பகுதி 2. இலங்கை மக்களின் வாழ்வில், தீவின் புவியியல், அரசியல், புவிசார்-அரசியல், புவிசார்-வரலாற்றுக் கட்டமைப்புகளின் பங்கு.
இத்தகைய நடைமுறை சார்ந்த பின்னணியில் இலங்கைத் தீவில் நிகழும் ஈழத் தமிழருக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை அதற்கே உரிய வகையில் முழுமைப்படுத்தப்பட்ட வரலாற்றுப் பார்வைக்கூடாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஈழத் தமிழருக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான முக்கிய அடிப்படை இந்து மாகடலின் மையத்தில் இலங்கை - இந்திய அரசுகள் சார்ந்து அமைந்திருக்கக்கூடிய புவிசார்-அரசியல் அமைவிடக் கட்டமைப்பாகும். இந்தவகையில், இலங்கை - இந்திய அரசியலினதும், கூடவே இந்து மாகடலில் தத்தமக்கான நலன்களைக் கொண்ட வெளி அரசுகளினது நிலைப்பாடுகளினாலும், அவ்வக்காலகட்ட வரலாற்றுப் பரிமாணங்களுக்கேற்ப ஈழத் தமிழருக்கு எதிரான இனப்படுகொலையும் பல்பரிமாணம் கொண்ட தொடர் வளர்ச்சிப்போக்கான கட்டமைப்பைப் பெறுகிறது. இத்தகைய புவிசார்-அரசியல் சூழலின் கைதிகளாய் விளங்கும் ஈழத் தமிழரே இதில் முதற்தரப் பலிக்கடாக்களாய் மாள்கின்றனர்.
புவியியல் கட்டமைப்பு (Natural Geography), அரசியல்-புவியியல் கட்டமைப்பு (Political Geography), புவிசார்-அரசியல் கட்டமைப்பு (Geopolitical structure), புவிசார்-வரலாற்றுக் கட்டமைப்பு (Geohistorical Structure) என்பனவற்றுடன் கூடவே பொருளாதாரம், மானுடவியல், சமூகவியல், பண்பாட்டு அம்சங்களும் பின்னிப்பிணைந்து அதன் வரலாற்றுப் போக்கை நிர்ணயிக்கின்றன.
எந்த ஓர் கட்டமைப்பிலும் ( Structure) அதற்குரிய முறைமை (System ) இருக்கும். அந்த கட்டமைப்பின் அடிப்படையிலான முறைமை அது சார்ந்தவற்றின் வாழ்நிலையை நிர்ணயிக்கின்றது. இந்த வகையில் கட்டமைப்பும் முறைமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகின்றன. புவியியல் கட்டமைப்பை இரண்டாகப் பகுக்கலாம்.
ஒன்று இயற்கையான புவியியற் கட்டமைப்பு (Natural Geography) ; மற்றையது அரசியல் அதிகாரம் சார்ந்த புவியியல் கட்டமைப்பு (Political Geography).
இந்தப் புவியில் மனிதனால் வகுக்கப்படும் ஒரு நாடு என்பதே அரசியற் புவியியல் அமைப்புதான்; அத்துடன் கூடவே ஒரு நாட்டுக்குள் மனிதனால் அரசியல்ரீதியாக வகுக்கப்படும் அரசியல் அதிகாரம் கொண்ட மாநில முறைமை அல்லது மாகாண முறைமை என்பனவும் அரசியற் புவியியல்தான்; நிலப்பரப்பின் மீது ஒரு மக்கள் கூட்டத்திற்கு இருக்கக்கூடிய இனத்தனித்துவத்தையும் அரசியற் பலத்தையும் உடைக்கக்கூடிய வகையில் பிறஇனங்கள் திட்டமிட்டுக் குடியேறுவது அல்லது அந்த நிலப்பரப்பைத் துண்டாடுவது போன்ற இனவழிப்புச் செயல்கள் கூட அரசியற் புவியியல்(Political geography) என்ற வடிவத்துள் அடங்குகின்றன.
கட்டமைப்பு(structure) இயல்பாகவே தனக்கான முறைமையைக்(system) கொண்டிருக்கும் போதிலும், அந்தக் கட்டமைப்பின் அடிப்படையோடு இணைந்து மனிதன் தனக்குச் சாதகமான முறைமை மாற்றங்களை( System change) மேற்கொள்ள முடியும். உதாரணமாக அரிசியில் இருந்து நேரடியாக சோறு, அல்லது கஞ்சி சமைக்கலாம். ஆனால் அந்த அரிசியை மாவு ஆக மாற்றிவிட்டால் அதிலிருந்து அப்பம் அல்லது கூழ் சமைக்கலாம். இங்கு அரிசியின் அடிப்படைத் தன்மை இருக்கும் . அதனை அதன் அடிப்படை தன்மையில் வைத்து, ஆனால் முறைமை மாற்றத்திற்கு உட்படுத்தி, விரும்பிய வேறு நல்லதைப் பெறமுடிகிறது.
ஒரு புவியியல் அமைவிடத்தை வேறொரு இடத்திற்கு நகர்த்த முடியாது; ஏனெனில் அது இயற்கையால் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்தப் புவியியல் கட்டமைப்பின் மீது அதற்குட்பட்டு நல்லதாகவோ, அன்றிக் கெட்டதாகவோ, முறைமை மாற்றங்களைச் செய்யலாம். இந்த வகையில் இயல்பான புவியியற் கட்டமைப்பின் மீது பலாத்காரமான அல்லது உணர்வுபூர்வமான அரசியற் பலத்தைப் பிரயோகிக்கும் போது புவியியல் கட்டமைப்பாக(Natural Geography) இருப்பது அரசியல்-புவியியல்(Political Geography) கட்டமைப்பாக பரிணமிக்கின்றது.
எனவே, இக்கட்டமைப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற பூட்டப்பட்ட தனிப் பெட்டகங்களாக நோக்காமல், அரசியல்-புவியியல்(Political Geography), புவி-அரசியல்(Geopolitics), மெய்யியல் (philosophy-தத்துவம்) என்ற மூன்றையும் பின்னிப்பிணைத்துப் பார்க்க வேண்டும்.
புவிப்பரப்பில் 71 % கடல், 29% நிலம். அதிலும் 15% நிலத்திற்தான் மனிதன் வாழ முடியும். நீரின்றி ஆகாது நிலம்; நிலம் இன்றி ஆகாது மக்களும் அரசும். நிலத்தில் அரசு இருந்தாலும் கடலை ஆள்பவனே உலகை ஆள்வான் என்கிறது அரசியல் கோட்பாடு. ஆதலால், நிலத்தையும் நிலத்தைச் சூழ்ந்த கடலையும் சார்ந்த அரசியலை புறவய (Objective), பருப்பொருள் (Concrete) நோக்கு நிலையிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும். புவிசார்-அரசியல் கட்டமைப்பானது பெரிதும் இத்தகைய புறவய - பருப்பொருள் பரிமாணத்தைக் கொண்டது.
புவியியல் அடிப்படையில் அரசியல் உறவை கௌடில்யர் பின்வருமாறு கூறுகிறார். "உனது அண்டை நாடு உனது இயல்பான எதிரி; மறுபுறம் உனது அண்டை நாட்டின் அண்டை நாடு உனது இயல்பான கூட்டாளி”.
"Your neighbor is your natural enemy and your neighbor"s neighbor on the other side your natural ally" - Kautilya.
மேற்படி புவியியல் அமைவிடம் சார்ந்த நண்பன் - எதிரி என்ற மதிப்பீட்டுக்கப்பால் பொதுவான நண்பன் - எதிரி சார்ந்து கௌடில்யர் பின்வருமாறு கூறுவதைக் கவனிக்கலாம்.
"He who has a thousand friends has not a friend to spare, And he who has one enemy will meet him everywhere. The enemy of my enemy is my friend"
"ஆயிரம் நண்பர்கள் உள்ளவனுக்குத் தக்க தருணத்தில் ஒரு நண்பனும் இல்லாமல் இருப்பான். ஆனால், ஓர் எதிரியை மட்டும் கொண்டுள்ளவனுக்கு அந்த ஓர் எதிரி எல்லாத் தருணங்களிலும் எதிரியாக இருப்பான்." என்று கூறும் கௌடில்யர், "என் எதிரியின் எதிரி என் நண்பன்" என்று சாதாரண நண்பனை விடவும் எதிரியின் எதிரியை மேலும் பலமான நண்பன் என்று கூறுகிறார்.
இங்கு சாதாரணமான எதிரிகளுக்கு இடையே நிரந்தரப் பகைமை இல்லாது போவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. ஆனால், புவியியல் அமைவிடம் நிரந்தரமானது என்பதால் புவியியல் அடிப்படையிலான எதிரி அடிப்படையில் நிரந்தரமான எதிரியாவான். ஆதலால், புவியியல் அமைவிட ரீதியான நண்பன் - எதிரி உறவானது சாதாரண நண்பன் -- எதிரி உறவை விடவும் அதிகம் வலிமையானது.
தீவு அரசு, தீவு நாடு, தீவுத் தேசம் (Island nation) என்பன தரைவழி எல்லையைக் கொண்ட நாடுகளை விடத் தற்காப்பில், ஒப்பீட்டு ரீதியாகப் பலமானவை. இலங்கை ஒரு தீவாக இருப்பதுதான் அதனை ஒரு அரசாக: நாடாக இருப்பதைச் சாத்தியமாக்கி உள்ளது. ஆனால், ஒரு பெரும் கடலால் அன்றி இந்தியாவுக்கு அருகே 27 கிலோமீட்டர் (14.4 நோட்டிகல் மையில்) அகலமான ஒரு சிறிய பாக்குநீரிணையால் பிரிக்கப்படுவது இலங்கைக்குப் பெரும் சவாலாக உள்ளது.
அதாவது, தீவு என்பது வரமாகவும், ஆனால் இந்தியாவுக்கு மிக அருகே தமிழகத்தோடு ஒட்டியவாறு இருக்கும் சிறிய பாக்குநீரிணை என்பது அதற்கு சாபமாகவும் உள்ளது. அதாவது, இலங்கைக்கு பாக்குநீரிணை ஒருபுறம் வரமாகவும் மறுபுறம் சாபமாகவும் இரட்டைப் பரிமாணங்களைக் கொண்டிருப்பதானது இந்திய அரசியலையும், ஈழத் தமிழர் தலைவிதியையும் நிர்ணயிக்கும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான அடிப்படையாய் உள்ளது.
இந்தியாவுடன் இலங்கை கொள்ளும் அரசியல், பொருளாதார உறவுகளில் உள்ளார்ந்து இருப்பது, இந்திய எதிர்ப்புணர்வே.
புவியியல் அச்சரத்தின்படி அண்டை நாடு உனது எதிரி என்ற வகையில் இலங்கையின் அண்டை நாடு இந்தியா, இலங்கைக்கு நிரந்தர எதிரி. அந்த அண்டை நாட்டின் அண்டை நாடு உனது நண்பன் என்ற வகையில் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியன்மார் (பர்மா) என்பன இலங்கையின் நிரந்தர நண்பர்கள்.
பௌத்தம் பிறந்த நாடு இந்தியா; அந்த இந்தியாவில் இருந்துதான் இலங்கைக்கு பௌத்தம் பரவியதானாலும் அந்த பௌத்தங்கூட இந்தியப் பேரரச ஆதிக்கத்தின் வெளிப்பாடாகவே அண்டை நாடான இலங்கைக்கு கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பரவியது.
பௌத்தம் பிறந்த இந்துமத இந்தியாவில் வடக்கிலும் தெற்கிலும் இந்துமதப் பிரிவுகளான சைவ - வைஷ்ணவ பிரிவுகளால் பௌத்தம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. மேலும், ஈழத் தமிழர்கள் பரந்த இந்தியாவின் இந்து மதத்தையும் தமிழகத்தில் நிலவும் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் கொண்டவர்களாக இருக்கும் நிலையில் சிறிய பாக்குநீரிணையைக் கடந்து இந்திய ஆதிக்கமும் செல்வாக்கும் இலங்கைக்கு இலகுவாகப் பரவி சிங்கள பௌத்தத்தை காவு கொண்டுவிடும் என்கின்ற அச்சம் சிங்கள பௌத்தர்களிடம் இயல்பாகவே உண்டு.
2500 ஆண்டு காலத்துக்குக் குறையாத மத, பண்பாட்டு, அரசியல், இராணுவ, வரலாற்று அனுபவங்களும் இதற்கு உடந்தையாக உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. புவியியல் - அரசியல் - வரலாற்று அர்த்தத்தில் இலங்கைத் தீவு இந்தியாவின் நீட்சியேயாகும்.
" Sri Lanka is divided into two geographic zones. The southwest of the island is Sri Lanka's core ... The northern part of the island is divided into the inland Vanni region and the Jaffna Peninsula on Palk Bay. The north is connected to India by a chain of islands and sandbars known as Adam's Bridge, which has historically eased the movement of goods and people to and from the mainland.
Sri Lanka"s main geographic challenge is to protect its core around Colombo, while promoting integration with the north.
The most recent challenge to Colombo's dominance was from the Tamil Tigers insurgent group, who used the Vanni region and Jaffna peninsula regions as bases ..."
Uniting the north with the core will allow Colombo to take advantage of low - end manufacturing leaving China, using its underdeveloped north as a cheap labor.'
மேற்படி கூறப்படும் கருத்தைக் கவனத்திற்கு எடுத்து இலங்கைத்தீவு -- ஈழத் தமிழர் - இந்தியா - சீனா என்பன சார்ந்த புவியியல் கட்டமைப்புக்குள் வைத்து, இதற்குள் அடங்கக்கூடிய புவியியல் அமைவிடம் சார் மூலோபாயத்தை முதற்கண் மிகவும் கூர்மையாக அணுக வேண்டியது அவசியம்.
அரசியல்-புவியியல் ரீதியாக (Political Geography) இலங்கை இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று, கொழும்பை அச்சாகக் கொண்ட தென்மேற்கு மையப்பகுதி. அடுத்து, பாக்குநீரிணையுடன் ஒட்டியவாறு இருக்கின்ற யாழ். குடாநாடு, வன்னியை உள்ளடக்கிய வடபகுதி. இந்த வடபகுதி தீவுத் தொடர்களினாலும் அடம்ஸ் பிரிட்ஜ் (Adam's Bridge) எனப்படுகின்ற தொடர் மண்மேடுகளினாலும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கும் வடக்குக்கும் இடையே வரலாற்று ரீதியாக உள்ளும் புறமும் மக்கள் நடமாட்டத்தையும் பண்ட நகர்வுகளையும் இலகுபடுத்தியுள்ளது.
இதன் பின்னணியில் அரசியற் புவிசார்ந்த வகையில், இலங்கையின் முக்கிய சவாலாக இருப்பது கொழும்பைச் சூழ்ந்த அதன் தென்மேற்கு மையப் பகுதியை குறிப்பாக இந்தியாவிடம் இருந்து பாதுகாப்பதும் வடக்கை இந்தியாவிலிருந்து விலக்கி கொழும்பு மையத்துடன் இரண்டறக் கலக்கச் செய்வதுமாகும்.
இதன் பின்னணியில் ஆசியாவில் முதற்தர அரசியல் இராணுவ பொருளாதார வல்லரசாக வளர்ந்திருக்கும் இந்தியாவின் அண்டை நாடான சீனாவின் மலிவான பொருளாதாரத்தைக் கொழும்புக்கூடாக யாழ்ப்பாணத்திற்குப் பரப்புவதன் மூலம் வடக்கை கொழும்புடன் பொருளாதார ரீதியாக இணைத்து, வடக்கை கொழும்பு மையத்துடன் கரைப்பதற்கேற்ற மூலோபாய அனுகூலத்தை இன்றைய நாளில் இலங்கை அரசு முன்னெடுக்கின்றது. இது வல்லரசுகளுடன் இணைந்து கட்டமைக்கப்படும் பொருளாதார இனப்படுகொலைக் கட்டமைப்பாகும்.
நலன்கள்(welfare) - தேவைகள்(needs) - தர்மம்(dharma)
இலங்கைத் தீவானது இந்தியாவுக்கு மிக அருகே, இந்துப் பெருங்கடலின் மையத்தில் வர்த்தக, இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தைக் கொண்டுள்ளதால் சமுத்திரங்களையும் கண்டங்களையும் தாண்டி உலகப்பெரு வல்லரசுகளும் இலங்கையில் தத்தம் நலன்களுக்காகக் காலூன்றுகின்றன. குறிப்பாக, மேற்குலக வல்லரசுகளின் போட்டி இதில் முக்கியமானது. இதில் பங்கு வகிக்கும் அண்டை நாடான இந்தியாவாகினும் சரி, அண்டை நாட்டின் அண்டை நாடான சீனாவும் சரி, அமெரிக்கா உள்ளிட்ட உலகப் பெரு வல்லரசுகள் ஆயினும் சரி, அனைத்தும் இலங்கைத் தீவையும் இலங்கையின் இனப் பிரச்சினையையும் தத்தம் நலன் சார்ந்த நோக்கு நிலையில் இருந்துதான் அணுகுகின்றன.
நலன்களே தேவை; தேவையே தர்மம். உயிரை உயிர் உண்டு வாழ்வதே உயிர் வாழ்வு என்ற ரீதியில் அனைத்துத் தர்மங்களும் ஆக்கிரமிப்புக்களைப் பொன்முடிகளாய்ச் சூடிக் கொண்டவைகளே.
ஆதலால், தேவை எதுவோ அதுவே தர்மத்தை வடிவமைக்கிறது. எனவே தர்மம் என்பது தேவை. இந்தவகையில், தேவை தர்மம் என்ற மணிமுடியைச் சூடிக் கொள்கிறது. ஆதலால், உள்ளடக்கத்தில் தேவைதான் தர்மம்; தர்மம்தான் தேவை.
மொத்தத்தில்,
தர்மம் = தேவை;
தேவை = தர்மம்.
இந்தச் சூத்திரத்திற்கு ஊடாகப் புவிசார்-அரசியலையும் (Geopolitics), அரசியல்-புவியியலையும் (Political geography - Politically formed Geographic region), உலகளாவிய-அரசியல் (Global politics) என்பனவற்றை எல்லாம் காலகட்ட வளர்ச்சிக்கு ஏற்ப ஒருங்குசேரக் கணக்கிலெடுத்து ஈழத் தமிழருக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைப் பெரிதும் விஞ்ஞானபூர்வமாகவும் நடைமுறை சார்ந்தும் எடைபோட வேண்டும்.
இறுதி அர்த்தத்தில்
தேவையிலிருந்து தர்மம் பிறக்கிறது,
தேவையில் இருந்து உறவு பிறக்கிறது,
தேவையில் இருந்து சண்டை பிறக்கிறது,
தேவையில் இருந்து சமாதானம் பிறக்கிறது.
தேவை என்ற ஒரு புள்ளியிற்தான் பரஸ்பர தேவை, விட்டுக்கொடுப்பு, கொடை, அபகரிப்பு, ஆக்கிரமிப்பு ஆகிய அனைத்தும் சந்திக்கின்றன. ஆதலால், அனைத்தையும் அவரவர் தேவைகளுக்குள்ளால் எடைபோட்டு அதற்கிணங்க வகுக்கப்படும் சாத்தியமான சமன்பாடுகளினால் அசைவை, நகர்வை, வாழ்வை, அரசியலை முன்னெடுக்க வேண்டும். புனிதமாகச் சொல்லப்படும் தெய்வீகக் காதலேயானாலும் 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்பது 'உன்னில் என்னைக் காதலிக்கிறேன்' என்ற தத்துவார்த்த உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது என்ற உண்மைக்குப் புறம்பாக அமைய முடியாது.
இவற்றை கணக்கில் கொள்ளாமல் பேசப்படும் எல்லாவிதமான தூய இலட்சியவாதங்களும் உயிரை உயிர் உண்டு வாழும் உயிரியல் தர்மத்திற்குள் ஈழத் தமிழினத்தை உண்ணப்படும் பலியாடுகள் ஆக்குவதில் முடிவடையும்.
முதலாவது அர்த்தத்தில், ஈழத் தமிழர்கள் புவிசார் அரசியல் சூழலின் கைதிகள். இலங்கை - இந்திய அரசுகளின் நலன்சார் பாக்குவெட்டிப் பிடிக்குள்ளும் கூடவே இந்தியாவின் அண்டை நாடான சீனாவினதும் உலகப் பெரு வல்லரசுகளினதும் கூட்டான நண்டுப் பிடிக்குள்ளும் அகப்பட்டிருக்கும் அப்பாவி மக்கள். இவ்வகையில், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையானது சூழலால், அன்னியர்களால், எதிரிகளால் மட்டுமன்றி இவற்றுடன் கூடவே சொந்தத் தலைவர்களின் தவறான நடவடிக்கைகளினாலும் கட்டமைக்கப்படுகின்றது என்ற துயரகரமான பக்கத்தையும் கணக்கில் எடுத்துக் கணிப்பீடு செய்ய வேண்டும்.
இத்தகைய புவிசார் கட்டமைப்புக்குள் வைத்து இதன் வரலாற்று வளர்ச்சிப் போக்கை மிகச் சுருக்கமாகப் பார்க்க வேண்டியது அவசியம்.
பகுதி 3 ல் தொடரும்...
-- நான்கு பகுதிகளைக் கொண்ட இந்த கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை கட்டுரையின் முதல் பகுதி இது. பிற பகுதிகளின் இணைப்புகள் கீழே..
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை - அறிமுகம்.
பகுதி 1.
இலங்கையில் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’யின் தோற்றமும் இன்றைய நிலையும் - பகுதி 1.
பகுதி 2.
பகுதி 3.
இலங்கையை ஆக்கிரமித்த இந்திய, உலகப் பேரரசுகள்.
பகுதி 4.
பிரித்தானிய-இலங்கையில் தோன்றிய தேசியவாதம், சிங்கள இனவாதம் மற்றும் சமஸ்டி சிந்தனை.
