புதன், 23 ஜூலை, 2025

இலங்கையில் மீண்டும் இனப்படுகொலை நடக்கும். - மு.திருநாவுக்கரசு அவர்களுடன் நேர்காணல்.

 


தடம் இணைய இதழுக்கு மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய இந்த நேர்காணலானது, 5 காணொலி பாகங்களாக யூட்யூப் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் காணொலிகளின் இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

இலங்கையில் சிங்களர், இலங்கை பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து 1948ல் விடுதலை அடைவதற்கு முன்பும் கூட  தமிழரை தங்கள் இனத்தின் எதிரிகளாகவே கருதிவந்தார்கள் என்பதற்கு வரலாற்று சம்பவங்கள் நிறையவே உண்டு.


1948ல் பெரும்பான்மையான பலத்துடன் இலங்கையின் அரசை கைப்பற்றியதிலிருந்து திட்டமிட்ட வகையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை திட்டத்தை தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளனர் சிங்களர்.

1980களில் ஆயுதப் போராட்டம் தமிழரால் சிங்களர் சித்திரவதைக் கொடுமைகளை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டது. 1983 ல் யாழ் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு ராணுவ வேனை விடுதலைப் புலிகள் கண்ணி வெடி வைத்து தகர்த்ததில் அதில் பயணம் செய்த 13 சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 

கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்களை கொழும்பில் வைத்து தகனம் செய்ய சிங்கள அரசு முயல, ஆனால் சிங்கள இனவெறியாளர்கள் அந்த வீரர்களின் உடல்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி அங்கே அவ்வுடல்களை வைத்து பெரும் ஊர்வலங்கள் நடத்தி தமிழர் மீதான வெறுப்புணர்வில் நெய் ஊற்றினர்.

இதைச் சாக்காகக் கொண்டு தமிழரைக் கொல்ல சிங்கள அரசு அதிகாரத்திலிருந்தவர்கள் திட்டமிட்டனர். அதைத் தொடர்ந்து தமிழ்ப் பகுதிகளில், ஜூலை 23 முதல் ஜூலை 30 வரை சிங்களரால் சிங்கள அரசின் ஆதரவோடு, சாதாரண பொதுமக்களான ஈழத்தமிழரை கும்பல் கும்பலாக சேர்ந்து சிங்கள இனவெறியர்கள் அடித்து, எரித்து, பாலியல் வன்புணர்வு செய்து, தீயில் தூக்கிப் போட்டு , இப்படி பலவாறாக கொலை செய்தார்கள். 


தமி்ழ் மக்களின் வீடுகளில் ராணுவம் மற்றும் போலீஸ் உதவியுடன் புகுந்த 

சிங்களர்கள் தமிழரை சித்திரவதை செய்து கொன்றதுடன் அவர்கள் வீட்டிலிருந்த அனைத்து உடைமைகளையும் கொள்ளையடித்து அல்லது அழித்துச் சென்றார்கள்.


இலங்கை வெலிக்கடை சிறையிலும் இந்தப் படுகொலையை ஒட்டி ஏற்கனவே சிறைத் தண்டனையில் வைக்கப்பட்டிருந்த புளோட் ஆயுதப் போராட்டக் குழுவின் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை மூன்று பேரையும், அவர்களையும் சேர்த்து மொத்தம் 35 தமிழர்களை , சிறைக்குள்ளேயே சிங்கள இனவெறியர்கள் சிறைத்துறையின் அனுமதியோடு, சித்திரவதை செய்து கொன்றனர்.


1983 யூலைக் கலவரத்தினால் 3000 பேர்வரை, தமிழர்கள் குழந்தைகள் முதல் பெண்கள், பெரியவர்கள் வரை என அனைத்து வயதுகளிலும் கொல்லப்பட்டனர், பத்துலட்சம் பேர் இடம் பெயர்ந்து சென்று முகாம்களில் அடைக்கப்பட்டனர். 13 சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்வினை என்பதாக சிங்கள அரசு இதைத் திட்டமிட்டு செய்து முடித்தது. இது திட்டமிட்ட செயல்தான் என்பதற்கு எண்ணற்றோர் சாட்சிகளாக உள்ளனர், திரு மு.திருநாவுக்கரசு அவர்களும் அப்படி ஒரு சாட்சியாக நடந்த படுகொலைகள் பற்றிய உண்மைகளை உரைக்கிறார்.

நடத்தப்பட்ட யூலைக் கலவரம், படுகொலைகள் சம்பந்தமாக, தனது அனுபவங்களையும், அப்போதைய சிங்களரின் இன அழிப்பு அரசியலையும் பற்றி இந்தக் காணொலியில் விவரிக்கிறார் வரலாற்று ஆய்வாளரும் , வரலாற்று ஆசானுமாகிய திரு மு.திருநாவுக்கரசு அவர்கள்.


தடம் இணையத்துக்கு வழங்கிய பேட்டியின் காணொலி. 

காணொலி பாகம் 1. 
கருப்பு ஜூலை புகைப்படம் வெளிவந்தது எப்படி? | Welikada Prison Massacre




காணொலி பாகம் 2 
மகாவம்சம் சொல்வது ; தமிழர்கள் மிருகத்தைவிட கேவலமானவர்கள் | Tamil Tigers peace Talks



இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலர் தீக்சித் அவர்களின் கூற்றுப்படி, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முறித்தது சிங்கள அரசே. விடுதலைப் புலிகள் அல்ல. 
கீழ்க்காணும் Assignment Colombo என்கிற புத்தகத்தின் பக்கங்களில் அவர் தந்த அறிக்கையை படிக்கலாம்.

 




காணொலி பாகம் 3 
இலங்கையின் ஜனாதிபதியும் இடதுசாரித் தலைவருமான அநுரகுமார திசநாயகே ஏன் இதுவரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளுக்கு வருந்தி ஒரு மலர்வளையும் கூட வைத்ததில்லை ? 



இலங்கை இரண்டாக கண்டிப்பாக உடையும். தமிழருக்கான ஒரு தனி நாடு உருவாகியே தீரும். அப்போது ஜே.வி.பி மீண்டும் ஒரு இன அழிப்பை முன்னெடுக்கும். குறைந்தது இரண்டு லட்சம் பேர் கொல்லப்படுவார்கள். ஆனால் இலங்கை பிரிவதைத் தடுக்க இயலாது.

காசா படுகொலைகளையும், உலகெங்கும் உள்ள இனப்படுகொலைகளையும் ஆண்டுதோறும் இன்றும் நினைவு கூறும் தமிழ்நாட்டு இடதுசாரிகள் முள்ளிவாய்க்கால் நினைவுகளை ஏன் ஒரு முறை கூட நினைவு கூரவில்லை ? கம்யூனிசம் என்கிற தத்துவத்திற்கே இது இழுக்கு இல்லையா. 






திங்கள், 21 ஜூலை, 2025

1983 யூலைக் கலவரம் சம்பந்தமாக, இதுவரை வெளிவந்திராத புதிய தகவல்கள் - மு.திருநாவுக்கரசு

 

1983 ல் இலங்கையில் தமிழ்ப் பகுதிகளில், ஜூலை 23 முதல் ஜூலை 30 வரை சிங்களரால் சிங்கள அரசின் ஆதரவோடு, ஈழத்தமிழர் மீது நடத்தப்பட்ட யூலைக் கலவரம், படுகொலைகள் சம்பந்தமாக,  இதுவரை வெளிவந்திராத புதிய தகவல்கள்.

வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள்,
யூலைப் படுகொலைகளின் நினைவு தினத்தையொட்டி,
லங்காஸ்ரீ  செய்தி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்

20-07-2025

மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய நேர்காணலின் காணெலி, யூட்யூப் வலைத்தளத்தில் பார்க்க. இணைப்பு கீழே.




காணொலியில் மு.திருநாவுக்கரசு அவர்கள் முன்வைத்த கருத்துக்களில் சில கீழே..

1983 ல் இலங்கையில் நடந்த கறுப்பு யூலை படுகொலைகள் சிங்களரால் தமிழர் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் இனியும் சிங்களருடன் தமிழர் இணைந்து சமமாக , சம உரிமைகளோடு வாழ்தல் சாத்தியமற்றது என்பதை நிரூபித்தது.




இப்படுகொலைகளுக்கு ஆதாரமாக இருந்தது அந்த நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அவற்றை எடுத்தவர்கள் சிங்கள கொம்யூனிஸ்ட் கட்சியினர். அக்கட்சியின் செயலாளர் கீர்த்தி பாலசூர்யாவின் தலைமையில் இருந்த தோழர்கள் அப்புகைப்படங்களை எடுத்து தோழர் மு.திருநாவுக்கரசு அவர்களுக்கு அனுப்ப, அவர் மூலமாக அவை பிரபாகரனுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. 
கீர்த்தி பாலசூர்யா எடுத்து அனுப்பிய அந்த 14 கறுப்பு வெள்ளை புகைப்படங்களை பேபி சுப்ரமணியம் அவர்கள் தமிழ்நாட்டில் கறுப்பு யூலை படுகொலை தொடர்பான கண்காட்சியில் காட்சிப் படுத்தினார். அதன் பின்பே அவை உலகெங்கும் பரவி கறுப்பு யூலைப் படுகொலைகளின் சாட்சியமாக மாறி நின்றன.

--  --  --  --  --  --  --  --  --  --  --  --  -- --  --  --  -- 

காலனி எதிர்ப்புப் போராட்டம் என்பது காலனி அரசை எதிர்த்து விடுதலை கோரிய போராட்டம். அவை நிச்சயம் வெற்றி பெறும். ஏனெனில் ஒடுக்கும் அரசு அந்நிய நாட்டு அரசு. அது என்றாவது ஒரு நாள் வெளியேறியே ஆக வேண்டும் என்பது விதி.
ஆனால் தேசிய இனப் போராட்டங்கள் உள்நாட்டில் உள்ள இனங்களுக்கிடையே நிகழ்பவை. தேசிய இனப் போராட்டம் நிகழ, நாட்டிற்கு வெளிய ஒரு பலமான அரசு ஆதரவாக இருக்க வேண்டும். இது ஒரு தேவை.

அப்படி ஒரு ஆதரவாக இந்திய அரசும், தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் ஈழத் தமிழருக்கு இருந்தன. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் தமிழ்நாட்டில் தளம் அமைத்து இயங்கியவரை தான் வெற்றி பெற்றது. அது பாக் நீரிணைப்பில் தனது கட்டுப்பாட்டை இழந்த பின்பு, தமிழ்நாட்டின், இந்திய அரசின் ஆதரவை இழந்த பின்பு அது படிப்படியாக பலமிழந்து கடைசியில் முள்ளிவாய்க்காலில் முடிந்து போனது.

--  --  --  --  --  --  --  --  --  --  --  --  -- --  --  --  -- 

உலகில் ஒடுக்கப்பட்ட இனங்கள் விடுதலையடைந்தது, விடுதலையடைந்திருப்பது, இனியும் விடுதலையடைவதானது, ஒரு பலம் பொருந்திய வெளி அரசின் உறுதியான ஆதரவு இல்லாமல் சாத்தியமே இல்லை என்பது வரலாற்று உண்மை.

--  --  --  --  --  --  --  --  --  --  --  --  -- --  --  --  -- 
ஈழத் தமிழர் இனம் சிறிய எண்ணிக்கையிலானது, இலங்கையில் அதன் விடுதலைப் பரப்பும் சிறியது. எனவே 10 ஆண்டுகளுக்கு மேல் ஈழப் போராட்டம் நடந்தால் அது தோல்வியுறும் என்று 1980 லேயே கணித்துச் சொல்லியிருக்கிறார் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள். 20 வருடங்களுக்கும் மேலாக ஈழப் போராட்டம் இலங்கை மண்ணில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் ஆதரவுத் தளத்தை இழந்தாலும் ஈழப் போராட்டம் இலங்கை மண்ணில் தோல்வியுறும் என்றும் கணித்துக் கூறினார். அப்படி தமிழ்நாட்டின் ஆதரவுத் தளத்தை இழக்க வைக்க சிங்களர் செய்த சாணக்கியத் தந்திரங்கள் ஈழப் போராட்டத்தை தமிழ்நாட்டிலிருந்து தனிமைப் படுத்தின.
 
--  --  --  --  --  --  --  --  --  --  --  --  -- --  --  --  --
முள்ளிவாய்க்காலுக்குப் பின் விடுதலைக்கான நம்பிக்கைகள் அனைத்தும் முடிந்து போயின என்றாலும் இனப்படுகொலை, அதற்கான பதில் என்ன, யார் பொறுப்பு, யார் தீர்வு, யார் குற்றவாளி என்கிற கேள்விகளை உலகம் முழுவதும் மக்களிடம் எழுப்புவதன் மூலம் அந்த அரசுகளையும் தமிழினப் படுகொலைக்கான நியாயத்தை நோக்கி ஈர்க்கமுடியும். இனப்படுகொலையே , அதற்கான நியாயத்தை எழுப்பி ஜனநாயக ரீதியாக உலகெங்கும் போராடுவதே ஈழத்தமிழரின் விடுதலைக்கான புதிய ஆயுதமாக இருக்கிறது.

--  --  --  --  --  --  --  --  --  --  --  --  -- --  --  --  -- 

ஈழத்திற்கு சைப்ரஸ் தீவுகள் பாணியிலான தீர்வு ஒன்றை இந்திராகாந்தி - பார்த்தசாரதி வைத்திருந்தார்கள். அதன்படி இந்திய ராணுவம் இலங்கையின் வடக்கு , கிழக்கு பகுதிகளில் இறங்கி சிங்களரை விரட்டியடிக்கும். பின்பு தனது படையை அங்கேயே வைத்திருந்து தமிழர்களை பாதுகாக்கும். தமிழருக்கான உரிமைகளை சிங்கள அரசு வழங்க ஆரம்பித்த பின் சில ஆண்டுகளில் படிப்படியாக இந்திய ராணுவம் அப்பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்படும்.
--  --  --  --  --  --  --  --  --  --  --  --  -- --  --  --  --
ஐக்கிய நாடுகள் சபை அரசுகளுக்கானதே, அரசுகளுக்கிடையே நடக்கும் பிரச்சனைகளை தீர்க்கவே உருவாக்கப்பட்டதே அன்றி, அது உலகெங்கும் ஒடுக்கப்படும் இனங்களை காப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல. அந்த சபையானது நாட்டு அரசுகளுக்கிடையான தகராறுகள், பிரச்சனைகளை தீர்க்க மட்டுமே அமைக்கப்பட்டிருக்கிறது. நாட்டு மக்களுக்கான பிரச்சனைகளை தீர்க்க முன்வராது. முடியாது. ஐக்கிய நாடுகள் சபையில் போய் ஒப்பாரி வைப்பதால் ஈழத்தமிழருக்கு எந்த தீர்வும் கிடைத்துவிடாது .

--  --  --  --  --  --  --  --  --  --  --  --  -- --  --  --  -- 

ஈழத் தமிழர்கள் தங்களுக்கான ஆதரவை உலக நாட்டு அரசுகளை கேட்பதை விட, உலக நாட்டு மக்களிடமிருந்தும், இந்திய அரசை கேட்பதை விட இந்திய மக்களிடமிருந்தும், தமிழ்நாட்டு அரசுகளை கேட்பதை விட தமிழ் மக்களிடமிருந்தும் முதலில் திரட்ட முனைந்தால், மக்களின் கவனத்தை ஈர்க்க முடிந்தால், இந்த அரசுகள் அனைத்தும் பின்னர் மெதுவாக ஈழத்தமிழருக்கு நியாயம் செய்ய தானே முயற்சி செய்யவேண்டிய தேவை வரும்.


--  --  --  --  --  --  --  --  --  --  --  --  -- --  --  --  -- 





அதிகம் பார்க்கப்பட்டவை: