சனி, 8 நவம்பர், 2025

இலங்கையில் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’யின் தோற்றமும் இன்றைய நிலையும் - பகுதி 3.

 பகுதி 3. இலங்கையை ஆக்கிரமித்த இந்திய, உலகப் பேரரசுகள்.

உலகளாவிய அர்த்தத்தில்  எங்கு  பேரரசுகள் எழுகின்றனவோ அங்கெல்லாம் அவை ஓர் உயிரியைப் போல தாம் வாழும்  அண்டைய  பிரதேசத்துக்குள் தமது  கால்களை அகட்டி நகர்ந்து பரவும். அது இந்தியப் பேரரசுக்கு விதிவிலக்கானது அல்ல. கி.மு நான்காம் நூற்றாண்டில் முதலாவதாக இந்தியாவில்  எழுந்த மௌரியப் பேரரசு அண்டை நாடுகளை நோக்கிப் பரந்து விரிவடையத் தொடங்கியது. மௌரியப் பேரரசு அசோகச் சக்கரவர்த்தியின் தலைமையில் பேரரச தத்துவமாய் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய பௌத்த மதத்தைக் கையில் எடுத்து அதன் வழி  பௌத்த மத வடிவில் பேரரசர் ஆதிக்கம் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்குப் பரவியது.

அதேவேளை, பேரரசுகளின்  எழுச்சியையும் வளர்ச்சியையும் தாண்டி பேரரசுகளை அண்டிய பகுதிகளில் தப்பிப் பிழைத்து வாழும் சிறிய அரசுகளும் உண்டு என்பதும் கவனிக்கத்தக்கது. இந்தவகையில், அரசுகளின் அல்லது பேரரசுகளின் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு முக்கிய அரசியல் கோட்பாடு கி.பி 1648 ஆம் ஆண்டு வடிவம் பெற்ற வெஸ்பாலிய உடன்படிக்கை (The Treaty of Westphalia) - அரசுகள் ஒன்றை ஒன்று அனுசரித்து சமாதான பூர்வமாக வாழ வேண்டும் என்றும்  ஓர் அரசை இன்னொரு அரசு ஆக்கிரமிக்கக்கூடாது என்றும் சர்வதேச பரிமாணம் மிக்க உடன்பாடு ஏற்பட்டது. வரலாற்றில்  இது அப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டது என்று சொல்வதற்கு இல்லை ஆயினும், பெரிய அரசுகளை அண்டி சிறிய அரசுகள் வாழும் வரலாற்று நடைமுறையும் உண்டு. இது பெரிய -  சிறிய அரசுகளுக்கு இடையே உறவுகளைக் கையாளும் அரசியல் கலையில் தங்கி உள்ளது என்பதும் கண்கூடு. இப்பிரச்சினையைக் கட்டுரையின் இறுதியில் ஆராயலாம்.

 

மகாவம்ச மனப்பாங்கு 

கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் பரவிய அசோகப் பேரரசு  தேரவாத (Theravada) மகா சங்கத்தையும் தேரவாத பௌத்த  அரசையும் இலங்கையில் ஸ்தாபித்தது. எப்படியோ அசோகப் பேரரசினது  பேரரச ஆதிக்கத்திற்கு இலங்கை பணிந்தது. அரசும் மதமும் பேரரச ஆதிக்கத்தில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று  வரலாற்றாளர்கள் கூறுவது சரி.

கி.மு 2 ஆம் நூற்றாண்டு  அளவில் (கி.மு 150 - 100) இந்தியாவில் இன்னொரு பௌத்த பிரிவாக மகாயான  பௌத்தம் (Mahayana Buddhism) எழுந்தது. அது தென்னிந்தியாவில் வலுவடைந்து, கி.பி  3 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மன்னன் மகாசேனன்  (Mahasena 277 - 304 AD) காலத்தில் சோழ நாட்டைச் சேர்ந்த தமிழ் பௌத்த துறவியான சங்கமித்தர் (Sangamittar) தலைமையில் இலங்கைக்குள் நுழைந்தது. அம்மதப் பிரிவு மன்னன் மகாசேனனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரச மதமாய் உருப்பெறத் தொடங்கியது. அக்காலத்தில் இலங்கையில் தேரவாத பௌத்தம் தடை செய்யப்பட்டு அதன் மகாவிகாரையும் மகா சங்கத்தினரும் தாக்கப்பட்டனர்.

இதனால் தேரவாத பௌத்த பிரிவுக்கும் மகாயான பௌத்த பிரிவுக்கும் இடையே வன்முறை,  வாளேந்திய போர்முனை உருவான சூழலில் இறுதியாக  மன்னன் மகாசேனன் மீண்டும் தேரவாத பௌத்தத்துக்கு  மாறியதும்  மகாயான தலைமை மதகுருவான சங்கமித்தர் படுகொலை செய்யப்படுவதுடன் இத்தகைய மதப்பூசல் முடிவுக்கு வந்தது.

இங்கு பௌத்தம்  - அரசு - அரசியற்கொலை (Assassination), அதுவும் ஒரு தலைமை பௌத்த துறவி அரசியற்கொலை செய்யப்பட்டமை  என்பன ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த ஒரு வரலாற்றுத் திரட்சியைக்  காணலாம்.

கி.பி 433 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவிலிருந்து பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அறுவர்  அநுராதபுர  இராட்சியத்தைக் கைப்பற்றி 26 ஆண்டுகள் ஆண்டனர். இக்காலத்தில் பாண்டியர்களால் தேடப்பட்டுவந்த  தாதுசேனனை  (Dhathusena) பௌத்த மகா விகாரையின் தலைமை மதகுருவும் தாதுசேனனின் மாமனும் ஆகிய  மகாநாம  தேரர் (Mahanama Thero), தனது மருமகனாகிய  தாதுசேனனை பௌத்த துறவியாக மாறுவேடமிட்டுப் பாதுகாத்து வந்தார். இறுதியாக பாண்டியர் ஆட்சியை  தாதுசேனன்  முடிவுக்குக் கொண்டுவந்து 459 ஆம் ஆண்டு அநுராதபுரத்தின் மன்னனாய் முடிசூடிக் கொண்டார்.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியிற்தான் மேற்படி மகாநாம தேரரினால் கி.பி  5  ஆம் நூற்றாண்டளவில்  பௌத்த - அரசியல் - வரலாற்றைக் கூறும் மகாவம்சம் என்ற நூல் முன்னைய பதிவுகளில் இருந்து  திரட்டியும், தொகுத்தும், புனைந்தும் வரையப்பட்டது.  அவ்வாறு அவர்  எழுதியதற்கும்  அப்பால் பிற்காலகட்ட வரலாற்றுச் சூழல்களில் அவ்வப்போது தேவைப்பட்ட  இன, மத, அரச  நோக்கங்களுக்குப் பொருத்தமாக மகாவம்சத்தில் விஷமத்தமான இடைச் செருகல்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்நூலில் சொல்லப்படுபவை எவ்வளவு தூரம் சரி - பிழை, நல்லது - கெட்டது, உண்மை - பொய் என்பனவற்றிற்கு அப்பால்  அது, அரசியல்ரீதியாக சிங்கள பௌத்தர்களின் மனப்பாங்கையும் அரசியல் போக்கையும் வடிவமைக்கும் ஒரு கருத்தியலாய்  நடைமுறை அரசியலில் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தியாவில் பேரரசு எழ அது இலங்கைக்குப் பரவியது.
இந்தியாவில் தேரவாத பௌத்தம் எழ அது இலங்கைக்குப் பரவியது. இந்தியாவில் மகாயான பௌத்தம் எழ அது  இலங்கைக்குள் நுழைந்து சவாலாய் எழுந்தது.

இவ்வகையில், இந்தியா தொடர்பாக இலங்கையில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றங்கள் வெறுமனே அவ்வப்போதைய காலகட்டங்களுக்குரிய வரலாற்றுத் துடிப்பு நிலையாக (Historical trend) மட்டுமன்றி அதனையும் உள்ளடக்கிய  நீண்டு நெடிய  வரலாற்று வளர்ச்சிப் போக்குக்கு  (Historical process)  உரியதாயும்  அமையும் நிலையில்  அது இலங்கையின் வரலாற்றியலாயும் (Historiography)  வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, வரலாற்றைப் பார்க்கும் பழக்கப்பட்ட ஒரு பக்கப் பார்வை இயலாய் இது அமைந்துள்ளது.   இதனை 'மகாவம்ச  மனப்பாங்கு' என்று அழைப்பர்.

 

இனப்படுகொலை வாதம் - யூதர்களை முன்வைத்து ஒரு பார்வை.

மனிதகுல வாழ்விலும் வரலாற்றிலும் ஐதீகங்கள் (Myths) நிறையவே  உண்டு. வசீகரமான கற்பனை நிறைந்த இத்தகைய ஐதீகங்கள் வெறுமையில் இருந்து தோன்றுவதில்லை. அவை நிகழ்தகவுள்ள ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் இருந்து தோன்றுகின்றன.  உதாரணமாக - யூதர்கள் பின்பற்றும் 'வாக்களிக்கப்பட்ட பூமி' ( The  Promised Land - இறைவனால் யூதர்களுக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமி) என்ற  ஐதீகமானது  அராபியர்கள், பாரசீகர்கள்,  ரோமர்கள் என்போரால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய புவியியல் அமைவிடத்தை யூதர்கள் கொண்டிருந்த பின்னணியில், அதன் அடிப்படையிலான அரசியல் வரலாற்றுப் போக்கும் காணப்பட்ட  சூழலில் மேற்படி 'வாக்களிக்கப்பட்ட பூமி' என்ற  ஐதீகக் கோட்பாடு  தோன்றியது போலவே இலங்கையிலும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் 'தம்ம தீப' - பௌத்த மதத்தைப்  பேணிப் பாதுகாப்பதற்கென  புத்த பகவானால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு இலங்கை  - என்ற ஐதீகம் இந்தியாவுடன்  பின்னிப் பிணைந்துள்ள  இலங்கையின் அமைவிட சூழலில் தோன்றியது.

யூதர்கள் மீதான  ஹிட்லரின்  யூத இனப்படுகொலை  வாதமும்  வெறுமையில் இருந்து உருவாகவில்லை. அதுவும் ஒரு வரலாற்றுச் சூழலில் இருந்து உருவானது.  ஹிட்லர் தனது அபகீர்த்திமிக்க   Mein Kamf  என்ற நூலில் முன்வைத்த 'Culture founders (creators), culture bearers (carriers), culture destroyers' என மனித குலத்தை மூன்றாகப் பிரித்து,  அதில் யூதர்களை  'Culture destroyers' என்ற வகைப்படுத்தலுக்கூடாக மனித குல நாகரிகத்தின் அழிவுச்  சக்தியாக விபரித்தார்.

கி.மு முதலாம் நூற்றாண்டில் ரோமப் பேரரசின் ஆதிக்கத்திற்கு  யூத  பூமி உட்பட்டதைத் தொடர்ந்து யூதர்கள் பெட்டி படுக்கைகளுடன் (ஆயுதம் தாங்காது) அடைக்கலம் தேடி, ஐரோப்பாவின் பல பகுதிகளையும் நோக்கிப் புலம்பெயர்ந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் குடியமரத் தொடங்கினர்.

நிலம் புலமின்றி, அரசியல் அதிகாரம் இன்றி பெட்டி படுக்கைகளுடன் ஐரோப்பா எங்கும் பறந்து சிதறிய யூதர்கள் ஆங்காங்கே கல்வி, வியாபாரம், வர்த்தகம், பன்றிப் பண்ணைகளை அமைத்தல், கைகளைச் சிறுகச் சிறுக உருவாக்குதல் வாயிலாக  தமது அயராத உழைப்பால் அங்கு வாழ்ந்து வந்த சுதேசிகளை விடவும் நன்னிலை அடைந்தனர். இதனால் யூதர்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டு ஹிட்லருக்கு முன்னே நூற்றாண்டுகளிலேயே பல்வேறு நாடுகளிலும்  தாக்குதல்களுக்கு உள்ளாகினர். படுகொலை செய்தவர்கள் என்ற வரலாற்று பிம்பம் ஒன்றையும் இதற்கு அனுசரணை ஆக்கிக்கொண்டனர்.

இத்தகைய வரலாற்றுப்  பின்னணியிற்தான்  ஹிட்லரால் யூதர்கள் மீதான இனப்படுகொலை வாதத்தை கோட்பாட்டு ரீதியில் முன்வைத்து, யூத இன அழிப்பை அரசியல் இராணுவ ரீதியில் கட்டமைப்புச் செய்ய முடிந்தது. இங்குள்ள முரண்நகை என்னவெனில், பூமியில் உள்ள எந்த ஒரு மனிதக் கூட்டமும்  செய்திருக்காத  அளவுக்கு யூதர்கள் விஞ்ஞான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் வாயிலாகப் பரந்துபட்ட முழு உலகத்திற்கும்  ஒட்டுமொத்த மனித குல நாகரிக  வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி உள்ளார்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக அவர்கள் மீது ஐரோப்பியர்கள் காழ்ப்புணர்வு கொண்டார்கள் என்பதும் அந்தக் காழ்ப்புணர்வுகள் இனப்படுகொலையைக் கட்டமைக்க ஏதுக்களாக அமைந்தன என்பதும் கவனத்திற்குரியது.

விஞ்ஞானம், தொழில்நுட்பம், தத்துவம், அரசியல், புவியியல், வானியல், உளவியல், விவசாயம் ஆகிய தலையாய அனைத்துத் துறைகளிலும் இந்தச் சிறிய இனம் முன்னணிப் பாத்திரம் வைத்துள்ள உண்மையை ஏற்பதற்குப் பதிலாக யூதர்கள் மீது இனப்படுகொலை  வாதம்  அரங்கேற்றப்பட்டது. அதேவேளை, கி.மு 1000 ஆம் ஆண்டுகளிலிருந்து பல்வேறு அரசுகளினாலும் பாதிப்புக்கு உள்ளாகிய  வரலாற்றுப் பின்னணியில் இருந்து, "கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல், இரத்தத்திற்கு இரத்தம்" என்ற  மதக் கோட்பாட்டை    யூதர்கள்  வடிவமைத்தனர்  என்ற துர்ப்பாக்கியத்தையும் சரிவர எடைபோட வேண்டியது அவசியம்.

எந்த ஒரு இனப்படுகொலை வாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அத்தகைய இனப்படுகொலை வாதங்களுக்கான தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய வரலாற்று விதிகளை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சரிவரப் புரிந்துகொள்ளாமல் அத்தகைய இனப்படுகொலை வாதங்களை                    வெற்றிகொள்ளவும் முடியாது என்ற உண்மையையும்      புரிந்துகொள்ள வேண்டும். புனித போதனைகளும் தேனிலும் இனிய நல் மனங்களும் சோறு போடாது. இரத்தமும் தசையுமான யதார்த்தமும் அது சார்ந்த நடைமுறையுந்தான் எதற்கும் முத்தாய்ப்பானது.

'இனப்படுகொலைக்குப் பரிகாரம் பிரிந்து செல்லல் மட்டுமே' ('Genocide can be compensated only by secession') என்ற நியமத்தைத்தான் வரலாறு முன்வைத்துள்ளது. இதனைவிட வேறெந்தப்  புனித போதனைகளும் அதற்குத் தீர்வாகாது.

 

இலங்கையில் தொடரும் சிங்கள இனவாத அரசியலின் வரலாற்று அடித்தளம்.

பொய்  - புளுகு - உருட்டு - பிரட்டு - திரிபு  என்பனவற்றிற்கு அப்பால் வரலாற்றை அதன் இயல்பான வளர்ச்சிப்  போக்குக்குள்ளால் அடையாளம் காணவும் கணிப்பீடு செய்யவும் வேண்டும்.

கட்டமைக்கப்பட்ட  இனப்படுகொலைவாதச் சித்தாந்தத்திற்கான  அடிப்படை ஐதீகமாக விளங்கும் 'தம்மதீப'  கோட்பாட்டை அதன் வரலாற்றுப் பின்புலத்தில் இருந்து அறிவியல் பூர்வமாகச் சரியாக எடைபோட வேண்டும்.

புவிச்சரித இயலின்படி சிறு பாக்குநீரிணையால் இந்தியாவிலிருந்து இலங்கை பிரிக்கப்பட  முன்பு இலங்கை தென்னிந்தியாவின்  ஒரு தொடர் நிலப்பரப்பாக விளங்கியது. இறுதிப்  பனியுகத்தின் பிற்பகுதியில் இலங்கை  கடலால் பிரிக்கப்பட்டு ஒரு தீவானது.

தென்னிந்தியாவில் மக்கள் பரம்பல் ஏற்பட்டபோது அதே தொடர் மக்கள் பரம்பல்தான்  இலங்கையிலும் உருவானது. குறிப்பாக, இலங்கையில் அரசுகள் உருவாகுவதற்கான காலகட்ட மக்கள் பரம்பலைப் பார்க்கையில் தென் இந்தியாவில் காணப்பட்ட அதே பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் கூட்டங்களே  கி.மு 1000 ஆம் ஆண்டுக்கும் முன்பிருந்தே  இலங்கையில் வாழ்ந்தனர். இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஈழத் தமிழ், சிங்களம் என்ற வேறுபாடுகள் அப்போது இல்லை. இவர்கள் அனைவரும் ஒரே பெருங்கடல் பண்பாட்டு மக்கள்  கூட்டத்தினரே.

மேலும் குறிப்பாக, பௌத்தம்  தோன்று  முன்பும்,  அத்துடன்  பின்னாளில் பௌத்தம் இலங்கைக்கு வரமுன்புமான கி.மு 5 ஆம் நூற்றாண்டளவில் இலங்கையின் வடக்கே கந்தரோடையைத் தலைநகராகக் கொண்டும், வடமத்தியில்  அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டும், தெற்கே திஸ்ஸமகாராமவைத் தலைநகராகக் கொண்டும் அரசுகள் தோற்றம் பெற்றன. இதில் மூன்று அரசுகளும் ஒரே  பெருங்கற்  பண்பாட்டினத்தவர்கள் மத்தியிலேயே எழுந்தன.

அரசுகளுக்கு ஒரே ஒரு மொழிதான் விளங்கும். அது அதிகாரம் எனும் மொழியே. தாய் - பிள்ளை,  தந்தை - மகன், அண்ணன் - தம்பி, தமிழன் - சிங்களவன், மலையாளம் -  கன்னடம், அரபு - பாரசீகம்  என்ற  வேறுபாடுகளைக் கடந்து அதிகாரம் அரச வடிவில் பரவும்.

உலகில் தோன்றிய முதலாவது பேரரசு கி.மு 2334 ஆம் ஆண்டு உலகின் முதலாவது சக்கரவர்த்தியான சாகோன் (Sargon) தலைமையில் இன்றைய மத்திய ஈராக்கில் தோன்றிய அக்காட் (Akkad) பேரரசாகும்.  ஒரு சிறிய அக்காட் நகர அரசு நண்டு கால்கள் அகட்டுவது போல அண்டை அயல் அரசுகளை ஆக்கிரமித்தவாறு துருக்கி,  சிரியா உட்பட்ட அகன்ற பெரும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியது. அதிகாரத்தின் அதியுயர் சின்னமான நிரந்தர இராணுவத்தை பூமியிலும் வரலாற்றிலும்  முதன்முறையாக சாகோன் கட்டமைத்தார்.

இதன் வழி அதிகாரத்திற்காகச் சண்டையிடுவது எந்தொரு அரசினதும்   இயல்பான இரத்த ஓட்டமாகும்.  சோழ  -  சேர - பாண்டியர்களும் அப்படித்தான் அடிபட்டார்கள். கோட்டை  - மாயாதுன்ன - றைகம இராச்சியங்களும் அவற்றின் உடன்பிறந்த சகோதரர்களும் தம்மிடையே அப்படித்தான் அரச அதிகாரத்திற்காகச் சண்டையிட்டார்கள்.

அதிகாரம் பற்றிய இரத்தமும் தசையுமான  ஒரு வரலாற்று உதாரணம் இங்கு கவனத்திற்குரியது. 'அதிகாரமே எனது ஆசைநாயகி' -  எஜமானி ('Power is my mistress') என்று கூறினார் நெப்போலியன் (Napoleon). அதே நெப்போலியன் இந்த பூமியில் தனக்கு அதிக அன்புக்குரியவளாகச் சொல்லியது   ஜொசபீன் (Josephine)  எனும்  தனது பேரன்புக்குரிய  காதல் மனைவியைத்தான் ( Napoleon said it over and over, again and again that the only woman he ever really loved was Josephine). ஆனால், அரசியல் அதிகாரத்தின் பொருட்டு  ஆஸ்திரிய  இளவரசியான Archduchess Marie - Louise  என்னும் பெண்ணை நெப்போலியன் மணக்கத் தீர்மானித்ததை  ஜோசபின் ஆட்சேபித்த போது, 'சிம்மாசனத்தில் அவளும் இதயாசனத்தில்  நீயும்' என்று  ஜொசபீனிடம் நெப்போலியன் கூறிய பதில் வியப்பளிக்கக்கூடியதாய் அமைந்தது.

அரசியல்  அதிகாரம் சார்ந்த  இத்தகைய வரலாற்றுப் புரிதலின் பின்னணியிற்தான் இந்தியா - இலங்கை -  ஈழத் தமிழர் - சிங்களவர் சார்ந்த புவிசார்-அரசியல் போக்கைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கி.மு 1000  ஆம் ஆண்டுக்கு முற்பட்டதான  இறைவனால் ' வாக்களிக்கப்பட்ட  நாடு' ('The Promised Land') என்ற யூதக் கோட்பாடும், கி.பி 5 ஆம் நூற்றாண்டைச்   சேர்ந்த புத்த பகவானால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு-  'தம்மதீப' - Chosen Land என்ற கோட்பாடும் அடிப்படையில் ஒரே மாதிரியானவை. அதாவது, இவை இரண்டும் அவையவை சார்ந்த வகையில் ஒத்த  புவியியல் அமைவிட நெருக்கடியில் இருந்து  பிறந்தவை.

மேலே குறிப்பிடப்பட்டவாறு  கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் படையெடுப்பின் போது கால் நூற்றாண்டு காலம் அநுராதபுர அரசு  கைப்பற்றப்பட்டிருந்த  காலத்தில் வாழ்ந்தவர் மகா சங்கத்தின் தலைமை மதகுருவான மகாநாம தேரர். பாண்டியர்களிடமிருந்து அநுராதபுர அரசை மீட்டெடுத்த இவரது மருமகனான மன்னன் தாதுசேனனை தலைமறைவாகப் பேணிப் பாதுகாத்து அநுராதபுர இராச்சியத்தை மீட்க வழி கோலியவரும் இவர் என்ற வகையில் மகாநாம தேரரின் மனதிலும் சிந்தனையிலும் அக்கால அரசியல் சூழலின் தாக்கம்  பெரிதும் உறைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும், இதற்கு முன்னைய நூற்றாண்டில் சோழ நாட்டைச் சேர்ந்த மகாயான பௌத்த துறவியால் அநுராதபுர மன்னன் மகாசேனன் தேரவாதத்தில் இருந்து மகா ஞானத்துக்கு மதமாற்றப்பட்டு,  தேரவாத  பௌத்த மகா சங்கம் தடை செய்யப்பட்டு,  தேரவாதம் இன்னலுக்கு உள்ளானவையும் ஒன்று சேர்த்த  ஒரு வரலாற்றுப் பின்னணியில் மகாநாமரின் மனதில் இந்திய - தென்னிந்திய - தமிழின எதிர்ப்பு வாதம் குடிகொள்வது இயல்பானது.  இக்காலகட்ட புவியியல் - அரசியல் - வரலாற்றுச் சூழலில் மகாநாமரால்  தொகுக்கப்பட்ட மகாவம்சம் தமக்கு எதிரான புவிசார் அரசியல் தாக்கத்திற்கு முகம்  கொடுக்கக்கூடிய வகையிலான கருத்தை அவரது நோக்கு நிலையில் இருந்து இயல்பாகவே  கொண்டிருக்க முடிகிறது. 

அதனாற்தான்  தீபவம்சம் எனும் நூலில் மிகச் சிறிதளவாக எழுதப்பட்டிருந்த  கி.மு இரண்டாம் நூற்றாண்டில் முடியாதிக்கப் போட்டிக்காக நிகழ்ந்த  எல்லாளன்  -  துட்டகாமினி யுத்தத்தை மகா வம்சத்தில் மகாநாம தேரர் ஒரு காப்பிய வடிவில்,  அதற்கு இந்திய எதிர்ப்பு - தமிழின அழிப்புப் பரிமாணம் கொடுத்து எழுதியிருக்க முடியும் அல்லது அதனை ஒட்டிப் பின்னோர் இடைச் செருகல்களைச் செய்திருக்க முடியும்.

எல்லாளன் - துட்டகாமினி யுத்தத்தில், இலட்சக்கணக்கானோர் [தமிழர்] மடியும்படி நேரிட்டது தனக்குக் கவலை அளிப்பதாக மன்னன் துட்டகாமினி வருந்துவதாகவும்  அப்போது பௌத்த துறவிகளின் குழு ஒன்று அவர் முன் தோன்றி அவரை ஆற்றுப்படுத்தப் பின்வருமாறு கூறுவதாகவும் ஓர்  உரையாடல் வருகிறது.

'இந்தச் செய்கையின் காரணமாக நீ சொர்க்கத்துக்குப்  போகும் பாதையில் எவ்வித தடையும் ஏற்படாது' என்று துறவிகள் மன்னனுக்குக் கூறுவதுடன், அவ்வாறு கொல்லப்பட்ட இலட்சக்கணக்கானோர் [தமிழர்] “நமது மார்க்கத்தை நம்பாதவர்கள், தீய வாழ்வை மேற்கொண்டவர்கள், மிருகங்களை விடவும் உயர்வாக மதிக்கப்படக் கூடாதவர்கள் என்று பௌத்த துறவிகள் மன்னனுக்கு  எடுத்துரைத்ததாக மகாவம்சம் அத்தியாயம் 25 பத்தி 110  இல் கூறப்படுகிறது.

இது பிற்காலத்தில் மகாவம்சத்தில் சேர்க்கப்பட்ட ஓர் இடைச்செருகலாக இருக்கலாம் என்று சில வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். அது உண்மையோ - பொய்யோ, இடைச் செருகலோ - இல்லையோ என்பதற்கு அப்பால் சிங்கள பௌத்தர்கள் தமது புனித வரலாற்று நூலாக மதிக்கும் மகாவம்சத்தில் இக்கூற்று நூற்றாண்டுகளையும் கடந்து இருப்பதானது  சிங்கள பௌத்த மக்களின் மனங்களை வடிவமைக்கும் ஒரு கருத்தியலாகவும், இனப் பகைமைக்கு என்றும் தூபமிடவல்ல கருத்தியல் மண்டலத்தை அவ்வப்போதைய அரசியல், மதத்  தேவைகளுக்காக உருவகிப்பதற்கேற்ற ஒரு பலம் பொருந்திய ஆயுதமாகவும் பார்க்கப்படுகின்றது.

மேலும், கி.பி 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அநுராதபுர அரசு சோழப் பேரரசால் கைப்பற்றப்பட்ட நிலையில், சுமாராக 1500 ஆண்டு காலமாய் தலைநகராய்த் தொடர் வளர்ச்சி அடைந்து வந்த அநுராதபுர  தலைநகரம் வேரோடு பிடுங்கப்பட்டு பொலநறுவையில் நாட்டப்பட்டது. அதன் பின்பு இன்றுவரை அத்தலைநகரம் அநுராதபுரம் திரும்பவில்லை.

மேலும், கி.பி 1214 ஆந்திராவில் இருந்து கலிங்கத்து மாகனால் (Magha of the Kalinga’s)  பொலநறுவை  அரசு  கைப்பற்றப்பட்டு 1255  ஆம் ஆண்டுவரை பௌத்த மத நிந்தனையுடன் கூடிய பயங்கர ஆட்சி நிகழ்ந்ததாக வரலாற்றில் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. மாகனின்  படையெடுப்பைத் தொடர்ந்து  பொலநறுவையில் இருந்து சிங்கள இராசதானி இலங்கையின் மத்திய மலைப்பகுதி,  தென்மேற்குப் பகுதி நோக்கி  நகர்ந்து கண்டி மற்றும் இன்றைய கொழும்புத் தலைநகரை நிலைக்களமாகக் கொண்டு ஸ்தாபிதம் அடைந்தது என்ற வரலாற்றுப் போக்கு சிங்கள மக்களின்  மனங்களில் பசுமரத்தாணியாய்    வேரூன்றி உள்ளது.

 

இலங்கைத் தீவின் மீதான கடல்வழி அந்நிய படையெடுப்புகள்.

இலங்கைக்கு வடக்கே இருந்து,  பாக்குநீரிணையைக் கடந்து  இந்தியாவில் இருந்து தொடர்ந்து நிகழ்ந்து வந்த படையெடுப்புகளுகள் போலவே, இந்துமாகடல் தழுவிய வகையில் கி.பி 15 ஆம்  நூற்றாண்டின் முற்பகுதியில் சீனா கடல்சார் பேரரசாக எழுச்சி பெற்றபோது கி.பி 1412  ஆண்டு சீனக் கடற்படைத் தளபதி ஷென்ங் ஹே  (Admiral Zheng He) தலைமையில் கொழும்பு  இராச்சியம் படையெடுப்புக்கு உள்ளாகி மூன்று ஆண்டுகள் அவரது இராணுவப் பிடியின் கீழ் சின்னாபின்னமாகியது. இதுதான்  வரலாற்றில் முதல்            முறையாக தெற்காசியக் கடல் வழியே இலங்கைக்கு வந்த முதலாவது படையெடுப்பாகும்.

இதைத் தொடர்ந்து கி.பி 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய பேரரசுகள் உலகளாவிய கடலாதிக்கத்தைப் பெறத் தொடங்கிய பின்னணியில் 1505 ஆண்டு போத்துக்கீஸரும், 1602 ஆம் ஆண்டு  டச்சுக்காரரும் (கைப்பற்றியது 1658) 1796 ஆம் ஆண்டு பிரித்தானியரும்  கடல் வழியே இலங்கையில் கால் பதித்தனர்.

1796 ஆம் ஆண்டு பிரித்தானியர் கடல் வழியே இலங்கையில் கால் பதித்தபோது பிரான்சுச் சக்கரவர்த்தியான நெப்போலியன் கூறிய பின்வரும் கூற்று மிகவும் கவனத்திற்குரியது.

"திருகோணமலையை யார் தன் கையில் வைத்திருக்கிறாரோ அவர் இந்துமாகடலை ஆள்வார்" ("He who controls  Trincomalee  controls the Indian Ocean'  - Napoleon in 1796).

மேலும், கடல்சார்  ஆதிக்கம்  பற்றி அமெரிக்கக் கடற்படைத் தளபதியான  அல்பிரெட்  டயர்  மாகன் (Admiral Alfred Thayer Mahan) கூறிய  இரண்டு கூற்றுக்கள் முக்கியமானவை.

'இந்து சமுத்திரத்தை யார் கட்டுப்படுத்துகிறாரோ அவர் ஆசியா மீது ஆதிக்கம் செலுத்துவார்"

("Whoever controls the Indian Ocean will dominate Asia' -  1897).

'கடலை ஆள்பவன்  உலகை  ஆள்வான்"

("Whoever controls the seas, rules the world').

முதலில் இலங்கைக்கு வடக்கே இருந்து சிறு பாக்குநீரிணையைத் தாண்டி இந்தியாவில் இருந்து 15 ஆம் நூற்றாண்டின்   முற்பகுதி வரை இலங்கைக்கு  ஏற்பட்ட சவால்களுக்கு அப்பால் 15 ஆம் நூற்றாண்டில் இருந்து கடல் சார்ந்த பேரரசுகளான சீனா, போத்துக்கல், டச்சு, பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற அரசுகளால் கடல் சார் தென்புறத்திலிருந்து இலங்கைக்குச் சவால்கள் உருவாகின. இத்தகைய சவால்கள் அனைத்தும் இலங்கையின் அமைவிடம் சார்ந்தவை.

இலங்கைத் தீவுக்கு வடக்கிலிருந்து பாக்குநீரிணைக்கூடாக இந்திய ஆதிக்கமும், தெற்கே கண்டங்களையும் பெரும் கடல்களையும் கடந்த  உலகப் பெரு வல்லரசுகளின் இந்துமாகடல் ஆதிக்கமும்  கூடவே இதன்வழி  உலகம் தழுவிய  அரசியல் ஆதிக்கமும்  இணைந்த பெரும் அரச ஆதிக்க வலைக்குள் இலங்கைத் தீவும் அதன் இனப்பிரச்சினையும் சிக்குண்டுள்ளன. இந்தவகையில், ஈழத் தமிழருக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையானது சிங்கள பௌத்த அரசுடனும் அதனுடன் தொடர்புள்ள பல்வேறு அரசுகளினது ஆதிக்கங்களுடனும் இணைந்த வகையில் படச்சட்டத்துக்குள் (Frame) கூட்டிக்  கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில், இலங்கையின் இனப் பிரச்சினையும் ஈழத் தமிழருக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையும் இலங்கைத் தீவின்  எல்லைக்கு உட்பட்ட  ஒன்றாக மட்டுமன்றி அது அண்டை நாடு, சீனா, மேற்குலக வல்லரசுகள், இந்நாடுகள் அனைத்தும்  சார்ந்த கூட்டாளி நாடுகள் ஆகியவற்றின் நலன்கள் தழுவிய கூரிய கத்தி மாலையாய் ஈழத் தமிழரின் கழுத்தில் இறுக மாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு பலம் பொருந்திய  பல் பரிமாணக் கத்தி மாலையாய் ஈழத் தமிழரின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட  இனப்படுகொலையை மனம் போன போக்கில் எழுமாத்திரமாய்க் கையாளாது  தெளிந்த அறிவுடனும் அதிக நிதானத்துடனும் கையாள வேண்டும்.

தெற்கே அம்பாந்தோட்டையிலும் தென்மேற்கே கொழும்பிலும் நூற்றாண்டு தழுவிய துறைமுக ஒப்பந்தங்களுக்கு ஊடாகச் சீனா இலங்கையில் கால் பதித்துள்ளது. இது இலங்கைக்குத் தெற்கே  Diego Garcia  அமெரிக்காவின் மிகப்பெரும் இராணுவத் தளத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாய் அமைவதுடன், அது அமெரிக்காவின் இந்துமாகடல் ஆதிக்கத்துக்கும் சவாலாயும் அமைந்துவிடும். கூடவே இலங்கையில் சீனாவின் பிரசன்னமானது இந்தியாவின் பாதுகாப்புக்கும் இருப்பிற்கும் பெரும் சவாலாய் அமைந்துவிடும்.

இந்நிலையில், இந்திய - சீன - அமெரிக்க முக்கோண மையத்துக்குள் இலங்கையும் ஈழத் தமிழர் பிரச்சினையும் ஜீவ மரண போராட்டத்திற்குள் சிக்குண்டுவிடும். இதில் முதல் பலியாகக்கூடியது அரசற்ற அப்பாவி ஈழத் தமிழர்தான்.

இதனைத் தொடராது தொடர் நவீன வரலாற்று வளர்ச்சிக்கூடாகத் தொடர்ந்து நோக்க வேண்டியது  அவசியம்.

 

இலங்கையை தனித்தீவு நாடாக்கிய பிரித்தானிய அரசின் உள்நோக்கம்.

1796 ஆம் ஆண்டு  இலங்கையின் கரையோரப் பகுதிகளைப் பிரித்தானியர் கைப்பற்றிய போதிலும் அதனை இந்தியாவுடன் இணைக்காது 1802 ஆம் ஆண்டு வரை சென்னையில் இருந்து  பரிபாலித்தனர். 1802 ஆம் ஆண்டு பிரான்சுடன் கையெழுத்தான ஏமியன்ஸ் உடன்படிக்கையைத் (The Treat of Amiens) தொடர்ந்து இலங்கையைப் பிரித்தானியா தனது முடிக்குரிய குடியேற்ற நாடாகப் பிரகடனப்படுத்தியது.

இலங்கையை  இந்தியாவுடன் இணைக்காது ஒரு தனித் தீவு நாடாகப் பேணவேண்டும் என்பது பிரித்தானியாவின் பிரதான கடல்சார்  கொள்கையாகும். அதற்கு ஏற்ப கூடவே இலங்கையை  ஓர்  ஒற்றையாட்சி நாடாக வைத்திருக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாய் இருந்தனர். 1802 ஆம் ஆண்டிலேயே ஒற்றை ஆட்சிக்குரிய அரசியல் நிர்வாகக் கட்டமைப்புகளை வகுத்துக்கொண்டனர்.  1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய போது கண்டிப் பிரதானிகளின் வற்புறுத்தலுக்கு அமைய எழுதப்பட்ட கண்டி உடன்படிக்கையில் சிங்கள பௌத்தம் அவர்களது பிரதேச சுயாதிபத்தியம் என்பவற்றை  மதிப்பதாகப் பிரித்தானியர்கள் கூறியபோதிலும், 1818 ஆம் ஆண்டுக் கண்டிக் கலகத்தின் பின்பு அதனைக் கைநழுவவிட்டனர். 1833 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட கோல்புறூக் -  கேமரன் (Colebrooke -- Cameron) அரசியல் யாப்பு  ஏற்பாட்டின் கீழ்  கொழும்பை மையமாகக் கொண்ட தெளிவான ஒற்றையாட்சி நாடாக முழு இலங்கையும் ஒரு கோட்டின் கீழ் கட்டமைக்கப்பட்டது.

முழு இலங்கைத் தீவும்  ஒரு குடையின் கீழ் ஆளப்பட வேண்டும் என்கின்ற கொள்கை  கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே பல்வேறு ஆட்சியாளர்களிடமும் இருந்தாலும், அது நடைமுறையில் 1815 ஆம் ஆண்டு பிரித்தானியரால் கண்டி இராச்சியம்  கைப்பற்றப்படும் வரை ஆள்புல அர்த்தத்தில் இருக்கவில்லை.1815 ஆம் ஆண்டு  கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்டதைத்  தொடர்ந்து மேலும் 1818, 1833 என்ற இரு படிமுறைகளைத் தாண்டி   ஒரு குடையின் கீழ், அதாவது கோல்புறூக் கேமரன் அரசியல் யாப்போடு முழு அளவில்,  முழு இலங்கையும் கொழும்பை மையமாகக் கொண்ட  ஒற்றை ஆட்சி  முறையின் கீழ் கொண்டுவரப்பட்டது.

 பரந்த இந்துமாகடல் நலனோடும் இந்தியாவை ஆள்வதற்கான இராணுவ முகாமாக இலங்கைத் தீவைக் கையாள்வதற்கான நோக்கத்தோடும் ஒற்றை ஆட்சிமுறையின் கீழான  ஒன்றுபட்ட இலங்கையையே அனைத்துக் கடல்சார் பேரரசுகளும் விரும்பின.  ஐரோப்பியப் பேரரசுகளான போத்துக்கீஸசர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், மேலும் அமெரிக்கர், சீனர், இந்தியர் எனப் பல  பேரரசுகளும் விரும்பிய  அதேவேளை நவீன வரலாற்று ஈழத் தமிழருக்குத்  தலைமை தாங்கிய பல தமிழ்த் தலைமைகளும் ஒற்றை  ஆட்சி முறையின் கீழான ஒன்றுபட்ட இலங்கை அரசையே விரும்பின.


பிரித்தானிய-இலங்கையில் பிரித்தானிய அரசின் சேவகர்களாக உருவான ஈழத்தமிழர் தலைமைகள்.

நவீன இலங்கையில் ஈழத் தமிழருக்கான முதலாவது தலைமை இராமநாதன் குடும்பத்துடன் ஆரம்பமாகி 100 ஆண்டுகள் நீடித்தன.  1833 ஆம் ஆண்டு ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி ஈழத்  தமிழருக்கான முதலாவது தலைவராகச் சட்ட நிரூபண சபைக்கான உத்தியோகப்பற்றற்ற உறுப்பினராய்  பிரித்தானிய ஆட்சியால்  நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து முத்துக்குமாரசாமியின் வம்ச வழி வந்தவரான  சேர்(sir). பொன் இராமநாதன் அப்பதவியில் தொடர்ந்தார். 1930 ஆம் ஆண்டு ராமநாதன் காலமாகும் வரை சுமாராக ஒரு நூற்றாண்டு காலமாய் இராமநாதன் வம்சம் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கியது.

பிரித்தானிய  எஜமான்களின் விசுவாசம் மிக்க அடிமைச் சேவகங்களாய் விசுவாசம் மிக்க அடிமைச்  சேவகனுக்குக் குத்தக்கூடிய 'Sir'  என்ற அடிமை முத்திரையை நெற்றியில் குத்தியவாறு இந்த வம்சம் தமிழ் மக்களுக்குத் தலைவனாகியது. இந்தியாவில் 'Sir'  பட்டம் அடிமை முத்திரையாகக் கடும் விமர்சனத்திற்கும்  பலரால் நிராகரிக்கப்பட்டும் வந்த காலகட்டத்தில் இராமநாதன் வம்சம் பெருமையாக இந்த அடிமை முத்திரையைத் தலைமேல் ஏற்றிக்கொண்டது.

இலங்கையில் ஆள்பதிகளாக இருந்த பிரவுன்ரிக் (Brownrigg)  என்பவரின் அந்தரங்கச் செயலாளராய் (Personal Officer) பதவி வகித்த குமாரசுவாமிப்பிள்ளை அவரைத் தொடர்ந்து ஆள்பதிகளான பக்கெட் (Paget), பான்ஸ் (Barnes) என்போருக்கும் மேற்படி விசுவாசம் மிக்க அதிகாரியாய்ப் பணியாற்றினார். குறிப்பாக, பிரித்தானியரால் கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்ட காலத்தில் (1815) ஆள்பதி பிரவுன்ரிக்கு பெரிதும் உறுதுணையாக நின்றவுடன்  பிரவுன்ரிக்குக்கும் கண்டி  இராச்சியப் பிரதானிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில்  முக்கிய பாத்திரம் வகித்தார். இத்தகைய எஜமானிய விசுவாசமிக்க  வகையில் மூன்று ஆள்பதிகளுக்குக் கீழ்ச் சேவகராகப் பணியாற்றியதின் பின்னணியில், ஈழத் தமிழரையும் இலங்கைத் தீவையும் பிரித்தானியரிடம் விற்றுப் பிழைப்பதற்கான பரிசாய் ஈழத் தமிழரின் தலைவராகப் பிரித்தானிய எஜமானால் குமாரசுவாமி நியமிக்கப்பட்டார் என்ற வரலாற்று நடைமுறை உண்மை  பெரிதும் கவனத்துக்குரியது.

இந்தவகையில், பிரித்தானியர்கள் விரும்பிய ஒன்றுபட்ட இலங்கை,  ஒற்றை ஆட்சி முறை என்பனவற்றைத் தோளில் சுமந்தவராய் குமாரசுவாமிப்பிள்ளையும்  கூடவே அவரின் வழிவந்த இராமநாதன் வம்சமும் நவீன வரலாற்றில் ஒரு நூற்றாண்டைக் காவிச் சென்றனர். இராமநாதன் வம்சம் ஒருபுறம், பிரித்தானிய எஜமான்களின் அப்பட்டமான சேவகர்களையும் அதேவேளை கூடவே சிங்கள பௌத்த கனவான்களின் தோழர்களையும் தமிழ் மக்களின் பெயரால் அரசியல் அதிகாரம் பெற்றுக் களவாடினர். இராமநாதன் வம்சம் தமிழுக்கும் சைவத்துக்கும் பணியாற்றியவர்கள் என்று  ஒரு பகுதியினர் குறிப்பிடுகின்றனர் ஆயினும், பசுவில் பால் கறக்க மாட்டுக்குப் புல்லு போடுவது போன்றதே அது.

இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்பது ஒன்றுபட்ட இலங்கையில் ஒற்றை ஆட்சி முறை என்ற அரசியல் கட்டமைப்புக்கு  ஊடாகவே நவீன வரலாற்றில் பிரித்தானியரால் அவர்களது கடல்சார் காலனிய ஆதிக்க நலன்களின் பொருட்டுக் கட்டமைப்புச் செய்யப்பட்டது.  அத்தகைய கட்டமைப்பை உருவாக்குவதில் ஈழத் தமிழரின் பெயரால் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேல் பெரும் பணியாற்றியவர்கள் இராமநாதன் வம்சத்தினர் என்பதையே வரலாற்றன்னை கண்ணீரும் செந்நீரும் சொரியப் பதிந்து வைத்துள்ளாள்.

பிரித்தானிய அரசு சிங்களர் பெரும்பான்மைக்கு சாதகமாக டொனமூர் யாப்பை கொண்டுவந்த போது, தான் விசுவாசமாய் நம்பி இருந்த தனது வெள்ளை எஜமான்கள் தன்னைக் கைவிட்டதையும், தான் தோள்கொடுத்த சிங்களக் கனவான்கள் கால்களால் உதைத்துவிட்டதையும் எண்ணி நொந்து கொண்ட  சேர் பொன். இராமநாதன் தமது வம்சத்தின் அரசியல் தோல்வியைத் தனது அந்திமக்காலத்தில் பின்வருமாறு குற்ற ஒப்புதல் வாக்குமூலமாய்  பதிவு செய்தார்.

 'Donoughmore means Tamils no more'. டொனமோர் வந்தால் தமிழர்கள் இனி இல்லை என்று வருத்தத்தோடு பதிவு செய்தார்.

1956 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டுவரை தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கிய 'தந்தை செல்வா'  என்ற மகுடம் தாங்கிய திரு. எஸ்.ஜே. வி. செல்வநாயகம் தனது அந்திமக்காலமான 1976 ஆம் ஆண்டு பின்வருமாறு  அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தோடு மேற்படி இராமநாதனின் வாக்குமூலம் ஒப்பிடப்படக்கூடியது.

 'இனி தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்'

தமது ஆயுட்கால அரசியற் தலைமைத்துவத் தோல்வியைக் கடவுளை முன்னிறுத்தி, கூடவே கடவுளின் தோள்களில் சுமத்திவிடும் ஒரு  குற்ற ஒப்புதல் வாக்குமூலமே இதுவாகும்.

இந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்திற்கு இராமநாதனே வழிகாட்டியாய் அமைந்தார். பிற்காலத்தில் தமது பாரிய அரசியல் தோல்விகளுக்கெல்லாம் ஒப்புதல் வாக்குமூலபாய் 'சிங்களத் தலைவர்கள் ஏமாற்றிவிட்டார்கள்'  என்று திருவாளர்கள் ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்ற தலைவர்கள் இதுவரை கூறி உள்ளமையும் மேற்படி கூறப்பட்ட அடிப்படையை ஒத்ததே. தமது இயலாமைகளையும் தோல்விகளையும் தவறுகளையும் குற்றங்களையும்  பழியாக  எதிரிகளின் தலைகளில் போட்டு அல்லது கடவுளின் தோள்களில் சுமத்தித் தம்மை அப்பாவிகளாக உருவகித்துத் தம்மை விடுதலை செய்துவிடுவது  தமிழ்த் தலைவர்களுக்குக் கைவந்த கலையாகும்.

கால் கல்லுடன் மோதிவிட்டது என்ற தன்பக்க உண்மைக்குப் புறம்பாக 'காலில் கல்லடித்துவிட்டது' என்று கல்லில் மட்டும் பழிபோடுவது போல  பொதுவாக தமிழ்த் தலைவர்கள் தமது பிழை, குற்றம், குறை, தவறு, தோல்வி, வீழ்ச்சி  என்பனவற்றைப் பிறர்மீது மட்டுமே  ஏற்றித் தமக்குத் தாமே வெள்ளை அடித்துத் தப்பித்துக்கொள்வார்கள். இதுவிடயத்தில் அப்பாவிக் கடவுளையும்  முன்னிறுத்திக் குற்றத்தில் கடவுளுக்கும்  பங்களித்துத் தம்மைத்  தற்காத்துக்கொள்வார்கள்.

தோல்விக்குப் பொறுப்பேற்காத இத்தகைய வரலாற்று வளர்ச்சிப்போக்கும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குச்  சேவகம் செய்யவல்ல  ஒன்றாகவே அமைந்தது. ஆதலால், தோல்விக்குப் பொறுப்பேற்காத   தமிழ்த் தலைவர்களின் அரசியல் கலாசாரமும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின்  ஓர் அம்சம் என்ற பரிமாணத்தையே  பெறுகிறது.

இராமநாதன் வம்சம் தமிழ் மக்களின் பெயரால் அரசியல் அதிகாரத்தைப் பெற்று, அவர்கள் நமது வெள்ளை எஜமான்களுக்கும் சிங்களக் கனவான்களுக்கும் செய்த சேவகம்தான் பெரிது என்று வரலாறு சொல்கிறது.

வரலாறு என்பது கிரேக்க மூலச் சொல்லான  'Historia' என்பதில் இருந்து Histories, History  என  உருவானது. வரலாறு என்றால் ஒரு கதை அல்ல, நடந்த சம்பவங்களைத் தொகுத்துச் செல்லும் ஒரு தொகுப்புமல்ல. அது நடைமுறை பற்றிய ஒரு விசாரணையின் பாலான தீர்ப்பு.

'Historia' என்ற கிரேக்க மூலச் சொல்லின் பொருள் 'inquiry' - விசாரணை. இதன் வரைவிலக்கணம் பின்வருமாறு சொல்லப்படுகிறது:  'The Greek word  historia originally meant inquiry, the act of seeking knowledge,  as well as the knowledge that results from inquiry.' 

'Historia' என்ற கிரேக்க  மூலப்பதத்தின் பொருள் விசாரணை என்பது. அதாவது அறிவைத் தேடும் செயல்,  அத்துடன் விசாரணையின் பெறுபேறாய்ப்  பெறப்படும் அறிவு.'

நவீன வரலாற்றில் 1930 ஆம் ஆண்டுவரையான இராமநாதன் வம்சத்தின் சுமாராக நூற்றாண்டு கால அரசியல் தலைமைத்துவத்தையும், அதன் பின்னான  இற்றைவரையான  சுமாராக நூற்றாண்டு காலத் தமிழ் அரசியல் தலைமைத்துவத்தையும்  காய்தல் உவத்தலின்றி, விருப்பு வெறுப்புகளைக் கடந்து முற்றிலும் அறிவார்ந்த வகையில் விஞ்ஞானபூர்வமான வரலாற்றாய்வுக்கூடாக எடை போடுவதன் மூலமே கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் முழுமையான பரிமாணத்தையும்  கற்றுணர்ந்து ஈழத் தமிழரின் எதிர்காலத்திற்கான பாதையையும் பயணத்தையும் வகுக்க முடியும்.

பகுதி 4 கட்டுரை தொடரும்....


கட்டுரையின் பிற பகுதிகள்.

 கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை - அறிமுகம்.


பகுதி 1. 

இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் இன்றைய நிலையும் - பகுதி 1.

பகுதி 2.

இலங்கை மக்களின் வாழ்வில், தீவின் புவியியல், அரசியல், புவிசார்-அரசியல், புவிசார்-வரலாற்றுக் கட்டமைப்புகளின் பங்கு.

பகுதி 3.
இலங்கையை ஆக்கிரமித்த இந்திய, உலகப் பேரரசுகள்.

பகுதி 4.
பிரித்தானிய-இலங்கையில் தோன்றிய தேசியவாதம், சிங்கள இனவாதம்  மற்றும் சமஸ்டி சிந்தனை.

வெள்ளி, 7 நவம்பர், 2025

போராட்டத்தை இனி எங்கிருந்து தொடங்குவது; எப்படி தொடங்குவது ?

 3/11/2025

 

ஆயிரம் வியாக்கியானங்களுக்கு அப்பால்

போராட்டத்தை இனி எங்கிருந்து தொடங்குவது; எப்படி தொடங்குவது ?

மு. திருநாவுக்கரசு.



 

கட்டுண்டோம் , சிறைப்பட்டோம், மிச்சம் மிகுதி இல்லாமல் எல்லாவற்றையும் இழந்தோம். ஆயினும் நாம் மீண்டெழ  வேண்டும்,

ஆயிரம் விளக்கங்களும் பல்லாயிரம் வியாக்கியானங்களும் சொல்லப்படுவது சரி ; ஆனால் அதற்கும் அப்பால்  ஈழத் தமிழரின் விடிவுக்கான பாதையை இனி எங்கிருந்து தொடங்குவது? எப்படி தொடங்குவது ? என்ற  வினாவுக்கான பதிலை காண வேண்டியது முதன்மையானது. .

 

மாண்டுபோன புதைகுழியிலிருந்தே எழுச்சியும் தொடங்கும்


ஒருவர் தான் விழுந்து கிடைக்கும் இடத்திலிருந்துதான் எழ வேண்டுமே தவிர வானத்திலிருந்தோ அல்லது எங்கோ தொலை தூரத்தில் இருந்தோ  எழமுடியாது.

 

"இந்த உலகம் எப்படி காணப்படுகின்றது என்பதை பற்றி மட்டுந்தான் இதுவரை தத்துவஞானிகள் பல்வேறு வழிகளிலும்

வியாக்கியானப்படுத்தி உள்ளார்கள். ஆனால் இங்கு முக்கியமான விடயம் என்னவெனில் அதை எப்படி மாற்றுவது  என்பதுதான்" - காரல் மார்க்ஸ். 

 ( " Philosophers have hitherto only interpreted the world in various ways , the point is change it" - Karl Marx)

 

அனைவரும் வீழ்ந்து உழன்று தங்களுக்குள் பலவாறு மோதுண்டு கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு மேற்படி கால் மார்க்ஸின் தத்துவஞானக்  கூற்று ஒரு  திறவுகோலாய் அமையவல்லது.

 

கூரையில் இருந்து விழுந்து திகைத்துப் போன பல்லியும் தன்னையும்  தான் வீழ்ந்து கிடக்கும்  இடத்தையும் சுதாரித்து , மீண்டும் கூரைக்குப் போக வேண்டுமானாலும் வீழ்ந்த இடத்தில் இருந்துதான் மெல்ல ஊர்ந்து அக்கம் பக்கமாய் நகர்ந்து பொருத்தமாக மேல் நோக்கி போகிறது.

 

முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக்கு பின் ஈழத் தமிழர் இனி எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதில் மிகவும் இலகுவானது.  உள்நாட்டு -- வெளிநாட்டு களநிலை யதார்த்தத்தை கருத்துக்கு எடுத்து அந்த இரண்டு அந்தலைகளையும் ஒன்றோடு ஒன்று முடிவதன் மூலம் ஈழத் தமிழர் சார்ந்த அரசியலில் ஒரு புதிய உராய்வையும் அரசியற் பெரு  வெடிப்பையும்  ஏற்படுத்த முடியும்.

 

உள்நாட்டு களநிலை யதார்த்தம்  கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு இயல்பானது.

 

அதாவது 2009 ஆம் ஆண்டு மே மாதத்தோடு ஈழத் தமிழரின் அரசியல் வாழ்வு புதைகுழிக்குள் மாண்டுள்ளது. ஆதலால்  மாண்டு கிடக்கும் அந்தப் புதைகுழிக்குள் இருந்துதான் ஈழத்தமிழரின் அரசியலைத் இனித் தொடங்க வேண்டும்.  

 

எதிரி தமிழ் மக்கள் தரப்பில் இருந்து , புலிகளிடம் இருந்த ஆயுதங்களை மட்டும் பறிக்கவில்லை கூடவே தமிழ் மக்களையும் ஆடை களைந்து நிர்வாணமாக்கி,  நீண்ட பெரும் பண்பாட்டுத் தோலையும் உரித்தெறிந்தார். மேலும் புதைகுழியோடு தமிழ் தேசியத்தை மூடி  முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்றும் நம்பினார்.

 

ஆதலால் அந்தப் புதைகுழியில் இருந்துதான், ஆதாவது மனிதனும் பண்பாடும் நிர்வாணம் ஆக்கப்பட்ட அந்தப் புதைகுழியில் இருந்துதான் ஈழத் தமிழரின் அடுத்த கட்ட அரசியலைத் தொடங்க வேண்டும்.

 

எதிரி  தமிழர் தரப்பில் இருந்த கோட்டை கொத்தளங்களை மட்டும் தகர்க்கவில்லை.  கூடவே தன்னைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த  தர்ம அரண்களையும் தகர்த்து தன்னை பெரும் இனப்படுகொலையாளி என்றும் ம்பலப்படுத்தியுள்ளார்.

 

முதலாவது அர்த்தத்தில் தமிழர் தரப்பின் கையில் இருந்து ஆயுதங்களை பறித்ததற்கு பதிலாக மக்கள் திரளை ஆயுதமாக்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார்.  உண்மையான அர்த்தத்தில் தற்போதைய சர்வதேச யதார்த்தத்தின் கீழ் மக்கள் திரள் என்பது வெடிகுண்டுகளை விடவும் பலமான ஆயுதமாகும்.

 

"இனப்படுகொலைக்குப் பரிகாரம் பிரிந்து செல்லல் மட்டுமே"  என்ற அரசியல் கூற்று மிகவும் ஆழமானது .

 

இனப்படுகொலைக்கு  எதிராக அந்த படுகொலைக்கு உள்ளான  மக்களிடம்  இயல்பாகவே அந்த எதிரிக்கு எதிராக கோபமும் வெறுப்பும் இருக்கும். இந்நிலையில் சர்வதேச அரசியல் யதார்த்தத்தை ஒருகணம் பார்ப்போம்.  

 

ஆயுதப் போராட்டங்களை அரசுகள் ஒடுக்கியதால், உருவாகி வரும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள்.

அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான 2001  பின் லேடனின் தாக்குதலுக்குப்பின் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 2001 செப்டம்பர் 28ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட  இல. 1373 தீர்மானத்தின் அடிப்படையில் உலக அரங்கில் ஆயுதப் போராட்டங்கள் அனைத்தும் சர்வதேச பயங்கரவாதம் என்ற பட்டியலுக்குள் வரும் நிலை உருவானது. 

 

மனிதன் மட்டுமல்ல ஒவ்வொரு உயிரும் தன் வாழ்வுக்காக போராடுவது இயல்பு.  எனவே மனிதனின் கூட்டு உரிமைக்கான ஆயுதப் போராட்டங்கள் தடை செய்யப்படும்போது மக்களின் போராட்டங்களுக்கும் எழுச்சிகளுக்கும்  வடிகால் இல்லாமல் போய்விடும். எனவே ஆயுதப் போராட்டங்களை தடை செய்ததற்கு பதிலாக சமாதான வழியிலான  மக்கள் எழுச்சி போராட்டங்களை அனுமதிக்க வேண்டியது தவிர்க்க முடியாத யதார்த்தமாய் மாறியது.

 

இத்தகைய பின்னணியில் பல ஆசிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் மக்கள் கிளர்ச்சி போராட்டங்கள் எழுந்தன.

இந்த வரிசையில் குறிப்பாக துனீசியா, இலங்கை, பங்களாதேஷ் போன்ற பல நாடுகளில்  மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகளின் வாயிலாக ஆட்சியாளர்கள்   சிம்மாசனத்தைவிட்டுத் துரத்தியடிக்கப்பட்டனர். மேலும் பல ஆசிய நாடுகளிலும் அமெரிக்கா உட்பட வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டங்கள்  மக்களுக்கு எதிரான ஆளும் குழாங்களை  பணிய வைத்தன.




 

குறிப்பாக அமெரிக்காவில் 2020 மே கடைசி வாரத்தில் கறுப்பினத்தவரான  George  Floyd ஐ  வெள்ளையின  போலீஸ் அதிகாரி கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தி மூச்சுத் திணறவைத்தே படுகொலை செய்ததற்கு எதிராக அமெரிக்கா எங்கும் கறுப்பின மக்களின் எழுச்சி போராட்டங்கள் தெருக்களை நிரப்பின.   


 


அமெரிக்காவில் தொடர்ந்து எட்டு வருடங்கள் ஜனாதிபதியாக இருந்த  அரைக் கறுப்பு இனத்தவரான திரு  பராக் ஒபாமாவின் பதவிக்  காலம் முடிந்த ஒன்றரை வருடங்களுக்குள் அவர் அமெரிக்கா ஆளும் வர்க்கத்தின் இத்தகைய இன வெறுப்புச் செயலுக்கு எதிராகவும் கொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு ஆதரவாகவும் எழுந்த  மக்கள் போராட்டங்களுக்கு முற்றிலும் ஆதரவாக ஒரு பெரும் காத்திரமான அறிக்கையை 2020 யூன் 3 தேதி வெளியிட்டார்.

 

அந்த அறிக்கையில் அவர் வெளியிட்ட வாசகங்கள் பெரிதும் கவனத்திற்குரியவை.

 

மக்கள் கிளர்ச்சி போராட்டங்களுக்கு எதிராக பேசி வருவோர்களை நோக்கி பின்வருமாறு கூறினார் :

 

"போராட்டங்களுக்கு எதிராக பேசுவோர்களே கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்; இந்த நாடு போராட்டங்கள் மீது கட்டி எழுப்பப்பட்டது . அதுதான் அமெரிக்க விடுதலைப் புரட்சி."

"இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கான ஒவ்வொரு  அடியும்,  மக்களின் சுதந்திரத்தை விரிவாக்குவதற்கான ஒவ்வொரு அடியும், எமது ஆழமான இலட்சியங்களை வெளிப்படுத்துவதற்கான ஒவ்வொரு அடியும் ஆளும் அதிகார வர்க்கத்தினரை நிலைகுலையச் செய்த இத்தகைய போராட்டங்கள் வாயிலாகவே முன்னெடுக்கப்பட்டன".

 

திரு , ஒபாமாவின்  வலுவான இந்த அறிக்கை சாதாரண வெள்ளையர்களின் மனங்களை கவ்விப் பிடித்தது.  பதவியில் இருந்த ஜனாதிபதி உட்பட ஆழும் குழாத்தை ஈடாட வைத்தது.

போராட்டம் குறிப்பிடக்கூடிய வெற்றியை அடைந்தது.  

தண்டனைகளுக்கு அப்பால் பரந்த அமெரிக்க மக்கள் அபிப்பிராயம் கறுப்பின ஒடுக்கு முறைக்கு எதிராக முன்னேற்றகரமான திரட்சியை அடைந்தது.

 

மக்கள் எழுச்சிப் போராட்டங்களின் காலம் இது

இன்றைய உலகளாவிய சூழலில் இனப்படுகொலைக்கு  எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நிகழக்கூடியதற்கான காலநேர தட்பவெப்ப சூழல் கனிவடைந்து இருக்கிறது.  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்னான கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் தலைமைகள் இதனை முன்னெடுக்க முற்றிலும் தவறிவிட்டன என்பது மட்டுமன்றி , அதாவது புதைகுழிகளை முன்னெடுப்பதற்கு பதிலாக

புதை குழிகளை மூடி மறைத்து சிங்கள இனவாத ஆட்சிக்கு உதவி செய்யும் முகமாகவே அரசியல் நடத்தி வருகின்றன.

 

குறிப்பாக முதலாவதாக 2010 ஆம் ஆண்டு தேர்தல் அரங்கை இலங்கை அரசு திறந்து விட்டது. அந்தத் தேர்தல் சூழலில் இனப்படுகொலையை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு செங்கம்பளம் என விரிந்து. ஆனால் அப்போது வஞ்சகம் இன்றி எல்லா தமிழ்த் தலைகளும்  இனப்படுகொலைக்கு எதிராக அந்தத் தேர்தலை பயன்படுத்துவதற்கு பதிலாக இனப்படுகொலை புரிந்த இராணுவ தலைவனுக்கு வாக்களிக்குமாறு  மக்களை தூண்டி அந்த மக்கள் பாதக அரசியலை நிறைவேற்றினார்கள்.

 

இது விடயத்தில்  களத்தில் உள்ள எந்தொரு  தமிழ்த் தலைவரும் விதிவிலக்கானவர் அல்ல.

 

2022 ஆம் ஆண்டு  பதவியில் இருந்த ராஜபக்சாக்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி பெரிதாய் எழுந்தபோது இராணுவ மிடுக்கு மிக்க இரண்டு ராஜபக்சகளாலும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பொலீஸ் --  இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது போனது.

 

ராஜபக்சாக்கள் மக்களை கடுமையாக ராணுவம் கொண்டு அடக்க இயலாமல் போனதன் உளவியல் காரணம் என்னவெனில் ஓர் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் சிங்கள மக்களின் மனநிலை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையோடு இணைந்து போக தொடங்கிவிடும்.

இராணுவம் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை புரிந்துள்ளதுதான் என்ற கருத்தை சிங்கள மக்கள் நம்பத் தொடங்குவர்.

 

இப்பின்னணியில் இராணுவம் தன் கௌரவத்தை இழக்கும். இத்தகைய இராணுவத்துக்கு எதிராக மக்கள்  மேலும் கிளர்ச்சிகளை பெரிதும் முன்னெடுக்கலாம் என்பதுடன் கூடவே  முள்ளிவாய்க்கால் படுகொலை என்ற  பழியை சுமந்து திரியும் ராணுவம், சிங்கள மக்கள் மேலேயே ராணுவ நடவடிக்கை எடுத்தால்  மேலும் மதிப்பிழந்து அவமானத்துக்கு உள்ளாக நேரும் என்ற அச்சம் ஆட்சியாளர்கள் மத்தியிலும் இராணுவத்தின் மத்தியிலும் நிலவியது.  ஆதலால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னணியில் ஆட்சியாளர்களால் மக்களை நோக்கி மீண்டும் துப்பாக்கிகளை உயர்த்த முடியவில்லை.

 

இத்தகைய ஒரு பின்னணியில் தமிழ் தலைவர்கள்  ஜனநாயக பூர்வமான மக்கள் கிளர்ச்சிப்  போராட்டங்களை 2010 ஆண்டு தேர்தலுடன் முன்னெடுத்து இருந்தால் சிங்கள இனப்படுகொலை அரசு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நெருக்கடிகளுக்கு உள்ளாக நேர்ந்திருக்கும். இனப்படுகொலை வாயிலாக  அரசுக்கு ஏற்பட்ட பெரும்  காயத்தினதும் அபகீத்தியினதும் பின்னணியில் தமிழ் தலைவர்களுக்கு எதிராக, அமைதிவழிக் கிளர்சியில் ஈடுபடக்கூடிய தமிழ் மக்களுக்கு எதிராக  அரசால் துப்பாக்கிப் பிரயோகங்கள் செய்ய முடியாது.

 

இத்தகைய ஒரு வாய்ப்பான வரலாற்று -- அரசியல் பின்னணியில் இனப்படுகொலையை முன்னெடுப்பதற்கு பதிலாக இனப்படுகொலைக்கான விசாரணை முடிவடைந்துவிட்டது என்று மக்களுக்கு கண்ணைக் குத்திப் பொய் சொல்லும் அளவுக்கு இனப்படுகொலை ஆட்சியாளரின் சேவகர்களாக தமிழ் தலைவர்கள் செயற்பட்டனர்.

 

வேட்டைக்காரனுக்கு தெரியும் உடும்புக்கு வால் இருப்பது அதனை அதன் வாலால் கட்டிப் போடுவதற்கே என்று. சிங்களத் தலைவர்களுக்கு தெரியும் தமிழருக்கு தலைவர்கள் இருப்பது தமிழரை தமிழ் தலைவர்களால் கட்டி போடுவதற்கே.

 

ஆனால்  இனியாவது விதிவிலக்கின்றி இந்த தமிழ் தலைவர்கள் அனைவரும் இனப்படுகொலைக்கு எதிரான  மக்கள் போராட்டத்தை இதய சுத்தியுடன் முன்னெடுப்பார்களே ஆயின் வரலாறு இவர்களின் பாவங்களை மன்னித்திடக்கூடும்.

 

1914 ஆம் ஆண்டு 11 இலட்சம் ஆர்மேனிய கிறிஸ்தவ மக்கள் இஸ்லாமிய துருக்கிய பேரரசால் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இன்றும் குரல் எழுப்பப்படும் நிலை இருக்கையில் ஒன்றரை தசாப்தங்களுக்குள் நிகழ்ந்து முடிந்த இனப்படுகொலை ஒன்றும் பழையதல்ல. இனியும் அதனை புது மெருகுடனும் புது வீச்சுடனும் முன்னெடுக்க முடியும்.

 

எங்கிருந்து தமிழ் மக்களின் போராட்டத்தை தொடங்குவது என் கேள்விக்கான பதில்.. 
எந்தப் புதைகுழியில்  தமிழ் மக்களின் தலைவிதி முடிந்தது என்று எதிரி நினைத்தாரோ,  அங்கு அந்தப் புதைகுழியில் இருந்து தமிழ் மக்கள்  தமது அந்தப் போராட்டத்தை தொடங்க வேண்டும்.

 

இனி எப்படி தொடங்குவது என்பது அடுத்த கட்டுரையில் தொடரும்...

அதிகம் பார்க்கப்பட்டவை: