திங்கள், 22 டிசம்பர், 2025

சென்னையில் திறவுகோல். - மு.திருநாவுக்கரசு. 18.11.2006.

ஆசிரியர் குறிப்பு. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் 18.11.2006 திகதி பதிப்பில் அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு வன்னியில் இருந்து எழுதிய சென்னையில் திறவுகோல் எனும் இக்கட்டுரை முதன் முதலாக வெளிவந்தது. இக்கட்டுரையை பின்னர்"" புதினம் "" இணையத்தளமும் மறுபிரசுரம் செய்திருந்த.

காலத்தின் தேவையை உணர்ந்து இக்கட்டுரையை நன்றியுடன் இங்கே மறு பிரசுரம் செய்கின்றோம்.



சென்னையில் திறவுகோல். 
- மு.திருநாவுக்கரசு. 18.11.2006.

திராவிட இயக்கம் தந்த ஜனநாயக எழுச்சி

"சாமானியர்களின் சகாப்தம்" என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் சக்தியாய் 1960களில் திரட்டி எடுத்தார். மக்கள் திரள் அரசியற் சக்தியான போது எதிரிகளின் கொடி, குடை, ஆலவட்டங்கள் சரிந்து விழுந்தன. இதன் வழியே தமிழகமானது மக்கள் திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட களமாகியது.

அப்படி மக்கள் திரளாக்கப்பட்ட தமிழக அரசியலின் பலம்தான் தமிழீழ மக்களின் பலமுங்கூட. இதனை உலகலாவிய அரசியல் யதார்த்தத்தில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

தமிழக மக்களை ஜனநாயக அலைக்குள் இழுத்துவிட்டதில் அண்ணாவிற்கு மிகப்பெரும் பங்கு உண்டு. அந்நியர்களிடமும், மன்னர்களிடமும், பிரபுக்களிடமும் சிக்குண்டு இருந்த அரசியல் அதிகாரத்தை மக்களின் கைகளுக்கு மாற்றுவதற்கான பெயர் தான் தேசியம்.

மன்னர்களிடமோ, வம்சங்களிடமோ, எதேச்சதிகாரிகளிடமோ, இனவாதிகளிடமோ அரசியல் அதிகாரம் சிறைப்பட்டிருக்காது. அதை மக்களின் கைகளுக்கு உரியதாக்குவதைத்தான் ஜனநாயகம் என்கின்றோம். அத்தகைய ஜனநாயகத்தை வாழ வைப்பதற்கான ஒரு வடிவமே தேசியம் என்பதாகும். ஆதலால் தேசியம் என்பது அடிப்படையில் ஜனநாயக அமைப்பு ஆகும்.

எங்கு ஜனநாயகம் இல்லையோ அங்கு தேசியம் இல்லை. அரசியல் அதிகாரம் சாமானியர்களுக்கு உரியது. மக்களே நாயகர்கள். இதுதான் தேசியத்தின் அறைகூவல். இத்தகைய அறைகூவல் 1960களில் தமிழகத்தில் துடிப்புடன் எழுந்தது.

திராவிட இயக்கத்தின் எழுச்சி என்பதும் இத்தகைய தேவையின் வெளிப்பாடுதான் "சாமானியர்களின் சகாப்தம்" என்ற இந்த ஜனநாயக உள்ளடக்கத்தைத்தான் "திராவிட இயக்கம்" என்ற இயக்கத்ின் பெயரில் மக்கள் ஆதரித்தார்கள்.

இலங்கையின் அரசும் - அரசாங்கமும், தமிழ்நாடும்

இலங்கைத்தீவின் அரசியலிலும் அரசியல் தீர்மானங்களிலும் தமிழ் பேசும் மக்களுக்கு பங்கில்லை என்ற போது,  தமது வாழ்நிலையை அவர்கள் தீர்மானிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது, சிங்கள இனவாதம் தனது இரும்புக்கரங்களை விரித்தபோது,

ஜனநாயகத்தின் தேவையாய் தமிழ்பேசும் ஈழ மக்கள் தேசிய வழியில் போராடப் புறப்பட்டமை தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று நிர்ப்பந்தமாகும். அதுவே ஜனநாயகத்திற்கான ஒரே ஒரு மூலமும் ஆகும்.

சிங்கள அரசு இனவாத ஒடுக்குமுறையை கட்டவிழ்த்த விட்ட போது, உலகிலுள்ள அரசுகள், உலகில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசு என்ற ரீதியில் ,  சிங்கள இனவாத அரசுடன் சமரசம் செய்யும் ஒரு நடைமுறையே உலக அரசியலின் இலங்கைக்கான பொதுப் போக்காய் அமைந்தது. அதன் இனவாதப் படுகொலைகளோ அநீதிகளோ உறவாடும் அரசுகளுக்கு ஒரு அநீதியாய் தோன்றுவதில்லை.

பனிப்போரின் பின் பின்னான உலக யதார்த்தங்கள் மேலும் இந்நிலையைப் பலப்படுத்தி உள்ளன. உலகலாவிய பொருளாதார நலன்களுக்காக உலகிலுள்ள அரசுகள் எல்லாம் தம்மிடையே சமரசம் செய்து இலங்கை அரசுடனும் சமரசப் போக்கை நடைமுறையில் பின்பற்றுகின்றன.

இந்நிலையில் தமிழீழ மக்களுக்கான பலம் உலக அரசுகள் என்ற கட்டமைப்புக்குள் இருக்க முடியாது. அரசுகளிடம் நீதி, நியாயம் என்பது இல்லை. மாறாக பொருளாதார, இராணுவ, அரசியல் நலன்களே உள்ளன. இத்தகைய நலன்களுக்காக எத்தகைய அநீதியுடனும் அரசுகள் கைகோர்க்கும், ஒத்துழைக்கும்.

இந்த அடிப்டையில் இலங்கையை ஆளும் அரசுடன் உலகிலுள்ள அரசுகள் ஒத்துழைக்கும் நிலையில் உள்ளன. மனித உரிமை என்ற ஒரு கவசத்தை போர்த்துக்கொண்டு உலகிலுள்ள அரசுகள் ராஜபக்ச அரசாங்கத்தை குறை கூறினாலும் பொருளாதார, இராணுவப் பரிமாணங்களில் உலகில் உள்ள அரசுகள் ராஜபக்சவுக்கு செயல்பூர்வ அர்த்தத்தில் துணை நிற்பதன் அடிப்படையும் இதுவே ஆகும்.

இதில் "அரசு"(State), "அரசாங்கம்"(Government) என்ற பதங்களை அரசியல் விஞ்ஞான அர்த்தத்தில் பொருள் பிரித்து எடைபோட வேண்டும். 
அரசு (State) என்பது நான்கு கூறுகளை உள்ளடக்கிய அரசியல் அமைப்பு.
அவை,

1. ஒரு பரந்த நிலப்பரப்பு,
2. அந்நிலப்பரப்பின் மக்கள்,
3. மக்களின் இறையாண்மை (Sovereignty) மற்றும்
4. மக்களை நிர்வகிக்கும் அரசாங்கம் ஆகியவை. 

இதில் அரசாங்கம் (Government) என்பது அரசின் ஒரு கூறு மட்டுமே. அரசாங்கம் என்பது அரசின் ஆணைகளைச் செயல்படுத்தும் கருவி அல்லது செயல்முறை அமைப்பு (Working Agency) ஆகும்.

உலகில் உள்ள அரசுகளுக்கு இலங்கையின் புவிசார் இருப்பிடத்தின் முக்கியத்துவத்தால் இலங்கை அரசுடனான உறவு அவசியமானது. ஆனால் ராஜபக்ச அரசாங்கம் பற்றி சில வசதியீனங்கள் உலகில் உள்ள சில அரசுகளுக்கு இருந்தாலும் அந்த அரசுகளுக்கு இலங்கை அரசுடனான உறவு அவசியம் என்றதன் அடிப்படையில்தான் அத்தகைய அரசுகளும் ராஜபக்ச அரசாங்கத்திற்கு உதவும் நிலையில் உள்ளன.

இத்தகைய உலகலாவிய அரசுகளின் வியூகத்தை உடைப்பதற்கான ஒரே ஒரு மூலோபாயம் தமிழகம் மட்டும்தான்.

முழு இந்தியாவிலும, அதிகமாக ஜனத்திரள் அரசியலுக்கு பெரிதும் பழக்கப்பட்டிருக்கும் மக்களாய் தமிழ்நாட்டு மக்கள் உள்ளனர். இது அரசியலில் சிறப்பானதும் முற்போக்கானதுமான அம்சமாகும்.

தமிழக மக்களிடம் தமிழீழ மக்கள் பற்றிய நீதியின் பாலான இனமான உணர்வு பெரிதும் உண்டு. சிங்கள உயர் குழாத்தின் தமிழ் இன ஒடுக்கு முறைக்கும் இனப் படுகொலைகளுக்கும் எதிரான நீதியின் பாலான ஒரே ஒரு செயல்பூர்வக் குரலாய் தமிழ்நாட்டு மக்களே இருந்துள்ளனர். இருந்து வருகின்றனர்.

அத்தகைய ஜனத்திரளின் ஒருமித்த ஆதரவுதான் சர்வதேச அரங்கில் தமிழீழ மக்கள் பிரவேசிப்பதற்கான ஒரே ஒரு பாதையாகும்.

சென்னை திரண்ட ழும்போது புதுடில்லி சென்னைக்குப் பணியும்.
புதுடில்லி பணியும் போது உலகம் புதுடில்லிக்கு தலைசாய்க்கும்.
இது தான் எளிமையான சூத்திரம்..

இதனை முற்றிலும் விஞ்ஞான பூர்வமாக விளக்க முயல்வோம்.

இலங்கை அரசு பற்றிய இந்தியாவின் தவறான புரிதல்

இராணுவ அர்த்தத்தில் இலங்கைத்தீவு பிரிக்கப்படாத "" ஓர் அரசாக ""இருப்பது இலாபம் என புதுடில்லி நினைக்கின்றது. ஆனால் அது ஒரு தவறான நினைப்பு என்பதை சிங்கள உயர் குழாத்தின் அரசியலை விளங்கிக் கொண்டோருக்குத் தெரியும். து ஒரு புறமாக இருக்கட்டும்.

(இலங்கை பிரிக்கப்படாத ஓர் அரசாக இருப்பதோ அல்லது ஈழத்தமிழரை முழுவதும் அழித்த, வெறும் சிங்கள இன மக்கள் மட்டுமே வாழும் அரசாக இருப்பதோ, எதுவாக இருந்தாலும், அது, இந்தியா தன்னை அதிகார பலம் கொண்டு என்றைக்காவது விழுங்கிவிடும் ஒரு மாபெரும் மலைப்பாம்பு என்கிற உள்ளூர இருக்கும் அச்சத்தோடும், ஜாக்கிரதை உணர்வோடுமே, 2 ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவை அனுகியுள்ளது, இந்தியாவை தந்திரமாகக் கையாண்டு தப்பித்து வந்துள்ளது என்பதை 
வரலாறெங்கும் உள்ள ஆதாரங்கள் கொண்டு வேறு கட்டுரைகளில் விரிவாக ஆசிரியர் விளக்கியுள்ளார். அந்த மலைப்பாம்பின் குட்டிகளாக ஈழத் தமிழரை சிங்கள இனவாதம் பார்க்கிறது என்பதையும் விளக்கியுள்ளார்.)

புதுடில்லி மேற்படி தவறாக புரிந்துகொண்டு இலங்கையின் "ஒருமைப்பாட்டை" ஆதரித்து உதவுகின்ற போதிலும் புதுடில்லியின் 40 நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட சென்னை கிளர்ந்து எழும் போது அரசியல் நலனுக்காக புதுடில்லி சென்னைக்கு பணிய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.

முதலாவதாக, ஆறரைக்கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாடு எழுச்சி பெறும் போது, அதுவும் ஜனத்திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட தமிழகம் எழும்போது புதுடில்லியால் பணிவதை தவிர வேறு வழி இருக்க முடியாது.

இத்தகைய ஜனத்திரள் என்னும் பலத்தை தமிழகத்திற்கு திரட்டிக் கொடுத்தது தமிழகத்திற்கான அறிஞர் அண்ணாவின் பெருங்கொடையாகும்.

இரண்டாவது அம்சம் மத்தியில் 40 நாடாளுமன்ற ஆசனங்கள்; 
இந்தியாவில் தனிக்கட்சி ஆட்சியின் காலம் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. மாநிலக் கட்சிகளை அரவணைக்கின்ற கூட்ட ரசாங்கங்களே இனிமேல் பதவிக்கு வரலாம்.

இந்த வகையில் கூட்ட ரசாங்கத்தை அமைக்கக்கூடிய எந்த ஒரு முக்கிய கட்சியும் தமிழகத்தை பகைக்க மாட்டாது.

ஆதலால் தமிழக மக்கள்தான் தமிழீழ மக்களுக்கான இருதய சக்தி. அதேவேளை தமிழக மக்களுக்கும் தமிழீழப் பிரதேசமே முதற்தர பாதுகாப்பு அரணாகும் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் சிங்கள உயர்குழாத்து இலங்கை அரசு இந்திய அரசுக்கு எதிரான அரசுகளுடன் சோரம் போகும் இயல்பைக் கொண்டுள்ளது. இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா காலத்தில் இருந்து இற்றை வரை இந்தப் போக்கைத் தெளிவாகக் காணலாம்.

இலங்கையின் மூலோபாய மற்றும் இந்தியப் பெருங்கடலில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு, கிழக்கு என்ற தமிழீழப் பிரதேசங்கள் தமிழ் மக்களின் கையில் இல்லை; சிங்களரின் அதிகாரத்தில் தான் உள்ளன. தமிழர் கையில் இருந்திருந்தால் கூட சிங்கள ஆளும் உயர்குழாத்தினர் இலகுவாகவே அந்நிய சக்திகளுக்கு அடிபணிந்து இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் தெளிவாக கூட்டுச் சேரும் முனைப்பு உள்ளவர்கள்.

இதன்படி தமிழீழ மக்களின் பலம் குன்றினால், தமிழ்நாட்டின், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு முதலில் கெடுவதுடன், அதன் வழியே முழு இந்திய தேசத்தின் பாதுகாப்பும் கெட்டுவிடும். ஆதலால் தமிழீழ மக்கள் இப் பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒரு முக்கியமான கேந்திர மக்கள் என்பதை தமிழகமும் இந்திய தேசமும் கருத்தில் எடுக்க வேண்டியது அவசியம்.

பரந்த இந்தியாவோடு ஏற்படும் உறவால் உலகிலுள்ள ஏனைய அரசுகளுக்கு பாரிய நலன்கள் உண்டு. ஆதலால் இந்திய அரசிற்குள்ளாகத்தான் அவை இலங்கைத்தீவை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு. தற்போது இந்தியா உட்பட உலகில் உள்ள எந்த ஒரு அரசும் தமிழீழ மக்களுக்கு ஆதரவக இல்லை என்பது வெளிப்படையானது.

ஆனால் தமிழ்நாட்டின் ஆறரைக் கோடி மக்களைக் கொண்ட ஜனத்திரளின் முன் புதுடில்லி பணியும் போது முதலில் புதுடில்லியின் கூட்டணி அரசும் தமிழர் பக்கம் தலைசாய்க்கத் தொடங்கும்; ஈழத் தமிழரின் மீதான அநீதிக்கு கேள்வி எழுப்பும் நிலை உருவாகும். அதனைத் தொடர்ந்து உலகில் இந்தியாவுடன் இணக்கமாக உள்ள ஏனைய அரசுகளும் தலைசாய்க்க முற்படும். இறுதியில் எஞ்சியிருக்கும் சில அரசுகளும் காலகதியில் தலைசாய்க்கும். இதுதான் யதார்த்தம்.

ஆதலால் தமிழீழ மக்களின் அனைத்து நலன்களுக்குமான, பெறவேண்டிய நீதிக்கான திறவுகோல் சென்னையில்தான் உள்ளது.

அந்த தமிழக ஜனத்திரளின் ஆதரவே,
உலகளாவிய அர்த்தத்தில் தமிழீழ ஜனநாயக நலனுக்கான திறவுகோலும் கூட.

 

தமிழீழ மக்களும் தமிழ்நாடும்

தமிழீழ ஜனநாயக மீட்பிலிருந்தே சிங்கள மக்களுக்கான ஜனநாயக மீட்பும் உருவாகும். சிங்கள உயர்குழாத்தின் இனவாத அரசியலுக்கு முடிவு கட்டுவதன் மூலம்தான் பரந்துபட்ட சிங்கள மக்களின் ஜனநாயகமும் உருப்பெற முடியும்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளினதும் கட்சி அரசியலுக்குள் தமிழீழ மக்கள் விழத் தேவையில்லை. தமிழ்நாட்டு மக்கள் தங்களின் கட்சி அரசியலை தாங்களே பார்த்துக் கொள்வார்கள். தமிழக மக்கள் எந்தக் கட்சியை பதவிக்கு கொண்டுவர விரும்புகிறார்களோ அது அவர்களின் தெரிவு.

அப்படி தமிழ்நாட்டில் அதிகாரத்திற்கு, பதவிக்கு வருவோரை எம்மை ஆதரிக்குமாறு கோருவதும் அதற்காக தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் நட்பையும் கோரி நிற்பதையுமே தமிழீழ மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறையாகும்.

மக்கள் அலை எழும் போது கட்சிகள் மக்கள் அலைக்கு தாமே செவிசாய்க்கும். ஆதலால் தமிழீழ தேசியப் பிரச்சினையில் தமிழகக் கட்சி நிலைப்பாடுகளுக்குள் அகப்படாது தமிழீழ கொள்கை நிலைப்பாட்டின் பேரில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவை கோரி நிற்பதே ஈழத் தமிழருக்கு அவசியமான மூலோபாயமாகும். தமிழ்நாட்டுடனும் அதன் அனைத்து வகையான வர்த்தக, பொருளாதார, கல்வி , கலாச்சார, தொழில்நுட்ப, அரசியல் அமைப்புக்களுடனும் ஈழத் தமிழர்கள் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டு தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் உள்ள உறவை மேலும் வலுவாக்க வேண்டும்.

தமிழகத்தில் இப்போது ஓர் அலை எழத்  தொடங்கியுள்ளது. அதனைப்பற்றிப் பிடிக்க வேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும். இதனைத் தக்க வகையில் பயன்படுத்த வேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும்.

 

தமிழீழம் - சென்னை - புதுடெல்லி - உலகம்.
இன்றைய உலக அரசியலில் ஒரே ஒரு அரசியல் பொருளாதார ஒழுங்குதான் இருக்கின்றது. அது உலகலாவிய ஏகாதிபத்தியத்தின் மையப் பொருளாதார ஒழுங்குதான்.

உலகிலுள்ள அனைத்துப் பலம் வாய்ந்த பெரிய அரசுகளும் தமக்கிடையே இந்த முழு உலகத்தையும் வர்த்தக ஆதிக்க போட்டியின் நிமித்தம் சந்தைகளாக பங்கு போட்டுக் கொண்டுள்ளன.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன்பு ஏகாதிபத்திய நாடுகளுக்கிடைய உலகம் நாடுகளாகப் பங்கு போடப்பட்டது போல , தற்போது ஏகாதிபத்திய அரசுகளுக்கடையே உலகம் நாடுகளாக அன்றி சந்தைகளாக பங்கு போடப்பட்டுள்ளது. ஆதலால் இன்று உலகளாவிய ரீதியில் வர்த்தகப் போட்டியில் (ஏற்றுமதி - இறக்குமதி) ஈடுபடும் எந்த ஒரு நாடும் ஏகாதிபத்திய நாடுதான்.

உலகளாவிய ரீதியில் ஒரு நாடு தனது பண்டங்களை, மூலப் பொருட்களை சந்தையில் போட்டு வர்த்தக ஆதிக்கப் போட்டியில் ஈடுபடுமானால் அந்த நாடு எந்த நிறக்கொடியை கட்டியிருந்தாலும் அது செயல்பூர்வ அர்த்தத்தில் ஏகாதிபத்திய கொடி தான்.

இந்த வகையில் விதிவிலக்கின்றி வர்த்தக ஆதிக்கத்தில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் ஓர் ஏகாதிபத்திய சந்தை மையக் கூட்டைக் கொண்டுள்ளன. ஆதலால் இத்தகைய அனைத்துப் பெரிய, சிறிய அரசுகளும் இலங்கை அரசுடன் ஒரு அரச ன்கிற வகையில் சமரசத்தைக் கொண்டுள்ளன.

இந்தச் சமரசக்கூட்டில் சோசலிச நாடுகள் என்றும் முதலாளித்துவ நாடுகள் என்றும் வேறுபாடு இல்லை. நீதியென்றும், நேர்மையென்றும் இல்லை.

கொடியின் நிறம்தான் வேறு. கொடித் துணிகளின் பண்பு ஒன்றுதான். ஆதலால் கற்பனாவாத அரசியலுக்கு வெளியே இரத்தமும் சதையுமாக அரசியலை யதார்த்த நிலையில் வைத்து மதிப்பிட்டு தமிழீழ மக்களின் தேவைக்குப் பொருத்தமான ஒரு யதார்த்த பூர்வ அணுகுமுறை அவசியம்.

மேற்படி பெரிய அரசுகளின் உலகளாவிய கூட்டுச் சமரசங்களுக்கு வெளியே தமிழக மக்களின் ஜனத்திரள் என்ற ஜனநாயகப் பலம்தான் அரசுகளின் சமரச ஒழுங்கிற்கு வெளியே தமிழீழ மக்களின் நலன்களை உலகப்பரப்பில் ஸ்தாபிக்க உதவும்.

 உண்மையில் தமிழீழ மக்களின் போராட்டமானது தேசிய வடிவிலான ஜனநாயக மீட்புப் போராட்டமாகும். தமிழீழ மக்களின் நலன்கள் சென்னை - புதுடில்லி - உலகம் என்ற ஒரே ஒரு பாதையை மட்டுமே கொண்டிருக்கின்றது.

இலங்கை அரசு தமிழரை சர்வதேச அரசுகளால் சுற்றி வளைத்தே ஒடுக்குகின்றது. அது இராணுவ பொருளாதார உதவிகளை ஒருபுறம் அமெரிக்காவிடம் இருந்தும் மறுபுறம் சீனாவிடம் இருந்தும் பெறுகின்றது. அப்படியே ஒருபுறம் இந்தியாவிடம் இருந்தும் மறுபுறம் பாகிஸ்தானிடம் இருந்தும் பெறுகிறது.

இப்படி கொள்கை, கொடி, குடை வேறுபாடின்றி தமிழருக்கு எதிராக அனைத்து நாடுகளின் உதவிகளையும் இலங்கை அரசு பெறுகிறது.

தேசிய இனப்பிரச்சனை என்பது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. அது எப்பொழுதும் ஒரு சர்வதேச பிரச்சனையாகும்.

ஆகையால் தமிழீழப் பிரச்சனையை சர்வதேசப் பரிமானத்தால் மட்டுமே தீர்க்க முடியும். தமிழீழ பிரச்சனையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை சென்னை - புதுடில்லி- உலகம் என மட்டுமே அமைய முடியும்.

 - மு.திருநாவுக்கரசு. 18.11.2006.

 

வியாழன், 20 நவம்பர், 2025

இலங்கையில் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’யின் தோற்றமும் இன்றைய நிலையும் - பகுதி 4.

   

பகுதி 4. பிரித்தானிய-இலங்கையில் தோன்றிய தேசியவாதம்சிங்கள இனவாதம்  மற்றும் சமஸ்டி சிந்தனை.




செயல்பூர்வ அர்த்தத்தில் இராமநாதன் வம்சத்தின் ஒரு நூற்றாண்டு காலத் தலைமைத்துவத்தின் முடிவும் டொனமூர் அரசியல் யாப்பின் பிறப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாய் அமைந்தனஒரு நூற்றாண்டு கால  இராமநாதன் வம்சத்தின்  கொழும்புத் தமிழ்த் தலைமைத்துவத்தின் அரசியலுக்குப் பதிலாக யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் அரசியல் 1920களின் இறுதியில் எழுச்சிபெறத் தொடங்கியதுஆயினும்இது தமிழ்த் தேசிய அரசியல் இயக்கமல்ல.  அது இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தால் கவரப்பட்ட காந்திய இயக்க சிந்தனையுடன் இலங்கையையும்  தழுவிய  காலனிய ஆதிக்க எதிர்ப்பு இலங்கையர் தேசியவாத அமைப்பாகக் காணப்பட்டதுயாழ்ப்பாண வாய்ப்பு காங்கிரசை ஒருபோதும் தமிழ்த் தேசியத்தோடு இணைத்து அடையாளங்காண முடியாது.

ஒற்றை ஆட்சிமுறையை வலியுறுத்திய டொனமூர் அரசியல் யாப்பு

ஹன்டி  பேரின்பநாயகம்எஸ்.ஆர்.கனகநாயகம்  போன்றோர் தலைமையிலான யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் அலையுடன் தென்னிலங்கை தழுவிய முழு இலங்கையையும் இழுத்துவிடக்கூடிய ஏதுநிலை இருப்பதாக உணர்ந்த பிரித்தானிய ஆட்சியாளர்கள் அதிலிருந்து சிங்கள மக்களை முற்றிலும் பிரித்தெடுக்கும் நோக்கத்துடன் ஈழத் தமிழருக்குப் பாதகமாகச் சிங்களப் பெரும்பான்மை இனவாதத்திற்குத் தளமமைக்கும் வகையில் ஒற்றை ஆட்சி முறையின் கீழ் தலையெண்ணும்  பெரும்பான்மை இனநாயக (Head counting Majoritarianism) அரசியல் யாப்பாக டொனமூர் அரசியல் யாப்பை  உருவாக்கினர்இத்தகைய தலையெண்ணும் பெரும்பான்மை ஜனநாயகத்தில் சிறுபான்மையினருக்கு அதிகாரம் வழங்குவதற்கு சிறப்பு வழிமுறைகள் ஏற்படுத்தப்படாததால் சிங்களமே பெரும்பான்மை என்கிற அதிகாரத்தின் மூலம்ஜனநாயகத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்ட இன ஒடுக்குமுறைக்கான  ஏற்பாடாகும்.

1931 ஆம் ஆண்டு டொனமூர் யாப்பின் கீழ் முழு இலங்கை தழுவிய ரீதியில் நிகழ்ந்த முதலாவது பொதுத் தேர்தலை  யாழ்ப்பாண வாலிபர்  காங்கிரஸ் பகிஷ்கரித்ததுஅவர்கள் தம்மை முழு இலங்கைக்குமான தேசிய விடுதலை வீரர்களாகக் கற்பனை செய்து இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிச்சுவட்டில் காந்தியவாதத்தைப் பின்பற்றிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.

இந்தப் பகிஷ்கரிப்பை முதலில் கொள்கையளவில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஆதரித்தனராயினும்  யாரும் தேர்தல் பகிஷ்கரிப்பில் ஈடுபடவில்லைஇவர்கள் முதலில் பகிஷ்கரிப்பை ஊக்குவித்தனர்இலங்கை இடதுசாரி  இயக்கத்தின் தந்தை  என வர்ணிக்கப்பட்ட பிலிப் குணவர்தன (Philip Gunawardena, 2022 யூலை  பிரதமராய்ப் பதவி  ஏற்றுக்கொண்ட  தினேஷ் குணவர்தனவின் தந்தை அன்று பகிஷ்கரிப்பு நிகழ்ந்துகொண்டிருந்தபோது யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் பகிஷ்கரிப்பை வரவேற்றுப் பின்வருமாறு  கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 'Jaffna has given the  lead' என்று மெச்சி  இருந்தார்.

அதாவது 'பிறர் பின்பற்றக்கூடிய ஒரு  புதிய,  சிறந்த முன்மாதிரியை  யாழ்ப்பாணம்  முன்னெடுத்துள்ளதுஎன்பதே இதன் பொருள்.

ஆனால்பின்பு நடைமுறையில் தென்னிலங்கை அரசியல்வாதிகளால்  தேர்தல் பகிஷ்கரிப்பானது இனவாதத்தன்மை கொண்டது என்றும் பகிஷ்கரிப்பாளர்கள் வகுப்புவாதிகள் என்றும் தூற்றி முத்திரை  குத்தப்பட்டனர்இந்திய தேசிய விடுதலைப்  போராட்டத்தோடு இணைத்துப் பார்த்து இவ்வாறு  இனவாத முத்திரை குத்துவது இலகு வாய்ந்ததுகட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையானது இத்தகைய வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்பதே இங்கு பிரதானமாகக் கவனிக்கப்படக்கூடியதுஇந்திய தேசிய விடுதலைப் போராட்டப் பின்னணியுடன் இணைத்து இப்பகிஷ்கரிப்பை  சிங்களத் தரப்புப் பார்த்த அதேவேளைநடைமுறையில் அன்று ஜவகர்லால் நேரு மேற்படி யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் பகிஷ்கரிப்பை ஆதரிக்காது எதிரான கருத்துக்களைத் தெரிவித்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் சிறிதும் இனவாதத் தன்மை கொண்டதல்லஅன்று தேர்தல் பகிஷ்கரிப்புக்குத் தலைமை தாங்கிய முன்னணித் தலைவரான ஹன்டி பேரின்பநாயகம் இறக்கும்வரை  இலங்கைத் தேசியவாதியாகவே இருந்தார். 1960களில் அவரைத் தமிழரசுக் கட்சியில் இணையுமாறு கூறப்பட்டபோது  அவர் தன்னை ஒரு இலங்கைத் தேசியவாதி என்றும் தான் ஒரு இனம் சார்ந்த கட்சியில் சேர மாட்டேன் என்றும் மறுத்திருந்தார்இவரைத்தான் சிங்களத் தலைவர்கள் வகுப்புவாதி என்று வர்ணித்தார்கள்இது நடைமுறையில் இந்திய எதிர்ப்பு வாதம்தமிழின அழிப்பு வாதம் ஆகிய இரண்டையும் இணைத்துக் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைவாதச் சிந்தனையின் வெளிப்பாடாகும் என்பது இங்கு அடிக்கோடிட்டுக் குறிப்பிடப்படத்தக்கது.

இங்கு பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில்யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸும் ஒற்றை ஆட்சி முறையின் கீழான ஒன்றுபட்ட இலங்கை என்ற கொள்கையையே கொண்டிருந்ததுதேர்தல் பகிஷ்கரிப்புக்கான யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் கோரிக்கையானது மிகவும் இலகுவானதும் வெளிப்படையானதுமாகும்அது இத்தகைய தமிழ் இனம் சார்ந்த அடிப்படையைக் கொண்டிருக்கவில்லைமாறாக இலங்கை முழுவதுக்குமான சுயாட்சியை வழங்க டொனமூர் அரசியல் யாப்புத் தவறிவிட்டது என்பதனால் அது சுயாட்சிக் கோரிக்கையை வற்புறுத்தியே பகிஷ்கரிப்பை மேற்கொண்டது.

மகாத்மா காந்திஜவகர்லால் நேரு போன்ற இந்திய தேசிய விடுதலைப் போராட்டத் தலைவர்களை இலங்கைக்கு வரவழைத்துப் பெரும் கூட்டங்களை ஒழுங்கு  செய்தமைகாந்திய கதர் ஆடை அணிந்து இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தை யாழ்ப்பாணத்துக்கூடாக இலங்கையில் முதன்மைப்படுத்தியமை போன்ற விடயங்களால் ஆத்திரமடைந்த பிரித்தானியர் சிங்களக் கனவான்களுடன் கூட்டுச் சேர்ந்து தமிழின அழிப்பிற்கான ஒரு காத்திரமான புதிய பரிமாணத்தைக் கட்டமைத்தனர்.

யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் ஒரு தெளிவான கற்பனாவாத அமைப்புஅவர்கள் இலட்சியத்தால் தம்மை மேன்மையானவர்களாக நினைத்தாலும்அவர்களது தூய இலட்சியவாதம் சாத்தானுக்குச் சேவை செய்வதுயாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் சுட்டிக்காட்டத் தகுந்த ஒரு சிறப்பான அம்சம் என்னவெனில்இலங்கைத் தீவில் தீண்டாமைக்கு எதிராக முதன்முறையாக (1926) சமபந்தி போசனத்தை நடத்திய அமைப்பாகும்.

அதாவது, 1926 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கீரிமலையில் பெரும் பந்தலமைத்து சமபந்தி போசனத்தை நடத்தினர்இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்சமபந்தி போசனத்தில்  முன்னணித் தலைவர்கள் பலர் உணவு உட்கொண்ட பின்பு பந்தலின் பின்புறம் சென்று வாந்தி எடுத்தனர் என்பது வேறு கதைஅதாவதுகொள்கை ரீதியாகத் தீண்டாமையை இவர்கள்  எதிர்த்தாலும் உளவியல் -  பண்பாட்டு அடிப்படையில் தம்மளவிலேனும் இவர்களால்  தீண்டாமையைக் கடந்து செல்ல முடியவில்லை என்ற பக்கமும் கவனத்திற்குரியது.

யாழ்குடாநாட்டின் நான்கு தொகுதிகளிலும் யாழ்ப்பாண காங்கிரஸ் விடுத்திருந்த தேர்தல் பகிஷ்கரிப்பு வெற்றி பெற்றதுஅப்போது பகிஷ்கரிப்புக்கு எதிரான நிலைப்பாட்டை திருஜி.ஜிபொன்னம்பலம் முன்னெடுத்தார்யாழ்குடாநாட்டில் பகிஷ்கரிப்புக்கு  ஆதரவிருந்த  பின்னணியில்  யாழ்குடாநாட்டுக்கு  வெளியே மன்னார் -  முல்லைத்தீவு தொகுதியில் பொன்னம்பலம் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்ஆனால்தேர்தல் பகிஷ்கரிப்பு மூன்று ஆண்டுகளுக்குள் தோல்வியில் முடிந்து 1934 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நிகழ்ந்ததுஅப்போது  பருத்தித்துறைத் தொகுதியில் பொன்னம்பலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்அத்துடன் பொன்னம்பலத்தின் அரசியல் எழுச்சி ஆரம்பமாகியது.

ஒற்றை ஆட்சி முறைமையின் கீழ் ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப்படைக் கொள்கையுடன் பொன்னம்பலத்தின் தமிழினம் சார்ந்த அரசியல் பிரவேசம் அமைந்ததுநவீன இலங்கையின் அரசியல் வரலாற்றில் டொனமூர் அரசியல் யாப்புக் காலத்திற்தான் சிங்கள -தமிழ்  இனப்பகைமையானது  பிரித்தானிய -  சிங்கள கூட்டு உழைப்பினால் முன்னெப்போதையும்விட பெரிதும் கட்டமைக்கப்பட்டது.

அக்காலகட்டத் தமிழ்த் தலைவர்களிடம் கடல்சார் அரசியல் ஆதிக்க  அறிவுகாலனிய ஆதிக்கம்பன்னாட்டு அரசியல் உறவுகள் பற்றிய அறிவுஉலக அரசியற் கண்ணோட்டம்  என்பன போதியளவு இருக்கவில்லைஇவ்வகையில்தமிழ்த் தலைவர்களிடம் காணப்பட்ட அரசியல் அறிவின்மைகளும் கற்பனாவாதங்களும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை  வளர்ச்சியடைய ஏதுக்களாய் அமைந்தன.

டொனமூர் யாப்பின் கீழ் 1936 ஆம் ஆண்டு தனிச் சிங்கள மந்திரசபையைச் சிங்களத் தலைவர்கள் வெற்றிகரமாய் உருவாக்கினர்அப்போது தமிழ் மக்களுக்கு திருஜிஜிபொன்னம்பலமும் சிங்கள மக்களுக்கு பரன் ஜெயதிலகவும் தலைவர்களாய் இருந்தனர்பொன்னம்பலத்தை அமைச்சரவையில் உள்வாங்கிவிடக்கூடாது என்பது ஜெயதிலகவின் முடிவாகும்பொன்னம்பலம் தன்னை முன்னிறுத்துவதையும் அவர் தன்னைப் பெரிதுபடுத்துவதன்  மீதும் எரிச்சல் கொண்டிருந்த ஒரு தமிழ்க் கணித மூளையை  ஜெயதிலக அடையாளம் கண்டிருந்தார்அந்தக் கணித மூளையை அவர் அணுகி பொன்னம்பலத்தை மந்திரிசபையில் நுழையவிடாது தடுப்பதற்கான ஓர்  உபாயம் சொல்லுமாறு புத்திமதி கேட்டார்.

பின்வரும் அடிப்படையில் கணித மூளை இலகுவாகப் புத்திமதி சொல்லியது. 50  உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்க சபையானது (State Council) தலா உறுப்பினர்களாக ஆனால் ஒரு சபைக்கு எட்டு உறுப்பினர்களாக மொத்தம் ஏழு நிர்வாக சபைகள் பிரிக்கப்படும்அவ்வாறு பிரிக்கப்படும் ஒவ்வொரு சபையும் தமக்குத் தமக்கெனத் தனித்தனியே ஒவ்வொரு தலைவர்களைத் தேர்வு செய்யும்தலைவரே அமைச்சராவார்இதன்படி பொன்னம்பலம் அங்கம்வகிக்கக்கூடிய நிர்வாக சபையில் பொன்னம்பலத்துக்கு மாறான  உறுப்பினர்கள்  பெரும்பான்மையினராக இடம்பெற்றால், (4 அல்லது உறுப்பினர்பொன்னம்பலம் தலைவராக முடியாதுஅதன்படி பொன்னம்பலம் மந்திரி சபையில் (Board of Ministers) அங்கம் பெற முடியாது.

உண்மையில் இவ்வாறு அந்தக் கணித மூளை புத்தி சொல்லியது பொன்னம்பலத்தை நினைத்து பொன்னம்பலத்துக்கு எதிராக மட்டுந்தான்ஆனால்அரசாங்க சபையை ஏழு சபைகளாகப்  பிரிக்கும் போது ஜெயதிலக ஏழு நிர்வாக சபைகளிலும் தமிழ் அங்கத்தவர்கள் பெரும்பான்மையாக வரமுடியாதவாறு திட்டமிட்டு நிர்வாக சபைகளை வடிவமைத்தார்இவ்வாறு நிர்வாக சபைகள் பிரிக்கப்பட்ட பின்பு பொன்னம்பலம்  அங்கம்பெற்ற  நிர்வாக சபையில் சிங்கள அங்கத்தவர்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.  பொன்னம்பலம் தேர்வு செய்யப்படாமல் அதற்கு சிங்களவரே தலைவர் ஆனார்பொன்னம்பலம் ஏமாற்றமடைந்து  திகைப்புற்றார்அவர் வெளியே வந்து பார்த்தபோது ஏழு நிர்வாக சபைகளுக்கும் ஏழு சிங்களவர்கள் தெரிவாகியிருந்தனர்இதுவே தனிச் சிங்கள மந்திரி சபையாய் (Pan Sinhala Board of Ministers)  அமைந்தது.

தமிழனைப் பயன்படுத்தித் தமிழனை வீழ்த்த சிங்களவர்களுக்குத் தெரிந்திருந்ததுசிங்களத் தலைவர்களுக்கப் புத்தி  உயரகொடி உயர்ந்தது.  தமிழ்த் தலைவர்களுக்குப் புத்தி போனது,  கோபம் வந்தது.

கோபம் கொண்ட பொன்னம்பலத்தின் கண்களில் டியூக்  ஒப் டிவென்சியாரின் ( Duke of Devonshire )  50 : 50 சூத்திரம் (Balanced Representation) தென்பட்டதுஇவரது சூத்திரத்தின்படி பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் பெரும்பான்மை இனத்திற்கு 50 % ஆசனங்களும் ஏனைய சிறுபான்மையினங்கள் அனைத்துக்கும் மிகுதி 50 % ஆசனங்களும் என அமையும்போது  பெரும்பான்மை இனத்தால் சிறுபான்மையினத்தை அடக்கி ஆள முடியாது என்பதே இவரது  இந்தச் சூத்திரமாகும்.  இதன்படி இலங்கையில் 50 : 50  என அமையுமிடத்து சிங்கள பௌத்தர்களுக்கு 50 வீதமும் மிகுதி 50 வீதமும் முறையே இலங்கைத் தமிழர்முஸ்லிம்கள்மலையகத் தமிழர்மலே இனத்தவர்கள்பறங்கியர்சிங்கள தமிழ் கிறிஸ்தவர்கள் எனப் பங்கிடப்படும்  என்பதாகும்.

மேற்படி சிறுபான்மை இனத்தவர்களின் மத்தியில் இருந்து ஒரு சில உறுப்பினர்கள் சிங்களப் பக்கம் மாறினால் சிங்களப் பக்கம்  எப்போதும்  பெரும்பான்மை கிடைப்பது சாத்தியம்ஆதலால்இந்த 50 க்கு 50 என்ற சூத்திரம் இனப் பிரச்சினைக்குத் தீர்வில்லையே ஆனாலும் பொன்னம்பலம் ஒற்றை ஆட்சியின் கீழ்  50 க்கு 50 என்ற சூத்திரக் கொள்கையைக் கையில் எடுத்து அடுத்த அரசியல் யாப்புக் குழுவான  சோல்பரி அரசியல் யாப்புக்  குழுவரை முன்னெடுத்தார்.

 

ஒன்றுபட்ட இலங்கையில் ஒற்றை ஆட்சி - சோல்பரி யாப்பு.

சோல்பரி யாப்புக் குழுவினர் (Soulbury Commission) 1944 ஆம் ஆண்டு இலங்கையில் கால் வைத்த காலத்தில் டாக்டர்என்எம்பெரேரா  (Dr. N.M. Perera) தலைமையிலான லங்கா சம சமாஜ கட்சி (Lanka Sama Samaja Party - LSSP - 1935 ), டாக்டர்எஸ். A. விக்கிரமசிங்க (Dr. S.A. Wickramasinghe) தலைமையிலான  இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி  Communist Party  of Sri Lanka  C. P. - 1943) ஆகிய இரு இடதுசாரிக்  கட்சிகளுமே அரசியல் கட்சிக்குரிய தரத்தில் இருந்தனஅப்போது டிஎஸ்சேனாநாயக்க தலைமையில் இலங்கைத் தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress – CNC - 1919, ஸ்தாபகத் தலைவர் சேர்.  பொன்அருணாசலம்காணப்பட்டது.  ஆனாலும்இலங்கைத் தேசிய காங்கிரஸ் ஓர் அரசியல் கட்சிக்குரிய தரத்தில் காணப்படவில்லைஅது ஒரு சங்கத்துக்குரிய அமைப்புடன் காணப்பட்டது.

சோல்பரி  குழுவின் வருகையை எதிர்கொள்ளும் முகமாக கொழும்பு சாகிரார் கல்லூரியில் 1944 ஆம் ஆண்டு தமிழ்த் தலைவர்கள்தமிழ்ப் பிரமுகர்கள் ஒன்றுகூடி திருஜிஜி.  பொன்னம்பலம் தலைமையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கான கால்கோள் இட்டனர்இதுவே தமிழ் மக்கள் மத்தியில் தொடங்கிய முதலாவது அரசியல் கட்சியும் இலங்கையில் காணப்பட்ட மூன்றாவது அரசியல் கட்சியும் ஆகும்இது அரசியல் கட்சிக்குரிய தரத்தைக் கொண்டு இருந்ததுஇந்த இரண்டு இடதுசாரிக் கட்சிகளும்தமிழ் வலதுசாரிக் கட்சியுமான இந்த மூன்று கட்சிகளும்  ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒற்றை ஆட்சி முறை என்ற கொள்கையைக் கொண்டிருந்தன.

ஓர் அரசியல் கட்சியாக அன்றி ஒரு சங்கமாகக் காணப்பட்ட இலங்கைத் தேசிய காங்கிரஸ் இலங்கையின் அரசியலில் மிகவும் பலம் பொருந்திய வலதுசாரி அமைப்பாக இருந்தது.  சோல்பரி குழுவின் வரவைத் தொடர்ந்து இலங்கைத் தேசிய காங்கிரசை அடிப்படையாகக் கொண்டு  திருடிஎஸ்சேனாநாயக்க  தலைமையில் 1946 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி (United National Party) உருவானது. மொத்தத்தில் இப்போது நான்கு கட்சிகளும் ஒன்றுபட்ட இலங்கையில் ஒற்றை  ஆட்சி முறைமை என்ற கொள்கையைக் கொண்டிருந்தன.

சோல்பரி குழுவினர் ஒற்றை ஆட்சி என்ற உறுதியானஇறுக்கமான தொப்பியை அணிந்தவாறு இலங்கையில் கால் வைத்தனர்இலங்கையில் கால் வைத்த காலனிய ஆதிக்க சோல்பரி குழுவும்டிஎஸ்.  சேனாநாயக்க தலைமையில் உருவான ஐக்கிய தேசியக் கட்சியும்முதுபெரும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளும்கூடவே அகில இலங்கைத் தமிழ்க்  காங்கிரஸ் கட்சியும்  காலனிய  ஆதிக்க சக்தி ஆகிய அனைத்து சக்திகளும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒற்றை ஆட்சி முறைக் கொள்கையைக் கொண்டிருந்தன.

1925 ஆம் ஆண்டு கண்டியர்  மகாசபை (Kandyan Assembly) சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்திருந்ததுநிலைநாட்டு சிங்களத் தலைவர்களுள் ஒருவராய் இருந்தவரும் பின்னாளில் இலங்கையின் பிரதமராக இருந்தவருமான திருஎஸ்டபிள்யூஆர்டிபண்டாரநாயக்க

(S.W.R.D. Bandaranaike) 1926 ஆம் ஆண்டு இலங்கைக்கு சமஸ்டி முறையிலான அரசியல் முறைமையைக் கோரி நின்றார்ஆனால்சோல்பரி யாப்புக் குழுவினர் 1940களின் மத்தியில் இலங்கை வந்திருந்த காலத்திலுங்கூட தமிழ்த் தலைவர்கள் சமஸ்டி முறையைக்  கோரி நிற்கவில்லை.

ஆனால்விதிவிலக்காக சமஸ்டி முறையின் தேவையைப் பற்றித் தான் தனிப்பட்ட முறையில் சிந்தித்ததாக திருவிநவரத்தினம் கூறியுள்ளார்அதாவதுசோல்பரி குழுவை எதிர்கொள்வதற்காக  திருஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையில்  1944 ஆம் ஆண்டு சாகிரா கல்லூரியில் கூடிய கூட்டத்தில் உருவாக்கப்பட்ட உப குழுவில் (இந்த உபகுழுவே  தமிழ்க் காங்கிரஸ் கட்சியாகப் பரிணமித்ததுதன்னையும்  ஒருவராக இணையுமாறு கோரப்பட்டபோதிலும் தான் அதில் இணையவில்லை எனக் கூறும்  திருவிநவரத்தினம்அவ்வாறு தான் இணைய மறுத்ததற்குக் கூறும் மூன்று காரணங்களில் இரண்டு முக்கிய அரசியல் காரணங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன.

'... சமநிலைப் பிரதிநிதித்துவம் [Balanced Representation] என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லைஅது நியாயமான ஒரு வழிமுறையென்றோ தமிழர்களின் பிரச்சினைகளின் தீர்வுக்கு அதனைத் திறன்மிகு  வழிமுறையாகவோ நான் கருதவில்லை.  நான் அக்காலத்தில் சமஸ்டி முறை பற்றிய அரசியல் சிந்தனையால் கவரப்பட்டிருந்தேன்இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பகைமை உணர்வை அம்முறையே தீர்க்கவல்லது என்றும் கருதினேன்எஸ்.டபிள்யூ.ஆர்.டிபண்டாரநாயக்க ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து திரும்பிய சில நாட்களின் பின்னர் இலங்கைக்கு சமஸ்டி முறை வேண்டுமென்று வாதிடும் முறையில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்அக்கட்டுரையால் நான் கவரப்பட்டிருந்தேன்.' என்று வி.நவரத்தினம் கூறுவதன் வாயிலாக  சோல்பரி யாப்பு உருவாக்கிய காலத்தில் ஒற்றை ஆட்சிக்கு மாறாக  சமஸ்டி முறை பற்றிச்  சிந்திக்கக்கூடிய அளவிற்கு ஒரு சில உதிரிகளாவது தமிழர்களில் இருந்திருக்கின்றனர் என்பதனை நினைக்கச் சற்று ஆறுதல் அளிக்கிறது.

1931 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த டொனமூர் அரசியல் யாப்பும் 1947 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சோல்பரி அரசியல் யாப்பும் காலனியத்தின் பின் வரக்கூடிய நவகாலனிய கடல் ஆதிக்கத்துக்கான புவிசார்-அரசியலின் (Geopolitics) அடிப்படையில் வடிவமைக்கப்பட்டனஆனால்தமிழ்த் தலைமைகளிடமும் தமிழ் அரசியல் அறிவியல் பரப்பிலும் சர்வதேச அரசியல் பற்றிய பார்வையோபுவிசார் அரசியல் பற்றிய அறிவோ குறிப்பிடக்கூடிய அளவு இருக்கவில்லைஇவைசார்ந்து அறிவியல் வறுமையும் அறிவியல் வெறுமையும் இருந்தனஇன்றுங்கூட இவைசார்ந்த  மூலோபாய ரீதியான அறிவியல் வளர்ச்சியை நடைமுறைக்கேற்ப பெற முடியவில்லை.

பிரித்தானியர்களை எஜமானர்களாகப் பார்த்த தமிழ்த் தலைவர்களின் மனப்பாங்கால் தமிழ் மக்களின் நலன்கள் புவிசார் அரசியலின் அடிப்படையில் நசுக்கப்படுவதைப் புரிந்துகொள்ள முடியவில்லைபுவிசார் அரசியலுக்கும்   காலனிய   ஆதிக்க அரசியல் நலன்களுக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்க நலன்களுக்கும் இடையிலான உறவுகளால் அரசியல் யாப்புகள் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் வெளிப்பாடாய்க்  கட்டமைக்கப்படுவதைச் சிறிதும் புரிந்துகொள்ள முடியவில்லைஅதாவதுஅரசியல் யாப்புகள் இனப்படுகொலைகளைக் கட்டமைக்கும் சாதனங்களாய் அமைந்தன.

அரசுஅரசியல் அமைப்புகள் அல்லது யாப்புகள்புவிசார் அரசியல்சர்வதேச அரசியல்சிங்கள பௌத்த பேரினவாதம்அண்டை நாட்டு அரசியல் பற்றி ஒவ்வொன்றையும் தனியாகவும் கூட்டாகவும் பார்க்கின்ற அரசியல் தத்துவார்த்த (Political Philosophy) பார்வையின்றி அரசியல் யாப்பையோ அல்லது அரசியல் நபர்களையோ புரிந்துகொள்ள முடியாது.

அரசியல் யாப்பின் வரிகளை மனனம் செய்து வைத்திருப்பதனாலோ அன்றி எழுதப்பட்ட வரிகளை நூல் பிடித்து அளந்து பார்ப்பதனாலோ அரசியலைப் புரிந்துகொள்ள முடியாதுஅது நீதிமன்றத்தில் வழக்காட மட்டுமே உதவும்அரசியல் யாப்பு என்பது எழுதப்பட்ட வரிகளுக்குப் பின்னால் காணப்படும் அரசுகளின் நலன்புவிசார் நலன்ஆதிக்க நலன்வரலாற்றுப் பாரம்பரியம்பழக்க வழக்கம்நீடித்து நிலைத்துவரும் அரசியல் கலாசாரம் என்பனவற்றின் கூட்டுத் திரட்சியாய் வடிவமைக்கப்படுகின்றதுஅரசியல் யாப்பை எழுதப்பட்ட வரிகளுக்கு அப்பால்  எழுதப்பட்ட வரிகளுக்கு இடையிலான எண்ணங்களினாலும்,  எழுதப்படாத வரிகளினாலும்,  முன்னெடுக்கப்படுகின்ற நடைமுறைகளினாலும் புரிந்துகொள்ள வேண்டும்.

இராமாயணம்,  மகாபாரதம்இந்தியாவின் சாதிக் கட்டமைப்பு ஆகிய இந்தியாவின் மரபுவழி அம்சங்களைப் புரிந்துகொள்ளாமல் இந்தியாவின் இன்றைய நவீன அரசியல் யாப்பைப் புரிந்துகொள்ள முடியாதுகுறிப்பாகஇந்திய நவீன யாப்பானது ( 1950 ல் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம்ஒரு குட்டி மகாபாரத நூல் போல மகாபாரத கலாசாரத்தின் அம்சங்களை உள்ளடக்கி உள்ளதுமகாபாரதத்தில் நிறையவே சம்பாசனைகள் உண்டுஅந்தச் சம்பாசனைகளில் பன்முகத் தன்மையும்கருத்து ரீதியான ஜனநாயக உள்ளடக்கமும் உண்டு.

அமெரிக்காவுக்கு இத்தகைய நீண்ட கால வரலாறு இல்லைஅமெரிக்க மக்கள் 16 ஆம் நூற்றாண்டில் இருந்து வடஅமெரிக்க கண்டத்தில் குடியேறிய ஒரு மக்கள் கூட்டமே.

 

இந்திய எதிர்ப்பும், தமிழின எதிர்ப்பும், சோல்பரி யாப்பும்:

டொனமூர் யாப்பை பிரித்தானியர் உருவாக்கும் போது எதனை எண்ணினார்களோஎதனை எதிர்பார்த்தார்களோஎதனை இலக்காக வரைந்திருந்தார்களோ அதனை அந்த யாப்பு தனது 17 ஆண்டுகால நடைமுறையில் நிறைவேற்றிக் கொண்டதுஅதன்படி நவீன அரசியலில் இந்திய எதிர்ப்பு – தமிழின எதிர்ப்பு என்பனவற்றை முதலீடாகக் கொண்டு சிங்களத் தலைவர்களை அரவணைத்து இந்தியாவிற்குப் பாதகமான இராணுவத் தளங்களையும்தமிழருக்குப் பாதகமான அரசியல் யாப்பையும் சோல்பரி யாப்பால் உருவாக்க முடிந்தது.

சோல்பரி யாப்பின் பிரதான சூத்திரதாரியாக விளங்கியவர் சேர்ஓலிவர் குணதிலக ஆவார்இவர் பிரித்தானிய அரசின் ஆளும் குழாத்தைத் சேர்ந்த அதியுயர்சிங்கள இன அதிகாரியாவார்இவரைப் பயன்படுத்தியே White Hall (பிரித்தானிய அரசாங்க பீடம்டி.எஸ்.சேனநாயக்கவை நெறிப்படுத்திபிரித்தானிய இராணுவத் தளங்களை இலங்கையில் அமைப்பதற்கு ஏற்ற கையாளலையும,; அதன் அடிப்படையில் யாப்பு உருவாக்கத்தையும் மேற்கொண்டனர்.

டி.எஸ்.சேனநாயக்கசேர்.ஓலிவர் குணதிலகபிரித்தானியரான பேராசிரியர் ஐவர் ஜெனிங்ஸ் ஆகிய மூவருமே சோல்பரி அரசியல் யாப்பை வடிவமைத்த சிற்பிகளாவர்இவர்கள் மூவரும் யாப்பை உருவாக்கிய முப்பெரும் தூண்கள் -‘triumvirate’ – என குறிப்பிட்டு அழைக்கப்படுவது கவனத்திற்குரியதுஇவர்கள் மூவரும் இணைந்து Ministers’ draft உருவாக்கினார்கள்இதில் அரசியல் யாப்பு சார்ந்த அறிவியல் மூளையாக செயற்பட்டவர் ஐவர் ஜெனிங்ஸ்இராசதந்திர சூத்திரதாரியாக செயற்பட்டவர் ஓலிவர் குணதிலகஅரசியல் தலைவராக மேற்படி இருவரின் வழிகாட்டலின் படி செயற்பட்டவர் டி.எஸ்.சேனநாயக்கஇவர்கள் தயாரித்த மந்திரிசபை அரசியல் யாப்பு நகல் (Ministers’ draft) 1944ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தயாரிக்கப்பட்டு பிரித்தானிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நகல் யாப்பானது பிரித்தானிய  Westminster அரசியல் யாப்பு முறையை பின்பற்றி எழுதப்பட்டதுஒற்றையாட்சி முறையின் கீழான பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தின் கீழ பெரும்பான்மையின (Majoritarianism)  ஆட்சியை மேலும் பலப்படுத்த இந்த Westminster  முறை உதவும் என்பதைப் புரிந்து கொண்டு இந்த யாப்பு வடிவமைக்கப்பட்டது.

1940களின் ஆரம்பத்தில் இருந்து தோன்றிய புவிசார் அரசியல் இராசதந்திர நகர்வுகளையும் அது தொடர்பான கருத்துருவாக்கங்களையும் இங்கு அவதானிக்க வேண்டியது அவசியம்இப்பின்னணியில் பிரித்தானியரின் கேந்திர நலன்களை உணர்ந்திருந்த சிங்களத் தலைவர்கள்அதன் பொருட்டு பிரித்தானியரிடம் தமக்கான பேரம் பேசும் சக்தியை வளர்ப்பதற்கான முற்தயாரிப்புகளில் ஈடுபட்டனர். 1940ஆம் ஆண்டு யூலை மாதம் 20ஆம் தேதி இலங்கை தேசிய காங்கிரசின் சார்பில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியத் தலைவர் ஜவஹர்லால் நேருவுக்கு பின்வருமாறு கடிதம் எழுதியிருந்தார்.

'சுதந்திர இந்தியாவுடன் சுதந்திர இலங்கை ஒரு சமஷ்டி ஆட்சிமுறையோ அல்லது நெருக்கமான கூட்டாட்சி முறையோ   (Federation or Close Union) அமைப்பது பற்றி உங்களுடன் நாங்கள் கலந்துரையாட விரும்புகிறோம்என்று எழுதினார்.

அதற்கு ஜவஹர்லால் நேரு ஓகஸ்ட் மாதம் 7ஆம் தேதி பதில் எழுதுகையில் 'சிறிய அரசுகளின் காலம் முடிந்துவிட்டதுசமஷ்டி அமைப்பு முறையிலான பெரிய அரசுகளோ அன்றி இறுக்கமான பிணைப்புக்களைக் கொண்ட பெரிய சாம்ராச்சியங்களோதான் எதிர்காலத்தில் தப்பிப் பிழைக்க முடியும்எதிர்கால உலகில் தனித்து நிற்க முடியாத அளவிற்கு இலங்கை அரசியற் பொருளாதார ரீதியில் ஒரு மிகச் சிறிய அரசே ஆகும்இத்தகைய சூழலில் மிகப்பெரும் ஆபத்து எதிர்காலத்தில் இலங்கைக்கு ஏற்படும் என்ற வகையில் உங்களின் கருத்தை நான் பெரிதும் ஏற்றுக் கொள்கிறேன்என்றார்மைக்கல் றொபேர்ட் தொகுத்த   Documents of the Ceylon National Congress என்ற நூலில் மேற்படி கடிதங்களைக் காணலாம்.

அதேவேளை டைம்ஸ் ஒஃப் இந்தியா பத்திரிகைக்கு 1942ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி டி.எஸ்சேனநாயக்க அளித்த நேர்காணலில் 'பெரிய பலம் பொருந்திய இந்திய சமஷ்டி அமைப்புக்குள் ஓர் அங்கமாக இலங்கை இணைவது இலங்கையின் நலனுக்கு உகந்ததுஎன்றார்.

இவற்றைத் தொடர்ந்து பிரித்தானியர் பக்கம் இருந்து இந்தியா தொடர்பாக சிங்களத் தலைவர்களை அச்சுறுத்தும் கருத்துக்கள் வெளியாகினஇதன் பின்னணியில் சிங்களத் தலைவர்களின் பேரம் பேசும் தந்திரம் மேல்நிலை அடையத் தொடங்கியது.

'இந்தியாவும் இலங்கையும் இணைக்கப்பட்டால் அவ்விணைப்பானது சமத்துவ அடிப்படையில் அமையாதுஇந்த இணைப்பில் இந்திய சமஷ்டி அமைப்பினுள் இலங்கை விழுங்கப்படுவதாகவே அமையும்இத்தகைய போக்கானது ஓர் இயல்பான தலைவிதி என்று இந்தியத் தலைவர்கள் கூறும் அளவிற்குக்கூட சென்றுவிட்டதுஎன்று ஐவர் ஜெனிங்ஸ் தெரிவித்தார்இக்கருத்தை ஐவர் ஜெனிங்ஸ் 1951ஆம் ஆண்டு எழுதிய  The Commonwealth in Asia என்ற நூலில் எழுதியிருந்த போதிலும் இவர் 1943ஆம் ஆண்டில் இருந்து டி.எஸ்.சேனநாயக்கவின் தலையாய ஆலோசகராக விளங்கினார்.

இத்தகைய கருத்தோட்டத்தைக் கொண்டிருந்த சேர்ஐவர் ஜெனிங்ஸ்தான் டி.எஸ்.சேனநாயக்கவின் நெருங்கிய ஆலோசகராக இருந்தார் என்றால் எப்படி அவர் டி.எஸ்.சேனநாயக்கவை கையாண்டுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்இந்தியாவுடன் இணைப்பு என்று சிங்களர்கள் பேசியதும்சிங்களத் தலைவர்கள் எதிர்பார்த்தவாறு பிரித்தானியர் சிங்களத் தலைவர்களை தம்பக்கம் வென்றெடுக்கும் நோக்கில் புடைசூழத் தொடங்கினர்.

எப்படியோ இதன் மூலம் சிங்களத் தலைவர்களின் பேரம் பேசும் சக்தியும் உயர்ந்ததுபிரித்தானியாவிற்கான கேந்திர நலன்களும் முதன்மைப் பெற்றனஅத்துடன் சிங்களத் தலைவர்கள் இந்தியாவுடன் கூட்டாட்சி என்ற பேச்சையும் கைவிட்டு இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை தெளிவாக எடுக்கத் தயாராகினர்.

இந்தியாவுடன் ஒட்டியதான இடவமைவை இலங்கை கொண்டிருக்கும் நிலையில் புவியியல் ரீதியிலும் மற்றும் அரசியல் ரீதியிலும்கலாச்சார ரீதியிலும் இயல்பாகவே அது இந்தியாவின் ஒரு பாகமாய் இணைந்திடக்கூடிய ஆபத்து இருப்பதைப் பற்றி பிரித்தானியர்கள் பெரிதும் பேசிவந்தனர்இப்பின்னணியில் புதிய அரசியல் யாப்புஇலங்கை சுதந்திரம் அடைதல் பற்றிய விடயங்கள் பிரித்தானியருக்கும்சிங்களத் தலைவர்களுக்கும் இடையே பேசப்படலாயின என்பது பற்றி ஓலிவர் குணதிலகவின் மேற்படி வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவினதும் அதன் அணிநாடுகளினதுமான புவிசார் கேந்திர நலனைப் பேணுவதில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் தலையாயது என்பதும்ஈழத்தமிழரின் நலன்களில் இந்தியாவின் அக்கறை பெரிதாக உண்டு என்றும் இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு யாப்பையும்இலங்கையின் சுதந்திரத்தையும் தீர்மானிக்க வேண்டும் என்பதைப் பற்றி ஓலிவர் குணதிலகவுக்கும்பிரித்தானிய குடியேற்றச் செயலாளருக்கும் மற்றும் பிரித்தானிய அதிகாரிகளுக்கும் இடையில் உரையாடல்கள் நிகழ்ந்தன.

ஒரு கட்டத்தில் தமிழர்கள் மீது தமக்கு கடப்பாடு உண்டென்று பிரித்தானிய தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும்அவற்றை மேவி தாம் 'பிரித்தானியாவின் நல்ல நண்பர்என்றும் 'யுத்தத்தின் போதும் சமாதானத்தின் போதும் பிரித்தானியாவின் பக்கம் நின்றே எப்போதும் செயற்பட்டவர்கள்என்றும் எனவே தம்மீது நம்பிக்கை வைக்குமாறும் ஓலிவர் குணதிலக பலவாறாக எடுத்துக்கூறியாப்பு உருவாக்கம்இலங்கை சுதந்திரம் அடைவது பற்றிய தீர்மானம்பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் பிரித்தானிய தளங்களை அமைத்தல் போன்ற முடிவுகளை டி.எஸ்.சேனநாயக்கவின் சார்பில் நிறைவேற்றினார். (இவை தொடர்பான விபரங்களை  Sir Charles Joseph Jeffries vOjpa OEG, A Biography of Sir Oliver Ernest Goonetilake என்ற நூலில் வரும் Prelude to Freedom’, ‘Crucial Negotiations’ போன்ற அத்தியாயங்களில் காணலாம்.)

மேற்படி பிரித்தானியரை திருப்திபடுத்தும் வகையிலும் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையிலும் ஓலிவர் குணதிலக பின்வருமாறு கூறிய கூற்றுக்கள் கவனத்திற்குரியவை. 'நாங்கள் உங்கள் நண்பர்கள்இலங்கை யுத்தத்திலும் அமைதியிலும் உங்களுக்கு உண்மையாகவே இருந்து வந்திருக்கிறதுஉங்கள் நம்பிக்கையை நாங்கள் பொய்யாக்கியதே இல்லை.” (“We are your friends. Ceylon has always been loyal to you in peace and war. We have never let down you.” p.88.)

உங்களுக்கு அவசியமானது என்று நீங்கள் கருதும் எந்ததொரு உடன்படிக்கையும் நாங்கள் உங்களுடன் மகிழ்ச்சியோடு செய்து கொள்வோம்உங்களுடைய பாதுகாப்பு நலன்களுக்காக நீங்கள் நம்பிக்கைக்குரிய இரகசிய ஒப்பந்தங்கள் செய்திருக்கும் வேறு யாரையும்விட எங்கள் மீது நீங்கள் குறைந்தளவு நம்பிக்கை கொள்ள காரணம் ஏதாவது உண்டோ?  [ “We will gladly enter into any agreements you think necessary… Have you any reason to believe us less trustworthy than others to whom you have confided your defence interests?” - p.89.]

ஆனால் இக்காலத்தில் தமிழ்த் தலைவர்கள் மேற்படி புவிசார் அரசியல் பின்னணியைப் பற்றியோ அல்லது மேற்கண்டவாறான இராசதந்திர நகர்வுகளைப் பற்றியோ புரிந்து கொள்ள இயலாதவர்களாய் காணப்பட்டனர்இதற்கு மாறாக இத்தகைய அரசியல் ஆட்சிக்கலை நுணுக்கப் போக்குக்களை தெரிந்து கொள்ளாத தமிழ்த் தலைவர்கள் பிரித்தானியர் மீது நம்பிக்கை வைத்து 'பிரச்சனை பிரித்தானியர் அல்லர் சிங்களவர்தான்என்ற கோணத்தில் பிரித்தானியரை நீதிமான்களாக கருதி அவர்களிடம் முறையிடும் அரசியல் பாரம்பரியத்தையே கொண்டிருந்தனர்விதானைக்குப் பயந்து உடையாரிடம் அடைக்கலம் புகுந்த பாமரனின் கதை போலவே இது அமைந்தது.

 மந்திரிசபை நகல் அரசியல் யாப்பில் சோல்பரி பிரபு கையெழுத்திட்டதற்குப் பின்னான பெயரே சோல்பரி அரசியல் யாப்பாகும்மந்திரிசபை நகல் அரசியல் யாப்பில் 29ஆவது சரத்தும்செனட் சபையும் இருக்கவில்லைஇவை இரண்டையும் சோல்பரி புதிதாக இணைத்திருந்தார்.

சோல்பரி அரசியற் யாப்புக் காலத்தில் 1950களின் மத்திவரை திரு.ஜி.ஜி.பொன்னம்பலமும் பின்பு திருஎஸ்.ஜே.வி.செல்வநாயகமும் தமிழ் மக்களுக்குத் தலைவர்களாக விளங்கினர்.

உண்மையில் இன மத மொழி சார்ந்த 'சிறுபான்மையினர்என்ற தரப்பில் யாருக்கும் இந்த 29ஆவது சரத்து பாதுகாப்பு அளிக்கவில்;லைஅதேவேளை செனட் சபையினாலும் மேற்படி எத்தகைய 'சிறுபான்மைபிரிவினருக்கும் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை.

உலக அபிப்பிராயத்தை மீறி இலங்கை அரசு எதிர்காலத்தில் செயற்பட இயலாது இருக்கும் என்றும் எனவே இலங்கை அரசால் இனங்களுக்கு பாதகமான ஏற்பாடுகளைச் செய்யமுடியாது இருக்கும் என்றவாறு ஓலிவர் குணதிலக பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் 1940களின் மத்தியில் எடுத்துக்கூறியிருந்தார்.

ஆனால் இவற்றையெல்லாம் மீறி அனைத்து சட்டங்களையும்நடைமுறைகளையும் சோல்பரி உயிரோடு இருக்கும் காலத்திலேயே இலங்கை அரசு சட்டங்கள் மூலமும் இனக்கலவரங்கள் மூலமும் மற்றும் அரசியல்நிர்வாக நடைமுறைகள் மூலமும் நிறைவேற்றியதைக் காணலாம்இது இன்றும்இனியும் பொருந்தும்.

'சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான திருடி.எஸ்.சேனநாயக்க உயிருடன் இருந்திருப்பாரானால் அதிர்ச்சிகரமான 1958ஆம் ஆண்டு நிகழ்வுகளும் இன்று தமிழருக்கும்சிங்களவருக்கும் இடையே நிலவும் துயரகரமான பதற்றமும் ஏற்பட இடமிருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை.” [ “But had Mr. D.S. Senanayake, the first Prime Minister of independent Ceylon, lived, I cannot believe that the shocking events of 1958 and the grave tension that now exists between Tamils and Sinhalese would have ever occured. ]

டி.எஸ்.சேனநாயக்கவின் மீது சோல்பரி ஆணைக்குழு நம்பிக்கை கொண்டிருந்ததைப் பற்றியும் ஆனால் அவரின் மரணத்தின் பின்பான சிங்கள அரசியல் போக்குகள் தனக்கும் தனது குழுவினருக்கும் ஏமாற்றத்தை அளித்ததாகவும் பாமர் எழுதிய Ceylone: A Divided Nation  என்ற நூலுக்கான அணிந்துரையில் சோல்பரி மேற்கண்டவாறு கூறியுள்ளார்முதலில் ஒரு தனிநபரை நம்பி ஒரு நாட்டின் வரலாற்றை வகுக்க முடியாது என்பதை அவர் அறியாதவர் அல்லர்.

பரன் ஜெயதிலகவைத் தொடர்ந்து அவரது Leader of the House  என்ற பதவியில் டி.எஸ்.சேனநாயக்க அமர்ந்து தனிப்பெரும் தலைவராக மிளிரத் தொடங்கினார்அவரது தனிச் சிங்கள மந்திரிசபைக்கால அரசியலையும்கூடவே மலையகத் தமிழரின் குடியுரிமைவாக்குரிமை என்பனவற்றை சுதந்திரத்திற்குப் பின் அவர் பிரதமராய் இருக்கும் போதே 1948 - 49ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் தமிழரிடமிருந்து பறித்தெடுத்து மலையகத் தமிழரை கதியற்றவர்களாக்கினார் என்பதையும்மிகவும் சர்ச்சைக்குரிய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை ஈழத் தமிழ் மண்ணில் ஆரம்பித்தார் என்பதையும் நோக்கினால் சேனநாயக்க பற்றிய சோல்பரியின் மதிப்பீடு அர்;த்தமற்றது என்பது தெளிவாகும்.

1956ஆம் ஆண்டு யூன் மாதம் தனிச் சிங்கள மசோதா விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது டொக்டர்என்.எம்.பெரேரா நாடாளுமன்றத்தில் டி.எஸ்.சேனநாயக்க உட்பட்ட சிங்களத் தலைவர்களைப் பற்றி கூறிய மதிப்பீடு இங்கு கவனத்திற்குரியதுஅதாவது கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் டி.எஸ்.சேனநாயக்க காலத்தில் இருந்து ஒவ்வொரு சாத்தியமான திருப்பங்களிலும் சிறுபான்மையினங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாகவும்டொனமூர் யாப்பு கொண்டுவரப்பட்ட போதுகுறிப்பாக மலையக மக்கள் உட்பட்ட சிறுபான்மையினங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டு பின்பு அவை மீறப்பட்டதாகவும்மீண்டும் சோல்பரி யாப்பின் கீழும் இதுவே நிகழ்ந்ததாகவும் என்.எம்.பெரேரா விவரித்துச் சொல்கிறார்.

[“In point of fact, if you go back to the history of the country, you will find that the minorities have been betrayed at every possible turn, from the time of Mr. Senanayake, when the Donoughmore Constitution came up, the minorities, in particular the Indian community, were given certain promises which were broken. Then again, when the Solubury Commission too…”] - Hansard 1956 June, C. 1861.

டொனமூர்சோல்பரி யாப்புக்கள் இரண்டும் பிரித்தானியாவின் பூகோள நலன் சார்ந்த அரசியலுக்கு இலங்கைத் தீவை பயன்படுத்துவது என்ற உறுதியானநீண்டகால நோக்கின்அடிப்படையில் உருவாக்கப்பட்டனமேற்படி அத்தேவையின் பொருட்டு சிங்களவர்களைத் திருப்திப்படுத்தவும்இலங்கையை இந்தியாவுடன் இணையவிடாது தடுக்கவும் வேண்டிய கட்டாயத்தின் பேரில்தெரிந்து கொண்டே தமிழரைத் பலியிடும் அரசியல் யாப்புக்களை உருவாக்கிபிரித்தானியர் தம் இலக்கை எண்ணிய அளவில் அடைந்தனர் என்பதே உண்மை.

சோல்பரி யாப்பு பற்றிய பிற்குறிப்பு.

சோல்பரி யாப்பு உருவாக்கப்பட்ட காலம் பனிப் போர் யுகம் தோன்றி உலகம் இரு அணிகளாக வியூகம் எடுக்கும் காலம் ,  பனிப் போர்  யுகத்தில் நேட்டோ (NATO) அணிக்கு  அமெரிக்கா தலைமை தாங்கத் தொடங்கிய காலம்இந்தியா சுதந்திரம் அடையும் காலம்இலங்கை சுதந்திரம் அடையப்போகும் காலம்  என்ற  அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தலையாய காலச் சந்தியாகும்.

உலகளாவிய அரசியல்பூகோள அரசியல் -- Global politics ), இலங்கை -- இந்தியா--  இந்து சமுத்திரம் சார்ந்த புவிசார் அரசியல்( Geopolitics ) கண்ட அரசியல் ( continental politics ) சமுத்திர அரசியல் ( Oceanic politics ) இந்திய -- இலங்கை அரசியல்,  இந்திய உள்நாட்டு அரசியல்இலங்கை உள்நாட்டு அரசியல் போன்ற அனைத்தையும் தழுவிய பல பரிமாண அரசியல் அறிவியல் பார்வை தமிழ் தலைவர்களிடம் சிறிதும் கிடையாதுஆனால் சிங்களத் தலைவர்கள் மேற்படி அனைத்தையும் தழுவிய கண்ணோட்டத்துடன் பிரித்தானிய இலங்கை அரசியலுக்கு இடையான முரண்பாட்டையும் , இந்தியாவின் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளையும் சரிவர உணர்ந்த நிலையில் சோல்பரி  யாப்பை உடனடி நீண்ட கால கண்ணோட்டத்துடன் வடிவமைப்பதில் ஈடுபட்டனர்.

பிரிட்டானிய நேட்டோ  அணிக்கு முதன்மையாக தேவைப்பட்டது இலங்கையில் நவகாலனித்துவ நலனுக்கு பொருத்தமாக இராணுவ தளங்கள்எனவே பிரித்தானியாவுக்கு கடல் படை விமானப்படை தளங்களை வழங்கி  தமக்குத் தேவையான வகையில் இந்தியாவை எதிர்கொகொள்வதற்கும் ஈழத் தமிழரையும் மற்றும் மலையகத் தமிழரையும் முதலில் ஒடுக்குவதற்கு வாய்ப்பான அரசியல் யாப்பை பெற்றுக் கொள்வதாகும்.

இலங்கையில் இராணுவ தளங்களை பிரித்தானிய அமைப்பது இந்தியாவுக்கு வெறுப்பான விடயமே ஆயினும் இந்தியா மீள முடியாதவாறு இந்து -  முஸ்லீம் இரத்த  சகதிக்குள் சிக்கொண்டிருந்த பின்னணியில் இந்தியாவை மீறிஇந்தியாவை கடந்து பிரித்தானியாவுடன் இராணுவ பாதுகாப்பு ஒப்பந்தங்களை செய்ய முடியும் என்று கண்டு கொண்டனர்.  உலக அரசியலில் தாம் எப்போதும் இந்தியாவின் பக்கமே என்று 1942 ஆம் ஆண்டு டி .எஸ்.  செனநாயக்கா இந்தியாவில் வைத்து இந்திய தலைவர்களுக்கு உறுதிப்படக் கூடிய போதிலும் தருணம் படைத்த போது அதனைக் கடந்து இந்திய எதிர்ப்பு -- தமிழின அழிப்பு என்ற பார்வையுடன் தன் அரசியலை

டி . எஸ் .செநாயக்கர் தலைமையிலான சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர்.

ஒருபுறம் இந்தியாவை ஒரு மூளைக்குள் அமர்த்தி வைத்துக் கொண்டு மறுபுறம் உள்நாட்டில் முறையே மலையக மக்களையும் , ஈழத் தமிழரையும்  ஒடுக்குவதற்கான அரசியலை முன்னெடுப்பதற்குரிய வகையில் பிரித்தானியருடன் கூட்டிணைந்து சோல்பரி யாப்பையும் அதைத் தொடர்ந்த அரசியலையும் முன்னெடுத்தனர்.

சோல்பரி  யாப்பு  உருவாக்கிய 29 ஆவது ஏற்பாட்டையும் மீறி மலையக மக்களின்  குடியுரிமை பறிப்பு,  வாக்குரிமை பறிப்பு போன்ற சட்டங்களால் பிரித்தானிய ஆள்பதிகளான  Hentry Monck- Mason உம் அவரை உடனடுத்து Soulbury பிரபுவும் ஆள்பதிப்  பதவியில் இருக்கும் காலத்திலேயே D. S. செனநாயகக்க அரசாங்கம்   களுத்து வெட்டாய் வெட்டியது.  இலங்கை அரசியல் யாப்பானது  Constitutional"Evolution" என்ற பரிணாம வளர்ச்சிக்கு போகாது Constitutional " De - evolution அல்லது Degeneration" என்ற கீழ்நோக்கிய  சீரழிவுக்கு உள்ளாகும் தொடக்கம் இந்த 29 ஆவது சரத்து விவகாரத்தில் முதல்முறையாக அரங்கேறத் தொடங்கியது.  இந்த 29 ஆவது சரத்து தொடர்பான பின்னணி விபரங்களை அடுத்த அத்தியாயத்தில் விவரமாக பார்க்கலாம்

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பளிக்க வல்லது என்று சோல்பரி யாப்பு உருவாக்கிய 29ஆவது சரத்தும் அந்த யாப்பின் பிதாமகன்களான சோல்பரி உட்பட்ட பிரித்தானிய ஆட்சியாளர்கள் , மற்றும்  இலங்கையின் முதலாவது பிரதமரான D.S.   செனநாயக்க   போன்றோர் முன்னிலையில்   களுத்து வெட்டாய் வெட்டுண்டு போனது

புவிசார் அரசியலில் புவியியல் அவைவிடம்  நிரந்தரமானதுவல்லரசுகள் மாறலாம் ஆனால் புதுசார் அமைவிடம் மாறாது.

அன்று வெளி வல்லரசு என்ற நிலையில்  1940 களின் பிற்பகுதியில் பிரித்தானிய பேரரசு இருந்த இடத்தில் இன்று இலங்கை விவகாரத்தில் சீனப் பேரரசு இருக்கிறதுஅன்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் D.S. செனநாயக அரசாங்கம் இருந்த இடத்தில் இன்று ஜே.வி .பி தலைமையிலான அநுரகுமார  திசநாயக்க அரசாங்கம் இருக்கிறது.

 

அன்று இலங்கைக்கு பிரித்தானிய உயிர் நண்பன்.  இன்று இலங்கைக்கு சீனா உயிர் நண்பன்அன்று D.S. செநாயக்க ஒன்றுபட்டை இலங்கைக்குள்ஒற்றையாட்சி அமைப்பின் கீழ்ஒரு நாடு , ஒரு மக்கள் என்ற கூக்குரலோடு United National Party (  ஐக்கிய தேசியக் கட்சி )  என்ற கொள்கையை முன்வைத்தார்இன்று அனுரகுமார திசநாயக்க தலைமையில் ஜே.விபியினர்  N.P. P . தேசிய மக்கள் சக்தி என்ற மகுடத்தின் கீழ் செனநாயகாவின்  அதே ஐக்கியம் -- தேசியம் - சமத்துவம் என்ற இனமேலாதிக்க வாதக் கொள்கையை  இன்று பல இனங்கள்,  பல தேசிய இனங்கள் கிடையாது என்றும்  ஓரினம்,  ஒரு நாடு ,  ஒரு மக்கள் , ஒரு தேசம் என்று மேலும் மெருகூட்டியவாறு  செனநாயக்க வாதத்தை அச்சும் பிசகாமல்  அதிகம் வளர்ந்த வடிவில் முன்வைத்துள்ளனர்

எப்போதும் பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் அளவால் சிறிய இனங்களுக்கு பாதுகாப்பு என்பது பிரதான கோட்பாடாகும்ஆனால் அத்தகைய பாதுகாப்பு கோட்பாடு இங்கு தகர்க்கப்பட்டுள்ளதுஇலங்கையில் பாதுகாப்பு என்பது அளவால் பெரிய இனத்திற்கு என்பதும்அதிகாரம் அளவால் பெரிய இனத்திற்கு என்பதும்ஜனநாயகம் என்பது அளவால் பெரிய இனத்தின் கைக்குரியது என்பதும் இலங்கை அரசியலில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக் கொள்கையின்  தெளிவான பிரகடனமாகும்.

சுதந்திர காலத்தில் எப்படி உலகப் பேரரச வாதத்தோடு இணைந்து சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வாதத்தை வடிவமைத்தார்களோ அப்படியே இப்போதும் சிங்கள பௌத்த இனவாத ஆட்சியாளர்கள் தமிழருக்கு எதிரான கட்டவைக்கப்பட்ட இனப்படுகொலை வாதத்தை வல்லரசுகளுடன் இணைந்து கட்டமைக்கின்றார்கள்.

சுதந்திரத்தின் பின்னான கால அடுத்த அத்தியாயம் தொடரும்... 


கட்டுரையின் முந்தைய பாகங்கள்...

 கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை - அறிமுகம்.


பகுதி 1. 

இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் இன்றைய நிலையும் பகுதி 1.

பகுதி 2.

இலங்கை மக்களின் வாழ்வில்தீவின் புவியியல்அரசியல்புவிசார்-அரசியல்புவிசார்-வரலாற்றுக் கட்டமைப்புகளின் பங்கு.

பகுதி 3.
இலங்கையை ஆக்கிரமித்த இந்தியஉலகப் பேரரசுகள்.

பகுதி 4.
பிரித்தானிய-இலங்கையில் தோன்றிய தேசியவாதம், சிங்கள இனவாதம்  மற்றும் சமஸ்டி சிந்தனை.

அதிகம் பார்க்கப்பட்டவை: