செவ்வாய், 4 மார்ச், 2025

அநுரா அரசு கொண்டு வருவதாக சொல்லும் புதிய அரசியல் யாப்பு பற்றி, அதில் சீனாவின் ரகசிய நகர்வுகள் பற்றி.



02 March 2025 அன்று ஊடறுப்பு  இணைய செய்தித் தளத்திற்கு மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய பேட்டியின் காணொலி. 
இலங்கையில் அநுரா தலைமையிலான அரசு புதியதொரு யாப்பை கொண்டு வருவோம் என்று கடந்த தேர்தலின் போது அறிவித்திருந்தது.
அநுரா அரசு பதவியேற்றும் பெரும்பான்மை பெற்றிருந்தும் இன்னும் அதுபற்றிய நகர்வுகள் எதுவும் பெரிதாக எடுக்கப்படவில்லை.
அத்தகைய புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவாரா அநுர ?
ஏன் புதிய யாப்பு பற்றிய பேச்சு எழுகிறது.
புதிய யாப்பு தேவையா.
புதிய யாப்பு கொண்டு வருவதின் உள்ளே பொதிந்துள்ள சிங்கள நலன்கள் என்ன.
சீனாவின் நலன்கள் என்ன இருக்கின்றன.
தமிழருக்கு புதிய யாப்பு வந்தால் எதுவும் விடிவு காலம் வருமா,

இது போன்ற பல்வேறு கேள்விகளைப் பற்றி ஆராய்ந்து வரலாற்று ரீதியான பதில்களை, தேடல்களை இக்காணொலியில் முன்வைக்கிறார் வரலாற்றறிவியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள். 

பேட்டியின் காணொலி:

 ்இந்த உரையாடலில் பேசப்பட்டுள்ள சில முக்கிய கருத்துக்கள் கீழே குறிப்புகளாக தரப்பட்டுள்ளன.

இலங்கையில் புதிய யாப்பு கொண்டு வருவதாக அநுர அரசு சொன்னாலும் மகாசங்கமும், சிங்கள ராணுவம் அத்தகைய யோசனையை விரும்பவில்லை.

மகாசங்கத்தின் நோக்கம் மாகாண சபை அமைப்புக்களை நீக்க வேண்டும் என்பதும், முஸ்லீம்கள் விகிதாச்சார முறைப்படி அதிக சீட்டுக்களைப் பெறுவதை தடுக்க வேண்டும் என்பதுமே. 

ஜனாதிபதி முறை அரசுக்கும் , ராணுவத்துக்கும் மிகுந்த அதிகாரம் தருவதால் ஜனாதிபதி முறையை ஒழிக்க இருவருமே விரும்பவில்லை.

அநுர அரசு பெரும்பான்மை இருப்பதால் உண்மையிலேயே புதிய யாப்பு உருவாக்குவதில் அக்கறை இல்லை. தேர்தலுக்காக சொல்லப்பட்டதே அது.

இந்தியாவுக்கு இலங்கையில் இருக்கும் ஒரே பிடி மாகாண சபை அமைப்புகள் தான். அதை நீக்கினால் இந்தியா தீவிரமாகும் என்பதால் அதை நீக்காமலே டம்மியாக வைத்திருந்து மேலும் அதை பலனற்ற ஒரு அமைப்பாக நீர்த்துப் போகச் செய்யவே முயலுவார்கள்.

இப்படியான சிந்தனை சீனாவிடமிருந்து தான் இலங்கை அரசுக்கு தரப்படுகிறது. சீனா தேசிய இனங்களின் உரிமைகளை எப்போதுமே சமமாக மதித்ததில்லை. தனது நாட்டிலேயே அது அவர்களை சீன கட்சிக்கு கட்டுப்பட்ட சில உரிமைகளை கெஞ்சி கேட்டுக்கொள்ளும் அளவிலேயே தான் வைத்திருக்கிறது. அதையே இலங்கையிலும் சிறுபான்மை தேசிய இனங்கள் மேலும் பயன்படுத்த சிங்கள அரசுக்கு சீனா ஆலோசனையும் உதவியும் செய்கிறது.

1984 இந்தியா இலங்கை ஒப்பந்தம், பார்த்தசாரதியால் துருக்கி-கிரேக்கம்-சைப்ரஸ் ஸ்டைல் தீர்வை மையப்படுத்தி தான் உருவாக்கப்பட்டது. துருக்கி ராணுவம் கிரேக்கத்தில் உள்ள 20 சதவீத துருக்கியரை கிரேக்கர்கள் துன்புறுத்துவதை படுகொலை செய்வதை தடுக்கும் விதமாக கிரேக்கத்தில் இறங்கி துருக்கியரை பாதுகாத்தது. இன்றுவரை அந்த ராணுவம் கிரேக்கத்தில் இருக்கிறது. இந்திராகாந்தி படுகொலைக்குப் பின்பு அனைத்தும் மாற்றப்பட்டு தலைகீழாக யோசிப்பவர்கள் அங்கே வந்ததால் அது கைவிடப்பட்டுவிட்டது.

இந்திய கொள்கை வகுப்பாளர்கள் யாரிடமும் தற்போது இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டு தமிழர்களை காப்பது என்பதே கிடையாது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் கடல் பகுதி சார்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதே இல்லை. நேரு - பணிக்கர் காலத்தில் துவங்கி அவ்வாறு தான் இருந்தது. இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் கொண்ட கடல்சார் வெளியுறவுக் கொள்கைகளே இந்தியாவுக்கு தேவையான வெளியுறவுக் கொள்கையின் முன்மாதிரியாகும். ஆனால் இன்றுவரை அதுபற்றி இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்கவே இல்லை.

ஒருவேளை இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டுவிட்டால் பாக் நீரிணை சீனாவின் வசமாகிவிடும். அப்படி நிகழும்போது அடுத்து வரும் பத்தாண்டுகளில் இந்தியாவை இரண்டு மூன்று துண்டுகளாக உடைக்கும் நகர்வுகளை சீனாவால் நிறைவேற்ற முடியும். 



ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

பாதாள உலக கும்பலை வளர்த்துவிட்டவர்கள் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

 


22,பிப்ரவரி, 2025 அன்று ஊடறுப்பு ஊடகத்திற்கு மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய பேட்டி.

இலங்கையில் சமீபத்தில் நீதிமன்ற வளாகத்தில் நடத்தப் பெற்ற துப்பாக்கிச் சூட்டில்  சஞ்சீவா குமர சமரத்னே என்கிற பாதாள உலகின் தலைவன் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னாலுள்ள பாதாள உலக கும்பலின் பின்னணி, அதன் அரசியல், சமூக காரணங்களை விளக்குகிறார் மு.திருநாவுக்கரசு அவர்கள்.

இலங்கையில் பாதாள உலகை வளர்த்துவிட்டவர்கள் சிங்கள ஆட்சியாளர்கள்.
ஆட்கள் கடத்தல், படுகொலைகள் செய்தல் போன்ற காரியங்களுக்கு பாதாள உலகத்தைச் சார்ந்தவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.
இந்த நிழலுலகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சிங்களர் அல்லாத வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு , கோத்தபய அரசால் அவர்களுக்கு அதுவரை உதவியாயிருந்த இந்த நிழலுலக தலைவர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

 காணொலி:


பாதாள உலக கும்பலை வளர்த்துவிட்டவர்கள் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்! | UDARUPPU | Ganemulla

அதிகம் பார்க்கப்பட்டவை: