புதன், 22 அக்டோபர், 2025

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் புதிய கட்டமும், அதற்கு ஈடு கொடுக்கவல்ல புதிய தமிழ்த் தேசியமும்.

 

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் புதிய கட்டமும், தற்கு ஈடு கொடுக்கவல்ல புதிய தமிழ்த் தேசியமும்.
மு. திருநாவுக்கரசு.
ஜப்பான், 6 ஆகஸ்ட் 1945.ஹீரோஷீமா நகரத்தின் மீது, லிட்டில் பாய் என்கிற 4 டன் எடையுள்ள அணுகுண்டு அமெரிக்காவால் வீசப்பட்ட இடத்தின் மையப்புள்ளி இது. இதைச் சுற்றி 12 கி.மீ சுற்றளவில் உள்ள அனைவரும், அனைத்தும் குண்டு வீசப்பட்ட சில நிமிடங்களில் முழுவதுமாக எரிந்து சாம்பலாய் போயின.



22/10/2025. பாகம் 2. 

சிதிலமாய்க் கிடக்கும் ஈழத் தமிழினம் சனநாயகம், சமூக சமத்துவம், நல வாழ்வு, அறிவியல் நோக்கு என்பவற்றின் டிப்படையில் புதிய தமிழ்த் தேசியத்தைக் கட்டமைப்புச் செய்யத் தயாராக வேண்டும்.

 

மாற்றமின்றி,  புதிதின்றி வளர்ச்சியில்லை.  வாழ்வியல் இயக்கத்தின்படி அன்புக்குரிய தந்தையோ, தாயேயாயினும், செல்லப் பிள்ளையேயாயினும், இறந்துவிட்டால், அதைத் தோளிற் சுமந்து கொண்டு திரியாது அழுது புலம்பி அடக்கம் செய்துவிட்டு, அடுத்த கட்டத்தை நோக்குவது போல ஈழத் தமிழரும் தமது அரசியலில் தோல்வியடைந்த கோட்பாடுகளையும், வாய்ப்பாடுகளையும் அடக்கம் செய்துவிட்டு,  அடுத்த கட்டத்திற்கு நிமிர வேண்டும்.  

 

தற்போதய புதிய சூழலுக்குப் பொருத்தமாக 21ம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்திற்குப் பொருத்தமாக அடுத்த நூற்றாண்டை நோக்கி தமிழீழத் தேசியத்தை புது வடிவப்படுத்த வேண்டும்.  

 

ஊறிப்போன பழைய பழக்கங்களிலிருந்து புதிய பழக்கத்திற்குப் போவது இலகுவான காரியமல்ல. ஆயினும் அந்தக் கடினமான காரியத்தைச் செய்யாமல் ஈழத் தமிழினம் தலையெடுக்க முடியாது.

 

புதுப்பொலிவுடன் புதுமைகளோடு எழுந்து வாருங்கள்,  

புதுமைகளோடு புதுபுதிதாய் எழுந்து வாருங்கள். வீழ்ந்தது உண்மை, எழுவது திண்ணம்.  இப்படித்தான், வீழ்ந்தது உண்மை என்ற ஒப்புதலோடும், எழவேண்டியது திண்ணமென்ற தீர்க்கத்தோடும் தனது 2ம் உலக மகாயுத்த வீழ்ச்சியிலிருந்து ஜப்பான் மீண்டு எழுந்து வந்தது.

 

ஜப்பானின் எழுச்சி

வரலாறு காணாத மாபெரும் 2ம் உலக மகாயுத்தம் ஜப்பானின் தலையில் வீசப்பட்ட அணுகுண்டுகளோடு முடிவுக்கு வந்தது. 2ம் உலக மகாயுத்த முடிவுக்கு  முற்றுப்புள்ளியாய் அமைந்த தோல்வியை சுமந்த ஜப்பான்.

 

"காலில் கல்லடித்து விட்டது" என்று கூறப்படும் ஒரு பக்க கருத்திற்குப் பதிலாய், கூடவே தமது கால் கல்லுடன் மோதுண்டுவிட்டது என்ற மறுபக்கக் கருத்தையும் கணக்கிலெடுத்துத் தோல்வியிலிருந்து மீண்டெழத் திட்டமிட்டது.

 

தமது பெரும் யுத்தத் தலைவரான பிரதமர் ஹைடெகி ரோஜோவின் (Hideki Tojo) கழுத்தில் எதிரி தூக்குக் கயிற்றை மாட்ட  ஜப்பான் அரசு சம்மதித்து,  எரியும் நெருப்புக்குள்ளால் நடப்பது போன்ற  கடும் தீர்மானத்திற்கூடாக அது புதிய மாற்றத்திற்குத் தயாரானது.  

 

இதுவொரு மிகப்பெரும் கடினமான தீர்மானம்.  தம்மீது அணுகுண்டு வீசிய எதிரியின் கையைப் பிடித்தெழுந்து,

எதிரியின் தோளைத் தழுவி வளரவேண்டும் ன்கின்ற தீர்மானத்தை ஜப்பானிய ஆட்சியாளர்கள் எடுத்தனர்.
இதில் சரி - பிழை என்பதற்கப்பால்  ஒரு புதிய மாற்றத்திற்குப் போக வேண்டுமென்கின்ற மிகக் கடினமான தீர்மானம் அங்கு மேற்கொள்ளப்பட்டமை கவனத்திற்குரியது.

 

தமது யுத்த எதிரியான அமெரிக்காவின் தோளைத் தழுவி வளர வேண்டுமென்ற தீர்மானத்தில் வெற்றி பெற்றாலும், அமெரிக்காவின் தோளிலேற முடியாதென்ற யதார்த்தத்தையும் புதிய ஜப்பான் உணர்ந்து கொண்டது.  எப்படியோ அமெரிக்காவுக்கு நிகரான இராணுவ வல்லரசாக வளர முடியாவிட்டாலும் அமெரிக்காவுக்கு  நிகரான பொருளாதார - தொழில்நுட்ப வல்லரசாக  வளரமுடியுமென்பதை புதிய ஜப்பானியர்கள் நிரூபித்துள்ளார்கள்.  

 

இதில் நல்லதும் கெட்டதும் கலந்த, தெளிவான டிப்பினையுண்டு. புதிய மாற்றத்துக்குள்ளாக வேண்டும் என்று ஜப்பான் காட்டிய திடசித்தம்  கவனத்துக்குரியதாக ருக்கும்;  அதேபோல, ஈழத்தமிழர் தமது தோல்வியிலிருந்து மீள, அதிலிருந்து மிடுக்குடன் புதிய மாற்றத்திற்குப் போவதற்கான சிறப்பான யதார்த்தம் ஈழத்தமிழர் சார்ந்த அரசியல் சூழலிலுண்டு.

 

ஈழத்தமிழரின் தோல்வி முள்ளி வாய்க்காலில் மட்டுமல்ல

இங்கு ஈழத்தமிழர் மிடுக்குடன் மாற்றத்திற்குப் போகத் தயாராகவேண்டும் ன்பதே வரலாறு இடும் கட்டளையாகும். ஈழத்தமிழர் மொத்தமாகத் தமக்கேற்பட்ட 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசியற் தோல்விகளிலிருந்தும், அது தொடர்பான சிந்தனை முறையிலிருந்தும்  மாறவேண்டும். தோல்வி முள்ளிவாய்க்காலில் மட்டும் நிகழவில்லை. இராமநாதன் காலத்துக்கு முன்பிருந்து இன்று வரை  நிகழ்கிறது.

 

ஆயுதப் போராட்டத்திற்கு முன்னான தோல்விகளும் தோல்விதான். ஆயுதப் போராட்டத்திலேற்பட்ட தோல்வியும்  தோல்விதான். முள்ளிவாய்காலுக்குப் பின்னான கடந்த 16 ஆண்டு கால தோல்விகளும் இட்டு நிரப்ப முடியாத தோல்விகள்தான்.

 

சிங்கள அரசியலின் முன் வாதாட்ட அரசியலும் தோல்வி; அகிம்சை போராட்ட அரசியலும் தோல்வி, ஆயுதப் போராட்டமும் தோல்வி;
தனித்தனியே ஆயுதம் தாங்கிப் பல்வேறு இயக்கங்களாகப் புறப்பட்ட அனைத்து இயக்கங்களும் தோல்வி;  
இயக்கங்களுக்குள் பிழைகள் இருப்பதாகக் குரல் எழுப்பி இயக்கங்களை உள்ளுக்குள் மாற்ற முற்பட்டவர்களுக்கும் தோல்வி; 
இயக்கங்களிலிருந்து பிரிந்து சென்று வேறு இயக்கங்களை உருவாக்கியவர்களுக்கும் தோல்வி;
இயக்கங்களிலிருந்து விலகி ஒதுங்கியவர்களுக்கும் தோல்வி;
அதன் பின்னான இணக்க அரசியலும் தோல்வி.

மொத்தத்தில் 200 ஆண்டு காலக் கணக்கெடுப்பில் அனைத்துத் தமிழ்த் தலைவர்களும், அனைத்துக் கட்சிகளும், அனைத்துப் பிரிவினர்களும்  தொடர்ந்து வீழ்ச்சியடைந்தவாறு, வட அட்லாண்டிக் கடலில் உள்ள  பெர்முடா முக்கோண மர்மம் (Barmuda triangle  Mystery ) போல் தமிழர் தலைவிதி நீள்கிறது.

 

தற்போது,  பெமுடா  முக்கோண மர்மத்திற்குக் கூட ஓரளவு இயற்கை சார்ந்த காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. ஆயினும் ஈழத்தமிழர்களின் தொடர் தோல்விகளுக்கான  காரணங்களைப் பற்றியோ, அதிலிருந்து மீள்வதற்கான வழிவகைகளைப் பற்றியோ   ஆக்கபூர்வமாகச் சிந்திக்கத் தலைப்படும்  நிலையில்லை. இனியாவது அதனை விரைவாக செய்தாக வேண்டும்.

  

ஈழத்தமிழரின் இனப் பிரச்சனையென்பது வெறுமனே சிங்கள - தமிழ் இனப் பிரச்சினை மட்டுமல்ல.  அடிப்படையில் இந்தியாவுக்கு அருகாமையிலான இலங்கைத் தீவின் புவிசார் அரசியல் பிரச்சனையாகும். புவிசார் அரசியலின் டிப்படையிலான, இந்திய உபகண்டம் தழுவிய பிரச்சினையாய்,  ஈழப் பிரச்சனை விஸ்வரூபம் டுத்துள்ளது.  மேலும், கடல் சார் ஆதிக்கப் போட்டியின் நிமித்தம் உலகம் தழுவிய வல்லரசுகளின் அதிக்கப் போட்டிக்கான முக்கிய புள்ளியாகவும் இலங்கைத் தீவு  அமைந்துள்ளது.  

 

இந்தியாவுக்கு அருகாமையிலான  இலங்கையின் அமைவிடம் காரணமாக இந்திய அரசிற்கும்,  சிங்கள அரசுக்குமிடையே பகைமை திரட்சி பெற்றிருக்கிறது. இந்நிலையில்  ஈழத் தமிழரை இந்தியாவுடன் ணைத்துப் பார்க்கும் சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கெதிரான தமது யுத்தத்தை ஈழத்தமிழர்கள் மீது புரிகிறார்கள். அதன் மூலம் இந்தியாவின் யுத்தத்தை, சிங்களவருடன் ஈழத்தமிழர் புரியும் யதார்த்தம் உருவானது. இந்தியாவில் உருவான பௌத்தம் இந்தியாவிலிருந்து துரத்தப்பட்டு அது இலங்கையில் ஒதுங்கி உறைந்து கிடக்கிறது. பாக்கு நீரிணையால் இலங்கை ஒரு தீவாகி, நாடாகி அரசமைத்து, சிங்கள பௌத்த அரசாய் வடிவம் பெற்றது.

 

இனப்படுகொலைக்குப் பரிகாரம் பிரிந்து செல்லல் மட்டுமே

பாக்கு நீரிணை இல்லையேல், இலங்கை ஒரு தீவுமல்ல, ஒரு நாடுமல்ல, ஒரு அரசுமல்ல.  தமிழகத்தின் ஒரு தொடர் நிலப்பரப்பு. மேற்படி சிங்கள அரசுக்கும், இந்திய அரசுக்கும் நடுவேயான பாக்கு நீரிணையின் விளிம்பில் ஈழத்தமிழர் வாழும் நிலையில் அவர்கள் இரு அரசுகளுக்கும்.  இடையேயான புவிசார் அரசியற் களத்துக்குள் சிக்குண்டுள்ளனர்.  இந்த வகையிற் ஈழத்தமிழர் புவிசார் அரசியலின் கைதிகள். ஈழத்தமிழர் வாழும் ஒரு பக்கம் பாக்கு நீரிணையின் ஒரு விளிம்பாகவும், அதன் மறுபுற விளிம்பில் இந்தியாவின் தமிழகத் தமிழர் வாழ்வதாலும்,  ஈழத் தமிழர் மீதான சிங்களவரின் பகைமை மொழி அடிப்படையிலும் பூதாகரம் பெற்றது. இவற்றின் பின்னணியில் சிங்கள பௌத்த  அரசியல் ஈழத்தமிழருக்கு   எதிரான  இனப்படுகொலையாகப்  பேருருப் பெற்று நீள்கிறது.

 

"இனப்படுகொலைக்குப் பரிகாரம் பிரிந்து செல்லல் மட்டுமே (Genocide can be compensated only by secession) என்ற கூற்று கவனத்திற்குரியது.

இனப்படுகொலையானது இரத்தம் கொப்பளிக்கும் இராணுவ படுகொலையாக முள்ளிவாய்க்காலில் தனது இரத்த தாகத்தைத் தீர்த்துக் கொண்டு  தற்போதய ஆட்சியின் கீழ்  சிங்கள பௌத்த இனமயமாக்கற் கொள்கையாக (Policy of assimilation ), தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. அதாவது இனப்படுகொலை வாயிலாக தமிழ் மக்களைப்  படுகொலை செய்து அச்சுறுத்தி அடக்கிவிட்டு,  சிங்கள பௌத்த தேசிய வாதத்தை முதன்மையாகக் கொண்டு, தமிழ் மக்களை சிங்கள பௌத்த இனமயமாக்கலுக்குட்படுத்த இன்றைய ஆட்சியாளர்கள் முற்படுகின்றனர்.

 

இப்படியாக, தமிழர் ஒரு தனித்துவமான தேசிய இனமெல்லாம் கிடையாது. இலங்கைத்தீவில் ஒரேயொரு தேசிய வாதமேயுண்டு, என்று கூறி விகாராதிபதிகளின் ஆசியுடன், ஓரின பௌத்த மேலாதிக்க இனவாதம், இலங்கை முழுவதும் ஈழத் தமிழர் மீதும், ஏனைய இனங்கள் மீதும் முன்னெடுக்கப்படுகிறது. இதிலுள்ள விந்தை என்னவெனில், சிவப்புச் சட்டை, மஞ்சள் அங்கியின் ஆசியோடு சிங்கள பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கின்றது.

 

இப்பின்னணியில் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான மிக மோசமானவொரு சிங்கள இனமயமாக்கலை தமிழ் மக்கள் சந்திக்கிறார்கள். இனமயமாக்கலென்பது னப்படுகொலையின் மேலான அடுத்த கட்டவளர்ந்த வடிவம்.  ஆதலால் இன்றைய ஆட்சியின் கீழ்  இனப்படுகொலை வேகமாக வளர்ச்சி அடைகின்றதான, நுண்ணிய உண்மைகளைப் புரிந்துகொண்டு ஈழத் தமிழினம் தமது அடுத்த கட்டத் தேசியவாதத்திற்குத் தயாராக  வேண்டும்.

 

இராணுவத் தோகை விரிப்பின் பின்னணியில் மயில் தனது கூரிய சொண்டால் கொத்தும் இரையென ஈழத்தமிழர் சிங்கள ஆட்சியாளரால் இன்று கபளீகரம் செய்யப்படும் துயரம்  எப்பொழுதையும்விட. மிகவும் ஆபத்தாக முன்னேறிச் செல்கிறது. இதனை ஈழத்தமிழ்த் தரப்பு சரியாகவுணர்ந்து கொண்டு புதிய உள்நாட்டு,  வெளிநாட்டு சர்வதேசச் சூழலுக்குப் பொருத்தமாக தமிழ்த் தேசியத்தைப் பெரிதும் புதிதாகக் கட்டமைப்புச் செய்ய வேண்டும். இதற்கென ஒரு புதிய சிந்தனை மாற்றமும், ஒரு பெரிய மனமாற்றமும் தேவை.

 

அடுத்த கட்டுரையில் மேற்படி புதிய தேசிய வாதத்தை எவ்வாறு கட்டமைப்புச் செய்யலாம் என்ற விடயத்தை தொடரலாம்.

 

 

தொடரும்----------------------------




வியாழன், 25 செப்டம்பர், 2025

புதிய யுகத்துக்கான புதிய அரசியல் வேண்டி எம்மை நாம் புதுப்பிப்போம். மு. திருநாவுக்கரசு

 24/9/2025

நாம் பேசுவது தத்துவங்கள் பற்றியா, சம்பவங்கள் பற்றியா அல்லது மனிதர்கள் பற்றியா.

"Strong minds discuss ideas

  Average minds discuss events

  Weak minds discuss people."

-- Socrates.



 


"வலிமையான மனங்கள் கருத்துக்களைப் பற்றி விவாதிக்கின்றன.

சராசரி மனங்கள் நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்கின்றன.

பலவீனமான மனங்கள் ஆட்களைப் பற்றி விவாதிக்கின்றன"

[தமிழாக்கம் கூகுள் -- google translation]

 

"பெரியோர்கள் தத்துவங்களைப் பற்றிப் பேசுவர்.

சாதாரணமானோர் சம்பவங்களைப் பற்றிப் பேசுவர்.

சிறியோர் அடுத்தவனைப்  பற்றிப் பேசுவர்."

 --தத்துவஞானி சோக்கிரடிஸ்.

 

தன் கண்கள் இரண்டையும் தானே குத்தி காட்சிக்கு வைத்தாற் போல் தமிழீழ அரசியல் பாழுற்று  இருக்கின்றது.

 

காணாமற் போனவற்றைத் தேடமுற்பட்ட  போதுதான் தெரியவந்தது ஏற்கனவே இரண்டு கண்களும் கூடவே காணாமற் போய்விட்டன என்பது. தமிழ் மக்களது அரசியலின் குருட்டுத் தனம் இப்படியே காலங்களைக் கடந்து நீடிக்கின்றது.

 

தொடர்ந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாய் தமிழ் அரசியல்  தோல்வி கண்டு வருகிறது சிங்கள அரசியல் வெற்றி பெற்று வருகிறது . சிங்கள் அரசியல் காலத்திற்கு ஏற்ப சூழலுக்கு ஏற்ப தனது வியூகங்களை மாற்றி வெற்றியை இலக்காகக் கொண்டு  புதிய புதிய மாற்றங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வருடகிறது.


சிங்கக் கூட்டம் இரண்டு தடவைகள்  தோல்வி அடையும் தமது வியூகத்தை மூன்றாம் தடவை மாற்றிக் கொள்ளும். இந்நியில் வரலாற்றில் இருந்து பாடங்களையும் படிப்பினைகளையும் பெற்று தமிழினம் தன்னை புதிய பாதையில் வழி நடத்த வேண்டிய அத்தியாவசியம் எழுந்துள்ளது. ஆதலால் புதிய யுகத்துக்கு பொருத்தமாக  ஈழத்தமிழினம் ஒரு புதிய அரசியல் சிந்தனைக்கு உட்பட வேண்டியது அவசியம்.

 

இனி அடுத்தது என்ன?  தோல்விகளே வரலாறாய் நீடிப்பதுதான் தமிழரின் தலைவிதியா?

பெரும் தியாகம் விளைந்த போராட்டத்திலிருந்து உதிப்பவர்கள் என்ற உணர்வோடு வெற்றிக் கனிகளை கையில் ஏந்தவல்ல  புதிய சிந்தனைகளோடும்  புதிய வியூகங்களோடும்  போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதற்கான இறுதிக் காலகட்டம் இது.

 

பேசும் எல்லாவித பெருமைகளை விடவும் எதிரிகளின் காலடியில் அடிமைகளாக வீழ்ந்து கிடக்கும் யதார்த்தம் ஒரு நரக லோகமாய் நிஜவாழ்வில் உள்ளது.  தனயனின் வாய் பேச்சு பல்லக்கில் ஏறுகிது, தாயின் கை பிச்சை ஏந்துகிறது. இதுவே ஈழத் தமிழரின் அரசியல் யதார்த்தம்.


 "உன்னையே நீ அறிவாயாக"  என்பது கிரேக்க அப்பல்லோ தேவதையின் ஆலயத்தில் இற்றைக்கு 2500  ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட  மகுட  வாக்கியம்.

 

"உன்னையே நீ அறிவாயாக" என்பது ஒரு புறம் உண்மையானாலும்  உன்னை நீ இடையறாது புதுப்பிக்க வேண்டும் என்பதும் மறுபுறம்  உண்மையாகும்.  

 

உன்னை நீ அறி;  உன் பலத்தையும் பலவீனத்தையும்  நீ அறி;  அப்போதுதான் இந்தப் பூமியில் உனக்குரிய இடத்தை நீ கண்டறிவாய்.

 ஈழத் தமிழர் விடுதலை அடைய வேண்டும் என்றால் அவர்கள் முதலில் தமது காப்பிய கற்பனைகளில் இருந்தும், முற் கற்பிதங்களில் இருந்தும், வசை பாடல்களில் இருந்தும்,  புகழ்ச்சிகளில் இருந்தும்,  அம்புலி மாமாவை குழந்தைக்கு  கண்ணாடியில் பிடித்து

கொடுப்பது போன்ற  ஏமாற்று அரசியல் வித்தைகளில் இருந்தும்   விடுபட்டு தன்னைத் தானே சுத்திகரித்து  ஒரு புதிய யுக சிந்தனைக்கும் புதிய மனப்பான்மைக்கும் உள்ளாகினால் மட்டுமே விடுதலை அடைய முடியும்.

 

கழுகு தரும் வாழ்வியல் பாடம்

கழுகு பற்றி அறிவார்ந்த நிஜமான வாழ்வியலும் உண்டு.

கழுகைப் பற்றி மிகைப் படுத்தப்பட்ட கதைகளும் உண்டு .

 

கழுகினுடைய திறமை பற்றியும் அது தன்னை மீண்டும் மீண்டும் மீளாக்கம் செய்வல்லது என்பது தொடர்பாகவும் மிகைப்படுத்தப்பட்ட  பல   கதைகள்  உண்டாயினும் கழுகு பற்றிய விஞ்ஞான பூர்வமான விளக்கம் பின்வருமாறு உண்டு.

 

கழுகில் பிரதானமாக இரண்டு வகை கழுகுகள் உண்டு. ஒன்று காட்டு கழுகு ,மற்றையது   வழுக்கை கழுகு அல்லது வெள்ளைத் தலைக் கழுகு.

 

கழுகு இனம்   70 ஆண்டுகள் வரை வாழ்வதாக  மிகைப்படுத்தி

கூறப்பட்டாலும் அப்படி 70  ஆண்டுகள் வரை எந்த வகைக் கழுகும் வாழ்வதில்லை.

 

காட்டுக் கழுகு 20 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

வெள்ளைத்தலை கழுகு 40 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழும். இந்த கழுகினம் பெரிதும் வட அமெரிக்காவில் வாழ்கிறது. ஐக்கிய அமெரிக்காவின் சின்னமான கழுகு இந்த வெள்ளைத் தலை இனத்தை சேர்ந்தது.

 

பறவை இனத்தின் ராஜாவான இந்த கழுகானது பறவை இனங்களில் அதிக ஆயுளைக் கொண்டது. கழுகு தன்னை இடையறாது புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டது. அது தனது அலகு அல்லது சொண்டு செயல் திறனை இழக்கும் தருணங்களில் தனது அலகை எப்போதும் பாறையில் தேய்த்து கூர்மைப்படுத்தும். அப்படியே அதன் கூரிய நகங்கள்  வளைந்து மழுங்கும் போது அவற்றையும் பாறையில் தேய்த்து புதுமைப்படுத்திக் கொள்ளும். தன்னைத் தானே புதுப்பிக்கும் இந்த கடினமான காரியத்தை அது  தனக்குத் தானே செய்து கொள்ளும். இது நிச்சயம் கடினமானதே ஆனாலும் அதனை அது இடைவிடாது செய்யும்.

 

தன்னைத் தானே புதுப்பிக்கும், மாற்றிக் கொள்ளும் இதன் விஞ்ஞானபூர்வமான கடுமையான இயல்பு ஒரு தேசிய இனத்துக்கு முன்னுதாரணமாய் விளங்கக் கூடியது.

 

தன்னைத் தானே  மீளாக்கம் செய்வதான , புதுப்பிப்பதான சிறிதும்  விஞ்ஞானபூர்வமற்ற  பீனிக்ஸ் ( Phoenix)  எனப்படும்  ஒரு புராணப் பறவையின் கதையும் உண்டு.  இது எகிப்திய --  கிரேக்க  புராணப் பறவையின் கதை.

 

அதாவது பீனிக்ஸ் பறவை தன் இளமையை இழந்து முதுமை அடையும்  போது அது தீயில் தானே விழுந்து எரிந்து போகும். பின்பு அந்தச் சாம்பலில் இருந்து புது பொலிவுடன் மீண்டும் இளம் பறவையாய் உயிர்த்தெழும் என்பது அதன் சாராம்சம்.


அதாவது கடினமானதே ஆனாலும் தன் இளமையை அல்லது வல்லமையை ஒன்று  இழக்கும் போது, எத்தகைய இழப்புக்களை

அல்லது கடினமான பாதையை மேற்கொண்டே ஆயினும் தன்னை அது மீண்டும் புதுப்பிக்க அல்லது மீளாக்கம் செய்துகொள்ள வேண்டும் என்கின்ற இலட்சிய பாடத்தை இது  உள்ளடக்கமாக கொண்டுள்ளது.

 

இங்கு மேலே கூறப்பட்ட  கழுகின் கதை கற்பனை இல்லை ; அது விஞ்ஞானபூர்வமான, யதார்த்தமான ஒன்று. பீனிக்ஸின் கதை  பெரிதும் இலட்சிய வாதமேயானாலும் அதன் உட்கருத்து கவனத்திற்குரியது என்பதுடன்  கழுகின்  விஞ்ஞானபூர்வமான  வாழ்வியல் ஒரு தேசிய இனத்துக்கும், ஏன் மனிதனுக்கும்  பெரிதும் முன்னுதாரணமான ஒரு கருத்தியலாகும்.

 

சுய பரிசோதனை செய்து கொள்வதன் முக்கியத்துவம்

நாம் எங்கு நிற்கின்றோம் என்பதை முதலில் எடை போட வேண்டும்.  ஈழத் தமிழர்களின் கடந்த கால அனுபவங்கள் சொல்லும் படிப்பினைகள் என்ன ,  
உலக வரலாறு எமக்கு போதிக்கும்  உண்மைகள் என்ன,  
நாம் எங்கிருந்து எங்கு பயணிக்க போகிறோம்,
இலக்கும் பயணமும் பாதையும் என்ன போன்ற வினாக்களுக்கு நாம் முதலில் தகுதியான பதில்களை நமக்கு நாமே அளித்துக் கொள்ள வேண்டும்.  

 

நாம் எமது வெற்றி தோல்விகளுக்கான பதில்களை நாமே ஆராய்ந்து ண்டுபிடிக்காமல் விட்டு விட்டால், எதிரியின் பதில்களே எமது தலைவிதி என்று ஆகிவிடும். எதிரியின் பதில்  என்னவெனில்,  தோற்க வேண்டிய தமிழன்  தோற்று விட்டான் என்பதும் தோல்விதான் தமிழனின் தலைவிதி என்பதும் ஆகும்.

 

எமது  சொந்த அனுபவங்களான வெற்றிகள் தோல்விகள், நல்லவை  கெட்டவை, ழுச்சிகள் வீழ்ச்சிகள் என்பனவற்றில் இருந்தும்,  அயலவர்களின் வெற்றிகள் தோல்விகள் நல்லவை கெட்டவை என்பவற்றில் இருந்தும், மனித குலம் கண்ட வரலாற்று அனுபவங்களில் இருந்தும் பாடங்களையும் படிப்பினைகளையும் பெற்றுக் கொண்டு எமது விடிவுக்கான புதிய பாதையையும் அதற்கான புதிய சிந்தனையையும் நாம் தேடியாக வேண்டும்.

 

இயற்கை - சமூகம் - அரசுகள், அனைத்தின் இயக்கமும் நியதிகளுக்கு உட்பட்டதே

இப்போது 21 ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி.  சுமாராக 2000 தேசிய ,  தேசிய சிறுபான்மை இனங்களையும் ஐநா அங்கத்துவத்தின் படி 196 நாடுகளையும் மொத்தம் 200க்கு குறையாத அரசுகளையும் கொண்டு இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

 

இயற்கைக்கு என்று நியதிகள் இருப்பது போல, பூமிக்கு என்று  குறித்த நியதிகள் இருப்பது போல  உயிரினங்களுக்கு என்றும் நியதிள் இருப்பது போல, மனித குலத்துக்கு என்றும்  நியதிகள் உண்டு; அதே போல ஆளும் அரகளுக்கு என்றும் நியதிகள் உண்டு.  இயற்கையின் செயற்பாடுகளும் உயிர்வுகளும், சமூகத்தின் செயல்பாடுகளும்  நியதிகளுக்கு உட்பட்டவை.  யாரும் தான் நினைத்தபடி காட்டாறாய் செயல்பட முடியாது. 

 

மேலோட்டமாக பார்க்கும் போது அப்படி தன்னிச்சையாக செயல்படுவது போலத் தோன்றினாலும் அச்செயல்பாட்டின் பின்னே அதனைத் தூண்டிய சமூக, வரலாற்று, அரசியல் காரணிகள் நிச்சயம் இருக்கும்.

 

ருவம், அமாவாசை என்பனவற்றை மனிதனால் உருவாக்க முடியாது. ஆனால் நிகழக்கூடிய பருவம், அமாவாசையை கணக்கிட்டு அதற்கு பொருத்தமாக மனிதன் தனது செயற்பாட்டை மேற்கொள்ள முடியும்.

 

இன்றைய யுகமான 21 ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் காணப்படும் பூகோளமயப்பட்ட  சமூக, பொருளாதார, அரசியல் தாக்கங்கள் செலுத்தும் இந்த உலக வாழ்வில், ஈழத் தமிழர்கள் தமக்குரிய பாத்திரம் எது , பணி எது என்பதை தேர்ந்தெடுத்து  நடைமுறை சாத்தியமான வகையில் தங்கள் விடுதலை அரசியலை முன்னெடுக்க வேண்டும்.


புதிய யுகத்துக்கான புதிய அரசியல் வேண்டி, பீனிக்ஸ் பறவை போல, தமிழர்கள் நாமே நம்மை புதுப்பித்துக் கொள்வோம்.

 

------------

அதிகம் பார்க்கப்பட்டவை: