நாட்டு நிர்வாக அதிகாரக் கட்டமைப்பு, இரண்டு, வெளிநாட்டு கொள்கையை  நிர்ணயிக்கும் அதிகாரக் கட்டமைப்பு. வெளிநாடு சம்பந்தமான அதிகாரக் கட்டமைப்பில் சாதி முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்போது கோத்தாபயவிற்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டவர்களும் சாதி அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் அரசியலில் அதிகாரமற்றவர்கள். 

இந்த நிலையில் சிங்களவர்கள் மத்தியில் பலம் வாய்ந்த கட்டமைப்பு ரீதியான அரசு இருக்கின்றது. பெளத்த மகாசங்க கட்டமைப்பு இருக்கிறது. இவ்வாறு இருக்கின்ற நிறுவனங்கள் அரசினுடைய பலவீனங்களை மறைந்து போகப் பண்ணக்கூடியவை. எந்த அடி முட்டாளும் அரசில் இருக்கலாம். நிறுவனம் அதை சரிப்படுத்தி எடுக்கும். பெளத்த மகாசங்கம் தீர்மானம் எடுக்கும். அதிகாரக் கட்டமைப்பு நிர்வாகம் செய்யக் கூடியதாய் இருக்கும். இராணுவம் செயற்பாட்டிற்கு உள்ள நிறுவனம். அரசாங்கம் துயில்கின்ற இடங்களில் எல்லாம் அதிர்ச்சியை உள்வாங்கி தன்னை தற்காத்து கொள்வதற்கு இந்த நிறுவனங்கள் செயற்படும். அரசு என்கின்ற பலம் வாய்ந்த கட்டமைப்பு அனைத்தையும் வார்த்து எடுக்கும். எனவே சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற இந்த கொந்தளிப்பு அந்த அரசுக்கு ஒரு பொருட்டில்லை. வரலாற்று கண் கொண்டு பார்த்தால் சில காலங்களின் பின்னர் இது தூர்ந்து போய்விடும். தமிழர்களின் பிரச்சினை அப்படியல்ல. ஆதலினால் நாம் கட்டமைப்பு ரீதியான பார்வைக்கு போக வேண்டும்.

ஈழத்தமிழர் பிரச்சினை உள்நாட்டு பரிமாணத்தால் மட்டும் நிர்ணயிக்கப் படக்கூடிய ஒன்று அல்ல. அண்டைநாடு, பிராந்திய அரசியல், உலகளாவிய அரசியல் என விரிந்து செல்கிறது. இதில் இன்றைய சூழலில் சிங்கள அரசு பலவீனமாக இருப்பது தான் தமிழ் மக்களுக்கு நல்லது என்ற வரலாற்று படிப்பினையை தமிழர்கள் மனதில் கொள்ள வேண்டும். வரலாற்று படிப்பினையின் அடிப்படையில் சிங்கள அரசை பலப்படுத்துவது எங்களை பலவீனப்படுத்துவதாகவும் எங்களை இழப்பதாகவும் முடியும் என்கின்ற விடயத்தையும் மனதில் கொள்ள வேண்டும். இந்த பலப்படுத்தல் வேலையை எந்த வெளிநாடும் செய்யக்கூடாது. சிங்களவர்களை பலப்படுத்துவது என்பது தமிழர்களை அழிப்பதாகும்.  தமிழ் மக்கள் 150,000 பேர் கொல்லப்பட்ட போது உள்நாட்டுப் பிரச்சினை என்று பார்த்து கொண்டும் சிங்கள அரசுக்கு ஆயுதங்களை வழங்கியும் மக்களை கொன்றொழித்து விட்டு தற்போது அரசை காப்பாற்றும் நோக்குடன் இருந்தால் இனப்படுகொலையின் இன்னுமொரு வடிவமாகத்தான் அதனைப் பார்க்க வேண்டும். எனவே எந்த ஒரு வெளிநாடையும் நோக்கி நாங்கள் கேட்க வேண்டியது, ‘நீங்கள்  வழங்கும் எந்த நிதியையும் நிபந்தனையின் கீழ் மட்டுமே வழங்க வேண்டும்’ என்பதையே. இனப்பிரச்சினைக்கான தீர்வை அவர்கள் முன்வைப்பதாக சொன்னால், தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை முன்வைக்கின்ற போதும் நாம் ஆமோதிக்கலாம்.  

உலக நாடுகள் அனைத்தும் தமிழர்களுக்கான உரிமையை வழங்கு என்று அரசை நிர்ப்பந்தித்து திட்டவட்டமான கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அப்படியில்லையேல் தமிழ் மக்களை அழித்ததை, இனியும் அழிக்கப்படுவதை அங்கீகரிப்பது என்பதில்போய் முடியும். இதனைத் தான் தமிழ்மக்கள் அனைத்து நாடுகளையும் நோக்கி முன்வைக்க வேண்டும். களத்தில் உள்ள தமிழ் தலைவர்கள்  ஒன்று சேர்ந்து அனைத்து நாடுகளையும் நோக்கி இந்தக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும். நிவாரணம் வழங்கினாலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற வகையில் வழங்கச் சொல்லி கேட்க வேண்டும்.

அடுத்து சர்வதேச ரீதியில் உக்ரைன் யுத்தம் உலக அரசியலில் ஒரு புதிய ஒழுங்கினுடைய வாசல் கதவை தட்டுகின்றது. இதுவரை காலமும் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மெளனமாக பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கா இப்போது சொல்கிறது ரஸ்யா மீது போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று. இது எமக்கும் பொருந்தக்கூடியது தானே. இலங்கையிலும் தமிழ்மக்கள் கொல்லப்பட்டதை விசாரிக்க வேண்டும் என்று சர்வதேசத்தை அமெரிக்கா கோர வேண்டும்.  இன்று ஐ.நா சபை எடுத்திருக்கும் தீர்மானத்தின் படி ரஸ்யா மனிதஉரிமை ஆணையத்தில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை ஏன் ஈழத்தமிழர்களுக்கும் செய்யக் கூடாது. அப்படிப் பார்த்தால் உக்ரைன் ஈழத்தமிழர்களுக்கான வெளியொன்றை திறந்து விட்டுள்ளது. 



புலத்தில் வாழும் தமிழ் மக்கள் தங்களுக்குரிய அரசியலை தீர்மானிக்க அரைவாசி பங்குடையவர்கள், களத்தில் வாழுபவர்கள் அரைவாசி பங்குடையவர்கள். புலம்பெயர் நாடுகளிலும் ஒரு செயற்குழுவை உருவாக்கி அதன் வழி சாத்வீக ரீதியாக தமிழ்மக்களுடைய அரசியல் கோரிக்கையை முன்வைக்கின்ற ஒரு நிலைமையை உருவாக்க வேண்டும். அகமும் புறமும் சேர்ந்து உருவாக்க வேண்டும்.

ஈழத்தமிழர்கள் கவனிக்க வேண்டிய பிரதான விடயங்களில் ஒன்று வரலாற்று அனுபவம் என்ற ஒன்று எங்களிடம் இருக்கிறது. சிங்கள மக்களிடம் ஏற்பட்டிருக்கின்ற இந்த கொந்தளிப்பு எம்மிடம் முள்ளிவாய்க்காலிற்கு பின்பு ஏற்பட்டது. குறிப்பாக அது எழுக தமிழ் 1, எழுக தமிழ் 2 என்று மேலே வளர்ந்து வந்தது. எங்கள் தலைவர்களே எம்மை கைவிட்டு விட்டார்கள். ஆனால், இயல்பாகவே ஒரு மக்கள் போராட்டம் எழுந்தது.  பின் எங்கள் தலைவர்களே அதனை சீரழித்தும் விட்டார்கள். அதன் பின், அனைத்து தமிழ் தலைவர்களும் போராட்டங்களை கைவிட்டு விட்டார்கள். அவ்வாறு குலைத்ததும் அதன் பின் முன்னெடுக்காததும் வரலாற்று குற்றம். ஆனால் வரலாறு மீண்டும் வாய்ப்பை வழங்கியுள்ளது. 

ஒன்றுபட்டு அனைவரும் நிற்க வேண்டும். ஒன்றுபட்டு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.  அனைத்து தலைவர்களும் கடந்த கால தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும். 

அப்படிச் செய்யத் தவறும் தலைவர்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் நிதியுதவி வழங்குவதை தவிர்க்க வேண்டும். உங்கள் நிதியுதவிகளில் தான் இவர்கள் தேரோட்டுகிறார்கள். நீங்கள் அங்கே சிரமப்பட்டு உழைத்து எம் மக்களுக்கும் உதவ வேண்டும் என்கிற மனதோடு இருக்கின்றீர்கள். புலம்பெயர் தமிழர்களின் நிதியை பயனுள்ளதாக்கின் ஈழத்தமிழர் நிதியம் என்ற ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த ஒரேயொரு நிதியம் போதும். அது ஜனநாயக பூர்வமாக பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதனூடாக ஈழ தமிழர்களுக்கு பல்வேறுபட்ட பொருளாதார விருத்தி, கல்வி என்பவற்றுக்கும் மற்றும் நெருக்கடிகள் வருகின்ற போதும் உதவி செய்யலாம். உள்நாட்டு அரசியல் தலைவர்களும் காலம் காலமாக உழைத்த பணம் வைத்திருக்கிறார்கள். அதில் அவர்கள் தங்கள் அரசியலை செய்யட்டும்.

பணத்தை சரியான முறையில் மேற்பார்வை செய்யவும், நிர்வகிக்கவும், ஆய்வு செய்யவும் கூடியதாக இருக்க வேண்டும். இவ்வாறு நிதியம் ஒன்றை உருவாக்கினால் அனைத்து வெளிநாட்டு மக்களும் குறிப்பாக தமிழகத்தில் இருந்தும் நிதி வழங்க மக்கள் தயாராகவுள்ளனர். மேற்படி அனைத்து பின்னணியிலும் தமிழ் மக்கள் செயற்பட ஒரு காலம் வந்துள்ளது. அமைதியின்மையால் நாடு பிரிபட்டுப்போக வேண்டிய நிலை பிற்காலங்களில் ஏற்படுகின்ற போதும் தற்போதும் சில சாத்தியமான விட்டுகொடுப்புகளைசெய்ய தயாராக இருக்க வேண்டும். நீங்கள் துண்டு துண்டாக நின்றாலும் ஓரிடத்தில் நின்று ஒன்றாக போராடும் களத்தினை உருவாக்குங்கள்.  நாங்கள் போராட தயங்கினால் எங்களை நாங்களே கைவிட்டு விடுவோம். இந்தப் பின்னணியில் தமிழ்மக்கள் விரைவாக செயற்பட வேண்டிய காலம் வந்திருக்கிறது. இனி வரப்போகும் காலங்கள் வேகமாக விரிவடைந்து பின் தணிந்து போகலாம். 

அதற்கு தயாராக குறைந்தபட்ச சமஷ்டியை வைத்திருக்கும் நாங்கள் அதனடிப்படையில் செய்து காட்ட வேண்டும். அது சிங்கள மக்களின் மனதினை வென்றெடுக்க உதவும். ஏனெனில் சமஷ்டி கோரிக்கையை 1956 ஆம் ஆண்டு வரை தமிழர்கள் முன்வைக்கவில்லை. 1956 ஆம் ஆண்டு வரையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முன்வைத்திருந்த ஒற்றையாட்சி கொள்கையை ஆதரித்து வாக்களித்த மக்கள் நாங்கள். 1956 ஆம் ஆண்டு தான் தமிழரசுக்கட்சி அதாவது செல்வநாயகம் அவர்கள் முன்வைத்த சமஷ்டி கோரிக்கைக்கு ஆதரவளித்தோம். சமஷ்டி கோரிக்கையை 1949 ஆம் ஆண்டு செல்வநாயகம் முன்வைத்திருந்தாலும் 1956 ஆம் ஆண்டு தான் தமிழ் மக்களால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே ஒற்றையாட்சியின் கீழ் நாங்கள் தீர்வு காண சிங்களவர்களுடன் முற்பட்டோம் என்பதையும் அரசாங்கத்தில் 1948 ஆம் ஆண்டிலிருந்து பங்கெடுத்தவர்கள் என்பதையும் சிங்களமக்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஒற்றையாட்சியின் கீழ் தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள், தமிழர்கள் சிங்கள அரசுடன் ஒத்துழைத்தார்கள். ஆனாலும் திரும்ப திரும்ப முரண்பட்டமையால் தான் சமஷ்டிகோரிக்கை என்ற ஒன்று வந்தது. மீண்டும் மீண்டும் அதற்கு பின்னாலும் முதுகில் குத்தியதால் தான் தனிநாடு தமிழீழம் கோரிக்கை வந்தது.

பின்பு, யுத்தத்தில் தோல்வியடைந்த பின்பு மீண்டும் சமஷ்டி கோரிக்கைக்கு அனைவரும் வந்திருக்கின்றோம். இதனடிப்படையில் தமிழ் மக்கள் போராடலாம். தமிழ் மக்களின் ஐக்கியம் மட்டுமே தமிழ் மக்களின் விடிவுக்கு வழி. தமிழ் மக்களின் ஐக்கியம் தமிழகத்தையும் சென்றடையட்டும். தமிழகம் இந்திய மத்திய அரசை வற்புறுத்தட்டும். சர்வதேசத்தை அனைத்து புலம் பெயர்ந்தவர்களும் உள்நாட்டவரும் வற்புறுத்த வேண்டும். வேகமாக அரசியல் மாறப்போகும் சூழலில் எங்களுக்குரிய பாத்திரத்தை வகித்து நாங்களும் இருக்கிறோம் என்று காட்ட வேண்டும். ஓய்ந்து ஒளிந்திருக்காமல் வரலாற்றின் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்பது இக்கட்டான காலக்கட்டத்தை கடப்பதற்காக அரசியல் சாராத அறிவியல் பூர்வமான மதிப்பீடே ஆகும்.

தொகுப்பு - கார்த்திகா 

இக்கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க...
திரு பார்வை - Thiru Vision: இனப்படுகொலையின் மறுபக்கமே இன்றைய சிங்கள அரசியற் கொதிநிலை; இதில் தமிழரின் நிலையென்ன? அடுத்ததென்ன? பகுதி : 01

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

இனப்படுகொலையின் மறுபக்கமே இன்றைய சிங்கள அரசியற் கொதிநிலை; இதில் தமிழரின் நிலையென்ன? அடுத்ததென்ன? பகுதி : 01

 

இனப்படுகொலையின் மறுபக்கமே இன்றைய சிங்கள அரசியற் கொதிநிலை; இதில் தமிழரின் நிலையென்ன? அடுத்ததென்ன? பகுதி : 01

10.04.2022.  பாகம் 1.
ஈழத்தமிழ் அரசியல் வரலாற்றறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களால் 10.04.2022  அன்று நடாத்தப்பட்ட "இனப்படுகொலையின் மறுபக்கமே இன்றைய சிங்கள அரசியற் கொதிநிலை; இதில் தமிழரின் நிலையென்ன? அடுத்ததென்ன?" என்கிற உரையாடல் வகுப்பின்  முதல் பகுதி இங்கே பிரசுரமாகிறது.

எமது தலைவிதியோடு சம்பந்தப்பட்ட அதாவது ஈழத்தமிழர்களோடு சம்பந்தப்பட்ட இலங்கையின் உள்நாட்டு அரசியலில் எமக்கிருக்கக்கூடிய பாத்திரமென்ன என்பதையிட்டு திட்டவட்டமான வரையறைகளுடன் நிலைமைகளை சரிவர ஆராய வேண்டி இருக்கிறது. ஒரு பிரெஞ்சு பழமொழி இருக்கின்றது. உன்னை நீ கைவிட்டு விட்டால் உன்னைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று. ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று காணப்படுகின்ற உள்நாட்டு வெளிநாட்டு சூழல்களில், சூழலுக்கும் யதார்த்தத்திற்கும் காலகட்ட தேவைகளுக்கும் பொருத்தமான வகையில் எமக்கான பாத்திரத்தை நாம் வகித்தாக வேண்டும்.

நீ செயற்படாது விட்டால் உன் பொருட்டு இன்னொருவன் செயற்பட முடியாது. காலம் காலமாக ஈழத்தமிழர்கள் தம் போராட்டத்தின் பல கட்டங்களில் பின்னடைந்து செல்வது ஒரு வரலாற்று துயர்மிகுந்த அனுபவமாக காணப்படுகிறது. இந்நிலையில் நாம் இன்றைய நெருக்கடியான காலக்கட்டத்தில் எமக்கு வாய்ப்பான தீர்மானங்களை எடுத்து எப்படி செயற்படலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விடயமானது இலங்கை முழு நாடும் தழுவிய வகையில் உள்நாட்டு அரசியல் பிரச்சினை ஒரு இருள் மயமான நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தமக்குரிய இடத்தை, தமக்குரிய பாத்திரத்தை எவ்வாறு வகிப்பது என்று நாம் இப்போது பார்க்க வேண்டும். இலங்கைத் தீவின் நாடு தழுவிய பிரச்சினையில் இருந்து நாம் ஒதுங்கியிருக்க வேண்டியதில்லை. இலங்கைத்தீவின் இந்த அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினையோடு எமது பிரச்சினையை இணைக்க நாம் தவறக்கூடாது என்பதே இன்றைய உரையாடலின் சாராம்சமாகும்.

இலங்கைத்தீவு குறிப்பாக இனப்படுகொலையின் மறுபக்கமாக இன்று பொருளாதார சமூக அரசியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கிறது. இன்னொரு வகையில் சொல்வதானால், இன்று இலங்கை உட்பட்டு இருக்கின்ற பொருளாதார, அரசியல், சமூக நெருக்கடிகள், உள்நாட்டு குழப்பம் இவை அனைத்தும் இனப்படுகொலையின் மறுபக்கமேயாகும். எனவே இன்றைய இலங்கையினுடைய இன்று காணப்படுகின்ற நெருக்கடிகளுக்கு  மூலாதாரமானது இனப்பிரச்சினை தான்.

இலங்கைத்தீவு எப்போதுமே காலத்திற்கு காலம் இரத்தக்களரிக்கு உள்ளாகும் நாடு. பருவ கால இரத்தம் சிந்தலுக்கு உள்ளாகும் ஒரு நாடு. குறிப்பாக 1958 முதலாவது இரத்தம் சிந்தல். அப்பொழுது இரத்த ஆறு ஓடியது. அது தமிழ் மக்களின் பெயரால் தமிழ் மக்களின் தலையின் மீதே ஓடியது. இதன் பின்பு இரண்டாவது இரத்த ஆறு JVP இன் பெயரால் ஓடியது. இலங்கையில் சிங்கள இளைஞர்கள் போராடிய கிளர்ச்சியின் பெயரால் 1971 ஆம் ஆண்டு ஓடியது. மூன்றாவது 1977 ஆவணி மாதம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை கலவரம். நான்காவது கறுப்பு ஆடி 1983 கலவரம். இதன் பின்பு தமிழ்மண் தொடர்ச்சியாக 1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இரத்தக் களரிக்கு உள்ளாகியிருந்தது. அதே வேளை சிங்களவர் 1989, 1990, 1991 ஆம் ஆண்டு காலங்களில் இரத்தக் களரிக்குள்ளாகி இருந்தனர்.

காலத்திற்கு காலம்  இலங்கையில் இவ்வாறு இரத்த ஆறு ஓடுவது ஒரு வழக்கம். அதற்கு காரணம் இலங்கையின் அரசியல் பொருளாதார பிரச்சனை தீர்க்கப்படாதது தான். அந்த அரசியல் பொருளாதார பிரச்சனை இனப்பிரச்சனையின் அடிப்படையிலேயே இருந்திருக்கின்றது.



இலங்கையின் இனப்பிரச்சனையை தீர்க்காமல் தமிழ் மக்களுக்கான நீதி வழங்காமல் ஜனநாயகமும் இல்லை, பொருளாதார வளர்ச்சியும் இல்லை, இலங்கை தீவுக்கு சுபிட்சமும் இல்லை, இந்த பிராந்தியத்திற்கு அமைதியும் இல்லை, இலங்கை இந்திய உறவில் சுமூகமுமில்லை. எல்லோரது வேட்டைக் காடாக இலங்கை மாறும். அந்நியர்களின் வேட்டைக் காடாக இலங்கை இப்போது ஆகி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இனப்படுகொலையை ஒரு கருவியாக பயன்படுத்த உலகநாடுகளிடம் கடன் பெற்றது,  ஒரு வெளிநாட்டோடு யுத்தம் புரிவது போன்று அளவுக்கு மிஞ்சிய ஒரு பாரிய இராணுவத்தை கட்டி வளர்த்தது, அந்த இராணுவச்செலவை தொடர்ந்து பேணுவது என்பவற்றின் விளைவே இன்றைய இலங்கையின் நெருக்கடிக்கு காரணமாகும். ஆதலினால் நாம் இனப்பிரச்சனையை மையம் கொண்டுதான் இதனை அணுகவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இனப்பிரச்சனைக்கு தீர்வில்லையேல் உள்நாடு, வெளிநாடு, அண்டைநாடு, சர்வதேசம் என்ற எந்தவகையிலும் இலங்கைக்கு சமாதானம் கிடைக்கவே கிடைக்காது. ஆதலினால் சிங்கள மக்களுக்கு நாம் ஒன்றை உணர்த்த வேண்டும். எங்களை ஒடுக்கியதன் விளைவை நீங்கள் இன்று அனுபவிக்கிறீர்கள் என்பது தான். நீங்கள் அனுபவிக்கின்ற அதே விளைவை நாங்களும் சேர்த்து அனுபவிக்கின்றோம். ஈழத்தமிழர்களும் ஈழம் வாழ் முஸ்லிம்களும் மலையக  மக்களும் அனுபவிக்கின்றனர். எனவே இது ஒரு தனி மனிதனுக்குரிய பிரச்சனை அல்ல. தனி இனத்துக்குரிய பிரச்சனையல்ல. இனப்பிரச்சனை தீரா விட்டால் இப்படித்தான் தொடர்ந்து நடக்கும் என்பதை அவர்களுக்கு சொல்ல வேண்டும்.

இக்கட்டத்தில் ஈழத்தமிழர்கள் தீர்க்கமான அரசியல் தீர்மானத்திற்கு போக வேண்டும். நாம் மொத்தமாக இலங்கையில் காணப்படுகின்ற சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின்மை, திடீர் விலை அதிகரிப்புகள்  போன்ற அனைத்து பிரச்சினைகளிலும் நாம் சிங்கள முஸ்லிம் மற்றும் மலையக மக்களோடு கைகோர்த்து ஒரு நாடு என்கின்ற முழு அளவிலான பாத்திரம் வகிக்க தயாராக வேண்டும். எனவே நாம் இந்தப் பிரச்சினையில் இதற்கு காரணமான அரசாங்கத்தை எதிர்த்து அவர்களோடு எமக்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டும். முதலாவது அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மக்களின் தேவைக்கு பொருத்தமான வகையில் விலை இறக்கம் செய்யப்பட வேண்டும். இந்த கோரிக்கையை தீவடங்கலான அனைத்து மக்களுடனும் இணைந்து முன்வைப்போமாக.

அடுத்து எமது இனப்பிரச்சனை. முதலாவதாக ஈழத்தமிழர்கள் இனப்படுகொலையிலிருந்து நீதியைக் கோரி நிற்கும் மக்கள். நாம் இதுவரை கவனிக்கப்படாதிருந்தோம். எந்த ஒரு சிங்கள மகனும் எங்களது கண்ணீரில் பங்கெடுக்கவில்லை. மாவீரர்களான மக்கள், மாண்டு போன மக்கள், மறைந்து போன மக்கள், அல்லல்படுகின்ற மக்கள் என்பவர்களுக்காக சிங்கள மக்களிடமிருந்து ஒரு துளி கண்ணீரும் வரவில்லை. ஒரு பொழுது கூட எங்களது பிள்ளைகளுக்காக எங்களுடைய மக்களுக்காக அவர்கள் இரங்கவில்லை. அது  மத தலைவர்களாக இருக்கலாம், அரசியல் தலைவர்களாக இருக்கலாம், ஊடகவியலாளர்களாக இருக்கலாம், நிறுவனங்களாக இருக்கலாம் யாருமே செய்யவில்லை. நாங்கள் தனித்து விடப்பட்டிருக்கிறோம்.

அதேவேளை நாங்கள் வெறும் பொது நீரோட்டத்தில் பார்வையாளர்களாக நின்று கொண்டு எமது பிரச்சனையை கைவிடுவோமானால் எமது பிரச்சனையை இந்தியாவும் கைவிடும், அமெரிக்காவும் கைவிடும், மேற்குலகமும் கைவிடும். மாறாக நாம் எமது பிரச்சனையை கையில் எடுத்தால் தான் இலங்கைத்தீவில் சிங்களவர்களும் எங்களைப் பார்ப்பார்கள். இலங்கைத் தமிழர்களும் விழிப்பாக இருப்பார்கள். இந்தியாவும் இப்பிரச்சனையை கைவிட முடியாதென்ற முடிவுக்கு வரவேண்டி வரும். அமெரிக்காவும் எமது பிரச்சனையை வெறுமனே மனித உரிமை பிரச்சனையென்ற தனது ஸ்தானத்திலிருந்து அணுக முடியாதென்ற முடிவுக்கு வர வேண்டி வரும். தமிழ் மக்களுக்கு விடிவில்லையெனில் எந்தவிதமான சமாதானமும் அபிவிருத்தியும் இல்லையென்ற முடிவுக்கு வர வேண்டி வரும். ஆதலால் முதலாவதாக நாம் நீதியைக் கோருவோம். இனப்படுகொலைக்கு எதிரான நீதி! அதுவே ஜனநாயகத்தின் குரல்! அது இன்றி இலங்கைக்கு ஜனநாயகம் என்று ஒன்று கிடையாது. ஜனநாயகத்தின் பெயரால் இனப்படுகொலைக்கு எதிரான நீதியை நாங்கள் கோர வேண்டும். இதுவே எமது பக்கத்திலிருந்து முதலாவது கோரிக்கை.

அதாவது முதலாவது, முழுநாட்டிற்குமான அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை இறக்கு என்பது, பண்டங்களை கிடைக்க வை என்பது. அடுத்தது, எமது பக்கத்திலிருந்து முதலாவது கோரிக்கை இனப்படுகொலைக்கு எதிரான நீதியை கோருவது. இரண்டாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு என்பது. மூன்றாவது, குறைந்தபட்சம் சமஸ்டி அரசியல் அமைப்பு கோரிக்கை. இந்த கோரிக்கைகளில் எங்களுடைய தலைவர்கள் அனைவரும் ஒரு பக்கம் நிற்கின்றார்கள்.

ஈழத்தமிழர்கள் மத்தியில் பல தலைமைகள் உண்டு. குறிப்பாக மூன்று அல்லது நான்கு தலைமைகள் உண்டு. அனைவரும் அடிப்படையில் குறைந்தபட்சம் சமஷ்டி கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். எனவே இப்போது அந்த சமஷ்டி கோரிக்கையின் அடிப்படையில் நீங்கள் தமிழர்களுக்கு தீர்வை முன்வையுங்கள் என்றாவது இந்த தமிழ் தலைமைகள் தனித்தனியாகவோ  கூட்டாகவோ போராட வேண்டும். கூட்டாக போராடுவது தான் முதலாவது தெரிவாக அமைவது நல்லது. அப்படி கூட்டாக போராடத் தவறினாலும் தனித்தனியாகவாவது போராட வேண்டும். எனவே இந்த நான்கு கோரிக்கைகளின் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் இன்றைய இலங்கையின் பிரச்சினையில் பங்கெடுக்க வேண்டும். உன்னை நீ கைவிட்டு விட்டால் உன்னை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. நாட்டின் பொதுப் பிரச்சனையிலும் பங்கெடு. உனது தனிப்பட்ட பிரச்சனையையும் கைவிட்டு விடாதே.

இப்போது ஒரு வரலாற்று விளக்கத்தை நான் சொல்கிறேன், 1917 ஆம் ஆண்டு ரஸ்யாவில் புரட்சி ஏற்பட்ட போது பல தேசிய இனங்கள் புரட்சியில் பங்கெடுக்க மறுத்தன. அப்போது லெனின் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். தேசிய இனங்கள் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை உடையவை. உக்ரைன், பைலோரஸ்யா, பின்லாந்து ஆகிய தேசிய இனங்களுக்கு லெனின் வாக்குறுதி அளித்தார். புரட்சியில் பங்கெடுங்கள், புரட்சியில் வெற்றி பெற்ற பின்னர் நீங்கள் சுயமாக பிரிந்து செல்ல அனுமதிக்கப்படுவீர்கள். ஆம், ரஸ்யாவின் புரட்சியில் பல்வேறு தேசிய இனங்களும் ஒன்றிணைந்து போராடின. ஒரு சில கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து போராடின. புரட்சி வெற்றி பெற்றது.

அப் புரட்சியில் தனியே ஒவ்வொரு தேசிய இனத்தின் கோரிக்கையும் வற்புறுத்தப்பட்டது. அதேவேளை பொதுமக்களின் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டது. அதாவது, எல்லோருக்கும் உணவு, காணி, சமாதானம் வேண்டும் என்ற கோரிக்கை. இது முழு ரஸ்யர்களுக்கும் பொதுவான கோரிக்கை. அப்போது சோவியத் யூனியன் என்று ஒன்று இருக்கவில்லை, பிறகு தான் சோவியத் யூனியன் உருவாகியது. அன்றைய ரஷ்ய சாம்ராஜ்ஜியத்துக்கு எதிரான போராட்டத்தில் அந்த நாடு முழுவதிற்கும் பொதுவாக இருந்த கோரிக்கை, நிலம், உணவு, சமாதானம். அத்தோடு கூடவே தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்தது.

இவ்வாறு புரட்சி நடந்து எல்லா தேசிய இனங்களும் பங்கெடுத்தன. புரட்சியின் பின்பு பின்லாந்து ஒருபோதும் சேர்ந்து வரவில்லை.  பின்லாந்து   புரட்சியோடு தனிநாடாகவே போய்விட்டது. உக்ரைன், பைலோ ரஸ்யா போன்றவை சோவியத் யூனியனில் சேர்ந்தன. அவற்றின் முடிவால் பின்னைய காலத்தில் வந்த பிரச்சினைகள் வேறு. ஆனால் அந்த கட்டத்தில் அவர்கள் எடுத்த தீர்மானம் சரியானது. அவர்கள் தங்களுடைய தனித்துவமான கோரிக்கையை முன்வைத்தார்கள். பொதுவான கோரிக்கையோடு இணைந்தார்கள்.

நாங்களும் எங்களுடைய தனித்துவமான கோரிக்கையை முன்வைப்போம். சிங்கள மக்கள் மத்தியில் ஒன்றைச் சொல்வோம். எங்களுடைய பிரச்சனை ஜனநாயக ரீதியில் தீர்க்கப்பட வேண்டும் என்று. முதலாவதாக கட்டியமாக ஒன்றைக் கூற முடியும். ஈழத்தமிழர்கள் தாம் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்த நான்கு கோரிக்கைகளின் அடிப்படையிலும் சாத்தியமான வழி, அதாவது  காட்சிப்படுத்தல் ஜனநாயக வழியில் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த கட்டியம்.

இந்த காட்சிப்படுத்தல் ஜனநாயகம் நேற்று வரை ஈழத்தமிழர்களுக்கு மறுக்கப்பட்டே இருந்தது. முள்ளிவாய்க்காலுக்கு பின்பு இந்த காட்சிப்படுத்தல் ஜனநாயகம் அதாவது தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் செய்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து நிறுத்திவிடுவார்கள். சிறையில் போட்டு விடுவார்கள். சிங்கள மக்கள் ஆயுதம் தாங்காத கிளர்ச்சி செய்தல், எதிர்ப்பு காட்டுதலை செய்கிறார்கள். அதை சிங்கள அரசு ஏற்று பொலிஸ் பாதுகாப்பும் அளிக்கிறது.



இந்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரு ஜனநாயக உரிமை, அதாவது காட்சிப்படுத்தல் ஜனநாயகம் நடைமுறையில் இருப்பதை கண்ணால் காணும் நாம் அது எமக்கும் உரியது என்று நிரூபிக்க எமது கோரிக்கையை முன்வைத்து அவ்வாறு போராட வேண்டும். இது எமக்கு வரலாறு தந்திருக்கும் ஒரு வாய்ப்பு. ஒரு வரப்பிரசாதம்! எங்களுக்கு நேற்றுவரை காட்சிப்படுத்தல் ஜனநாயகம் மறுக்கப்பட்டிருந்தது. இப்போது சிங்களவர்களுக்கு காட்சிப்படுத்தல் ஜனநாயகம் வந்திருக்கின்றது. அவர்கள் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் செய்யலாம், கோசங்கள் எழுப்பலாம். ஜனாதிபதி மாளிகைகளை முற்றுகையிடலாம், அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிடலாம். நாங்களும் எங்கள் அளவிற்கு தொடர்ச்சியாக போராடுவோம்.

இது எங்களுடைய வடக்கு கிழக்கு பகுதிகள் அதாவது யாழ்ப்பாணத்தில், திருகோணமலையில், மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டு போராட்டம் கொழும்புக்கும் விரிவடைய வேண்டும். தமிழ்த் தலைவர்களே நீங்கள் கொழும்பு  சென்று வீதியில் நின்று போராடவேண்டும். அப்போது, சிங்கள மக்களுக்கு, நாங்கள் உங்களோடு நிற்கிறோம் என்று சொல்லிவிட்டு எங்கள் பிரச்சனையை அவர்களுக்கு சொல்லுங்கள். இதைத்தான் தமிழ் தலைவர்கள் இப்போது செய்யவேண்டும்.  நான் யாரையும் போராட்ட பொது விதிமுறைகளிலிருந்து விலகி பலாத்காரமான ஒரு பாதையில் போங்கள் என்று சொல்லவில்லை.

வெறும் கற்பனைகளும் அமானுஸ்ய கனவுகளும் ஆவேசமான இலட்சிய வேட்கைகளும் சோறுபோடாது. இப்போது யதார்த்தப்பூர்வமான நிலைமைகளின் கீழ் நாங்கள் யதார்த்தப்பூர்வமாக போராட வரலாறு எமக்கு ஒரு வாய்ப்பை அளித்து இருக்கின்றது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேற்கண்ட நான்கு கோரிக்கைகளையும் முன்வைத்து தமிழ் மக்கள் போராட வேண்டும். இது முதலாவது!

இரண்டாவதாக, இந்த நான்கு கோரிக்கைகளிலும் தமிழ் தலைவர்கள் மத்தியில் ஒருவருக்கும் வேறுபாடு இல்லையே. சமஷ்டி கோரிக்கையை தமிழ்த் தலைவர்கள் எல்லோரும் தானே முன்வைத்திருக்கின்றீர்கள். எனவே சமஷ்டி அடிப்படையில் தீர்வை முன்வை என்று நீங்கள் எழுதிக்கொடுத்த அடிப்படையில், அரசியல் யாப்பு மாற்றம் வேண்டும் என்று எழுதிக்கொடுத்த அந்த அடிப்படையில் இப்போது நீங்கள் போராடவேண்டும். குறைந்தபட்சம் இதற்கு ஒன்று சேர்வதில் உங்களுக்கு என்ன தடை இருக்கின்றது? ஒரு கோரிக்கை, ஒன்றுபட்டு நில்லுங்கள்.

பயங்கரவாத தடை சட்டம் வேண்டாம் என்பதில் உங்கள் யாரிடம் வேறுபாடு இல்லை. இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்பதில் யாருக்கும் வேறுபாடு இல்லை. குறைந்தபட்சம் சமஷ்டி கோரிக்கையில் யாருக்கும் வேறுபாடு இல்லை. உங்கள் எல்லோரிடமும் இவ்விடயங்களில் பொது உடன்பாடு உண்டு. அத்தியாசிய பொருட்களை தடையில்லாமல் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் கோரிக்கையில் எவருக்கும் முரண்பாடு இல்லை. எனவே இந்த நான்கு கோரிக்கைகளின் கீழ் ஒன்றுபட்டு போராடுங்கள்.

ஒன்றுபட்டு போராடும் அளவு கலாசாரம் உங்கள் மத்தியில் வளரவில்லை என்றால், மனம் பண்பட்டு விருத்தியடையவில்லை என்றால், நவகிரகங்கள் போன்று ஒன்பது பக்கமும் திரும்பித் தான் நிற்பீர்கள் என்றால், நவகிரகங்கள் ஒரு அறையில் வைக்கப்பட்டிருப்பதையாவது கவனத்தில்  கொள்ளுங்கள். வெவ்வேறு திசைகளில் பார்த்துக் கொண்டிருந்தாலும் நவக்கிரகங்கள் ஒரு அறைக்குள்ளே தான் இருக்கின்றன. போராட்டத்தை ஒன்றுபடுத்தியும் பலப்படுத்தியும் போராட வேண்டும். வேண்டுமென்றால் வேறு வேறு திசையில் இருக்கும் நவகிரகங்கள் போல் தனித்தனி கொடிகளை பிடித்துக் கொண்டு ஓரிடத்தில் கூடுங்கள். உங்கள் கட்சிக் கொடியின் கீழ் உங்கள் ஆட்களை கொண்டு வந்து ஓரிடத்தில் கூடுங்கள். ஒரே மாதிரி போராடுங்கள். ஒரே துண்டு பிரசுரத்தை விநியோகித்து, ஒரே சுவரொட்டிகளை ஒட்டி போராடுங்கள். ஒரே விதமான செய்திகளை வெளியிட்டு, ஒன்றுபட்டு போராடுங்கள். இது உங்களுக்கு வரலாறு தந்திருக்கும் உண்மையான வரப்பிரசாதம்.



அடுத்து நாம் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று, ஈழத்தமிழர்களின் பிரச்சனையை இனப்படுகொலையின் மறுபக்கம் என்று திட்டவட்டமான வரையறைகளுடன் சொல்வதற்கு முன்னோடியாக ஈழத்தில் இருந்து ம.நிலாந்தன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் பெருமளவிலான ஈழத் தமிழர்கள் தமக்குரிய கோரிக்கைகளை  அடிப்படையாக வைத்து போராட வேண்டும் என்று சொல்கிறார். அது மிகவும் சரியானது.

வரலாற்றின் விதியை நாம் பற்றி பிடிக்க தவறினால் அது எங்களை விட்டு ஓடிவிடும். நாங்கள் வரலாற்றால் கைவிட்டப்பட்டவர்களாகி விடுவோம். எனவே விருப்பங்களுக்கு மாறாக வரலாறில் உரிய பக்கம் செல்வோம். 

2021 ஆம் ஆண்டு மாசி 4ஆம் திகதி இலங்கை சுதந்திர தினத்தன்று இலங்கை ஜனாதிபதியாகவிருந்த கோத்தாபய ராஜபக்ஸ பின்வருமாறு கூறினார். நீங்கள் தேடிய தலைவர் நானே என்றார். இன்று தேடிய தலைவரை மக்கள் துரத்துகின்றார்கள். சிங்கள பௌத்தர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றவென்று வந்தவர்.  அவர்களின் தலைவன் என்று சொல்வதில் எந்தவித தயக்கமும் இல்லை என்றார். அப்படி பேசியவரின் மாளிகையைத்தான் இன்று மக்கள் முற்றுகையிட்டு கோஷமிடுகிறார்கள்.

இந்த வசனத்தை பிரான்ஸ் நாட்டின் மாமன்னராக இருந்த 16 ஆம் லூயி சொன்ன வசனத்தில் இருந்துதான் கோத்தாபய எடுத்தார். இது 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த சம்பவம். 16 ஆம் லூயி இவ்வாறு தான் சொன்னார், “நானே அரசு,   நானே மன்னன், எனது வார்த்தைகளே அரசியல் சட்டம்.” இதே வார்த்தைகளை ஜனாதிபதி கோதாபாய ராஜபக்ஸவும் சொல்லி மக்களை வென்றார். 16 ஆம் லூயியின் அடுத்த கட்டத்தை பாருங்கள். அவர் அந்த காலத்தில் அமெரிக்க விடுதலை போருக்காக பிரித்தானியர்களை எதிர்த்து பிரெஞ்சு படைகளை பெருமளவில் அனுப்பினார். அமெரிக்க குடியேற்றங்களில் பிரெஞ்சு படை அமெரிக்க குடியேற்றவாசிகளுடன் சேர்ந்து பிரித்தானிய படைகளுக்கெதிராக போராடின. பெரும் தொகையான பணத்தை இந்த போரில் 16 ஆம் லூயி செலவழித்தார். 

அமெரிக்க விடுதலைப் போர் வெற்றி பெறுவதற்கு பிரெஞ்சு படையின் பங்களிப்பும் ஒரு பிரதான காரணம். அமெரிக்க விடுதலைப்போரின் தந்தையாக இருந்த ஜோர்ஜ் வோசிங்டனோடு தோளோடு தோள் நின்றவர் அலெக்சாண்டர் ஹமில்டன் என்ற ஒரு பிரெஞ்சுக்கார தளபதி. இவர் தான் ஜோர்ச் வோசிங்டனுடைய உண்மையான ஆலோசகர், மற்றும் நிர்வாகி. அலெக்சாண்டர் ஹமில்டன் அரசியல் யாப்பின் உருவாக்கத்தில் மிகப்பெரும் பங்கெடுத்தவர். அவர் தான் வோசிங்டன் மனம் தளர்ந்த போதெல்லாம் அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து விடுதலைப் போரை  முன்னெடுத்தவர். அந்தளவுக்கு பிரான்சின் பங்களிப்பு அமெரிக்க விடுதலைப் போரில் இருந்தது.

இந்த விடுதலைப்போருக்கு 16 ஆம் லூயி படையனுப்பியதற்கு அவரிடமிருந்த நோக்கம் வேறு. அமெரிக்க மக்கள் விடுதலையடைய வேண்டும் என்பதற்காக அவர் படையனுப்பவில்லை. தனது எதிரியான பிரித்தானியா, காலனியை இழந்து தன் பொருளாதாரத்தில் பலவீனப்பட்டு நலிந்து போக வேண்டும் என்பதற்காகவே அவர் படைகளை அனுப்பி பிரித்தானியாவின் காலனி ஆட்சியை அகற்றப் போராடினார். இதில் அவர் பெரும் செலவுகளை செய்தார். இந்த பெரும் செலவும் பெரும் யுத்தமும் ஏற்படுத்திய சுமையில் இருந்தும் மீள முடியாத நிலையில் 16 ஆம் லூயி வீழ்ச்சியடைவதற்கான அடிப்படை ஆரம்பமானது.

அந்த நிலையில் பிரான்ஸினுடைய ஆட்சி மன்றத்தை அதன் அதிபர் கூட்டுகின்றார். ஆட்சி மன்றம் லூயிக்கெதிராக போர்க்கொடியெழுப்பத் தொடங்கியது. கடைசியாக லூயி பிரஞ்சு மக்களுக்கெதிராக கிளர்ச்சியை செய்து வகை தொகையின்றி பிரஞ்சு மக்களை வெட்டி கொல்கிறார். அதே கிளர்ச்சியால் தலை வெட்டப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். 16 ஆம் லூயியின் வசனம் கோதாபயவிற்கு விருப்பமானதாக முன்மொழியப்பட்டது. ஆனால், 16 ஆம் லூயிக்கு தண்டனை வழங்கப்பட்ட பிற்பகுதியை அவர் கவனிக்கத் தவறி இருக்கலாம். இது வரலாற்றின் முக்கியமான படிப்பினை.

தமிழ் மக்களின் பெயரால், நீதியின் பெயரால் சிங்கள மக்கள் கோத்தாபயவிற்கு எதிராக குரலெழுப்பவில்லை. கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்காக ஒரு சொட்டு கண்ணீரையும் வடிக்காத சிங்கள மக்கள் இதுவரை குரலெழுப்பாமல் இருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய யாராவது இருந்தால் அவர்களை ஒரு தொகை என்று சொல்ல முடியாது. சிலர் குரலெழுப்பினாலும் கூட அது தொகைக்குள் அடங்காது. இந்த நிலையில் 16 ஆம் லூயி மன்னனுடைய நிலை சிங்கள மக்களின் பிரச்சினையால் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் பொருளாதார பிரச்சினையால் ஏற்பட்டிருக்கிறது என்றுதான் பார்க்கிறார்கள். இல்லை, இது தமிழ் மக்களை ஒடுக்கியதனால், இனப்படுகொலை செய்யப்பட்டதன் பெயரால் ஏற்பட்டிருக்கிறது. இது ஒரு வரலாற்றின் தீர்ப்பு! இது ஒரு வரலாற்றின் விளைவு! வரலாற்றின் போக்கில் இது தவிர்க்கமுடியாதது! எனவே தான் இலங்கை இவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாகுமென முன்கூட்டியே உணரப்பட்டிருந்தது.

ஈழத்தமிழர்களின் பிரச்சினையையிட்டு கட்டியமாக ஒரு வசனம் கூற முடியும். சிங்கள மக்கள் தமக்குள்ள அரிசி, பாண், பருப்பு, சமையல் வாயு, எரிபொருட்களின் பெயரால் போராடுகிறார்கள். இது தீர அவர்கள் மீண்டும் கோத்தாபயவிற்கு கோவில் கட்டத் தவற மாட்டார்கள். தேர் கட்டி இழுப்பார்கள். இது அந்தப் பக்கத்தில் நிகழக்கூடிய நியதி. எமது பக்கம் அப்படிக் கிடையாது. நாங்கள் எங்கள் அடிப்படை கோரிக்கையில் இருந்து விலகிச்செல்ல மாட்டோம். அது வரலாற்றில் தீர்ப்பு வழங்கும் வரை நாம் ஓய மாட்டோம். இவ்வாறு  திட்டவட்டமாக சொல்ல முடியும்.

“இட்டு நிரப்பப்பட முடியாத அதல பாதாளமான வேறுபாடுகளை கொண்ட வகையில் ஈழத்தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமான பிரச்சினை இருக்கின்றது.” இது J.N. தீக்சித் அசைமென்ட் கொழும்பு (Assignment Colombo) என்ற நூலில் எழுதிய வசனம். இதனை வெறுமனே பொருளாதார சீர்திருத்தங்களால் ஒருபோதும் சரி செய்துவிட முடியாது என்றும், அதற்கு முன்பு அது பற்றி சரியாக புரிந்திருக்கவில்லை என்றும் அந்நூல் மூலம் அவர் சொல்லியிருக்கிறார். அன்றைய இந்திய கொள்கை வகுப்பாளர்களோ இந்திய பிரதமரோ ராஜீவ் காந்தியோ ராஜதந்திரிகளோ ராஜீவுக்கு ஆலோசனை சொல்லியவர்களோ கூட சரி வர புரிந்திருக்கவில்லையென்று சொல்லிவிட்டு இதனை கூறுகிறார். அந்தவகையில் அதலபாதாளமான இந்த பிரச்சனையை ஒருபோதும் இந்த விதமான சமரசங்களாலோ சாதாரணமான அரசியல் நடவடிக்கைகளாலோ இட்டு நிரப்பமுடியாது.

இது ஒரு தக்கபூர்வமான வளர்ச்சிக்குப் போய் நாடு பிரிந்து செல்வதில் முடிவடையும். இதனை இன்று பலரும் ஏற்க மறுக்கலாம். வரலாற்று கண்கொண்டு பார்க்காத வரை பலரும் இதனை தப்பு அல்லது பொய் அல்லது கற்பனை என்றும் சொல்லலாம். நிச்சயமாக நான் வரலாற்று கண்கொண்டு இதனைச் சொல்கிறேன். நாடு பிரிவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு நாளில் சிங்கள மக்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? 16 ஆம் லூயிக்கு நடந்த அந்த கிளர்ச்சியின் தண்டனையை ராஜபக்சக்களுக்கு வழங்க முன்வருவார்கள். நான் உங்கள் முன் மிகவும் கூர்மையான உதாரணங்களை சொல்லப் போகிறேன்.  

இலங்கையின் வரலாற்றில் முதன் முதலாக 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டத்தை பண்டாரநாயக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முற்பட்ட போது அந்த பிரேரணை பற்றி பேசியபோது, அன்று இருந்த டாக்டர் N.M.பெரேரா, பண்டாரநாயக்கவை நோக்கி இவ்வாறு சொன்னார். “இலங்கைத்தமிழர்கள் எதிர்காலத்தில் ஒரு சிலை எழுப்பி மாலை போடுவார்களாக இருந்தால் அந்த முதலாவது சிலையும் முதலாவது மாலையும் உனக்குத்தான் விழும். அது தமிழ்த் தலைவர்களுக்கு அல்ல. இந்த சிங்களச் சட்டத்தை கொண்டு வருவதன் பெறுபேறாக நாடு ஒருநாள் உடையும். அந்த உடைவுக்கு நன்றி கூறி தமிழ் மக்கள் உனக்கு சிலையெழுப்பி மாலை போடுவார்கள்” என்றார். தனிச்சிங்களச் சட்டம் சுதந்திரகட்சியின் தலைவருடைய ஒரு நடவடிக்கை. அந்தக் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானமும் அது தான்.

இரண்டாவது கட்டத்தை பார்த்தால், நாடு பண்டாரநாயக்கவால் பிரியும் என்று கால்கோள் கொள்ளப்பட்டது போல, ராஜபக்சக்களின் நடவடிக்கையினால் இட்டு நிரப்ப முடியாத வேதனையை தமிழ்மக்கள் அடைந்திருக்கிறார்கள். அவர்களை ஒன்றாலும் சமாதானப்படுத்த முடியாது. நாடு பிரிந்து செல்வதைத்தவிர. வரலாற்றில் ஈழத்தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான  வரலாற்று பக்கத்திற்கான எந்த ஒரு இடமும் ஒருபோதும்  கிடையாது. இனி எந்த கற்பனைக்கும் இடமில்லை. அதாவது சமாதானம் முக்கியமானது. சமாதானத்தை விட முக்கியமானது, அவமானமற்ற யுத்த தோல்வி. தமிழ் மக்கள் அவமானமான யுத்த தோல்வியைத் தழுவிக் கொண்டவர்கள். அவர்களுடைய விழுப்புண்கள், வடுக்கள் ஒரு போதும் மாறாது. அவர்கள் தங்கள் அவமானத்திலிருந்து விடுபட மீண்டும் மீண்டும் எழுந்து அவர்கள் நாட்டைப் பிரிக்க வேண்டும் என்கிற முடிவுக்குப் போவார்கள்.  இனப்படுகொலை யுத்தத்தால் வெற்றிப் பெற்ற சிங்கள அரசு யுத்தத்தின் வெற்றியின் பின்பு அந்த வெற்றியைப் பயன்படுத்தி சமாதானத்திற்கு போவதற்கு பதிலாக தமிழ்மக்களை அவமானப் படுத்தவும் ஒடுக்குவதற்குமான வாய்க்காலாகவே அந்த யுத்த வெற்றியைப் பயன்படுத்தியது.



ஆதலினால் கடந்த 13 ஆண்டுகளும் யுத்தத்தின் தோல்வியின் பின்பு ஏற்பட்ட அனுபவங்களும் தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களுடன் ஒட்டுவதற்கு எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை. ஆனபடியால் இனிமேல் தமிழ் மக்கள் மானசீகமாக ஒட்ட மாட்டார்கள். யுத்தத்தில் வெல்வது சாதாரண விடயம். சமாதானத்தை அடைவது மிக கடினமான விடயம். 

இலங்கையிலுள்ள எந்த ஒரு தலைவரும் அவர்களுக்கு எந்த திறமை இருப்பினும் நாட்டிற்கு சமாதானம் ஏற்படுத்த தவறியவர் என்ற வரலாற்றுப் பழிக்கு உள்ளாவார்கள். அவர்களுடைய இராணுவ வெற்றி பழிக்குரியது, பெருமைக்குரியது கிடையாது. யுத்தத்தில் தமிழ் மக்களுடைய இந்த தோல்வி தமிழ் மக்களால் என்றும் மறக்கப்பட முடியாத  அவமானத்துடன் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இத்தகைய அவமானத்துடன் தொங்கிக் கொண்டு இருக்கின்ற இந்த நிலையில் தமிழ் மக்கள் ஒரு போதும் எதிர்காலத்தில் அமைதியடையப் போவதில்லை. ஆதலினால் தமிழ் மக்கள் தங்களுடைய அடிப்படையான கோரிக்கையில் இருந்து முன்னேறுவதற்கு வரலாறு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும். ஜனநாயக ரீதியாக பயன்படுத்த வேண்டும். நீங்கள் பயன்படுத்தாது விட்டால் தமிழ்நாடும் உங்களை கவனிக்காது. நீங்கள் போராடாது விட்டால்  அமெரிக்காவும் உங்களை கவனிக்காது. இந்தியாவும் கவனிக்காது. தமிழ்நாடும் மறந்து போய்விடும். போராடினால் தான் உங்களுக்கு பிரச்சினையுண்டு என்று மற்றவர்கள் அவதானிப்பார்கள். எங்கள் பிரச்சினை பக்கமும் தலை வைப்பார்கள். நாங்கள் தனித்து  நின்று போராடி வெல்ல முடியாது. ஆனால் நாங்கள் போராடாது மற்றவர்களை போராட்டத்திற்கு அழைக்கவும் முடியாது. இந்தப் பின்னணியில் தமிழ்மக்களுடைய போராட்டம் மிக உன்னதமான ஒரு பாதையில் செல்வதற்கான வாய்ப்பை வரலாறு எமக்கு  வழங்கி இருக்கிறது. அவற்றை தமிழ்த்தலைவர்கள் செய்ய முற்படுவார்களா என்பதே கேள்வி. அவர்கள் எல்லோரும் அமைதி அடைந்து சுமூகமாக காட்சி அளிக்கிறார்கள். போராடுவதை தொழிலாக கொள்ளாது கோசங்களாக கொண்டுள்ளார்கள்.

இங்கு இன்னும் ஒரு விடயத்தை தெளிவாக முன்வைக்க வேண்டும்: மகாவம்ச மனப்பாங்கு. இதைப் பற்றி பலரும் பேசி இருக்கிறார்கள். ஆனால் இதனை அதிகம் கூர்மையாக பேசிய சிங்கள மகன் ஒருவர் இருக்கிறார். அவர் டொக்டர் E.W. அதிகாரம். அவர் ஒரு பாளி மொழி நிபுணர். அவர் 1983 கறுப்பு ஜூலை  இனப்படுகொலையை பார்த்து ஒரு வசனம் சொன்னார். “மகாவம்சத்தை ஒரு பிரதி கூட மிஞ்சாமல் எரித்தாக வேண்டும். மகாவம்சத்தை அப்படி எரிக்காமல் இலங்கைக்கு அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முடியாது.” என்று சொன்னார். 

இப்போது உங்களிடத்தில் ஒரு கடினமான உதாரணத்தை சொல்லப் போகிறேன்.  மகாவம்சத்தில் 25 வது அத்தியாயத்தில் 110 வது பாடல் இப்படித் தான் சொல்கிறது. துட்டகைமுனு யுத்தத்தில் தமிழர்களை கொன்று குவித்து தான் வெற்றி பெற்றதற்காக வேதனைப்படுவதாகவும் அந்த தமிழர்களை தான் கொன்று குவித்ததனால் தனக்கு மோட்சம் கிடைக்காது போய்விடும் என்று கவலைப்படுவதாக மகாவம்சத்தில் ஒரு பகுதி வருகின்றது. இது உண்மை பொய் என்பதற்கு அப்பால் இது மகாவம்சத்தில் எழுதப்பட்டிருக்கின்ற பகுதியாகும். அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் மத்தியில் காவிச்செல்லப்படுகின்றது என்பது தான் முக்கியமானது.

அப்போது பிக்குகள் கூட்டம் ஒன்று அவர் முன் தோன்றி சொல்கிறது. ‘தமிழர்கள் அதாவது நீங்கள் யுத்தத்தின்போது கொன்றவர்கள் எமது மார்க்கத்தை, மதத்தை சேராதவர்கள். மிருகங்களை விடவும் பெரிதாய் மதிக்கப்படத் தகாதவர்கள். இவர்கள் கொல்லப்பட்டதால் உனது மோட்சத்தின் பாதை அடைபட்டு போகாது. நீ கவலைபடாதே. உன் மோட்ச வாசல் திறந்தே இருக்கும்.’ என்று துட்டகாமினிக்கு தேரோக்கள் அதாவது மகாசங்க பிக்குகள் ஆறுதல் வழங்கியதாக வருகிறது. இதனை சிங்கள மக்கள் இன்றுவரை நம்புகிறார்கள். உண்மையாக நடந்ததா பொய்யா என்பது வேறு விடயம். ஆனால் சிங்கள மக்கள் நம்புகிறார்கள். இது அவர்களது வரலாற்று படிமமாக இருக்கின்றது. தமிழ் மக்களை எதிரியாகவும் இந்தியாவின் கைக்கூலியாகவும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவிகளாகவும் பார்த்து இந்திய எதிர்ப்பு வாதத்தின் அடிப்படையில் தமிழர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று சிங்கள மக்கள் முழுமனதாக இன்றும் நம்புகின்றார்கள்.

‘இந்தியா இலங்கையில் கால் ஊன்றக்கூடாது என்றால் தமிழர்களை முதலில் அழித்தாக வேண்டும். தமிழர்களின் பெயரால் தான் இலங்கையில் இந்தியா அரசியல் பலம் பெற முடியும். எனவே தமிழர்களை இலங்கையில் ஒழிக்காமல் இந்தியாவினுடைய ஆதிக்கத்தை இலங்கையில் இல்லாமல் பண்ண முடியாது. இந்திய ஆதிக்கத்தை இல்லாமல் பண்ண தமிழர்களை ஒழித்தாக வேண்டும்.’ இது தான் சிங்கள மக்களினதும் அறிஞர்களினதும் மகாசங்கத்தினருடையதும் தலைவர்களினதும் பிரதானமான சிந்தனை. 1956 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கூட இது சம்பந்தமாக பண்டாரநாயக்கவின் உரையில் இதுபற்றிய வெளிப்பாடுகள் உண்டு. பல நூல்களிலும் உண்டு. இந்த மகாவம்ச மனப்பாங்கு இனப்படுகொலையை தர்மமாக எப்போதுமே  போதிக்கிறது மட்டுமல்ல, தமிழர்கள் மிருகத்தை விடவும் மேலானவர்கள் அல்ல என்று சொல்கிறது. இத்தகைய பின்னணியில் நீங்கள் இலங்கையில் ஒட்டி வாழலாமென்று யாரும் கற்பனை செய்ய முடியாது.

இன்று எங்கு பலவீனம் இருக்கின்றதோ அங்கு அதனை பயன்படுத்து. புனிதர்களாக காண்பிக்கப்பட்ட கோத்தாபய ராஜபக்சவை, நீ மன்னரல்ல ஓடிப் போ என்று சிங்கள மக்கள் குரலெழுப்பும் ஒரு வரலாற்று கட்டம் வந்திருக்கும் போது தமிழர்களும் அதில் தமக்குரிய பாத்திரத்தை சேர்ந்து வகிக்க வேண்டும். ராஜபக்சக்கள் புனிதரல்ல என்று தெரிய வருகின்ற போது எங்களை கொன்று குவித்ததில் தமக்கும் பங்குண்டு என்பதை சிங்களவர்கள் உணர்வார்கள். அதை உணர வைப்பதற்கு எங்களுடைய கோரிக்கையை நாங்கள் ஆழமாக முன் வைக்க வேண்டும். முன்வைக்கத் தவறினால் நாங்கள் கைவிடப்பட்டு போவோம். உன்னை நீ கைவிட்டு விட்டால் உன்னை எவரும் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். உன்னை நீ கைவிட்டு விட்டால் உன்னை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.  ஆகவே தமிழ்மக்கள் உண்மையாகவே போராட வேண்டிய கட்டத்துக்கு வந்திருக்கிறார்கள். மேற்படி சொன்ன நான்கு கோரிக்கையோடும் சிங்கள மக்களின் கோரிக்கைகளையும்  சேர்த்து போராடப் போகிறோம் என்பதை தமிழர்கள் உணர வேண்டும்.


தொகுப்பு - கார்த்திகா 

இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தை வாசிக்க...

திரு பார்வை - Thiru Vision: இனப்படுகொலையின் மறுபக்கமே இன்றைய சிங்கள அரசியற் கொதிநிலை; இதில் தமிழரின் நிலையென்ன? அடுத்ததென்ன? பகுதி : 02

அதிகம் பார்க்கப்பட்டவை: